சிறுகதை - ஆண்களை நம்பாதே!



‘‘ரெண்டு முழம் மல்லி கொடும்மா...” என்றாள் மாதவி வழக்கமாய் வாங்கும் பூக்காரியிடம்.இரண்டு முழத்தை அளந்த பூக்காரி கொஞ்சம் விட்டே அறுத்து சுருட்டி கொடுத்தாள்.
‘‘எவ்வளவு?’’‘‘நாற்பது ரூபா...”‘‘என்ன இன்னைக்கு கூட பத்து ரூபாய்...”‘‘ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரேட் போடறாங்கம்மா, நாங்க என்ன பண்றது? எனக்கு ரெகுலர் கஸ்டமர்களுக்கு கொறச்ச விலையில கொடுக்கணும்ன்னு ஆசைதான். என்ன பண்றது... என்னம்மா இன்னைக்கு ட்ரஸ் எல்லாம் புதுசா இருக்கு... ஏதாவது விசேஷமா?”

‘‘எனக்கு பொறந்த நாள்... சாமிக்கு அர்ச்சனை பண்ணணும்... அப்படியே ஒரு அர்ச்சனை தட்டையும் கொடும்மா...”
‘‘உனக்கு இந்த சாமி மட்டுமல்ல, எல்லா சாமியும் துணைக்கு வரும். உன்னய சின்ன பாப்பாவிலிருந்து பார்க்கறேன்... ஒரு நாள் கூட கோயிலுக்கு வர மறந்ததில்லே...” என்றவாறே அர்ச்சனைத் தட்டையும் கொடுத்தாள்.

மெல்ல சிரித்தாள்.‘‘மொத்தம் எவ்வளவு?”
‘‘இது நாற்பது, வந்து கொடும்மா...”கையில் வைத்திருந்த மஞ்சள் பையை பூக்காரம்மாவிடம் கொடுத்து, ‘‘இதை வெச்சிருங்க... வந்து வாங்கிக்கறேன்...” என்றாள்.
உள்ளே சன்னிதியில் அதிக கூட்டம் இல்லை.பட்டாச்சாரியாரிடம் அர்ச்சனைத் தட்டை கொடுத்து, ‘‘மாதவி சுவாதி, துலாம் ராசி, வத்ஸ் கோத்திரம்...” என்றாள்.
பட்டாச்சாரி சிரித்தார்.‘‘ஏம்மா... உன்னோட நட்சத்திரம், ராசி, கோத்திரம் எல்லாம் எனக்கு தெரியாதா?”

மாதவி மெல்லிய புன்னகையைப் படர விட்டாள்.அர்ச்சனைத் தட்டிலிருந்து பூவை எடுத்து பெருமாளுக்கு சார்த்தினார்.பின்னர் தேங்காயை உடைக்கும் போதே மந்திரங்களை ஆரம்பித்து விட்டார்.அர்ச்சனை முடிந்தது.ஆரத்தி எடுத்து கொண்டு வந்து நீட்டினார்.தீர்த்தம், சடாரி எல்லாம் முடிந்து மாலை ஒன்றையும் எடுத்து தட்டுடன் நீட்டினார்.
வாங்கிக் கொண்டாள்.

‘‘அப்பா, அம்மாவை விசாரிச்சேன்னு சொல்லு...”
‘‘சொல்றேன் மாமா...”
வெளியில் வந்தாள்.
ஆலயத்தை வலம் வர ஆரம்பித்தாள்.

இரண்டு இரண்டு சுற்று சுற்றியவள் வெளிப்ராகாரம் சுற்றும் பொழுது அவனைப் பார்த்தாள்.அப்பொழுதுதான் வருகிறான் போல.பக்கத்தில் வந்து, ‘‘மாதவி, பிறந்த நாள் வாழ்த்துகள்...” என்றான்.‘‘உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், என் கிட்ட பேசணும்ன்னா என்ன பேசறதா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பேசுன்னு... நான் ப்ராகாரம் சுத்திட்டு வர்றேன்... வீட்டுல போய் பேசிக்கலாம்...” என்றாள் கொஞ்சம் கோப பாவனையுடன்.

‘‘பிறந்த நாள் வாழ்த்துகள்... ரொம்ப முக்கியமான விஷயம் சொல்லவும் வந்தேன்...’’
“சுத்திட்டு வர்றேன். வீட்டுக்கு போய்கிட்டே பேசலாம்...”
‘‘இல்லே நானும் சுத்தறேன்...”
‘‘தனியா பத்தடி தள்ளி சுத்து...”
‘‘அப்பா... உன் கெடுபிடி... கலெக்டர் தோத்துடுவாங்க...” என்றான்.

