சின்ன நிகழ்வைச் சுற்றி திரைக்கதை எழுதவே பிடிக்கிறது!: மனம் திறக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல்
‘‘நிச்சயமாக நான் எதுவும் சாதித்து விட்டதாக நினைக்கவில்லை. இன்னும் என் எந்த ஒரு படைப்புக்கும் இறுதி வடிவம் கொடுக்கவில்லை. தேடுதல் என்னும் பேரில் யதார்த்தத்தைத் தொலைக்கிற ஆள் நானில்லை. அதுதான் என் ஒரே சந்தோஷம். இங்கே கதைக்காக அலைய வேண்டிய அவசியமில்லை. இன்னும் நாம் திருப்பிப் பார்க்காத இடம் நிறையவே இருக்கு. தமிழ் சினிமாவில் மனிதர்களின் புற உலகமும், மகிழ்ச்சிக் கணங்களும்தான் மிக அதிகமாகச் சித்தரிக்கப்படுகின்றன. எளிய மனிதர்களின் வேதனைகள், இடர்கள், உறவுச் சிக்கல்கள் அதிகம் இங்கே காணப்படுவதில்லை. நம்மைப் பற்றிய கசப்பான உண்மைகளைக் காட்டத் தவறி விட்டோம். துக்கத்தின் வேர்களைச் சென்றடைகிற பயணங்கள் இங்கே குறைவு. இந்த இடத்தில் என்னை வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இன்னும் பொறுப்புள்ள சினிமா என்ற வகையில் ‘யார் இவர்கள்’ படம் வந்திருக்கிறது...’’ நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். நல்ல சினிமாவுக்கு உதாரணங்கள் காட்டியவர்.   ‘யார் இவர்கள்’ எப்படி இருக்கும்..?
நடுவில் லிங்குசாமி தயாரிப்பில் ஒரு படம் செய்து, இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கு. அவருடைய இடர்ப்பாடுகளால் இன்னும் அந்தப் படம் வர முடியலை. எப்பவும் கதைக்கு நான் வெயிட் பண்ணுவேன். இப்ப கதை எனக்கு வெயிட் பண்ண ஆரம்பித்து விட்டது. இது சிம்பிள் ஸ்டோரி. ஒரு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட். இவன் கோபப்பட்டு ஒரு கொலை செய்யப் போறான். அப்படி டென்ஷன் ஆனதற்குக் காரணங்கள் இருக்கு. அங்க போன இவனுக்கு பயங்கர ஷாக். அவன் ஏற்கனவே செத்துப் போய் கிடக்கிறான். இவனுக்கும் அவனுக்கும் பகைன்னு ஊருக்கே தெரியும். போலீஸிடம் அகப்படாமல் இருக்க ஒரு வக்கீல் துணையை நாடுகிறான். அந்தக் கொலையை யார் செய்தார்கள், ஏன், எதற்காக என்பதுதான் கதை. ‘என்னடா, த்ரில்லர் மாதிரி இருக்கு’ன்னு யோசிக்கிறீர்களா? ‘காதல்’னு படம் எடுத்தேன். அதிலேயே மனித அக்கறை சார்ந்த பல விஷயங்கள் இருக்கு. அப்படித்தான் இதுவும். காதலினால் என்ன பிரச்னை யெல்லாம் வருதுன்னு ஒரு விஷயம் இருந்தது இல்லையா... அதுமாதிரி இதுலயும் ஒரு விஷயம் இருக்கு. ஒன்லைனில் விரிவு பண்ணி திரைக்கதையில் அதிகமும் நம்பிக்கை வச்சு எடுத்திருக்கேன்.
 ஏன் எப்போதும் புதுமுகங்கள்?
எந்த முன் தீர்மானமும் இல்லாமல் கேரக்டரைப் பார்க்கும்போது புதுமுகங்கள்தான் சரியா இருக்காங்க. ஒரு பெரிய ஹீரோவை கெட்டவனாகக் காண்பித்தால் அவர் எப்ப நல்லவராக மாறுவார்னு ஜனங்க எதிர்பார்க்க ஆரம்பிச்சிடுவாங்க. அவர் கெட்டவர் இல்லைன்னு தீர்மானம் செய்திருவாங்க. தீர்மானம் பண்ண முடியாமல் இருக்கிற ஒரு விஷயம் கதைதான். அதுக்கு புதுமுகங்கள் சௌகரியம். என் படங்களுக்கு வெறும் பாத்திரங்கள் மட்டுமே கதையை நகர்த்துகிற சமாசாரம் இல்லை. என் படங்களுக்கு எங்கேயும் பெயர் இருப்பதில்லை... ‘சாமுராய்’ தவிர. எப்போது ‘காதல்’ என்று வந்ததோ அது கதையாகி விடுகிறது. இசக்கி கிஷோர், அஜய், சுபிக்ஷா, அபிராமி நடித்திருக்கிறார்கள். இவர்களை நீங்கள் கேரக்டர்களாகவே உணரக்கூடும். விஜய்சேதுபதியை ‘புதுப்பேட்டை’யில் சின்ன கேரக்டரில் பார்த்த மாதிரி, நீங்கள் பார்த்த பல நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கியத்துவம் பெறுவார்கள்.
