8 ஆண்டுகளாக ஒருவரைக் காதலிக்கிறேன். இப்போது அவரது பெற்றோர் சம்மதிக்காததால் என்னை மணந்துகொள்ள முடியாது என்கிறார். எனக்கோ அவரை மறக்கவே முடியவில்லை. அவரை காதல் திருமணம் செய்ய சட்டப்படி வழி உண்டா? பெயர் குறிப்பிட விரும்பாத வாசகி.
பதில் சொல்கின்றனர் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர்இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது சிரமம். ஒருவேளை நீங்கள் தனித்துப் போராடினாலும், அவரை திருமணம் செய்ய முடியும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. உங்கள் காதலர் மனம் மாறுவார் என்ற நம்பிக்கை இருந்தால் மகளிர் காவல் நிலையம் அல்லது மாதர் சங்கம் மூலமாக முயற்சி எடுக்கலாம்.
பொதுவாகவே காதலிக்கும் பெண்களுக்கு நாங்கள் சொல்வது இதுதான்...
« காதலித்தால் அதிகபட்சம் ஓரிரு ஆண்டுகளுக்குள் திருமணப் பேச்சை ஆரம்பித்து, உடனடியாகத் திருமணம் செய்துகொள்வதே நல்லது.
« திருமணப் பேச்செடுத்தால் காதலன் தட்டிக் கழித்தாலோ, திசை திருப்பினாலோ உஷாராகிவிட வேண்டும்.
« ‘உன்னை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறேன். ஆனால், அம்மா அப்பாவிடம் இதைச் சொல்ல முடியாது’ என்று பயப்படுபவர்களைக் கண்டு, நாமும் பயந்து ஒதுங்குவதே நல்லது.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து எஞ்சினியரிங் முடித்திருக்கிற மாணவன் நான். நல்ல மதிப்பெண்களுடன் தேறியும், படிப்பை முடித்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. வாரம் ஒரு நேர்முகத் தேர்வுக்குப் போய் வருகிறேன். என்னுடன் படித்த பலரும் வேலை கிடைத்து செட்டிலாகி விட்டார்கள். வேலை கிடைக்காததற்கு என்னுடைய கிராமத்துப் பின்னணிதான் காரணமா? என் திறமையை நான் எப்படித்தான் நிரூபிப்பது?எம்.ராஜா, பண்ணைபுரம்.
பதில் சொல்கிறார் கம்பன் எஞ்சினியரிங் கல்லூரியின் வேலை வழங்கு அதிகாரி செல்வமணிசில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேலை தேடும் ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். ஆனால், அவர்களுக்குப் பொருத்தமான வேலைதான் இல்லாமல் இருந்தது. இன்று நிலைமை தலைகீழ். வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பொருத்தமான ஆட்கள்தான் இல்லை!
இப்போதெல்லாம் படிக்கிறபோதே, பல கல்லூரிகளும் தங்கள் மாணவர்களுக்கு எம்.என்.சி&யிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்து, வேலைவாய்ப்பு பெறும் தகுதிகளுக்கான பயிற்சிகளை சொல்லித் தருகிறார்கள். அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறாத உங்களைப் போன்ற இளைஞர்கள், படிப்பை முடித்ததும் ‘டிரெய்னிங் அண்ட் பிளேஸ்மென்ட் சொல்யூஷன்’ நிறுவனங்களை அணுகலாம். அதுபோன்ற நிறுவனங்கள், நகரத்தின் பெரிய சாஃப்ட்வேர், ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்தந்த நிறுவனங்களில் காலியாக இருக்கும் வேலையிடங்களுக்கு உங்களைப் போன்ற வேலை தேடும் இளைஞர்களைத் தயார்படுத்தி, வேலையும் வாங்கித் தருவார்கள். அந்தப் பயிற்சியில் தகவல் தொடர்பு திறமை, நடத்தைக்கான பயிற்சி, ஆங்கில அறிவுக்கான பயிற்சி, ஹெச்.ஆர்., மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி என வேலைக்குத் தேவையான அத்தனையும் அடக்கம்.
ஒரு மாதச் சம்பளத்தை நீங்கள் பயிற்சிக் கட்டணமாகத் தர வேண்டியிருக்கும். ஏ, பி, சி என வேறு வேறு கிரேடுகளில் வேலைவாய்ப்புகளுக்கு இவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள். ஏ கிரேடுக்கு ரூ.23 & 24 ஆயிரம் சம்பளமும், பி கிரேடுக்கு ரூ.18 ஆயிரம் வரையும், சி கிரேடுக்கு ரூ.15 ஆயிரமும் கிடைக்கும். ஒரே ஒரு விஷயம்... ஏமாற்றும் கம்பெனிகள் பெருத்து விட்டதால், வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி கொடுக்கும் நிறுவனங்களை மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி எடுப்பது பாதுகாப்பானது.