மனசாட்சியின் வாக்குமூலத்தை பதிவு செய்வதே என் பணி!




அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் பிரளயன்

தமிழ் நாடகத்தின் புதுப்பாய்ச்சலை அறிந்த எவருக்கும் ‘பிரளயனை’த் தெரியும். வேடிக்கையும், அசட்டுச் சிரிப்பும்  கொண்ட சபா நாடகங்கள் பரவியிருந்த நாட்களில் இடதுசாரியாக மீந்திருந்த அரங்கக் கலைஞர் பிரளயன். நாடக  உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமையாய், முன் மாதிரி களை உருவாக்கி முதல் அடி எடுத்து வைத்தவராய், தயங்காமல்  கருத்து வைக்கும் கலகப்போராளியாய் அறிமுகமானவர் பிரளயன். அத்தகைய கலைஞனிடம் ஒரு மணி நேரத்துக்கும்  மேலாக நீண்டது இந்த தேநீர் உரையாடல்.

உங்களின் புது நாடகம் ‘காஞ்சித் தலைவி எனும் நவீன மத்தவிலாச பிரஹசனம்’ கவனிப்புக்குள்ளாகி இருக்கிறது...வடமொழியிலிருந்து நமக்கு கிடைத்த நாடகம் ‘மத்த விலாச பிரஹசனம்’. கி.பி. 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன்  மகேந்திரவர்மனால் எழுதப்பட்டது. சத்யசோமன் எனும் காபாலிகன், அவரது தோழியான தேவ சோமை, நாகசேனன்  என்னும் பித்த பிட்சு, பாப்ருகல்பன் எனும் பாசுபத சைவன் மற்றும் ஒரு மனநலங்குன்றியவன் ஆகியோரை  மையப்பாத்திரங்களாகக் கொண்டது இந்தக் கதை.

காஞ்சிபுரத்தில் நிகழ்வதாக இந்த புனைவு இருக்கிறது. தனது பிச்சைப்பாத்திரமான கபால ஓட்டைத் தவறவிட்டு தேடிக்  கொண்டிருக்கும் ஒரு காபாலிகனை சுற்றிச் சுழல்கிற அங்கத சுவைமிக்க நாடகம் இது. அன்றைய சமயப்போக்குகள்,  சமூக வரலாறை அறிய இது உதவும். கடந்த காலப் புதிர்களைக் கட்டவிழ்க்கவும், மேலும் நமது சமகால வாழ்வின்  சிந்தனைத் தடங்களை வலுப்படுத்தவும் உதவுகிறது. சில உண்மைகளைத் தேடிக் கண்டறிய வாய்ப்பை வழங்கு கிறது.  மைக்கேல் லாக்‌வுட், ஏ.விஷ்ணு பட் ஆகியோரின் மொழிபெயர்ப்பு, சீனி வேங்கடசாமியின் தமிழ் மொழிபெயர்ப்பு  ஆகியவற்றின் அடிப்படையில் ‘சென்னை கலைக்குழு’ இதை தயாரித்திருக்கிறது. நாடகமாக்கமும், நெறியாள்கையும்  என்னுடையது.

‘சென்னை கலைக்குழு’ தொடங்கி 35 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இன்னமும் பிரதிபலன் பாராது இயங்கிக்  கொண்டிருக்கிற உழைப்பு எவ்விதம் வந்தது?நாடகம்தான் நாம் வாழும் உலகத்தைத் துடிப்போடு உணர்த்துகிறது. நாடகம்  தருணம் சார்ந்த கலை. எல்லோரையும் சொந்த முகத்தோடு, முக பாவனையோடு, இன்னும் சொன்னால் வியர்வை  வாசனையோடு அணுக முடிகிற படைப்பு. நார்வே நாட்டுக்குப் போயிருந்தபோது அங்கே திரைப்படத்திற்கான அரங்குகள்  சிறியதாக இருந்தன. அது கூட தேநீருக்குப் பிறகான 100 பேர் அமரத்தக்க இடங்கள்தான்.

அங்கேயிருக்கும் ‘ஒபேரா’ நாடக அரங்கு பெரும் விஸ்தீரணம் கொண்டது. ஒரே சமயத்தில் 4000 பேருக்கு மேல்  பார்க்கலாம். அங்கே நாடகம் பார்க்க உட்கார்ந்திருப்பதே பெருமைக்குரிய நிகழ்வு. மனிதன் சொந்த அனுபவத்தில் இருந்து  எல்லாவற்றையும் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. அதனால் நாடகமும், கலை இலக்கியப் படைப்புகளும் மனிதனின்  வாழ்க்கைத் தேவைக்காகவே இருக்கின்றன. அப்படியாக படைப்புகளை நாடக வடிவத்துக்கு மாற்றிச் சொல்ல  முயல்கிறேன். இன்னும் உழைத்திருக்க வேண்டும் என்பதுதான் என் நினைப்பாக இருக்கிறது. ரொம்பவும் மனத்திற்கு  உகந்த ஒரு நாடகத்தை எழுதி விடுவதைப் போல சுலபமான விஷயம் கிடையாது. உங்கள் முகத்தை கண்ணாடியில்  பார்ப்பது போன்று எளிமையானது அது. நமது வாழ்க்கையின் உண்மைகளை ஒளிவுமறைவின்றி எந்த ஒப்பனையும்  இல்லாமல் தரிசிப்பதுதான் என் நாடகங்கள். என் வேலை நீதி போதனை செய்வதல்ல. மனசாட்சியின் வாக்குமூலத்தை  பதிவு செய்வதே என் பணி.