 எப்போதாவது படம் எடுக்கிறீர்கள்...
இப்போது வரை என் நண்பர்கள்தான் என்னை வைத்து படம் எடுக்கிறார்கள். ஷங்கர் சார் ‘காதல்’ எடுத்தார். ரொம்ப செளகரியமா இருந்து எடுத்துக் கொடுத்தேன். இந்தப் படத்தின் புரடியூசர் இசக்கி துரையைக் கூட எனக்குத் தெரியாது. என் நண்பன் விஜய் மில்டன் ஊடாக இருந்து தயாரித்துத் தருகிறார். நான் சினிமாவிற்குப் பொருத்தம் இல்லாதவன். ரொம்ப டார்ச்சர் பிடிச்ச கேரக்டர். என்னை ஜீரணிக்க முடியாது. நண்பர்களே என்னைப் பொறுத்துப்பாங்க. எனக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கலை. ஆனா, சினிமா செய்ய எனக்கு கட்டற்ற சுதந்திரம் தேவைப்படுது. நான் எப்ப ஷூட்டிங் போவேன்னு... டைட்டில் என்னனு எல்லாம் கேட்கக் கூடாது. இதையெல்லாம் யார் பொறுத்துக்குவாங்க! ‘வழக்கு எண் 18/9’ஐ என் சொந்தப் படம் மாதிரியே சாவகாசமாக எடுத்தேன். படத்தை கேனான்-5டி ஸ்டில் கேமராவில் பண்றேன்னு நான் சொன்னபோது, பயமே இல்லாம லிங்கு ஒரு புன்னகையோட ‘உங்க இஷ்டம்’னார். இப்படித்தான் படம் செய்யப் பிடிக்குது.
 சிறந்த நாவல்களின் மீது ஏன் உங்கள் பார்வை படலை?
‘லாக்கப்’ முதலில் என்னிடம்தான் வந்தது. நான் படிச்சிட்டு ‘ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்திருக்கிறது, இப்ப கரன்ட்டா அதில் விஷயம் இல்லை’ன்னு நினைச்சு விட்டுட்டேன். அதை ‘விசாரணை’ என வெற்றிமாறனால் சிறப்பாக எடுக்க முடிந்தது. பாரதிபாலன் எழுதிய ‘தறியுடன்’ நாவல் என்னிடம் வந்தது. அதையும் விட்டுட்டேன். இப்ப அதை வெற்றிமாறனே தயாரிக்கிறார். ‘எனக்கு ஒரு சின்ன நிகழ்வு போதும். அதைச் சுற்றியே வட்டமிட்டு ஒரு அமைப்பான திரைக்கதையை என்னால் எளிதாகச் சொல்லிவிட முடியுது’னு இப்பத்தான் எனக்குப் புரியுது. கனமான, பெரிய, பரந்துபட்ட திரைவெளியை என்னால் கையாள முடியவில்லையோனு தோணுது.
இப்ப ஒரு வார இதழில் எழுத்தாளர் தமயந்தி எழுதிய ‘தடயம்’ என்ற சிறுகதையை வாசித்து டிஸ்டர்ப் ஆகிட்டேன். இருப்புக் கொள்ளாம அதை உடனே திரைப்படமாக்கி விடலாம்னு தமயந்தியை அணுகினால், ‘மன்னிக்கவும், அதை நானே எடுத்துக் கொண்டிருக்கிறேன்’ எனச் சொல்லி விட்டார். பொதுவா எனக்கு ஒரு விஷயத்தை எடுத்துக்கணும், அதில் நுணுக்கம் சேர்க்கணும்னு விரும்புகிறேன். ஒண்ணாவது வாய்ப்பாட்டிலிருந்து 10வது வாய்ப்பாடு வரைக்கும் சொல்லிடுறேன். அதுக்கு மேல சொல்ல கஷ்டமா இருக்கு. கலைக்கும் உண்மையாக இருக்காமல், பார்வையாளனுக்கும் உண்மையாக இல்லாமல் போயிடுமோன்னு பயமா இருக்கு. என் மாதிரியே ஒரு சின்ன விஷயத்தை விரித்துப் பேசுவதாக சில ஈரானிய படங்களைப் பார்த்து உணர்ந்திருக்கிறேன். எனக்கு இதுதான் சௌகரியமாக இருக்கு.
- நா.கதிர்வேலன்
|