‘‘ஆமாம்... நான் அப்படித்தான்...”
அவள் சுற்ற ஆரம்பிக்க அவன் அங்கேயே நின்றுவிட்டு சுற்ற ஆரம்பித்தான்.எவ்வளவு பெரிய ப்ராகாரம்.மாதவி சுற்றி முடித்து மண்டபத்தில் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் மூச்சிறைக்க வந்தான். ‘‘எப்படித்தான் டெய்லி சுத்தறயோ...”‘‘இதென்னடா கிழவன் மாதிரி பேசறே... இதெல்லாம் ஒரு பயிற்சி. அந்தக் காலத்துல கோயிலை வரைபடம் கட்டுன மன்னர்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல. கோயில்ல மடைப்பள்ளி எதுக்கு இருக்கு தெரியுமா?”
‘‘ப்ரசாதம் பண்றத்துக்கு...”

‘‘அதுக்கு மட்டும்தானா? மடையா... உள் ப்ராகாரத்துல எத்தனை பேர் உட்காரலாம்?’’
‘‘என்ன ஒரு நானூறு பேர் உட்காரலாம்... என்ன சைட் கேப்ல மடையன்னு சொல்லிட்டே...”
‘‘இங்கேதான் உன்னை திட்ட முடியும். நாலு பேருக்கு முன்னாடி வெச்சு திட்ட முடியுமா?”
‘‘சரி சொல்லு. ப்ராகாரம் பெரிசு...”

‘‘நம்ம கும்பகோணத்துல எத்தனை கோயில் இருக்கு? கும்பகோணத்துலயும் அதை சுத்தியும்...”
“என்ன ஒரு இருபது முப்பது இருக்குமா?’’‘‘எழுபத்திரண்டு இருக்கு...”
‘‘இது மாதிரி பெரிய கோயிலே அதுல நாற்பதுக்கு மேலே. திடீர்ன்னு இயற்கைச் சீற்றம் ஆச்சுன்னா, பெரும் மழை வெள்ளம்ன்னா கோயிலுக்குள்ள சாதி, மதம் பார்க்காம அடைக்கலம் கொடுக்கத்தான்... மடைப்பள்ளியில் இருக்கற ஸ்டோர் ரூம்ல எப்பவும் ஐம்பது மூட்டை அரிசியாவது இருக்கணும்... இப்ப எவ்வளவு இருக்குன்னு தெரியலை...
‘‘நீ என்ன பெருமாள் வெறும் சங்கு சக்கரத்தோட சும்மா உட்கார்ந்திருக்கார்னு நினைச்சுண்டு இருக்கியா?

‘‘அவர் அங்க இல்லே,உனக்குள்ள, எனக்குள்ள, வெளியில இருக்கறவாக்குள்ளேயும் இருக்கார். மானசீகமா ப்ரார்த்தனை செஞ்சா போதும்ன்னு நினைக்கக் கூடாது. இங்கே வரணும், சுத்தணும், சுத்தமான காத்தை சுவாசிக்கணும். எல்லாம் இருக்கே...”
‘‘அம்மாடி... போதும் நிறுத்து...’’ என்ற
படியே பேண்ட் பாக்கெட்டில் இருந்து அதை எடுத்தான்.

‘‘இதென்னது?”
‘‘அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர். மெயில் காபி. உனக்கு முன்னாடியே வந்துட்டேன். பெருமாள் கிட்ட வெச்சு எடுத்தாச்சு. கவர் மேலே குங்குமத்தோட மஞ்சள் தெரியறது பாரு...”
அவள் அதை வாங்கும் போது, ‘‘ஏற்கனவே வெளி ப்ராகாரம் ஒரு சுத்து சுத்தியாச்சு... இது ரெண்டாவது சுத்து... பெரிய கம்பெனி, மண்டே ஜாயின்
பண்ணணும், நாலு நாள்ல கிளம்பணும்...” என்றான்.

‘‘வாழ்த்துகள்...”
‘‘சம்பளம் எவ்வளவு பார்த்தியா?”
‘‘பார்த்தேன்... பார்த்தேன்...”
‘‘என்னடி சாதாரணமா சொல்றே..?”

