தமிழ்ல நடிக்கக் கேட்டு யாரும் வரலை!



ஒரு ஹிட் கொடுத்தாலே தலைகீழாக மாறிப்போகிற சினிமா துறையில் எந்த பந்தாவும் பில்டப்பும் இல்லாமல் சிம்பிளாக தோழமையுடன் பழகுகிறார் ‘இந்தி’யாவின் மெகா ஸ்டார் ஷாருக்கான்.

எப்படிப்பட்ட கேள்விகளையும் எதிர்கொள்கிறார்; பதில் சொல்கிறார். புன்னகைக்கிறார். கனவுகளை விவரிக்கிறார். வழக்கமா டிசம்பர்ல ஆமிர்கான்தான் தன் படத்தை ரிலீஸ் செய்வார். இந்த முறை நீங்க ‘ஜீரோ’ படத்தை வெளியிடறீங்க... ஆமிர்கான் என் நண்பர். அவரோட ‘தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான்’ தீபாவளிக்கு வரும்னு முன்னாடியே அறிவிச்சுட்டாங்க. தவிர டிசம்பர்ல வரும் எண்ணம் எங்களுக்கில்ல. ஆக்சுவலா மே மாசம் ரிலீஸ் செய்யத்தான் முயற்சி செய்துட்டு இருந்தோம்.

எதிர்பாராத காரணங்களால படம் லேட்டாயிடுச்சு. இந்த தாமதத்துக்கு நானும் ஒரு காரணம். இப்படித்தான் நாங்க டிசம்பர்ல வர்றோம். படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கு.  ‘ஜீரோ’ டிரெய்லர்ல வழக்கமான ரொமான்டிக் ஷாருக் தெரியலை... காமெடியும் எமோஷனும் நிறைஞ்ச ஷாருக்தான் பளிச்சிடறார்...

உண்மைதான். தொடர்ந்து ரொமான்டிக் படங்கள்ல நடிக்க bore அடிக்குது. இதே மனநிலைதானே ரசிகர்களுக்கும் இருக்கும்..? என்கிட்ட வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கறாங்க. ‘சக் தே இந்தியா’ வந்தப்ப கொண்டாடித் தீர்த்தாங்க. இதனாலயே அப்பப்ப வேற ஜானர்ல படம் செய்யணும்னு ஆசை வருது.
‘ஹரி மெட் சேஜல்’ காதல் கதைனா, ‘ரயீஸ்’ காட்ஃபாதர் கதை. அதுக்கு முன்னாடி வந்த ‘ஃபேன்’, ஒரு ஹீரோவின் ரசிகனைப் பத்தின கதை. இப்படித் தான் முயற்சி செய்துட்டு இருக்கேன். இதை சரியா கவனிக்காதவங்க, ஒரே மாதிரியா நான் நடிக்
கிறதா விமர்சனம் வைக்கலாம்.

‘ஜீரோ’ ஒரு வித்தியாசமான முயற்சி. டபுள் ஹீரோவா இல்லாம ஹீரோ மட்டும் முழு படத்துலயும் இதுக்கு முன்னாடி குள்ளமா நடிச்சிருக்காரா... அப்படி ஏதாவது ஒரு படம் நம்ம நாட்ல வந்திருக்கானு தெரியல. இதுல படம் முழுக்க குள்ளமா வர்றேன். ஒரே ரோல்தான்.
ஆனந்த் எல். ராய் டைரக்‌ஷன்ல வந்த ‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்சனா’, ‘தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்’னு எல்லாமே பாக்ஸ் ஆபீஸ்ல நல்ல வசூலை கொடுத்திருக்கு. காமெடியும் எமோஷனும் சரிவிகிதத்துல கொடுக்கிற அவர் திரைக்கதைப் பாணி எனக்குப் பிடிக்கும். லைட்டான கதையை ரொம்ப உயரத்துக்கு கொண்டு போகிறார்.

‘ஜீரோ’ திரைக்கதையையும் அப்படித்தான் வடிவமைச்சிருக்கார். படம் பார்த்தா உங்களுக்கே நான் சொல்றது புரியும். பி அண்ட் சி ரசிகர்களுக்காக நீங்க படம் செஞ்சு ரொம்ப வருடங்களாச்சுனு ஒரு பேச்சு அடிபடுதே..? எனக்கும் புரியலை. வெறும் மல்டி ப்ளக்ஸ் ஆடியன்ஸுக்காக மட்டும் படம் எடுக்கணும்னு எப்பவும் நான் நினைச்சதில்ல. ‘ஹரி மெட் சேஜல்’ ஒருவேளை அப்படி அமைந்திருக்கலாம்.

‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘ரயீஸ்’ எல்லாம் எல்லோருக்குமான படங்கள்தானே? எல்லா தரப்பு ரசிகர்களும் எனக்கு முக்கியம். ஒண்ணு மட்டும் சொல்ல முடியும். சமீபத்துல இந்தளவுக்கு ஜாலியான படத்துல நான் நடிச்சதில்லைனு சொல்ற அளவுக்கு ‘ஜீரோ’ வந்திருக்கு.

‘ஹே ராம்’ படத்துக்கு பிறகு தமிழ்ப் படங்கள்ல உங்களைப் பார்க்க முடியலையே..? என் நண்பர் கமலுக்காக ‘ஹே ராம்’ல நடிச்சேன். எப்பவும் அந்தப் படம் எனக்கு ஸ்பெஷல். இதுக்குப் பிறகு எந்த தமிழ்ப் படமும் என்னைத் தேடி வரலை! இதுதான் உண்மை. ரொம்ப வருஷங்கள் கழிச்சு இந்தி, தமிழ்ல பண்ற மாதிரி ஒரு படம்
வந்தது. சில காரணங்களால அதை பண்ண முடியலை.

இந்தக் குறையை போக்கத்தான் என் படங்களை தமிழ்லயும் டப் செய்து வெளியிடறேன். ‘ஜீரோ’ மட்டும் அப்படி பண்ண முடியாமப் போச்சு. நேரம் இல்லாததுதான் காரணம். மகன் ஆர்யன், மகள் சுஹானா லைம்லைட்ல வந்துட்டாங்க. சினிமா என்ட்ரி எப்போ?

அவங்களோட ஆசையும் அதுவாகத்தான் இருக்கு. இப்ப ரெண்டு பேரும் படிக்கறாங்க. ஸோ, அவங்க அறிமுகமாக எப்படியும் நான்கைந்து வருஷங்களாவது ஆகும். தவிர, ஸ்போர்ட்ஸுலயும் அவங்களுக்கு ஆர்வம் இருக்கு. என்ன நடக்கும்னு காலம்தான் தீர்மானிக்கும்!   

மும்பையிலிருந்து ஜியா