சோஷியல் பீடியா!



-பேராச்சி கண்ணன்

விக்கிபீடியா தெரியும். அதென்ன சோஷியல்பீடியா? ‘ச்சே... அந்த ஸ்டேட்டசை யாரோ ஃபேஸ்புக்ல போட்டிருந்தாங்கப்பா. சூப்பரா இருந்துச்சு. யார் எழுதினாங்கன்னு பார்க்க மறந்துட்டேன். இப்ப திரும்பவும் படிக்கலாம்னு பார்த்தா... கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு...’ இணையத்தில் புழங்கும் பெரும்பாலானவர்கள் இப்படி சலித்துக் கொள்வதை எப்போதும் பார்க்கலாம்.

இனி அப்படி உச்சு கொட்டத் தேவையில்லை. முகநூல் / டுவிட்டர்/ யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களிடம் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்ற பதிவுகளையும் சமூக அக்கறையுடன் எழுதப்படும் கட்டுரைகளையும், நாட்டு நடப்புகளை உரிய தகவல்களுடன் விமர்சிக்கும் நேர்த்தியான எழுத்துக்களையும் தேடித் தேடி ஓரிடத்தில் தொகுத்து வருகிறார் மு.வி.நந்தினி.

இவரால் நடத்தப்படும் www.thetimestamil.com. தளத்தில் கட்டுரை அல்லது ஸ்டேட்டஸை மட்டும் இவர் உரியவர்களுக்கு கிரெடிட் கொடுத்து பிரசுரிப்பதில்லை. இத்துடன் சம்பந்தப்பட்ட அந்த ஸ்டேட்டஸ் அல்லது கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளையும் சேர்த்து பதிவிடுகிறார்.

‘‘‘தமிழகத்துல நடக்குற எல்லா நிகழ்வுகளையும் கேலி செஞ்சு செகண்டுல காலி பண்ணிடுவாங்க’னு நெட்டிசன்ஸ் பத்தின எண்ணம் இருக்கு. நிஜம் அப்படியில்ல. ஆழமா ஆய்வு செஞ்சு எழுதப்படும் விஷயங்களும் இதே நெட்டுல கொட்டிக் கிடக்கு...’’ உற்சாகமாக பேச ஆரம்பிக்கிறார் நந்தினி. ஊடகத் துறையில் 12 ஆண்டுகள் அனுபவமுள்ள இவர், சென்ற ஜனவரியில் இந்த இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். இதில், செய்திகள், திராவிட அரசியல், இந்துத்துவம், தலித் ஆணவம், ஊடகம், விவாதம், வீடியோ, சுற்றுச்சூழல், எதிர்வினை, புத்தகம், இரங்கல்... என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.

‘‘அச்சு ஊடகங்களுக்குனு சில வரையறைகள் இருக்கு. எல்லா நிகழ்வுகள் குறித்தும் அவங்களால எழுதிட முடியாது. குறிப்பா சாதி பத்தி. அவங்க தரப்புல இதுக்கான காரணங்கள் இருக்கலாம். ஆனா, மக்கள் கிட்ட இந்த பிரச்னைகளும் போய் சேரணும்னு விரும்பினேன். பிரிண்ட் அல்லது விஷூவல் மீடியால சொல்லப்படாத சமூக நிகழ்வுகள் பத்தி ஃபேஸ்புக், டுவிட்டர் மாதிரியான சமூக வலைத்தளங்கள்ல பல பேர் எழுதறாங்க.

அதை எல்லாம் படிக்கிறப்ப சந்தோஷமா இருக்கும். உண்மையான சமூக அக்கறையோட எழுதப்படுகிற அந்த ஸ்டேட்டஸ் அல்லது கட்டுரைகள் பரவலா கவனம் பெறணும்னு முடிவு செஞ்சேன். இது தொடர்பா நடக்கிற விவாதங்களும் ஐ ஓபனரா அமைவதை மறுக்க முடியாது. இப்படி பொதுநலன் சார்ந்து எழுதறவங்களுக்கு பெரும்பாலும் அச்சு / காட்சி ஊடகங்கள்ல இடம் கிடைக்கிறதில்லை. இவங்களுக்கான ப்ளாட்ஃபார்மை நாமே உருவாக்கினா என்ன? பொதுவா ஃபேஸ்புக்குல ஒருத்தர் எழுதினார்னா அதை அவரோட நண்பர்கள் படிக்கலாம்.

‘பப்ளிக்’ பார்வைக்குனு அவர் வைச்சாலும் எல்லோரும் தேடிப் போய் அதை படிப்பாங்கன்னு சொல்ல முடியாது. இதை எல்லாம் மனசுல வைச்சுதான் இந்த வெப்சைட்டை நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினேன்...’’ என்று சொல்லும் நந்தினியின் பூர்வீகம் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஆதனூர். கணவர் சண்முக சுந்தரம், மகன் கோசிகனுடன் சென்னையில் இப்போது வசிக்கிறார்.

‘‘எங்க வெப்சைட்டை கிட்டத்தட்ட எல்லா பத்திரிகையாளர்களும் கவனிக்கிறாங்க. இதை எதுக்கு சொல்றேன்னா... உயர்சாதியினர் வசிக்கக் கூடிய ஒரு தெருவுக்குள்ள குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவங்க நுழையக் கூடாதுன்னு ஒரு பிரச்னை கிளம்பிச்சு. வெறும் செய்தியா மட்டுமே கடந்துபோன இந்த விஷயத்தை நாங்க தொடர்ச்சியா ஃபாலோ செஞ்சோம். எழுதினோம். எங்களோட விடா முயற்சிக்கு அப்புறமாதான் சேனல்ஸ்ல இது தொடர்பான விவாதமே நடந்தது.

அதே மாதிரி ரோஹித் வெமுலா ஐதராபாத் பல்கலைக்கழகத்துலேந்து வெளியேற்றப்பட்ட நொடியில் இருந்து அவரோட தற்கொலை... அதன் பிறகு நடந்த போராட்டங்கள்னு எதையும் விடாம வெளியிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இது மாதிரி சொல்லிகிட்டே போகலாம்...’’ என்ற நந்தினிக்கு எதிர்காலத்தில் இதை பெரிய அளவில் நடத்த வேண்டும் என்ற கனவு இருக்கிறது. சொந்தமாக யூ டியூப் செய்தி சேனல் நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறார். ‘‘இப்ப நண்பர்களோட உதவியோட கை காசை போட்டு நடத்தறேன். கண்டிப்பா கனவு நிறைவேறும்னு நம்பிக்கை இருக்கு...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் மு.வி.நந்தினி.