எனது ஒல்லி உடம்புக்கும் ரசிகர்கள் இருக்காங்க... கொஞ்சம் பூரிச்சிருக்கிற உடம்புக்கும் ரசிகர்களை வைச்சிருக்கேன்!



எத்தனை நாளாச்சு ராய்லட்சுமியைப் பார்த்து! புன்சிரிப்பும், பூங்கொத்தும் எப்போதும் அழகுதானே! சாத்தானும் தேவதையும் சேர்ந்துகொண்டு சதுரங்கம் விளையாடும் கண்கள்.(நமக்கு) மூச்சிரைக்க வைக்கிற மூங்கில் தேகம். கண்களின் வழியே பார்த்து புன்னகையோடு கை குலுக்குகிறார். இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என கிளி ஆங்காங்கே பறந்துகொண்டே இருக்கிறது. இப்பொழுது தமிழில் ‘சின்ட்ரெல்லா’வில் முழுமூச்சில் இருக்கிறார்.‘‘‘சின்ட்ரெல்லா’ன்னா எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகளின் உலகில் அதற்கு ஏஞ்சல் மாதிரி ஓர் இடம் இருக்கு. குட்டிக் குழந்தைகள் உறக்கத்தில் வாய்விட்டு சிரிக்கும்போது அவங்களுக்கு இது சின்ட்ரெல்லாவோட விளையாடுகிற நேரம்னு சொல்வாங்க.

அப்படிப்பட்ட சின்ட்ரெல்லாவைப் பேயாகப் பார்ப்பது இதுல புதுசா இருக்கு. இயக்குநர் சொன்னபோது அதில் இருந்த நியாயம், பாவமான ஃபீலிங் எல்லாமே பிடிச்சிருந்தது. நல்ல டீசன்டான ரோல். அழகாகவும் காட்டியிருக்காங்க. நடிக்கவும் வைச்சிருக்காங்க. கதை பயணமாகிட்டு வரும்போதே டுவிஸ்ட், சின்னச்சின்ன அதிர்ச்சிகள்னு கதையின் முடிச்சுகள் அவிழ்ந்துகிட்டே இருக்கும். ஒரு நல்ல சினிமாவில் நடிச்சிருக்கேன்னு சொல்லணும்...’’ புன்னகைக்கிறார் ராய் லட்சுமி.

ஏன் எப்பவும் தெலுங்குப் பக்கமே இருக்கீங்க?

‘கற்க கசடற’ நடிக்கும்போது எனக்கு 14 வயசு. அப்படியே நேரா பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மாதிரி வந்து நடிச்சேன். ஒண்ணும் தெரியாது. ஒரு படத்தையும், அடுத்தடுத்த வரிசையையும் எப்படி தேர்ந்தெடுக்கணும்னு தெரியாது. கிளாமர் எவ்வளவு தூரம் செய்யலாம், எதில் நிறுத்திக்கணும் என்பதுகூட தெரியாது. அதுக்குள்ளயே ஒரு கிளாமர் நடிகைன்னு பெயர் வந்திடுச்சு. இவ்வளவு நாளைக்குப் பிறகு இப்பதான் மலையாளத்திலிருந்து கூப்பிட்டு, சூப்பர் ஸ்டார்களோடு படங்கள் செய்தேன். 12 படங்களுக்கு மேல் பெரிய வெற்றி. அவங்க என் நடிப்பின் மறுபக்கத்தை தேர்ந்தெடுத்தாங்க.

இன்னிக்கும் மலையாள சினிமாவில் ஒரு நிலையான பெயர் எனக்கு இருக்கு. இவ்வளவு நாள் உழைச்சதுக்கு எனக்குக் கிடைச்ச பெரிய கவுரவம் இது. முதலில் தமிழில் நடிக்க ஆரம்பிச்சு அப்புறம்தான் தெலுங்குப்பக்கம் போனேன். அவங்க என்னை கொண்டாடினாங்க. அப்புறம் தமிழ் மக்கள் கிட்டே வந்தேன். என்ன பண்றது? தெலுங்கில் பெரிய வெற்றி கொடுத்தவங்களையும் விட்டுக்கொடுக்கமுடியாது. இப்ப இங்கே லைன் கிடைச்சிடுச்சு... இனிமே இங்கே அடிக்கடி நடிப்பேன். விடமாட்டேன்.

‘ஜூலி 2’ வில் அதிகபட்சமாக கவர்ச்சி காட்டினீங்க...

