இது ஹிப்னாடிசம் த்ரில்லர்!



பிரபு தேவா நடித்துள்ள ‘வுல்ப்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய சினிமாவாக வெளிவரவுள்ளது. ‘சிண்ட்ரல்லா’வுக்குப் பிறகு வினு வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்கூலில் இருந்து வந்தவர்.

‘வுல்ப்’ என்ன மாதிரியான படம்?

இன்றைய உலகம் கல்ச்சர், ஸ்டைல், ஃபுட் என வெஸ்டர்னைஸ்டா மாறியிருக்கு. ஆனா, உலகளவில் நம்ம நாட்டிலிருந்து போன கல்ச்சர் நிறைய இருக்கு என்பது வரலாற்று உண்மை.
வேர்க்கடலை எந்த ஊர் ஃபுட்னு கேட்டால் பலர் நம்ம ஊர் ஃபுட்னும், பாதாம் எந்த ஊர் ஃபுட்னு கேட்டால் வெளிநாடுன்னும் யோசிக்காம சொல்வாங்க. உண்மையில் வேர்க்கடலையின் பிறப்பிடம் பிரேசில். பாதாமின் பிறப்பிடம் நம்ம ஊர்.

நம்ம ஊர்ல இப்போது இருக்கும் சில பழக்க வழக்கம் நம் நாட்டில் பிறந்ததாக இருந்திருக்கும். ஆனா, அதை காலப்போக்கில் வெஸ்டர்ன் கலாசாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இது ஹிப்னாடிசத்தை மையமா கொண்ட சைக்காலஜி த்ரில்லர். 600 வருடத்துக்கு முந்தைய பீரியட் ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் படத்துல வருது. அமானுஷ்யம் கலந்த இதில் வுமன் கேரக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். மிஸ்ட்ரி த்ரில்லர் என்பதால் மைண்ட் கன்ட்ரோல் பண்ற மாதிரி கதை நகரும். அது என்ன என்பதை படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும். ஹிப்னாடிசம் த்ரில்லர் என்பது ரசிகர்களுக்கு புதுசா இருக்கும்.

படத்துல யார் ‘வுல்ப்’?

படத்துல வர்ற நெகட்டிவ் கேரக்டர்ஸும் சரி, பாசிட்டிவ் கேரக்டர்ஸும் சரி வுல்ப் குணாதிசயம் கொண்டவங்களா இருப்பாங்க. வுல்ப் குணாதிசயம் மற்ற விலங்குகளிடமிருந்து மாறுபட்டது. மனிதர்களின் பல குணாதிசயங்கள் வுல்ப்புடன் ஒத்துப்போகும். அந்தவிதத்துல, ஹீரோவிடமும் வுல்ப் குணம் இருக்கும். வில்லனிடமும் வுல்ப் குணம் இருக்கும். ஹீரோ பாயிண்ட் ஆஃப் வியூல பார்த்தாலும் நியாயம் இருக்கும். வில்லன் பாயிண்ட் ஆஃப் வியூல பார்த்தாலும் நியாயம் இருக்கும். எந்த வுல்ப் ஜெயிக்கிறது என்பதுதான் படம்.

பிரபுதேவா என்ன சொல்கிறார்?

‘சிண்ட்ரல்லா’ ரிலீஸாவதற்கு முன்பே பிரபுதேவா சாரிடம் கதை சொல்ல டிரை பண்ணினேன். ‘பொய்க்கால் குதிரை’ ஷூட்டிங் ஸ்பாட்லதான் பிரபுதேவா சாரை மீட் பண்ணினேன். அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்துச்சு. தொடர்ந்து பிரபுதேவா சாரை ஃபாலோ பண்ணிக் கொண்டிருந்தேன். அவரிடம் எனக்கு பிடிச்சது, ஒரு மெசேஜ் பண்ணா போதும், அதுக்கு உடனே ரெஸ்பான்ஸ் பண்ணுவார். அந்த ரெஸ்பான்ஸி பிலிட்டி நிறையப் பேரிடம் இருக்காது.

