வீட்ல நடக்கிற பிரச்சனைகளை எந்த சீரியல் பேசுதோ அது வெற்றி பெறும்!



அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ‘திருமதி செல்வம்’, ‘தெய்வ மகள்’, ‘நாயகி’ தொடர்களின் திரைக்கதை ஆசிரியரான வே.கி.அமிர்தராஜ்

‘‘என் வாழ்க்கையை ‘திருமதி செல்வ’த்துக்கு முன், ‘திருமதி செல்வ’த்துக்குப் பின்...னு இரண்டா பிரிக்கலாம். அந்த தொடருக்கு முன்னாடி வசனம்  மட்டும்தான் எழுதிட்டிருந்தேன். ‘திருமதி செல்வம்’ சீரியலுக்குத்தான் முதன்முதல்ல திரைக்கதை எழுதினேன். இதுக்கு இயக்குநர் எஸ்.குமரனோட  அன்பும் நட்பும்தான் காரணம்...’’ புன்னகையும் பூரிப்புமாக பேசுகிறார் வே.கி.அமிர்தராஜ். `‘பெயர்ல இருக்கிற வே.கி. எங்க ஊர் பேரும் அப்பா  பெயரும்தான். பூர்வீகம் சங்ககிரி பக்கம் வேங்கிப்பாளையம். அப்பா பெயர் கிருஷ்ணன். ரொம்ப எளிமையான குடும்பம். ஒரே ஒரு தம்பி, துரைசாமி.  இப்ப புரொடக்‌ஷன் மேனேஜரா இருக்கார்.

ஈரோட்டுல பி.ஏ. தமிழ் படிச்சேன். சினிமா இயக்குநராக விரும்பி டிகிரி முடிச்சதும் திரைப்படக் கல்லூரில சேர முயற்சி பண்ணினேன். இடம்  கிடைக்கல. சோர்ந்து போகாம சென்னைல இருந்த என் ஈரோட்டு நண்பர்களான பிரியனையும் அன்பரசனையும் போய் சந்திச்சேன். அவங்க சினிமாவுல  உதவி இயக்குநரா இருந்ததால என்னையும் அசிஸ்டென்ட்டா சேர்க்க பலபேர்கிட்ட ரெஃபர் செஞ்சாங்க. ஆனா, வாய்ப்புகள் அமையல. மெகா சீரியல்கள்  அப்ப அவ்வளவா வராத காலகட்டம். பெரும்பாலும் 13 வாரத் தொடர்கள்தான். அந்த டைம்ல நண்பர் விஜயராஜை சந்திச்சேன். என்னை சின்னத்திரை  பக்கம் கூட்டிட்டு வந்தவர், இயக்குநர் அருந்தவராஜாகிட்ட சேர்த்துவிட்டார். அங்கதான் நண்பர் எஸ்.குமரன் அறிமுகம் கிடைச்சது.

அது நட்பாவும் மலர்ந்தது. கொஞ்ச நாள் அங்க இருந்தேன். அப்புறம் எழுத்தாளர் பாலகுமாரன் சார்கிட்ட உதவி எழுத்தாளரா சேர்ந்தேன். அப்ப அவர்  ‘ஜீன்ஸ்’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதிட்டிருந்தார். இதை கிஃப்ட்டாதான் நினைக்கறேன். ஏன்னா, என் ஆதர்ஷ எழுத்தாளர். சின்ன வயசுல  இருந்து அவர் நாவல்களை படிச்சுட்டு இருக்கேன். என்னை செதுக்கினதுல அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஒரு வருஷம் அவர்கிட்ட வேலை  பார்த்தேன். அப்ப நான் கத்துக்கிட்டது இப்பவும் கைகொடுக்குது. சாதாரண நிகழ்வை உணர்வுபூர்வமா எப்படி மாத்தணும்னு அவர்கிட்டதான்  தெரிஞ்சுகிட்டேன். அவர் மனைவி சாந்தாம்மா, எனக்கும் அம்மா.