‘‘மறுபடியும் கொரோனா வந்தா, வீட்டுக்கு கிளம்புங்க, வீட்டிலேந்தே ஆன் லைன்ல பார்த்துக்கங்கன்னு பாதியா சம்பளத்தை  குறைச்சுடுவான்...”
‘‘பீதியக் கிளப்பிடுவியே...”‘‘சரி கிளம்பு... கூட வந்து அத்தைகிட்ட சொல்லிட்டு போ...”
‘‘வர்றேன், நீயும் வர்றியா கூட...”‘‘நானும் வீட்டுக்குதானே வர்றேன்...”‘‘வீட்டுக்கு வர்றதைப் பத்தி கேட்கலை... பெங்களூருக்கு...”
‘‘பார்றா... ஓடிடில நிறைய படம், அப்புறம் இங்கிலீஷ் சீரியல்ஸ் எல்லாம் நிறைய பார்க்கறயோ..?”
‘‘அதெல்லாம் இல்லே...” என்றான்.

கோயிலை விட்டு வெளியே வந்தார்கள். அர்ச்சனைத் தட்டு கொடுத்து மஞ்சள் பையை கையில் வாங்கிக் கொண்டாள்.உள்ளிருந்து பர்சை எடுத்து நூறு ரூபாயைக் கொடுத்தாள்.அர்ச்சனைத் தட்டிலிருந்ததை பையில் போட்டுக் கொண்டாள்.‘‘அம்மா வெண்டைக்காய் வாங்கிட்டு வரச் சொன்னா. நீ இங்கேயே இரு. அதோ இருக்கு. வாங்கிட்டு வந்துடறேன்...’’
பூக்காரம்மா சும்மா இல்லாமல், ‘‘உங்க ரெண்டு பேரையும் பார்த்தா பெருமாளையும் தாயாரையும் பார்க்கிற மாதிரி இருக்கு...” என்றாள்.

வெண்டைக்காயை ப்ளாஸ்டிக் பையில் போடப்போனார் காய்கறிக் கடைக்காரர்.‘‘ப்ளாஸ்டிக் வேண்டாம். இந்தப் பையிலயே போடுங்க...” மஞ்சள் பையை விரித்து நீட்டினாள்.
அதில் வெண்டைக்காயைக் கொட்ட, காசு கொடுத்துவிட்டு கிளம்பினாள்.பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.

அம்மா, ‘‘வாடா நந்து...” என்றாள்.‘‘அம்மா... சாரை ‘டா’வெல்லாம் போடக்கூடாது. சார் பெங்களூர் போறார் வேலைக்கு... பெரிய லெவல்...”
‘‘நீ  வேற சும்மா இருடி... இப்பதான் உங்கம்மா போன் பண்ணா. பயங்கர லிஸ்ட்டே கொடுத்திருக்கியாமே... புளியோதரை, எள்ளுப் பொடி, பருப்புப் பொடின்னு...”‘‘ஏற்கனவே ஃப்ரண்ட்ஸ் போன் பண்ணி சொல்லிட்டாங்க... நம்ப ஃப்ளாட் இருக்கற ஏரியாவில நார்த் இண்டியன்ஸ் ஸ்டைல் ஹோட்டல்கள்தான் அதிகமா இருக்கு, பல இடத்துல தோசை அவுட்லெட் இருக்கு,அது சாப்பிட்டு போர் அடிச்சுப் போச்சுன்னு பொலம்பினாங்க...’’‘‘அப்படித்தான் சார் சொல்வாரு. அப்புறம் அங்கே போனதும் சர்க்கிள் மாறிடும். பீட்சா, பர்கர், தந்தூரின்னு எகிறும்...’’
‘‘ஐயோ... நமக்கு அதெல்லாம் சரி வராது...”“பார்க்கத்தானே போறோம்...”

‘‘உங்கம்மா சொன்னதுமே நான் என் பங்குக்கு வத்தல் வடாம் எல்லாம் கட்டி வெச்சுட்டேன்...’’‘‘சூப்பர்...’’ என்ற மாதவி, ‘‘நந்து... நீ ஒரு வேலை செய். மூட்டை முடிச்சு பலமா இருக்கு. பேசாம ஒரு மாட்டு வண்டி ஏற்பாடு பண்ணிக்கோ. நாளைக்கே கிளம்பிட்டா நாலு நாள்ல போய் சேர்ந்துடலாம். அங்கே கிடைக்காததா. மல்லேஸ்வரம் போனா கிடைக்காததே இல்லே...” என்றாள்.அம்மா அவள் பக்கம் திரும்பினாள். ‘‘உனக்கு எப்படி தெரியும்?”

‘‘அட என்னம்மா நீ... என் ஃப்ரண்ட்சும் இருக்கா இல்லே பெங்களூர்ல. இங்கிருந்து போனவா தவிர அங்கேயும் ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் நிறைய இருக்கா...”