நாடகப் பரப்பின் மலர்ச்சிக்கான நமது தேவைகள் என்ன?இன்றைக்கு ஒப்பீட்டளவில் தமிழ் நாடகச் செயல்பாடுகள்  முன்பை விட விரிவடைந்துள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தஞ்சையில் நடந்த தென்னிந்திய நாடக விழாவில் 29  குழுக்கள் கலந்துகொண்டன. 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இவற்றில் ஒன்றிரண்டு தவிர  அனைத்தும் பெரிய நிதி நல்கை நிறுவனங்களின் உதவியின்றி செயல்படுபவை. பெரும்பாலான குழுக்கள் நிதித்  தேவைகளுக்காக சுயமாக செயல்படுகின்றன. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இதுபோன்ற நாடகச் செயல்பாடுகளுக்கு  அரசு நிறுவனங்களின் ஆதரவு மட்டுமின்றி மிகப்பெரும் சமூக ஆதரவும் உண்டு.

இங்கே நிலைமை அப்படியில்லை. நாடகங்களை அரங்கேற்ற, அந்தக் குழுக்களே முயற்சி யில் இறங்கியாக வேண்டும்.  செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிற ஒரு நாடக சமூகம் நமக்குத் தேவைப்படுகிறது. நடிகர்கள், நாடகக்குழுக்கள்,  நாடகாசிரியர், இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமின்றி, நாடக விமர்சகர்கள், புரவலர்கள், நாடக  ஆர்வலர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள், எல்லாவற்றிற்கும் மேலாய் நாடகம் காண விழையும் பார்வையாளர்கள்  ஆகியோரை உள்ளடக்கியதுதான் ஒரு நாடக சமூகம். இப்படியொரு சமூகத்தை உருவாக்குகிற முயற்சிகளில் ஒன்றுதான்  தஞ்சையில் நடந்த விழா. அதுமாதிரி ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் நடந்தால் நாடகச் செயல்பாடுகள்  வலுப்பெறும்.இன்றைய தமிழ் நாடகத்தில் இருக்கிற சவால்கள்...

சென்னையில் தமிழ் நாடகங்களில் இணைந்து செயல்பட நிறையப் பேர் முன்வருவதில்லை. மற்ற வசதிகளைத்  துறந்துவிட்டு நாடகத்துக்கு வருகிற இளைஞர்களுக்கு அரசு உதவி செய்தாக வேண்டும். அதற்கான கடமை அரசுக்கு  இருக்கிறது. நாடகக்குழுவை தொடர்ந்து நடத்தும் சிக்கல் எங்களுக்கும் உண்டு. பல குழுக்களுக்கு இது மிகப்பெரும்  சவால். நாடக நடிகர்கள் தொடர்ந்து நாடகக்குழுவில் நிலைத்து நிற்பதில்லை. சினிமாவிற்குப் போவதை எதிர்மறையாகப்  பார்க்கவில்லை. ஆனால், அங்கே போனாலும் மோகன்லால், நசுரூதின் ஷா போன்றவர்கள் மாதிரி தொடர்ந்து  நாடகங்களில் பங்கு பெற அவர்களுக்கு இருக்கிற தடை என்ன?

என் நாடகங்களின் புதிய கேள்விகள், அணுகுமுறைகள் இளைஞர்களை ஈர்க்கின்றன. தற்செயலாக வரும்  வழிப்போக்கர்களை, அவ்வழியாகக் கடந்து போகிறவர்களை, வீட்டிலிருந்து எட்டிப் பார்ப்பவர்களைக் கூட  பார்வையாளர்களாக மாற்றி வசீகரிக்க திறந்தவெளி நாடகம் உதவி செய்கிறது. எப்படியாவது மக்களிடம் அக்கறையாக  நாடகத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கிற முயற்சியே இது.இந்த சமூகத்திடம் இருந்தே கருத்துகளை உருவாக்கிட
முடியும். அதுவே மோசமான நிலையில் இருக்க, அதிலிருந்து கிடைக்கிற கூறுகள் எப்படியிருக்கும்? மாற்று  வந்தால்தானே சமூக மாற்றத்திற்கு வழி பிறக்கும்?பொதுவாக கலை இல்லாமல் மனிதன் இருக்கவே முடியாது. அது  அத்தியாவசியம். பலருக்கும் சொந்த வாழ்க்கை சாரமில்லாமல் இருக்கிறது. தன் வாழ்க்கைக்கான சாரத்தை, சுவையைச்  சேர்த்துக் கொள்வதற்காக அவன் எழுதுகிறான். படைக்கிறான். புதிய வாழ்க்கையைத் தேடுகிறான். அதன் விளைவே  இலக்கியம். அதன் தொடர்ச்சியே நாடகம். நம்மைப்பற்றிய பல கசப்பான உண்மைகளை நாம் மறந்து விட்டோம். நாம்  எப்போதும் பொழுதுபோக்குக்காக இயங்கிக் கொண்டிருக்க முடியாது. எல்லா மாற்றங்களையும் எதிர்பார்த்து காத்திருக்க  பழகிக்கொள்வோம். இதற்கான மெனக்கெடலே என் நாடகம்.

-நா.கதிர்வேலன்
படங்கள் : ஆ.வின்சென்ட் பால்