ஆடை பாதி உடல் பாகங்கள் மீதி!



கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகம்.

இணையத்தின் ஹாட் டாபிக் என்ன தெரியுமா? ஹனி ரோஸ் பின்னழகு. பேபிம்மா எங்கே புகைப்படம் பதிவிட்டாலும் சுமார் பத்து லட்சம் இளசுகள் வாவ் என ஹார்ட்டின் போட்டு அம்பு விடுகிறார்கள். அட ஜீரோ ஸ்டிரக்ச்சருக்குத்தானே இவர்கள் லைக் போட்டார்கள், இதென்ன திடீர் பப்ளி ஃபீவர்... உண்மையாகவே பெண்களுக்கு பின்னழகும், முன்னழகும் அவ்வளவு அவசியமா... அப்படி பிறப்பிலேயே எடுப்பான பின்னழகும், முன்னழகும் இல்லாதவர்கள் என்ன செய்வது..?

இந்தக் கேள்விகளுடன் காஸ்மெட்டாலஜிஸ்ட் மற்றும் சலூன், ஸ்பா நிர்வாகியான சுதா ராஜனை சந்தித்தால் சிரிக்கிறார். ‘‘இது ரொம்ப தவறான கண்ணோட்டம். ஆனா, சமூகச் சூழல் இப்படியான எண்ணத்துக்குதான் வழிவகுக்குது. என்னதான் ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ்ன்னாலும் ஆல் டைம் ஃபேவரைட் நம்ம ஷகிலா சேச்சிதான் என்ற உண்மையை இதுக்கு உதாரணமா சொல்லலாம்.இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா உட்பட அத்தனை நாடுகளிலும் வளைவு நெளிவுகளுடன் கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்குதான் ரசிகர்கள் அதிகம்.

சில உடைகள், சில வகையான பீச் வேர்களுக்கு வேண்டுமானால் ஒல்லி பெல்லி பெண்கள் தேவைப்படுவார்கள். அப்போதும் கூட பிகினியில் கொஞ்சம் பூசினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்கள்தான் கூட்டத்தில் முன்னிலை வகிப்பதுண்டு. அதிலும் நம் இந்தியப் பெண்கள், குறிப்பாக தென்னிந்தியப் பெண்களுக்கு மவுசு அதிகம். அதனால்தான் ஃபாரினர்கள் இங்கே வந்து திருமணம் செய்துக்கறாங்க.

ஆனா, அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப அவங்கங்க தோன்றுவதுதான் அழகு. ஆனாலும் சிலருக்கு தங்களோட உடல் பாகங்களை மாற்றி அமைக்கணும்னு ஆசை இருக்கும். அதுவும் இப்ப சாத்தியம்தான்.ஆமா... பின்னழகு, முன்னழகு மட்டுமல்ல தலை முடி முதல் கால் விரல்கள் வரை இயற்கையிலேயே உங்களுக்கு கிடைக்காத அழகு அத்தனையும் சுலபமாகக் கிடைக்க அத்தனை வசதிகள் இப்ப இருக்கு. அந்தளவுக்கு தொழில்நுட்பம் கைகொடுக்குது. என்ன, பணம்தான் தேவை...’’ என்று சொல்லிவிட்டு நம் அழகை மேம்படுத்த என்னவெல்லாம் வசதிகள், சிகிச்சைகள் உள்ளன என வரிசைப்படுத்தினார் சுதா.

தலைமுடி

கிளினிக்கல் மற்றும் சலூன் இப்படி ரெண்டு வகையான சர்வீஸ்கள் செய்துக்கலாம். கிளினிக்கல் சர்வீஸ் எல்லாமே டாக்டர்கள் கொடுக்கற சிகிச்சைகளா இருக்கும். அப்படி ஹேர் டிரான்ஸ்பிளான்ட் என்பது கிட்டத்தட்ட வயல்ல நாத்து நடற மாதிரி தலையிலே முடி நடுவது.அடுத்து பி.ஆர்.பி மூலம் உடல்ல இருக்கற இரத்தத்தை நேரடியா தலையிலே ஊசி மூலமா செலுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டுறது. இந்த ட்ரீட்மென்ட் ஒரே விசிட்ல நடக்காது. மூணு நாளு முறை நடக்கும்.

