இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்



டிஜிட்டல் யுகத்தின் புது வரவு!

டிஜிட்டல் யுகத்தின் புது வரவு அல்லது அவதாரம் ‘இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்’ - பொருட்களுக்கான இணையம்! அதாவது, இதுவரை இணையத்தின் உதவியோடும், கணினி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமும்  மனிதனோடு மனிதனும், மனிதனோடு இயந்திரமும் இணைப்பை ஏற்படுத்தி தகவல் பரிமாறிக்கொள்ளமுடிந்தது.  இணையத்தின் தொழில்நுட்ப வசதியினால் உலகத்தின் எந்த மூலையிலும் மனிதனால் தொடர்பு கொள்ள முடிந்தது.  அதேபோல ஒரு கணினி மற்றொரு கணினியோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தகவல் பரிமாறிக் கொள்ளவும்,  தரவுகளை (Data) தரவிறக்கம் (Download) செய்து கொள்ளவும் முடிந்தது.

முன்பெல்லாம் மனிதன் கணினியில் தரவிறக்கம் செய்த காலம் போய் இப்போது ஓர் இயந்திரம் மற்றொரு  இயந்திரத்தோடு உறவாடிக் கொள்கிறது என்பது தான் ஆச்சர்யம்! இன்றைக்கு‘Internet of Things’ என்று  சொல்லக்கூடிய ‘பொருட்களுக்கான இணையம்’ அல்லது ‘இயந்திரங்களுக்கான இணையம்’ என்கிற தொழில்நுட்பம்,  நான்காம் தொழில் புரட்சியின் அசுர வேகத்தினால் புதிய அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. இதுதான் இந்த  நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை! இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்ற தொழில்நுட்பம் 2008ம் ஆண்டு பிறந்ததாக  சிஸ்கோ வலைத்தளம் சொல்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்குக் கிடைத்த தொழில்நுட்ப வசதி மிகவும் குறைவு.  மேலும் கட்டமைப்பு செலவு கட்டுக்கு அடங்காமல் அதிகமாக இருந்தது. அதுவே இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு  தடையாகவும் பெரிய சவாலாகவும் இருந்தது. இதனால் இந்த தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பலனை விட செலவே  அதிகமாக இருந்ததால் அன்றைக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால், இன்றைய தொழில்நுட்ப வசதி முற்றிலும் மாறுபட்டு பெரும் பாய்ச்சலாக மாறியிருக்கிறது. முன்னர் ஏற்பட்ட  செலவுத் தொகையைவிட பல மடங்கு குறைந்த செலவில் நமக்குக் கிடைக்கும் இணைய வசதி, அலைபேசி வசதி, அதிநவீன அலைக்கற்றை இணைப்பு (Broadband), 4G வசதி, தரவு ஆய்வு வசதி (Data Research), Wi-Fi  செயல்திறன், மேகக் கணினிகளின் வளர்ச்சி (Cloud Computing), குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய  உணர்விகள் (Sensors), ரேடியோ அதிர்வெண் அடையாள உணர்கருவி (RFID-Radio Frequency  Identification Sensor) மற்றும் அலைபேசியில் உள்ள NFC வசதி (Near-Field Communication  Technology) இந்த இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

அதுசரி... இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என்றால் என்ன?மனிதன் நேரடியாக இணையத்தைப் பயன்படுத்திய காலம் போய்,  ஓர் இயந்திரமும் மற்றொரு இயந்திரமும் இணையம் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இனி பேசிக் கொள்ளப்  போகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய சாதனங்களில் சென்சார் கருவி அல்லது புளூடூத் மூலம் தகவல்களை அனுப்பும்  டிரான்ஸ் மிட்டர் கருவியின் மூலம் இணைக்கப்பட்டு, இணைய இணைப்பின் வழியாகவோ, அலைபேசி இணைய  இணைப்பின் வழியாகவோ, அந்தச் சாதனம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு மற்றொரு இணைய பிளாட்பாரத்துடன்  இணைக்கப்படும். அதன்படி அந்த சாதனம் தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை உடனுக்குடன் அதனுடன்  இணைக்கப்பட்டுள்ள பிளாட்பாரத்துடன் தகவல் பரிமாறிக்கொண்டே இருக்கும்.

