வலிமைக்கு தடை!



அதிர்ச்சியாக இருக்கிற தல்லவா..?

‘வலிமை’ அப்டேட்டுக்காக அஜித்தின் ரசிகர்கள் இணையம் முழுக்க தயாரிப்பாளர் போனி கபூரை ரவுண்ட் கட்டி அடித்து வருகிறார்கள். படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் ஒர்க்கும் நடைபெற்று வருகின்றன. இன்னும் சென்சாருக்கு இப்படம் செல்லவே இல்லை.அதற்குள் ‘வலிமை’க்கு தடை என இந்த மேட்டருக்கு தலைப்பு வைத்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும்..?
ஆனால், இது உண்மையல்ல; போலவே பொய்யுமல்ல. இப்படியொரு நிலை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

யெஸ். அஜித், விஜய், ரஜினி, கமல் நடித்து வரும் படங்கள் மட்டுமல்ல... எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டவர்கள் நடித்த படங்களுக்கும் ஆபத்து வந்திருக்கிறது!
அதற்கான ஒரு சோறு பதம்தான் திரைப்பட தணிக்கை திருத்தம்.கடந்த ஆண்டு கொரோனா பொது ஊரடங்கு நேரத்தில் கமுக்கமாக சென்சார் மறுக்கப்பட்டால் மேல்முறையீட்டுக்கு செல்லும் உரிமையை ஒன்றிய பாஜக அரசு பறித்ததல்லவா..?அதன் நீட்சியாக இப்பொழுது திரைப்பட சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்திருக்கிறது.

ம்ஹும். ஒரேயொரு சட்ட திருத்தம் அல்ல. அப்படி செய்தால், நாமே அதன் மீது வெளிச்சம் பாய்ச்சியது போல் ஆகும் என புத்திசாலித்தனமாக வேறு சில திருத்தங்களையும் கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.இந்த வேறு சில சட்ட திருத்தங்கள் ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி வந்ததுதான்.

எனவே, இவற்றை நிறைவேற்றுவதன் வழியாக முக்கிய அபாயகரமாக இருக்கும் சென்சார் தொடர்பான திரைப்பட சட்ட திருத்தத்தை அமல்படுத்தி அப்படியே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைக்கமுற்படுகிறார்கள். முறுக்கு பிழியாமல் நேரடியாக விஷயத்துக்கு சென்று விடலாம்.ஒன்றிய அரசின் சினிமாட் டோக்ராப் சட்ட திருத்தம் பற்றிய அறிவிப்பு, மொத்தம் மூன்று திருத்தங்களை சொல்கிறது.

*முதல் திருத்தம்

6 AA பிரிவில் சொல்லப்படும் திருத்தம்  சினிமா படைப்பு piracy  குறித்தது. படைப்பாளி / தயாரிப்பாளர் அனுமதியின்றி நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு குறிப்பிட்ட படைப்பையோ அல்லது படைப்பின் பகுதியையோ டிஜிட்டலில் பொது வெளியில் விடுவது குற்றம். இதற்கான தண்டனை இப்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் மூன்று மாதம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபாரதத் தொகையாக குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாயிலிருந்து அதிகபட்சம் படைப்பு உருவாக்க செலவில் 5 சதவீதம்
வரை விதிக்கப்படும். இதில் ஏதோ ஒன்றோ அல்லது இரண்டுமே தண்டனையாக இருக்கலாம்.

*இரண்டாவது திருத்தம்

5A  பிரிவில் பொது வெளியில் திரைப்படத்தை காண்பிக்க திரைப்பட சான்றிதழ் - சென்சார் சர்டிஃபிகேட் - வழங்குவது தொடர்பானது.  இதில் U/A  என்ற சான்றிதழுக்கு எல்லோரும் பார்க்கக் கூடியது என்று அர்த்தம். இப்போது வந்துள்ள திருத்தத்தின்படி, இனி U/A என்பது U/A 7 +, U/A 13 + என்ற பிரிவுகளோடு இருக்கும். அதாவது 7 வயதுக்கு மேற்பட்ட எல்லோரும் பார்க்கக் கூடியது; 13 வயதுக்கு  மேற்பட்ட எல்லோரும் பார்க்கக் கூடியது என்ற பொருளில்.இந்த இரு திருத்தங்களும் காலம் காலமாக கேட்கப்பட்டு வருவதுதான். எனவே இதில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லை.

*மூன்றாவது திருத்தம்

இந்த திருத்தம்தான் முற்றிலுமாக எதிர்க்கப் படவேண்டியது. திரைப்படத்தை பொது வெளியில் காண்பிப்பதற்கான சான்றிதழ் வழங்கும் அதிகாரம் - அதாவது சென்சார் சர்டிஃபிகேட் வழங்கும் அதிகாரம் - மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவுக்கு மட்டுமே உண்டு என்பதுதான் இப்போதைய சட்டம்.  இதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று 1991ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதி மன்றமும், 2000ம் ஆண்டு உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துள்ளது.  

இதைத்தான் இப்போதைய பாஜக ஒன்றிய அரசு திருத்தம் மூலமாக மாற்ற வேண்டும் என்கிறது. இந்த சட்ட திருத்தம் எவ்வளவு டேஞ்ஜரானது என்பதை உதாரணத்துடன் பார்க்கலாம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் காலத்தால் அழியாத காவியமாகத் திகழ்கிறது அல்லவா ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ படங்கள்..? இவை பல்வேறு திரையரங்குகளில் பல காலகட்டங்களில் வெளியாகி இருக்கின்றன. இப்பொழுதும் டிவி சேனல்களில் ‘காவிய வரிசை’ அந்தஸ்துடன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திடீரென்று பாஜக ஒன்றிய அரசுக்கு இப்பொழுது இப்படங்களில் தீமை / தவறு / பிழை இருப்பதாகத் தோன்றினால் உடனே, மீண்டும் தணிக்கைக் குழு இப்படங்களைப் பார்த்து சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிடலாம்!புதிய சட்டதிருத்தத்தின்படி ஒன்றிய அரசின் சென்சார் குழுதான் ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ படங்களைப் பார்த்து சென்சார் சர்டிஃபிகேட் வழங்க வேண்டும். இக்குழு சென்சார் தர மறுத்தால் இனி எப்பொழுதுமே ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ படங்களை திரையரங்குகளிலோ சேனல்களிலோ ஒளிபரப்ப முடியாது!

இதே நிலை ‘காதலிக்க நேரமில்லை’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படங்களுக்கும் ஏற்படலாம்!ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, ஒரு முறை சான்றிதழ் வழங்கினால் அது என்றென்றைக்குமானது. இப்பொழுதோ, வழங்கப்பட்ட சென்சார் சர்டிஃபிகேட்டையே செல்லாது என அறிவித்து அப்படத்தை முடக்கலாம்!  

இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டால், படைப்பாளியின் சுதந்திரம் பறி போகும். படைப்பாளி / தயாரிப்பாளர் பொருளாதார ரீதியாக மற்றும் தொழில்ரீதியாக இன்னல்களுக்கு உள்ளாவார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால், மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் அமைப்பே அர்த்தமற்றதாகி விடும். படைப்புச் சுதந்திரம் என்பது மத்திய அரசின் வீடியோ கேம் ஆக மாறிவிடும். எனவேதான் அனைத்து மாநில மொழி கலைஞர்களும் இதற்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கே.என்.சிவராமன்