அடுத்த மீட்ல தடுப்பு ஊசி போட்டிருக்கீங்களானு கேட்டவர், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நாற்பது நிமிடம் பொறுமையா கதை கேட்டார். கதை சொல்லி முடிச்சதும் ரெண்டு கேள்வி கேட்டார். ஒண்ணு, ‘இந்தப் படம் பண்ணா எனக்கு பேர் வருமா’ என்றார். இரண்டாவதா, ‘இந்த கதை என்னுடைய வயசுக்கு சூட்டாகுமா’ன்னு கேட்டார். ‘கண்டிப்பா உங்களுக்கு பேரும் கிடைக்கும், பொருத்தமான கதையாகவும் இருக்கும்’னு சொன்னேன்.

வழக்கமா ஹீரோ, தயாரிப்பாளர்களிடம் கதை  சொல்லும்போது கதை கேட்டு முடிச்சதும் சொல்லி அனுப்புறேன்னு வழி அனுப்பி வைப்பாங்க. சில இடங்களில் மீட்டிங் ஃபெயிலியராகிவிடும்.

ஆனா, பிரபுதேவா சார் ஆன் த ஸ்பாட்டில் ‘நான் இந்தப் படம் பண்றேன்’னு ஓகே சொல்லிட்டார்.பிரபுதேவா சாருக்கு குடிகார ரைட்டர் கேரக்டர். எப்பவுமே அலட்சியமா இருப்பார். பொதுவா ஹீரோக்கள் ஹீரோயிசம் விஷயத்தில் கவனமா இருப்பாங்க. ஆனா, பிரபுதேவா சார் கதையில் கவனமா இருப்பார். கதைக்கு எது தேவையோ அதைக் கொடுக்க தயங்கமாட்டார்.

படத்துல ஸ்பெஷல் கெட்டப்ல வர்றார். ஸ்பாட்டுக்கு வந்ததும் அந்த கெட்டப்புக்கு ரெடியாகணும். டெய்லி கரெக்ட் டைமுக்கு வந்து அந்த கெட்டப்புக்கு மாறிவிடுவார். அண்டர்கிரவுண்ட் செட்ல ப்ளாக் ஷேட்ல படப்பிடிப்பு நடந்துச்சு. அங்கு அசெளகரியம் இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளமாட்டார். அவர் டைரக்டர் பாயிண்ட் ஆஃப் வியூல யோசிச்சு ஒத்துழைப்பு கொடுப்பார்.

அனுசுயா பரத்வாஜ், அஞ்சு குரியன், ராய் லக்ஷ்மி, கோபிகா, ‘கே.ஜி.எப்.’ வசிஷ்ட சிம்ஹா, ரமேஷ் திலக்... முக்கியமான கேரக்டர்ல வர்றாங்க. படத்துல வர்ற ஹீரோயின்ஸ் எல்லாரும் அக்கா, தங்கச்சி ரோல் பண்ணியிருந்தாலும் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இதுல லவ் டிராக் அஞ்சு குரியனுக்கு மட்டும் இருக்கும். அஞ்சு குரியன் அடிப்படையில் மார்ஷல் ஆர்ட்ஸ் தெரிஞ்சவர் என்பதால் ஃபைட் சீன்ல பின்னியெடுத்தார்.

ஒளிப்பதிவு அருள் வின்சென்ட். பல படங்களில் பி.சி.சாரின் மாணவன்னு நிரூபிச்சவர். 43 நாட்களில் ஷூட் பண்ணிய படம் இது. டெய்லி ரெண்டு கேமரா, எலிகேம், கோப்ரா எக்ஸ்ட்ராவா இருக்கும். பெங்களூர்லருந்து  கொஞ்சம் இன்டீரியரா இருக்கிற ஊர்லதான் ஷூட் பண்ணினோம். டெய்லி எண்பது கிலோமீட்டர் டிராவல் பண்ணணும்.

