COFFEE TABLE



பழசுக்குப் புதுசு

ரஜினியின் ‘காலா’ நாயகி ஹூமா குரேஷி, புதுத்துணி பர்ச்சேஸுக்காக மும்பையில் உள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.  ‘உங்களின் பழைய துணிக்குப் பதில் புதுசு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உண்டு. கூடுதலாக உங்களுக்கு அதிரடி பாயின்டுகளும் உள்ளன...’ என்று கடைக்காரர்கள்  சொல்ல, குரேஷி செம குஷியாகி, தான் அணிந்திருந்த ஆடைகளை அங்கேயே கழற்றிக் கொடுத்துவிட்டு, புது டிரெஸ்களை அள்ளிக்கொண்டு  வந்திருக்கிறார். இதை தன் இன்ஸ்டா பக்கத்திலும் குரேஷி படத்துடன் பதிவிட, இரண்டு மணி நேரத்தில் 27 ஆயிரம் லைக்குகளைக் குவித்துவிட்டார்.

வேட்டை

‘‘இந்தியாவில் வனவிலங்குகளை வேட்டையாடும் பலர் வெளியே சுதந்திரமாகத் திரிகிறார்கள். அவர்களை யாருமே பெரிதாகக்  கண்டுகொள்வதில்லை...’’ என்று குற்றம்சாட்டுகிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. ‘‘வனவிலங்குகளை வேட்டையாடுவது அதிகரிக்கவில்லை என  அமைச்சர்கள் சொன்னாலும், நடந்துகொண்டிருக்கும் உண்மை வேறு...’’ என்கிறது அதே ஆய்வு. ‘‘2014 - 16ல் மட்டும் வனவிலங்கு வேட்டை 52%  உயர்ந்திருக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 30,382 வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளன. மட்டுமல்ல, 2016ல் மட்டும் 50 புலிகளும்,  340 மயில்களும் கொல்லப்பட்டிருக்கின்றன...’’ என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள்.

அந்தரத்தில் கார் சாகசம்

ஹாலிவுட் பட இயக்குநர்கள் கூட இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டார்கள். அந்தளவுக்கு பலபேரை அதிர்ச்சியில் உறைய  வைத்திருக்கிறது கடந்த வாரத்தில் நடந்த கார் விபத்து ஒன்று. கலிபோர்னியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பயங்கர குடிபோதையில் 140 கி.மீ.  வேகத்தில் காரில் பறந்திருக்கிறார். அதே வேகத்தில் ஸ்பீட் பிரேக்கரைக் கடக்கும்போது ஸ்லிப் ஆகிய கார் அந்தரத்தில் பறந்து, அருகிலுள்ள  கட்டடத்தின் இரண்டாவது மாடியின் மீது மோதி வெளிச்சுவரைத் துளைத்து அப்படியே தொங்கி நின்றிருக்கிறது. காரை ஓட்டி வந்த இளைஞர் சிறு  காயத்துடன் தப்பியிருக்கிறார் என்பதுதான் இதில் ஹைலைட்.

சிங்கிள்டைன்ஸ் டே

‘ஹேப்பி சிங்கிள்டைன்ஸ் டே’ என்ற ரொமான்ஸ் காமெடி குறும்படம், ஃபேஸ்புக்கில் சக்கைப்போடு போடுகிறது. ‘சைக்கிளில் வந்து லவ் சொல்லும்  இளைஞனின் காதலை உதாசீனப்படுத்திவிட்டு காஸ்ட்லி காரில் வரும் பையனின் லவ் ப்ரொபோசலை ஏற்றுக்கொள்ளும் பெண்ணின் காதல் கை  கூடியதா?’ என்ற ஒன்லைன்தான் கதை. ‘சென்னை டூ சிங்கப்பூர்’ அப்பாஸ் அக்பரிடம் உதவி இயக்குநராக இருந்த விநாயக் துரை இயக்கிய  இக்குறும்படத்தை ஃபேஸ்புக்கில் உள்ள ‘FilmyGlitz Media’ என்ற மலையாளப் பக்கத்தில் பகிர, 24 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கி விட்டனர்.

நோக்கியா 7 பிளஸ்

ஸ்மார்ட்போன் சந்தையில் மறுபடியும் தனது சாம்ராஜ்யத்தை நிறுவ ‘நோக்கியா’ படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடாக வருகிற  ஏப்ரல் 30ம் தேதி தனது புதிய மாடலான ‘7 பிளஸ்’ ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தப் போனுக்கான முன்பதிவு 20ம்  தேதியிலிருந்து ஆரம்பிக்கிறது. 6 இன்ச் டிஸ்ப்ளே. 3800mAh பேட்டரி. 4ஜிபி ரேம். 16 எம்பி முன் கேமரா என்று களத்தில் இறங்கும் இந்த  மொபைலின் விலை ரூ.25,999.

குங்குமம் டீம்