‘‘சர்தான்... இப்படியே வாக்குவாதம் பண்ணிண்டே இரு. நந்து... இரு காபி கலந்துண்டு வர்றேன். உனக்கு ஒரு வாய் வேணுமா மாதவி?”

‘‘வேண்டாம். அப்புறம் காபித்தூள் எத்தனை கிலோ தூக்கிண்டு போகப் போறே..?”‘‘காபிக்கு அங்கே பஞ்சம் இல்லே. நீதான் சொன்னியே மல்லேஸ்வரத்துல கிடைக்கும்னு...”
‘‘மல்லேஸ்வரம் பக்கத்துல டாலர்ஸ் காலனியில கிடைக்கும். சஞ்சய் நகர் லே அவுட்லயும் கிடைக்கும்...”“நெட்டுலயே உட்கார்ந்து இருக்கே போலிருக்கு...”

‘‘ஆமாம்... சுஜாதா சொன்ன மாதிரி உள்ளங்கையில் உலகம்...” என்றாள்.‘‘சரி... உனக்கு பெங்களூர்ல ஜாப் பார்க்கட்டுமா?’’‘‘அவ சென்னைதான் போகணும்ங்கறா. பெரிய பெரிய ஆடிட்டர் ஃபர்ம்ஸ் எல்லாம் இருக்கு...”‘‘ஏன் பெங்களூர்ல எவனும் வருமான வரியே கட்டறது இல்லையா..? அங்கேயும் ஆடிட்டர்ஸ் இருப்பாங்க இல்லே...”
‘‘அதுவும் சரிதான்...”‘‘நீ என்ன சொல்றே மாதவி... உன்னோட ரிஸ்யூம் கொடு...”

‘‘முதல்ல நீ போய் செட்டில் ஆகு. அப்புறம் அனுப்பறேன்...”
‘‘ஓகே. உன் விருப்பம்...” என்றான்.
‘‘தினமும் போன் பண்ணு...”‘‘ஜாப் எப்படியோ... டெயிலி பண்றேன்னு கியாரண்டி எல்லாம் தரமுடியாது...”‘‘பார்றா...” என்றாள்.

நந்து கிளம்பும் போது தெருவே வெறிச்சோடியது போலிருந்தது அவளுக்கு. கொஞ்சம் சோகமாய்த்தான் இருந்தது. சும்மாவா இருபது வருடம். சாதாரணமாய் போய் விட்டதா என்ன தாமரை இலை தண்ணீர் போல.திங்கள் கிழமை. இன்னைக்குதானே ஜாயின் பண்ணப் போறதா சொன்னான்?வாட்ஸ் அப்பில் வாழ்த்து சொன்னாள். ‘அட்வான்ஸ் வாழ்த்துகள்...’‘இதென்ன பாதி தமிழ்ல பாதி ஆங்கிலத்துல...’ ரிப்ளை செய்தான்.

ஒரு ஸ்மைலியை மட்டும் போட்டாள்.அதற்கப்புறம்  அன்று இரவே ஃப்ளாட்டை வீடியோவில் ஷூட் செய்து அனுப்பினான்.அழைக்கவில்லை.ஒரு வாரம் எந்த மெசேஜும் இல்லை.எத்தனை மெசேஜ் போட்டாலும் பதில் இல்லை.‘ஐ யம் பிசி, வில் கால் யூ லேட்டர்’ என்ற ஆட்டோ ரிப்ளை மட்டும் வந்தது.சனிக்கிழமை கோயில் போயிருக்கும் போது பட்டாச்சாரியார் கேட்டார். ‘‘என்னம்மா முகம் கொஞ்சம் வாடியிருக்கு. நந்து ஜாயின் பண்ணிட்டானா பெங்களூர்ல?”“பண்ணிட்டான் பண்ணிட்டான்... நீங்க அர்ச்சனையை பண்ணுங்கோ...’’ என்றாள்.

அர்ச்சனை முடிந்து பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு கிளம்பும்போது ‘‘ஒரு நிமிஷம் இரு வர்றேன்...’’ என்று மடைப்பள்ளிக்குள் நுழைந்தார்.
திரும்பியவர் இரண்டு தொன்னை நிறைய சர்க்கரைப் பொங்கலை கொண்டு வந்து நீட்டினார். ‘‘அப்படியே உங்க மாமா வீட்லயும் ஒண்ணு கொடுத்துடு...’’
‘‘ம்...’’என்றாளே தவிர நேரே வீட்டுக்கு வந்தாள். அம்மாவிடம் இரண்டையும் கொடுத்தாள். ‘‘கோயில்ல பட்டாச்சாரியார் கொடுத்தார். உன் அண்ணன் வீட்லயும் ஒண்ணு கொண்டு கொடுப்பியாம்...”

