5 ரூபாய்க்கு சாப்பாடு...ஒரு ரூபாய்க்கு இட்லி... வயதானவர்களுக்கு இலவசம்!
கலக்கும் திருச்சி புஷ்பராணி அக்கா கடை
‘5 ரூபாய் சாப்பாடு… பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசம்…’ - இப்படியொரு பேனருடன் திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் ஒரு மரத்தடி நிழலில் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது அந்த சாப்பாட்டுக்கடை.
 சுவையும் சிறப்பு என்பதால் முதியவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் உணவு வாங்க அந்தக் கடையைச் சுற்றிக் காத்து நிற்கின்றனர். ஆறு வகையான கலவை சோறும், வடையும், முட்டைத் தொக்கும் வாசனையை எகிற வைக்கின்றன. இதில் முட்டைக்கும், வடைக்கும் தனி விலை என்றாலும், இன்றைய சூழலில் இவ்வளவு மலிவு விலையில் உணவு கொடுப்பது ஆச்சரியம் நிறைந்தது.  ஒவ்வொருவருக்கும் பார்சல் கட்டியபடியே பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார் கடை உரிமையாளரான புஷ்பராணி. அவரை, புஷ்பம்மா… புஷ்பக்கா… என உணவு வாங்க வந்தவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல அழைக்கின்றனர். ‘‘போன கொரோனா முதல் அலையப்ப இந்தக் கடையைத் திறந்தேன். ஆரம்பத்துல இருபது ரூபாய்க்குதான் சாப்பாடு கொடுத்தேன். ஆனா, அப்ப சாப்பாடு ரொம்ப வீணாச்சு. என்ன பண்றதுனு தெரியாம முழிச்சிட்டு இருந்த நேரம் என் கணவர்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தார்…’’ எனப் பணிகளிடையே பேசத் தொடங்கினார் புஷ்பராணி.
 ‘‘எங்களுக்குச் சொந்த ஊர் திருச்சி. கணவர் சந்திரசேகர் வெல்டரா பணி செய்றார். கொரோனா முதல் அலையின் போது அவர் வேளாங்கண்ணியில் வேலை பார்த்திட்டு இருந்தார். லாக்டவுன் போட்டதும் அவரால் அங்கிருந்து திருச்சிக்கு வரமுடியல. அவருடன் ஆறுபேரை வேலைக்கு அழைச்சிட்டு போயிருந்தார். எல்லோரும் ரயில் பாதையில் மூணு நாட்களா நடந்தே ஊர் வந்து சேர்ந்தாங்க.
அப்படி வரும்போது சாப்பாடு எதுவும் கிடைக்கல. வர்ற வழியில் யாரும் ஊருக்குள்ளயும் விடல. வழியில் இருந்த பெட்டிக்கடையில் கிடைச்சதை சாப்பிட்டு பசியும் பட்டினியுமா வந்தாங்க.
அந்நேரம் நான் ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாட்டுக் கடையை ஆரம்பிச்சேன். அதுவரை எனக்கு இதுல அனுபவம் எதுவும் கிடையாது. 20 ரூபாய்க்கு கலவை சோறு தயாரிச்சு கொடுத்தேன்...’’ என்கிறவரைத் ெதாடர்ந்தார் கணவர் சந்திரசேகர்.
‘‘ஆனா, சாப்பாடு விற்பனை சரியா போகல. ஏன்னா, கொரோனா என்பதால் கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் எல்லாம் மூடிட்டாங்க. இதனால, பாதி சாப்பாடு வீணாச்சு. இந்நேரம், லாக்டவுனால் கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் உணவை விலை குறைச்சுக் கொடுக்கச் சொல்லி என் மனைவிகிட்ட கேட்டிருக்காங்க.
‘விடுதியில் தங்கி வேலை பார்த்திட்டேதான் படிக்கிறோம். எங்களுக்கு உணவை பாதி விலையில் கொடுத்தால் இரவுக்கும் வாங்கி வைச்சுக்குவோம்’னு சொல்லியிருக்காங்க. அதைச் சொல்லி, என்ன பண்றதுனு எங்கிட்ட கேட்டாங்க.
அப்ப எனக்கு, ரயில் பாதை வழியா மூணு நாளா சாப்பாடு எதுவும் இல்லாமல் எப்படி கஷ்டப்பட்டு நடந்து வந்தோம்ங்கிற நினைப்புதான் வந்தது. அதனால, நான் குறைவான விலைக்கு கொடுக்கலாம்னு நம்பிக்கையா சொன்னேன்…’’ என உற்சாகமாகச் சொல்கிறவர், அடுத்து செய்ததுதான் அதிரடி. தன் மனைவியிடம் கூட சொல்லாமல் விலையை நிர்ணயித்து நோட்டீஸே அடித்துவிட்டார். ‘‘அவர் எங்கிட்ட கூட சொல்லல. மதிய சாப்பாடு ஐந்து ரூபாய்னும், மாணவர்களுக்கு இதில் பாதி விலையான இரண்டு ரூபாய் 50 பைசாவுக்கும், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவசம்னும் நோட்டீஸ் அடிச்சிட்டு வந்துட்டார்! எனக்கு அதைப் பார்த்ததும் முதல்ல அதிர்ச்சியா இருந்துச்சு. உடனே, ‘நாமே கஷ்டப்படுறோம். நமக்கு இது சாத்தியமாகுமா’னு அவர்கிட்ட கேட்டேன். ஆனா அவர், ‘நாம செய்வோம். கடவுள் கூட இருப்பார்’னு நம்பிக்கை தந்தார்.