அதனால் அதிக நாட்கள் ஷூட் பண்ண முடியாது என்பதால் ஃபாஸ்ட்டா ஒர்க் பண்ணினோம். அதுக்கு அருள் வின்சென்ட் பெரிய உதவியா இருந்தார். ஃபாஸ்ட்டா எடுத்ததோடு குவாலிட்டியாவும் கொடுத்தார். ஃப்ரெண்ட்லி கேமரா மேன்.  

மியூசிக் அம்ரீஷ். நான்கு பாடல்களை வெரைட்டியா கொடுத்திருக்கிறார். இது அவருக்கே புது ஜானர். ஏற்கனவே அவர் ராப் படங்கள் நிறைய பண்ணியிருக்கிறார். இதுல வெஸ்டர்ன் டிரை பண்ணியிருக்கிறார். அவரும் அதுக்கு தன்னை மாற்றிக்கொண்டு பண்ணியிருக்கிறார்.

அவருடைய ஒர்க்கை பார்த்துட்டு, இப்பவே அவருக்கு நிறைய பாராட்டு குவிய ஆரம்பிச்சுள்ளது.
தயாரிப்பு சந்தேஷ் நாகராஜ். கன்னடத்தில் 30 படங்கள் பண்ணியவர். இப்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிக்கும் ‘கோஸ்ட்’ படத்தை தயாரிக்கிறார். படம் முடிவதற்குள் அனைவருக்கும் பேமன்ட் செட்டில் பண்ணி, தங்கமான புரொடியூசர்னு பேர் வாங்கியவர்.

உங்க குருநாதர் எஸ்.ஜே.சூர்யா லவ் படம் எடுப்பதில் கிங். நீங்க க்ரைம் பக்கம் வந்துட்டீங்க?

எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சினிமாவைவிட வாழ்க்கையைத்தான் அதிகமா கத்துக்கிட்டேன். எந்த ஒரு இயக்குநரிடமும் வேலை கத்துக்கறேன்னு எதையும் கத்துக்க முடியாது. அப்படி எந்த டைரக்டரும் க்ளாஸ் எடுக்கமாட்டார்கள். அனுபவம் வேண்டுமானால் கிடைக்கும். அப்படி எஸ்.ஜே.சூர்யா சார், நான் செய்யாதவைகளை என் மூலம் செய்ய வைத்திருக்கிறார். அந்த பிராசஸ்ல அறிவு எது தேவையோ அதை எடுத்துக்கொள்ளும்.

அப்படி பார்க்கும்போது ப்ரொஃபஷனையும் வாழ்க்கையையும் எந்தெந்த கோணத்தில் பாக்கணும் என்பதை சாரிடமிருந்து கத்துக்கிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல அலட்டிக்கொள்ளாமல் வேலை செய்வார். எதையாவது எடுக்க வேண்டுமானால் ‘பண்ணிட்டா போச்சு’ என்பது மாதிரி கூலா நடந்துகொள்வார். ஒன் மோர் போகணும்னாலும் அலட்டிக்கொள்ளமாட்டார். எதிர்பார்த்தது கிடைக்கலைன்னா மாற்று வழி யோசிப்பார். ரிலாக்ஸ்டா வேலை பார்ப்பார். எதாவது தேவைனு வரும்போது அதை தள்ளிப்போடாம முயற்சிஎடுத்து பண்ணுவார்.

அவரிடம்  நான் வியந்தது, ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி அதைப் பற்றிய நிறைய கனவுகள் இருக்கும். அதை லவ் பண்ணிப் பண்ணுவார். எல்லா நடிகர்கள் மாதிரியும் நடித்துக் காட்டுவார். அப்படி நடித்துக் காண்பிக்கும்போதுதான் கேரக்டருடைய எமோஷன் நடிகர்களுக்கு புரியும் என்று சொல்வார்.

சில இயக்குநர்களுக்கு அதை சரியா சொல்லத் தெரியாது. அவுட்புட்டும் வேற மாதிரி வரும். எமோஷனை கன்வே பண்ணிக்காட்டினால் சிறந்த நடிப்பை வாங்க முடியும். அதை நான் ஃபாலோ செய்றேன்.

எஸ்.ராஜா