‘‘ஏண்டி... வர வழியிலதானே நந்து விடு? அப்படியே கொடுத்துட்டு வந்திருக்கலாம் இல்லே...” ஒரு தொன்னையை எடுத்துக் கொண்டு அம்மா கிளம்பினாள்.
‘‘நந்து போன் செய்தானானு அப்படியே விசாரிச்சுட்டு வா...”
“அதை நீயே பண்ணியிருக்கலாமே...”
அடுத்த நாள் லைனில் வந்தான்.

‘‘என்ன... சார் ரொம்ப பிசியோ?’’‘‘பிசிதான். பட்டுப்பாவு முறிப்பாளே தறி நெய்யறதுக்கு முன்னாடி... அது மாதிரி முறுக்கி பிழிஞ்சு எடுத்துட்டாங்க...”
‘‘ஆமாம், அறுபதாயிரம் கொடுக்கறவன் ஒரு லட்சத்துக்குதான் வேலை வாங்குவான்...’’‘‘நல்லா பேசறே நீ. இப்பதான் அம்மாகிட்ட போன் பேசினேன். ‘எப்படிடா இருக்கே, ஒரு வாரமா பேசவே இல்லையாமே மாதவி கிட்ட... ரொம்ப ஃபீல் பண்றாளாமே. அவ அம்மா வந்து புலம்பிட்டு போறா’னு சொன்னாங்க...”‘‘ஓ... அம்மா சொல்லித்தான் பேசறயா நீ, அப்ப நீயா என்னை கூப்பிடலை, அப்படித்தானே?”இரண்டு மாதம் போனதே தெரியவில்லை.

பெங்களூர் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.சண்டே என்றால் வெளியில்தான்.போன வாரம் கப்பன் பார்க் போய் பார்த்தான்.இன்று ஏதாவது படம் போவதாய் ப்ளான். ஃப்ரண்ட்ஸ் இந்திப்படம் ஒன்று அப்சராவில் போகலாம் என்றார்கள்.ஹோட்டல் ப்ராட்வே பக்கத்தில் காரபாத், சௌ சௌ பாத், கேசரி பாத் என அடித்து தூள் கிளப்பிக் கொண்டிருந்த வேளையில், ‘‘எப்படியிருக்கு பெங்களூர்... ஏகப்பட்ட மாடர்ன் பொண்ணுங்க சுத்துமே...” பரிச்சயமான குரல்.

நிமிர்ந்து பார்த்தான்.மாதவி.அதிர்ந்து, ‘‘நீ எப்ப வந்தே? நாங்க இங்கே இருக்கோம்ன்னு எப்படித் தெரியும்...” என்றான்.‘‘உன்னோட போனை க்ளோன் பண்ணிட்டேன், நீ கிளம்பறதுக்கு முன்னாடியே!’’அவன் நண்பர்கள் அவளுக்கும் தெரிந்தவர்கள். ஒருத்தன் பத்ரி, கடலங்குடி தெரு; இன்னொருத்தன் ராம், பக்தபுரி அக்ரஹாரம்!‘‘நீ ஓட முடியாது ஒளிய முடியாது, என்ன ஏதாவது கன்னட ஃபிகர் செட் பண்ணலாம்ன்னு பார்த்தியா?”மிரண்டு போய் பார்த்தார்கள்.

சுதாரித்துக் கொண்டு பத்ரி, ‘‘ரெண்டு மாசமா மாதவி புராணம்தான். தூங்கவிடாம சாவடிச்சுட்டான்...” என்றான்ராமோ, ‘‘அப்ப  நாளைக்கு மாதவியோட ஸ்பெஷல் ஐட்டம் பருப்பு அடை மிளகாய்ப் பொடி, சின்ன வெங்காயம் சாம்பார்... போகும்போதே வாங்கிட்டு போயிடலாம் சின்ன வெங்காயம்...” என்று சிரித்தான்.‘‘செஞ்சுட்டாப் போச்சு...” என்றாள் போனை நோண்டிக் கொண்டே. ‘‘எனக்கு காபி மட்டும் சொல்லுங்க...”நந்துவின் செல்லில் ஏதோ மெசேஜ் வந்து விழுந்தது.

எடுத்தான்.‘முதல்ல ஒரு ஃப்ளாட் பாரு. மெக்ரி சர்க்கிள் பக்கத்துல ஒரு ஆடிட்டர் ஆபீஸ்ல ஜாயின் பண்றேன். இவங்களுக்கு சமைச்சுப் போடவா நான் வந்தேன்!’மாதவிதான்!

- சுப்ரஜா