இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை!



நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல்.

இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல்
களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில் லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கின்றன.முப்பது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஈழப் போர் ஆயிரக்கணக்கான குடும்பங்களை இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேற்றியது. அதில் பல குடும்பங்களை அரவணைத்து அடைக்கலம் கொடுத்தது கனடா. அதில் ஒன்றுதான் பரத்தின் இசைக் குடும்பம்.

கனடாவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியபோது பரத்தின் வயது 13. இலங்கையை விட்டாலும் இசையை அவரின் குடும்பத்தினரால் விடமுடியவில்லை. அண்ணன் ராக்கி ஜெயம் இசை தொடர்பான தொழிலில் இறங்க, தம்பி பரத்திற்கு ராப் இசையின் மீது தீராத காதல்.

உடைந்துபோன தேசத்திலிருந்து வந்த பரத்துக்கு உடைந்துபோன வார்த்தைகளால் உலகையும் உணர்வுகளையும் படம் பிடித்துக் காண்பிக்கும் ராப் இசையின் மீது காதல் மலர்ந்தது இயல்புதானே!

பரத் இசை உலகில் வளர்ந்துகொண்டிருந்தபோது அவரின் உறவினரான கீர்த்தனனும் ஈழத்து அகதியாக கனடாவில் குடியேறினார். கீர்த்தனனின் தந்தை இலங்கையில்  பாடகராக இருந்தவர். தாய் பரதநாட்டிய ஆசிரியை. ஆனால், கீர்த்தனனின் ஆர்வமோ மிருதங்கத்தில்.அகதி வாழ்க்கையின் கொடுமை இளைஞர்களான பரத்தையும், கீர்த்தனனையும் படாத பாடு படுத்தியது.

இன்னொரு பக்கம் கையில் காசில்லாமல், வேலையில்லாமல், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவர்களை வறுமை துரத்தியது. அத்துடன் அவர்கள் வாழந்த பகுதியில் எந்நேரமும் வன்முறை, அமைதியற்ற சூழல்.

இக்கட்டான இந்நிலையிலிருந்து விடுபட இசையிடம் தங்களை ஒப்படைத்தனர். பின்னாளில் இசையே அவர்களுக்குப் பாதுகாப்பு வளையமாக, வாழ்வாதாரமாக மாறிப்போனது.இந்தச் சமயத்தில்தான் நவீனியை ஒரு விருந்தில் இருவரும் சந்திக்கிறார்கள். நவீனி அடிப்படையில் நன்றாகப் பாடக்கூடியவர்; கித்தார் பிளேயர். அத்துடன் அவர் ஈழத்துப் பெண்ணும் கூட. அவரின் தந்தை ஒரு கித்தார் பிளேயர். தாய் ஈழத்தில் வானொலி அறிவிப்பாளாராக இருந்தவர்.

ஆக, இரண்டு ஆண்களுடன் ஒரு  பெண் இணைய ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ உதயமானது. ‘இதுதானா...’, ‘காதலி...’ போன்ற ஆல்பங்கள் யூடியூப்பில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.குறிப்பாக, ‘மாயங்களும் செய்தாய்… காயங்களும் தந்தாய்… கடலில் மீது கல்லைக் கட்டி என்னைத் தூக்கி எறிந்தாய்…

இமைகளும் இதழ்களும் வேறு வேறு பக்கம்… ஆனால், இமைகளை மூடித் திறக்கும்போது நீ வேண்டும் என் பக்கம்...’ என்று ‘காதல்’ ஆல்பத்தில் ஒலிக்கும் நவீனியின் செக்ஸியான குரல் ‘ஆல் மிக்ஸ்ட் ஆப்’பின் ஆல்பங்களை ஆல் டைம் ஹிட்டாக்கிவிட்டது.

‘‘எங்கள் குழுவில் யாருக்குமே திருமணம் ஆகவில்லை. ‘துணை இல்லை... வேலையும் இல்லை...அப்ப என்னதான் பண்றீங்க...’னு எங்களை கேலியாக கேள்விகேட்பவர்களுக்காகவும், குடும்பத்துக்காகவும், சமூகத்துக்காகவும்தான் பாடுகிறோம். எங்கள் பாடல்களையும் அவர்களுக்குத்தான் அர்ப்பணிக்கிறோம்..!’’ என்று சொல்கிறார் பரத்.‘ஆல் மிக்ஸ்ட் அப்’பின் பாடல்களைக் கேட்ட யாருமே இவர்களை ‘என்ன பண்றீங்க...’னு கேட்பதில்லை என்பதில் இருக்கிறது இந்தக் குழுவின் வெற்றி.                           

டி.ரஞ்சித்