கோயம்பேடு சந்தைசென்னையின் அட்சயபாத்திரம் கோயம்பேடு சந்தை. மலர்களின் நறுமணமும், காய்கறிகள், பழங்களின் வாசனையும் காற்றில் சங்கமிக்கும் ஓர் இடம். அன்றாடத் தேவைகளுக்காக அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் இங்கே படையெடுக்கின்றனர். இருபத்தி நான்கு மணிநேரமும்  இடைவெளி இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் சந்தை, இரவில் இன்னொரு பரிமாணத்தில் மிளிர்கிறது. சரியாக நள்ளிரவு 12.00 மணி. இருண்ட  மர்ம மாளிகைக்குள் நுழைந்தது போன்ற த்ரில் அனுபவத்தைத் தருகிறது மலர்ச் சந்தை. இருபுறமும் வீற்றிருக்கும் கடைகள் இருளில்  தத்தளிக்கின்றன. அதன் நடுவில் சிதறிக்கிடக்கும் குப்பைகளிலிருந்து வெளியேறுகிறது துர்நாற்றம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரவியிருக்கும் கும்மிருட்டு பய உணர்வைத் தந்தாலும், வெளியிலிருந்து அவ்வப்போது கேட்கும் மனிதக் குரல்கள்  சிறிது நம்பிக்கையூட்டுகின்றன. கிடைத்த இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் குறட்டைவிட்டு உறங்கிக்கிடக்கின்றனர். பூட்டிய  கடைகளுக்குள் இருந்து ஷட்டரில் ஊடுருவி நாசியை வந்தடைகிறது மலர்களின் நறுமணம். ஆம்; கோயம்பேடு மலர்ச் சந்தையில் விரிந்திருக்கும்  நூற்றுக்கணக்கான கடைகள் இரவு பத்து மணிக்கே மூடப்பட்டுவிடுகின்றன. அவசரத் தேவைகளுக்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகள்  மட்டுமே திறந்திருக்கின்றன. ஆங்காங்கே சில பெண்கள் மட்டும் மலர்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு மேல்தான் சந்தைக்குள் மலர்கள் வரத் தொடங்கும். மூன்று மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும் வாடிக்கையாளர்கள்  படையெடுக்க ஆரம்பிக்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் ஓய்வு. ஆனால், சந்தைக்கு வெளியே இருக்கும் வெட்டவெளியில் ஜெயந்தி மட்டும் இந்த  இடைப்பட்ட நேரத்திலும் பூக்கடை போட்டிருந்தார். ‘‘இதோ... இந்த இடத்துலதான் எங்க அம்மாவும் பூ வித்தாங்க. என் பாட்டியும் பூ வியாபாரம்தான்.  இப்ப நானும் பூ விக்கறேன். நைட் ரெண்டு மணி வரைக்கும் இருப்பேன். சில சமயம் மார்க்கெட்ல கடை திறக்குற வரைக்கும் கூட இருந்திருக்கேன்.  இந்த டைம்ல கூட யாராவது பூ வாங்க வருவாங்க. அவங்க ஏமாந்து போகக்கூடாதுல? ஒரு நாள் நல்ல லாபம் கிடைக்கும்.

இன்னொரு நாள் போட்ட காசு கூட கிடைக்காது. ஆனாலும் இதுல ஒரு நிம்மதியும் சந்தோஷமும் இருக்கு...’’ என்று அவர் புன்னகைக்க, பெட்டி  பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரோஜா மலர்களை ஏற்றிக்கொண்டு மினி டெம்போ சந்தைக்குள் நுழைந்தது. பரபரப்பானது மலர்ச் சந்தை.  ஆனால், காய்கறிச் சந்தையும், பழச் சந்தையும் 24 மணி நேரமும் இதயத்தைப் போல துடித்துக்கொண்டே இருக்கின் றன. அங்கே கடைகள்  மூடப்பட்டிருந்தாலும், ஆயிரமாயிரம் கண்கள் விழித்திருக்கின்றன. அதில் ஒரு கண் அடுத்த வருடம் கல்லூரியில் சேரப்போகும் மகளின் படிப்புச்  செலவுக்காக காய்கறி மூட்டைகளைச் சுமக்கும் தொழிலாளிக்குச் சொந்தமானது.

அது ஆந்திராவில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டுவரும் லாரிகளுக்காக காத்திருக்கிறது. இன்னொரு கண் மனைவியின் மருத்துவச்  செலவுக்காக வாங்கிய கடனை அடைக்க தள்ளுவண்டியில் தேநீர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் ஏழைக் கணவனுடையது. அது  வாடிக்கையாளர்களை எதிர்நோக்கியிருக்கிற நேரத்திலும், காவல்துறையினர் வந்து தன்னைத் துரத்திவிடுவார்களோ என்ற பதற்றத்தில் அல்லாடுகிறது.  சந்தைக்குள், அதன் பின்பகுதியில் இருக்கும் சாலையில், லாரிகள் நுழையும் இடங்களில், ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் இருண்ட பகுதிகளில்  எல்லாம் பயமற்ற விழிப்புடன் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்நோக்கியிருக்கின்றன பாலியல் தொழிலாளிகளின் கண்கள்.

பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து காய்கறிகளை, பழங்களை ஏற்றிக்கொண்டுவரும் லாரி டிரைவர்களின் கண் உறக்கமில்லாமல் சிவந்திருக்கிறது.  ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்வதால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்று ஜீப்பில் வலம் வந்து அனைத்தையும் கண்காணித்துக்  கொண்டேயிருக்கின்றன காவல்துறையின் கண்கள்...இப்படி இங்கே விழித்திருக்கும் ஒவ்வொரு கண்ணாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு  கண்ணுக்கும் பின்னால் வெளியே சொல்லப்படாத, சொல்ல முடியாத கதைகள் கடல் அலைகளாக எழுந்து சீறி உள்ளடங்குகின்றன.

என்றாலும், இத்தனை கண்களும் விழித்திருக்க முதன்மையான காரணம் - ‘பணம்’தான்! இதை ஆமோதிக்கிறார் கேரட் மூட்டையைச் சுமந்து  செல்கின்ற அந்த சுமை தூக்கும் தொழிலாளி. ‘‘சொந்த ஊர் மதுர பக்கம். கல்யாணமாகி 15 வருஷங்களாச்சு. வீட்டுக்காரம்மா கூலி வேலைக்குப்  போறாங்க. ஒரேயொரு பையன். ஆறாவது படிக்கறான். எல்லாரும் ஊர்ல இருக்காங்க. நாலு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வருவேன்.  பக்கத்துலதான் ரூம். ஆனா, மார்க்கெட்லதான் அதிகமா இருப்பேன். மூட்டை தூக்கறதை விட்டா வேற வேலை எதுவும் தெரியாது. நைட்ல தூங்கி  ரொம்ப நாளாச்சு. இப்ப படுத்தா தூக்கமே வர்றதில்ல.

ஒரு நாளைக்கு 500 ரூபா கிடைக்கும். ஊருக்குப் போனா இதுல பாதி கூட கிடைக்காது. அதனாலதான் இந்த வேலையை விட முடியல...” தன்  வேதனையைப் பகிர்ந்த அவரின் நிலைதான் இங்கு தங்கி உழைக்கும் அனைத்து தொழிலாளர்களின் சூழலும். பெரும்பாலான சென்னைவாசிகளின்  ஒவ்வொரு கைப்பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பும், அவர்களின் வாழ்க்கையும்  இருக்கின்றன. மற்றவர்கள் உண்டு, உறங்கி, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இரவில் இவர்கள் அயராது உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.  ‘‘நைட்  பத்து மணிக்கே இங்க வந்துடுவேன். கொஞ்ச நேரம் பூட்டியிருக்கிற கடை வாசல்ல தூங்குவேன்.  

சரக்கு லாரி வர ஆரம்பிச்சதும் எழுப்பிவிடுவாங்க. தினமும் 20, 30 மூட்டைகள் தூக்குவேன். மூட்டைக்கு 20 ரூபா கிடைக்கும். காசை வாங்கிட்டு  வீட்டுக்குப் போயிடுவேன். மத்தவங்க மாதிரி குடிக்கறது எல்லாம் இல்ல. ஏன்னா காலைல பெயின்டிங் வேலைக்கு போகணும். இப்பெல்லாம் ரெண்டு  வேலை செஞ்சாதான் குடும்பத்தை ஓட்ட முடியுது. ஆரம்பத்துல இந்த வேலை ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்ப பழகிப்போச்சு. உடம்புல தெம்பு  இருக்குற வரைக்கும் செய்யலாம்...’’ என்று இன்னொரு தொழிலாளி தன் கதையைப் பகிரும்போது பழங்களை ஏற்றி வந்த லாரிகள் மார்க்கெட்டுக்குள்  நுழைய ஆரம்பித்தன. அதை நோக்கி மின்னல் வேகத்தில் அவர் பறந்தார்.

இவரைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் இரவு நேர பசியை ஆற்றுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறார் தள்ளுவண்டியில் உணவகத்தை நடத்தும்  ஒரு பெண். ‘‘மூட்டை தூக்கறவங்க அதிகமா இங்கதான் சாப்பிடுவாங்க. முப்பது ரூபால வயிறு நிறைஞ்சிடும். வெளில போனா நூறு ரூபாயாவது  வேணும். தவிர இந்த நேரத்துல எந்த ஹோட்டலும் இருக்காது. வயித்துக்கு சோறு தர்ற தொழில்தான் செய்றோம். ஆனா, இதையும் போலீஸ்  தடுக்கறாங்க. இந்த நேரத்துல கடை வைக்கக்கூடாதுன்னு துரத்தி விடறாங்க. முன்னாடி நூத்துக்கணக்குல தள்ளு வண்டி கடைகள் இருந்துச்சு. இப்ப  நாலு அஞ்சுதான் இருக்கு. போன வாரத்துல இன்னொரு பிரச்னை.

இனிமே கேஸ் சிலிண்டர் யூஸ் பண்ணக்கூடாதுனு அதிகாரிங்க வந்து ஆர்டர் போட்டிருக்காங்க. அதுல இருந்து மூணு பேர்தான் இப்ப இருக்கோம்.  மண்ணெண்ணெய் ஸ்டவ்லதான் சமைக்கறேன். செலவும் அதிகமாகுது. கெரசினும் கிடைக்க மாட்டேங்கிது. இருந்தாலும் நான் சாப்பாட்டு விலைய  ஏத்தல...’’  என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சட்டை அணியாமல், கையில் மூட்டையை தூக்கும் கொக்கியுடன் திடமான உடல்வாகு  கொண்ட நான்கைந்து தொழிலாளிகள் வந்தனர். பசியாறிய பின் மீண்டும் சரக்குகளை இறக்கச் சென்றார்கள். உழைப்பின் வெளிச்சம் இரவைப்  பகலாக்குகிறது!    

த.சக்திவேல்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்