புவிசார் குறியீடு பெறப்போகும் 10 வேளாண் பொருட்கள்...
கடந்த வாரம் மாநிலத்தின் மூன்றாவது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். இதில் பத்து வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவிப்பு, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, வீரமாங்குடி அச்சுவெல்லம், விளாத்திகுளம் மிளகாய் வத்தல், பேராவூரணி தென்னை, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, கடலூர் கோட்டிமுளை கத்திரி ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் புவிசார் குறியீடு பெற ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தப் பொருட்களுக்குப் புவிசார் குறியீட்டை பெறுவதற்குக் காரணமே இவற்றின் தனித்துவம்தான். புவிசார் குறியீடும் தனித்துவமிக்க பொருளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் வழங்கப்படுவதாகும். இதனால், குறிப்பிட்ட வேளாண் பொருள் இந்திய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெறும். அத்துடன் அந்தப் பொருட்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை விற்பனையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடியும். இந்தப் பொருட்கள் குறித்து சில விவரங்கள்...
 அரசம்பட்டி தென்னை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கிறது அரசம்பட்டி. இந்தக் கிராமம் முழுவதுமே தென்னந் தோப்புகள்தான். இங்கு நாட்டு ரகத்தைத்தான் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர். வறட்சி தாங்கி வளரக்கூடியது என்பதும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்கள் இருக்காது என்பதும் இதன் சிறப்பம்சம் என்கின்றனர் விவசாயிகள்.
 இதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் தென்னங்கன்றுகள் பல மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ஒரு கோடி தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அரசம்பட்டி தென்னை தரமாகவும், அதிக விளைச்சல் தருவதாலும் புகழ்பெற்று விளங்குகிறது.
மூலனூர் குட்டை முருங்கை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருக்கிறது மூலனூர் பேரூராட்சி. இப்பகுதி மண்வளம் சுண்ணாம்புச் சத்து நிறைந்த ஒன்று. இதனால், இங்கு விளைவிக்கப்படும் முருங்கையில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படும் என்கின்றனர் விவசாயிகள். இந்தப் பகுதி முருங்கைக்கென ஒரு தனிச்சுவையும் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இங்கே செடி முருங்கை, குட்டை முருங்கை என்ற மர முருங்கை என இரண்டு முருங்கை ரகங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த முருங்கைக்காய்கள் தமிழ்நாட்டிலும், ஆந்திரா உள்பட பல மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. தவிர, வளைகுடா நாடுகளிலும் மூலனூர் முருங்கைக்கு தனி வரவேற்பு உள்ளதாகச் சொல்கின்றனர். இதில் குட்டை முருங்கைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி
சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படும் பாரம்பரிய நெல் ரகம் கருப்புக்கவுனி. சமீபமாக கருப்புக்கவுனி அரிசியின் மருத்துவ குணங்களும், நன்மைகளும் பற்றி அதிகளவு பேசப்பட்டு வருகின்றன. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் வீடுகளில் ஏதேனும் விசேஷம் என்றாலே இந்த அரிசியில் இனிப்புகள் செய்வதை காலம் காலமாக வைத்துள்ளதாகச் சொல்கின்றனர் அங்குள்ள விவசாயிகள். அதற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படுவது அவர்களிடம் பெரும்மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வீரமாங்குடி அச்சுவெல்லம்
தஞ்சாவூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது வீரமாங்குடி கிராமம். கரும்பு சாகுபடி செய்யும் இந்தக் கிராமம் அச்சுவெல்லத்திற்கு பெயர்போனது. கொள்ளிடம் ஆற்றிற்கும், காவிரி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ஊர் இருப்பதால் வளமான வண்டல் மண்ணில் கரும்பு பயிரிடப்படுகிறது.
இதனால், கரும்பின் சுவை தனித்துவமாக இருக்கும் என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள். அதிலிருந்து அச்சுவெல்லம் தயாரிக்கப்படுவதால் அதன் சுவையும் தனித்துவமாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இங்கே பாரம்பரியமாகத் தயாரிக்கப்படும் அச்சுவெல்லம் தமிழ்நாடெங்கும் செல்கிறது.
சாத்தூர் வெள்ளரி
சாத்தூர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது காரச்சேவும், வெள்ளரிப் பிஞ்சும்தான். இதில், வெள்ளரிப் பிஞ்சு சாகுபடி சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் நடந்து வருகிறது. மற்ற வெள்ளரியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு காணப்படும் காய் இது.
இவை திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தவிர, திருவனந்தபுரம் வழியாக மாலத்தீவுக்கும் சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு ஏற்றுமதியாகிறது.
தஞ்சாவூர் பேராவூரணி தென்னை
தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாகுபடிக்கு பெயர்போன ஊர் பேராவூரணி. இங்கே விளையும் தேங்காய்கள் சென்னை, காங்கேயம், வெள்ளக்கோயில், ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக எண்ணெய் தேவைகளுக்கு இந்தத் தேங்காய்கள் அனுப்பப்படுகின்றன. இந்நிலையில் பேராவூரணி தென்னைக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளனர் அந்தப் பகுதி விவசாயிகள்.
மதுரை செங்கரும்பு
மதுரை ஏற்கனவே மல்லிகைப்பூ, சுங்குடி சேலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீட்டைப் பெற்றிருக்கிறது. இப்போது செங்கரும்புக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. இதற்கென தித்திக்கும் தனிச்சுவை உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர் விவசாயிகள்.
விளாத்திகுளம் மிளகாய்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிறது விளாத்திகுளம் பேரூராட்சி. இங்கும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மானாவாரி விவசாயத்தில் முண்டு மிளகாய் எனப்படும் குண்டு மிளகாய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. தவிர, குறைந்தளவு சம்பா மிளகாயும் விளைவிக்கப்படுகிறது. இவை வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஏற்கனவே ராமநாதபுரம் குண்டு மிளகாய் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது. இப்போது விளாத்திகுளம் மிளகாய்க்கான புவிசார் குறியீடு பெறும் நடவடிக்கையே உற்சாகத்தைத் தந்துள்ளதாகச் சொல்கின்றனர் அந்தப் பகுதி விவசாயிகள். இதனுடன் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவிற்கும், கடலூர் கோட்டிமுளை கத்திரிக்கும் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பி.கே
|