முகத்தைப் பார்த்தே சாப்பிட்டேனா இல்லையானு கண்டுபிடிச்சு இட்லியை கொண்டு வந்து தருவாங்க. இதுக்கு அப்புறம் ‘சக்தி’ சீரியல்ல உதவி  வசனகர்த்தாவா சேர்ந்தேன். அப்படியே படிப்படியா ஏவி.எம். தயாரிச்ச பல தொடர்களுக்கு உதவி வசனகர்த்தாவா மாறினேன். ‘சொந்தம்’, ‘வாழ்க்கை’னு  பல ஹிட் சீரியல்களுக்கு டயலாக் எழுதின பீட்டர் செல்வக்குமார் சார் கூடவே இருந்தேன். அவர் மறைஞ்சதும் ‘சொர்க்கம்’ சீரியலுக்கு டயலாக்  எழுதினேன். தனி டைட்டில் கார்ட் வந்தது இந்த சீரியலில் இருந்துதான். சன் டிவில முதன் முதல்ல 900 எபிசோடுகள் தாண்டின நெடுந் தொடர்  இதுதான். இதுக்கு அப்புறம் ‘லட்சுமி’ சீரியலுக்கு எழுதினேன்.

அப்பதான் என் மனைவி நிர்மலா தேவியை பெண் பார்க்கப் போனேன்...’’ என்றபடி தன்னருகில் இருந்த மனைவியைப் பார்த்து கண் சிமிட்டினார்.  வெட்கத்துடன் அவர் தலைகவிழ, மலர்ச்சியுடன் தொடர்ந்தார் அமிர்தராஜ். ‘‘டயலாக் ரைட்டரா ஆகி கொஞ்சமாவது சம்பாதிச்ச பிறகுதான் கல்யாணம்  செஞ்சுக்கணும்னு உறுதியா இருந்தேன். சீரியல் வாய்ப்பு தொடர்ந்து வந்தது. நம்பி வர்ற பெண்ணை காப்பாத்த முடியும்னு நம்பிக்கை வந்தது. ‘பெண்  பாருங்க’னு வீட்ல சொன்னேன். அப்படிதான் இவங்க கிடைச்சாங்க. பக்கத்து கிராமம். இவங்களை பெண் பார்க்க போனப்ப ‘திருமதி செல்வம்’  பார்த்துட்டு இருந்தாங்க!’’ என்று சொல்லும் அமிர்தராஜுக்கு இரு மகன்கள்.

மூத்தவன் இனியன் பிரபாகரன், இளையவன் கவின் திலீபன். இருவருமே இப்போது பள்ளியில் படிக்கிறார்கள். வசனகர்த்தாவாக இருந்த இவர்,  திரைக்கதை எழுதுபவராக மாறியதற்குக் காரணம் இயக்குநர் எஸ்.குமரன்தான். ‘‘‘லட்சுமி’ தொடருக்கு வசனம் எழுதிட்டிருந்தப்ப ‘கணவருக்காக’ தொடர்  மூலமா குமரன் இயக்குநராகிட்டார். கேஷுவலா அவரைப் பார்க்க ஒருநாள் போனேன். ‘விகடன்ல புது தொடர் ஆரம்பிக்கறாங்க. கதை சொல்லி ஓகே  வாங்கிட்டேன். ‘திருமதி செல்வம்’னு பேரு. அதுக்கு நீதான் திரைக்கதை எழுதறே’னு சொன்னார். என்னால நம்பவே முடியலை. விஜயராஜை அடுத்து  என் வளர்ச்சில அக்கறையுள்ளவர் அவர்தான்.