இதுபோல பல மில்லியன் சாதனங்கள் அதற்கு உண்டான பிளாட்பாரத்தோடு இணைக்கப்பட்டு, அந்த இணைப்பின்  மூலம் உற்பத்தியாகும் தரவுகள் சரி பார்க்கப்பட்டு, பிக் டாட்டா (Big Data) அனலிடிகல் என்று சொல்லக்கூடிய  பகுப்பாய்வின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தேவையான தரவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இது போன்ற  தகவல் பரிமாற்றம் உலகத்திலுள்ள பல லட்சக்கணக்கான சாதனங்களில் உடனுக்குடன் நடைபெறும். அப்படி  இணைக்கப்பட்ட சாதனங்களின் அன்றாட நிகழ்வுகள், செயல்திறன், உற்பத்தித் திறமை, உதிரிகள் தேய்மானம், சேவை  புதுப்பிக்க வேண்டிய தேதி போன்ற பல விஷயங்களையும் உடனுக்குடன் தக்கவைத்துக்கொண்டு, தேவையான  சமயத்தில் அதனை உபயோகிப்பார்கள்.  

இதன் மூலம் இயந்திரத்தின் தடுப்பு - பராமரிப்பை (Preventive maintenance) சரியாக கண்காணிக்க முடியும்.  அதே சமயம் இயந்திரத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்தையும் நாம் முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும். இவை  அனைத்தும் தன்னிச்சையாகவே மனிதனின் செயல் இல்லாமல் நடைபெறும். இது போன்ற உணர்விகளை  இயந்திரத்திற்கு மட்டுமல்லாமல் கால்நடைகள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் உட்பட அனைத்திலும் பொருத்தி  மற்றொரு பிளாட்பாரத்தோடு இணைத்து அதிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பகுப்பாய்வு செய்து விடை காண்பதே  இதன் சிறப்பு. இந்தத் தொழில்நுட்பத்துக்கு தேவையான மென்பொருள் (Software) உருவாக்குவதிலும், இணையதள  பிளாட்பார நிரலி (Program) அமைப்பதற்கும் சாம்சங், ஆப்பிள், அமேசான், ஜெனரல் எலக்ட்ரிக், IBM, டெஸ்லா,  மைக்ரோசாப்ட், இன்டெல், Bosch போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து  வருகின்றன.

2020ம் ஆண்டு 50 பில்லியன் உபகரணங்கள் இதுபோன்ற Machine to Machine (M2M) தகவல் தொடர்பு   ஏற்படுத்திக்கொள்ளப் போவதாக ‘போர்ப்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.  இதுபோல மெஷின் டு மெஷின் தகவல்  பரிமாற்றம் மூலம், மனிதனின் இருதய செயல்பாட்டை ஒரு சிறிய சிப் கருவியின் துணை கொண்டு நம் மருத்துவருக்கு  உடனடியாக தகவல் கொடுக்க முடியும். பட்டியில் கட்டியிருக்கும் ஆடு, மாடு, பன்றி, குதிரை என்ன செய்கின்றன,  எங்கே திரிகின்றன என்ற தகவலை, அவற்றின் அருகில் இல்லாமலே தெரிந்து, அதனைப் பராமரிக்க முடியும். நம்  வீட்டிலுள்ள மின் இணைப்பு மீட்டரை ஆள் வந்து ரீடிங் எடுக்காமல், அதுவாகவே ரீடிங் தகவலை குறிப்பிட்ட  நேரத்துக்கு அனுப்ப முடியும். வயலுக்கு தண்ணீரை சிக்கனமாக தேவையான நேரத்தில் பாய்ச்ச முடியும். வீட்டில் உள்ள  மற்ற மின் சாதனங்களை நாம் வெளியிலிருந்து இயக்க முடியும்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இது  அனைத்தும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மூலம் சாத்தியப்படும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

(தொடரும்)

-ஆஸ்திரேலியாவிலிருந்து கோவிந்தராஜன் அப்பு
B.Com., MBA, ACA, CPA