உடம்பைக் கட்டுக்குள் வைத்துக் கொள்வது சாதாரணமான விஷயம் இல்லை. பிகினியில் ஆபாசமாக உணர்ந்ததாக ஒருத்தர்கூட சொன்னதில்லை. என்னுடைய உயரத்திற்கு ஏற்ற அளவு உடம்பை வைத்துக்கொள்வதில் அதிக அக்கறை காட்டுகிறேன். எனது ஒல்லி உடம்புக்கும் ரசிகர்கள் இருக்காங்க. கொஞ்சம் பூரிச்சிருக்கிற உடம்புக்கும் ரசிகர்களை வைச்சிருக்கேன். 14 ஆண்டுகள் நீடித்து இருக்கிறதும் பெரிய விஷயமாக நினைக்கிறேன். இன்னிக்கும் நான் சினிமாவிற்கு வந்ததை ஆச்சர்யமாக நினைப்பேன். எங்க குடும்பத்தில் யாருக்கும் சினிமாவோட தொடர்பில்லை. ஒரு தடவை நடிகை பத்மினி கோலாபூரி எங்க ஸ்கூலுக்கு வந்தபோது நான் ஆக்டிங் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னாங்க. அப்பதான் திடீரென்று நான் ஒரு நடிகையானா என்னன்னு நினைச்சேன்.

முதல் விதை அப்ப விழுந்தது தான். நல்ல சினிமாவுக்காகவும், நல்ல வேடங்களுக்காகவும் இப்பவும் நான் தேடிக்கொண்டு இருக்கேன். இன்னும் நான் தெளிவாக நடிகையாக வரணும்னு நினைக்கிறேன். இது போதாது. இன்னும் என்னிடமிருந்து சிறந்த படங்கள் வரவேண்டும். மலையாளத்தில் என்னை வைத்து நல்ல படங்கள் செய்ய முடிகிறபோது, எல்லா மொழிகளிலும் நான் ஏன் அதையே எதிர்பார்க்கக் கூடாது? ராய் லட்சுமியை விட ராய்லட்சுமி கேரக்டர் நிற்கணும். அதுதான் என் நினைப்பு.

தொடர்ந்து உடலை வசீகரமாக வைச்சிருக்கீங்க...

அதற்காக பெரிய கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால், கவனமாக பார்த்துப்பேன். நிச்சயமான நல்ல உறக்கம், கிடைக்கிறதில் நிறைவடைகிற மனசு, நல்ல உழைப்பு இதெல்லாம் போதும் உடம்பை நல்லபடியாக வைத்துக் கொள்வதற்கு. நான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்திருக்கலாம். ஆனால், ஒருபோதும் ஆபாசமாக நடித்ததில்லை.

இன்னும் தமிழில் நல்ல நடிகையாக உருவெடுத்திருக்கலாம் என நினைப்பீர்களா?

அடிக்கடி என்னை இங்கே ஞாபகப்படுத்திக்கொண்டேயிருக்கிறேன். தமிழ் சினிமா என்னை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நியாயமான நினைப்பு என்கிட்டே இருக்கு. ‘நீயா 2’ என் நடிப்புக்கு நல்ல பாராட்டுதல்களை வாங்கிக் கொடுத்தது. மலையாளத்தில் எடுத்த பெயரை தமிழில் எடுக்க வேண்டுமென பிரியப்படுகிறேன். மத்தபடி நான் சந்தோஷமாகவும், நிறைவாகவும் இருக்கேன். வெப் சீரிஸுக்குள் மக்கள் கொஞ்சம் கொஞ்சம் நகர்ந்து போறாங்க. சென்சார் இல்லாமல் பார்க்கிறதில் ஆர்வமா இருக்காங்க. அவங்களை வெளியே கொண்டுவர நல்ல சுவாரஸ்யமான படங்கள் வரணும். நானும் அதில் ஒரு பகுதியாக இருக்கணும்.

மத்த ஹீரோயின்களோட சகஜமா பழகுவீர்களா?

எனக்கு எல்லோரையும் பிடிக்கும். அவங்கவங்களுக்கு ஓர் அழகு, திறமை, கேரக்டர்களுக்கு உள்ளே செல்கிற வித்தைகள் தனித்தனியாக இருக்கு. எல்லோருக்கும் ஃபேவரிட் நான்.            

நா.கதிர்வேலன்