அவராலதான் ஸ்கிரிப்ட் ரைட்டரா உயர்ந்தேன். பெரிய அளவுல அந்தத் தொடர் சக்சஸ் ஆச்சு. சொல்லப்போனா தென்னிந்திய வரலாற்றுலயே பகல்ல  ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர் அதுதான். இதுக்குப் பிறகு அவர் ‘தென்றல்’ பண்ணினார். அதுல என் பங்களிப்பு இல்ல. திரும்பவும் அவர்,  காம்பினேஷன்ல ‘தெய்வ மகள்’, இப்ப ‘நாயகி’னு பயணம் தொடருது. ஒரு விஷயம் சொல்லணும். ‘விகடன் டெலிவிஸ்டாஸ்’ மாதிரி சுதந்திரம்  கொடுக்கற நிறுவனம் குறைவு. கதையும், காட்சியும் என்ன கேட்குதோ அதை மட்டும்தான் வசனமா எழுதச் சொல்வாங்க.

டி.ஆர்.பி.க்காக எதையும் சேர்க்கச் சொல்லி பிரஷர் தர மாட்டாங்க...’’ என்று சொல்லும் அமிர்தராஜ், பத்தாண்டு காலம் வசனகர்த்தாவாக  இருந்ததாலேயே தன்னால் வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராக இப்போது வலம் வர முடிகிறது என்கிறார். ‘‘கதை சொல்லும்போதே வசனமும்  சேர்த்தே சொல்லுவேன். திரைக்கதையும், வசனமும் இரட்டைப் பிறவிங்க. சில காட்சிகளுக்கு சில வசனங்கள் அழுத்தம் கொடுக்கும். ஒரு காட்சில  வசனம் சொதப்பினா அடுத்த காட்சில திரைக்கதை அதை சரி செய்யும். அதே மாதிரி ஒரு காட்சி சொதப்பும்போது வசனம் அதை தூக்கி நிறுத்தும்.

இது Give & Take பாலிசி. பெண்கள் யதார்த்தமா சந்திக்கற பிரச்னையை கைல எடுத்து கதை பண்றப்ப ஏகப்பட்ட திருப்பங்கள் வைப்போம்.  டொமஸ்டிக் டிராமாவுக்கு எப்பவும் மவுசு உண்டு. வீட்டுக்குள்ள நடக்கிற விஷயங்கள் எல்லாரையும் பாதிக்கும். கோடீஸ்வரன் மனைவியா இருந்தாலும்  ‘இன்னைக்கு உங்க அக்கா வந்திருந்தாங்க...’னுதானே கணவன்கிட்ட புகார் சொல்ல முடியும்? இந்தி சீரியல்கள்லயும் ‘சப்பாத்தில ஏன் உப்பு இல்லை’னு  தான் பிரச்னைகள் ஓடிட்டிருக்கு! நாலு சுவத்துக்குள்ள நடக்கற வீட்டுப் பிரச்னைகள்தான் வடக்குலயும் எடுபடுது. தலைவாழை இலை விரிச்சு சாதம்,  பாயாசம், சாம்பார், கூட்டு, பொரியல், அவியல்னு சாப்பிட நாம பழகிட்டோம்.

அதனாலதான் இது எல்லாமே இருக்கிற டொமஸ்டிக் டிராமா சக்சஸ் ஆகுது. தொடர்களைப் பொறுத்தவரை இங்க இருக்கிற டிரெண்ட்தான் இந்தியா  முழுக்க நிலவிட்டிருக்கு. இதுக்குள்ள அரசியல், க்ரைம், சேஸிங்னு மிக்ஸ் பண்ணி விறுவிறுப்பா கொடுக்க முயற்சி செய்துட்டிருக்கோம். சன் டிவி  தொடர்கள்ல ஒருபோதும் இரட்டை அர்த்த வசனங்கள் வராது. பாசிடிவ் அம்சங்கள் எல்லா கேரக்டர்லயும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை பார்க்கிற ஃபேமிலி சேனல். இதை மனசுல வைச்சுட்டுதான் சன்ல ஒளிபரப்பாகற சீரியல்களை உருவாக்கணும்...’’ என்று சொல்லும்  வே.கி.அமிர்தராஜ், தனுஷ் நடித்த ‘கொடி’ படத்துக்கு அதன் இயக்குநர் துரை.செந்தில்குமாருடன் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்.

மை.பாரதிராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்