ஒன் வுமன் ஆர்மி!இந்தியத் திரையுலகமே வியந்து பார்க்கும் ஓர் ஆளுமை ரிமா தாஸ். இந்த வருடத்துக்கான நான்கு தேசிய விருதுகள், வடகிழக்கு இந்தியாவிலிருந்து ‘டொரொண்டோ’ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வான முதல் படம் என அசாமுக்கு பெருமை சேர்த்த ‘வில்லேஜ் ராக் ஸ்டார்ஸி’ன் இயக்குநர் இவர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, தயாரிப்பு நிர்வாகம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங் என சகலமும் ரிமாதான்.

இத்தனைக்கும் எந்த ஃபிலிம் ஸ்கூலிலும் படிக்காதவர் இவர்! அசாமில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஒரு ஆசிரியையின் மகளாகப் பிறந்த ரிமா, ஆரம்பத்தில் நடிப்பின் மீதான ஈர்ப்பால் மும்பைக்குச் சென்று மேடை நாடகங்களில் ஆங்காங்கே முகம் காட்டினார். அங்கே பெர்க்மன், சத்யஜித்ரே போன்ற திரை மேதைகளின் படைப்புகள் அறிமுகமாக, டைரக்‌ஷன் மீது அவர் பார்வை திரும்பியது.

சொந்தமாக கேமரா வாங்கி, குறும்படங்களை இயக்கி ஃப்லிம் மேக்கிங் கலையைக் கற்றுக்கொண்டார். நண்பர் ஒருவர் ஓய்வுபெற்ற தன் தந்தையின் பொழுதுபோக்குக்காக பைனாகுலர் வாங்கியது ரிமாவுக்கு தெரியவர, அதுவே அவரது முதல் முழு நீளத் திரைப்படமான ‘மேன் வித் த பைனாகுலர்ஸ்’ஸின் கருவானது. இப்படம் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட, சர்வதேச அங்கீகாரங்கள் ரிமாவைத் தேடி வந்தன. அதுவரைக்கும் தேசிய அங்கீகாரத்துக்கே அசாமியப் படங்கள் திண்டாடி வந்தன என்பதுதான் ஹைலைட்.

தான் வாழ்ந்த கிராமத்தின் அழகையும், குழந்தைப்பருவ நினைவுகளையும் படமாக்க வேண்டும் என்பது ரிமாவின் பெருங்கனவு. அந்தக் கனவே ‘தி வில்லேஜ் ராக் ஸ்டார்ஸி’ல் பிரதிபலித்தது. ஒரு எலெக்ட்ரிக் கித்தாரைக் கனவு காணும் பத்து வயதுச் சிறுமியின் கதைதான் இப்படம். விடலைப் பருவக் காதலை மையமாக வைத்து அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘Bulbul Can Sing’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பிரீமியர் ஷோ ‘டொரொண்டோ’ சர்வதேசத் திரைப்பட விழாவில் அரங்கேறுகிறது!