உண்மையில் சொல்றேன் சார்… 20 ரூபாய்க்கு நான் முதல்ல கொடுத்ததைவிட இப்ப ஐந்து ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்குறப்ப ரொம்ப மனநிறைவா உணர்றேன். மகிழ்ச்சியாவும் இருக்கேன். எங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரல. நல்லாவே இருக்கோம்.
இப்ப சாம்பார், தக்காளி, லெமன், தயிர், புதினா, காளான், பூண்டு, கொள்ளு, எள்ளு, வெஜ் ரைஸ், பிரியாணினு முப்பது வகையான கலவை சோறு தயாரிக்கிறோம். தினமும் ஆறு வகையான கலவை சோறுனு மாறி மாறி தர்றோம். உடலுக்கு ஆரோக்கியமா இருக்கணும்னு பார்த்துப் பார்த்தே சமையல் செய்றோம். யாருக்கும் வயிற்றுத் தொந்தரவு வந்திடக்கூடாதுனு கவனமா சமைக்கிறோம்.
காலையில் இட்லியும் ஐந்து வகையான சட்னியும் கொடுக்குறோம். இந்தச் சட்னியும் பீட்ரூட், கேரட், தேங்காய், தக்காளி, புதினானு மாறிட்டே இருக்கும். இட்லியை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு ரூபாய்க்கும், படிக்கிற மாணவர்களுக்கு ரெண்டு ரூபாய்க்கும், மற்றவர்களுக்கு மூணு ரூபாய்க்கும் தர்றோம்.
முதல்ல மதிய சாப்பாடு மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்னு கொடுத்தோம். ஆனா, மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு ரூபாயாவது வாங்கிக்கணும்னு சொன்னதால காலையில் இட்லிக்கு மட்டும் ஒரு இட்லி ஒரு ரூபாய்னு வாங்குறோம். மற்றபடி மதிய சாப்பாடு எப்பவும்போல மாற்றுத்திறனாளிகளுக்கும், வயசானவங்களுக்கும் இலவசமாகவே வழங்குறோம். மாஸ்க் அணிந்து வராம இருந்தா அவங்களுக்கு மாஸ்க்கும் இலவசமா கொடுக்குறோம்...’’ என்கிறவரிடம் எப்படி கட்டுப்படியாகிறது எனக் கேட்டோம். ‘‘நான் அரிசி, காய்கறி, மசாலா சாமான்கள் எல்லாம் வாங்குற கடைக்காரங்க நான் ஐந்து ரூபாய்க்கு உணவு தர்றதை கேள்விப்பட்டு விலை குறைச்சே பொருட்கள் தர்றாங்க. குறைஞ்ச விலைனு உடனே தரமில்லாததுனு நினைச்சிடாதீங்க. ரொம்ப தரமான பொருட்களாவே கொடுப்பாங்க. காய்கறிகளும் தரமா இருக்கும். அதெல்லாம் எனக்கு கட்டுப்படியாகுது.
முதல்ல 50 ஆயிரம் ரூபாய் பைனான்ஸ்ல கடன் வாங்கிதான் செய்தோம். கணவருக்கு ஒருநாளைக்கு வெல்டர் பணிக்கான சம்பளம் 750 ரூபாய் கிடைக்கும். இதில் 500 ரூபாய் பைனான்ஸ் கட்டிடுவார். அவர்தான் காய்கறிகள் எல்லாம் வாங்கித்
தருவார். இதனால, தொடர்ந்து சாப்பாட்டுக்கடையை நடத்திட்டு வர்றோம். முதல் அலை குறைஞ்சு கல்லூரிகள் திறந்தப்ப நல்ல லாபத்தில் நடந்தது. இப்ப ரெண்டாவது அலை வந்ததால மறுபடியும் கல்லூரி, அலுவலகங்கள், கடைகள் செயல்படல. ஆனாலும் விடக்கூடாதுனு தொடர்ந்து நடத்துறோம். ஏன்னா, எல்லோரும் 5 ரூபாய் சாப்பாடுனு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தவிர, நிறைய பேருக்கு உணவும் பிடிச்சுப் போச்சு.
நம்மள நம்பி வாடிக்கையாளர்களும் இருக்கிறதால என்ன கஷ்டம் வந்தாலும் நிறுத்தாமல் செய்வோம்னு தொடர்றோம். இப்ப இட்லி கடை மட்டும் போடல. கல்லூரி திறந்ததும் மறுபடியும் போடுவோம். ஆரம்பத்துல 50 கிலோ அரிசி போடுவேன். இப்ப 25 கிலோனு பாதியா குறைச்சு சோறு ஆக்குறேன். 200 சாப்பாடு போகுது. முன்னாடி மிச்சமானா என்ன செய்றதுனு தெரியாமல் கொட்டினோம். இப்ப வீணாவதில்ல. சில நேரம் உணவு அதிகமாகிட்டா அதை சாலையோரம் வசிப்பவர்களுக்கும், எங்கள் வீட்டருகே இருப்பவர்களுக்கும் பார்சல் பண்ணி கொடுத்திடுவோம்.
ஆரம்பத்துல என் கணவர், இரண்டு பசங்க, பொண்ணு, அக்கா, தங்கச்சினு குடும்பமா வேலை செய்தோம். இன்னைக்கும் என்கூட இருக்காங்க. இப்ப செலவு எல்லாம் போக எனக்கு 500 ரூபாய் கிடைக்குது. அது பைனான்ஸுக்குப் போயிடும். கணவரும் லாக்டவுனுக்குப் பிறகு இப்ப வெல்டர் பணிக்கு போக ஆரம்பிச்சிருக்கார். அதனால, நெருக்கடி இல்லாமல் கடையையும், வாழ்க்கையையும் சிறப்பா நடத்த முடியுது…’’ மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் சொல்கிறார் புஷ்பராணி அக்கா.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: சுந்தர்
|