அப்புறம் சலூன் சர்வீஸ்ன்னா ஹேர் எக்ஸ்டென்ஷன். சிலருக்கு முடி வளர்ச்சி குறைவா அல்லது நீளம் குறைவா, சீரானதா இல்லாம இருக்கும். இந்த முறையிலே முடியை கிட்டத்தட்ட இணைச்சு ஒரிஜினல் நீளமான முடி மாதிரியே மாத்திடுவோம். இது தற்காலிகமானதுதான். இதுக்கும் பராமரிப்புகள் இருக்கு.

கண்கள் & புருவம்

மைக்ரோபிளேடிங் என்கிற, புருவத்தையே வில் மாதிரி அழகான அடர்த்தியான புருவங்கள் மாதிரி டாட்டூ ஸ்டைல்ல வரைவதுதான். இதை முறைப்படி முக வடிவம், அளவு இதெல்லாம் பொருத்து டாக்டர்கள் புருவங்களை செட் செய்வாங்க.சலூன் சர்வீஸ் எப்போதுமான ஐபுரோ பிளக், பென்சில், பவுடர் டச்சப் மேக்கப்தான். ஐலேஷ் ட்ரீட்மென்ட் அப்படியே ஹேர் இணைப்பு மாதிரி, அடர்த்தியான கண் இமைகள் மாதிரி முடிகளை ஒட்டிக்கலாம்.

கன்னம், மூக்கு, உதடுகள்:

இதுக்குதான் நிறைய வெரைட்டிகள் இருக்கு. சிலர் திரெட் லிஃப்ட் மூலமா மூக்கு, கன்னம் எல்லாம் கூட கரெக்ட் செய்துக்குவாங்க. சிலர் சர்ஜரியே செய்துக்கறதும் உண்டு.
கன்னம், மூக்கு, தாடை எல்லாம் ஷார்ப்பா தெரிய இழுத்து சின்ன தையல் போட்டுக்கறதும் நடக்கும். உதடு பெரிதா தெரிய லிப் ஃபில்லர் செய்துக்குவாங்க. சிலருக்கு கருப்பா இருக்கும். அதுக்கும் பீலிங் என்கிற மேல் தோல் நீக்குற சிகிச்சை இருக்கு. லிப் ஸ்கிரப் என்கிற முறையும் இருக்கு.

உடல் வடிவம், மார்புப்பகுதி, பின்பகுதி:

இடுப்பை குறைச்சு, மார்பு, பின்னழகை அப்படியே பெரிதாக்குற எத்தனையோ வசதிகள் வந்திடுச்சு. இதை ‘பட் என்ஹேன்சர், பிரெஸ்ட் என்ஹேன்சர்’ன்னு சொல்வோம்.
இதற்கு செலவு பல லட்சம் ஆகலாம். இந்த வசதிகளை முழுமையா பயன்படுத்தி மொத்தமா தன்னை மாத்திக்கிட்டவங்க நிறைய பேர் இருக்காங்க. அதில் ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன், அவர் தங்கை கைலி ஜென்னர் முக்கியஸ்தர்கள்.  

இது தவிர ஃபில்லர்கள் கூட இருக்கு. ஹையலுரானிக் ஆசிட் ஃபில்லர்கள். அப்படியே தண்ணீர் மாதிரி இருக்கும். அதை ஊசி மூலமா போட்டுக்குவாங்க. இது 18 + வீடியோ , ஆபாசப் பட உலகில் அதீத பிரபலம். என்ன... இதனால் முதுகுவலி, இடுப்பு வலி எல்லாமே உண்டாகும். அவங்களுடைய இயற்கையான கனத்தைக் காட்டிலும் அதிகமான சுமை இதிலே இருக்கும்.
பெரிதா சைட் எஃபெக்ட்ஸ் இருக்காது. ஆனாலும் அடிக்கடி நரம்பில் இந்த ஆசிட்டை ஏற்றினால் பிரச்னைதான்.

ஆனால், ஹிப், பிரெஸ்ட் என்ஹேன்சர் சர்ஜரியிலே நரக வலி இருக்கும். கிட்டத்தட்ட உங்க உடலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கொழுப்பையோ அல்லது சிலிக்கானையோ உள்ளே வைச்சுத்தான் இந்த சிகிச்சை நடக்கும். அதனால் நிச்சயம் வலியும் அதிகமா இருக்கும். எதுவானாலும் இயற்கையாகக் கிடைச்ச உடல்ல வேற ஒரு அந்நியப் பொருளை வைக்கும் போது அதற்கான பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும். பிரபலங்களுக்கு அதுதான் மூலதனம் என்கிறதால் செய்துக்கறாங்க.

சாதாரண பெண்கள், ஆண்களுக்கு இயற்கையே போதும். இதெல்லாம் விட இன்னும் இயற்கையான உடல்கட்டு வேணும்னா அதற்கான உடற்பயிற்சி செய்தாலே இதைவிட அழகான உடல் வடிவம் கிடைக்கும். சுதா இப்படி முடிக்க, உடற்பயிற்சியில் உடல் எடைக் குறைப்பு அல்லது உடல் அதிகரிப்பு வேண்டுமானால் செய்யலாம்... உடல் வடிவத்தில் மாற்றங்கள் கூட செய்யலாமா? விபரமாகப் பேசினார் ஃபிட்னஸ் ஆலோசகர், பயிற்சியாளர் மற்றும் கன்சல்டன்ட் டான அசோக்குமார்.

‘‘தசை வலிமைப்படுத்துதல்ன்னு சொல்வோம். பொதுவா பாடி பில்டிங் டிரெயினிங்கையே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு எடுத்துக்கிட்டா நிச்சயம் பெண்களுக்கான உடல் வடிவத்தில் தேவையான இடங்கள்ல மட்டும் பெரிதாக்கலாம். இதிலே உடல் வலிமையும் சேர்ந்து கிடைக்கும். பொதுவா இம்மாதிரியான போலி உடல் கட்டுகள், உடல் வடிவங்கள்ல மயங்காம, நமக்கு என்ன கிடைச்சிருக்கோ அதை எப்படி பார்த்துக்கலாம், ஆரோக்கியமா எப்படி திருத்தம் செய்யலாம்னு யோசிக்கணும்.

காரணம், அப்படியான ட்ரீட்மென்ட் செய்ய மட்டும் இல்லை, சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்புகளுக்கும் செலவும் மெனக்கெடலும் அதிகம். கொஞ்சம் அசால்ட்டா விட்டாலும் திரும்ப பழைய நிலைக்கு போயிடும் அல்லது அதைவிட மோசமான நிலைக்கு மாறிடும். அதுபோல ஒருமுறை செயற்கையா திருத்தம் செய்திட்டா தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியிலே செய்திட்டே இருக்கணும்.

உடல் வடிவம், வலிமைப்படுத்துதல், குறைத்தல் இதற்கெல்லாம் நிறைய பயிற்சிகள் இருக்கு. ஸ்குவாட் வெரைட்டிகள், சைட் லங், வால்-சிட், டெட் லிஃப்ட், வெயிட் லிஃப்ட் இதெல்லாம் கூட இடுப்புப் பகுதிக்கான பயிற்சிகள்தான்.

ஆர்ம் ரெய்ஸ், புஷ்-அப்ஸ், பிளான்க், கோப்ரா, டம்பெல் செஸ்ட் பிரெஸ், செஸ்ட் ஃப்ளைஸ் மெஷின்... இப்படி நிறைய முறைகள் பயன்படுத்தினால் பெண்களுடைய மார்புப்
பகுதியை ஃபிட்டா மாத்தலாம். சில பெண்களுக்கு குழந்தைப் பேற்றுக்குப் பிறகு மார்புப் பகுதி தளர்வு உண்டாகும். அதெல்லாத்தையும் கூட இந்தப் பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். சரியான அளவிலே ஊட்டச்சத்துகளும் எடுத்துக்கணும். குறிப்பா சின்ன வயதிலேயே உடலுக்குத் தேவையான உணவும், ஊட்டச்சத்தும் கொடுத்தாலே கூட எதிர்காலத்திலே இப்படியான உடல் மீதான கவலைகள் இருக்காது...’’ என்கிறார் அசோக்குமார்.  

ஷாலினி நியூட்டன்