COFFEE TABLE



ரீடிங் கார்னர்

கறுப்புக் குதிரை
- நரேன் ராஜகோபாலன்

(நவி பதிப்பகம், 101, டியோ ஹைட்ஸ் லே அவுட், பேகூர், பெங்களூரு - 560068. விலை: ரூ.150/- தொடர்புக்கு: 7708479380) 500, 1000 ரூபாய் திடீரென ஒரு ராத்திரியில் மதிப்பிழந்த நிலையில் நம்மில் நிறையப் பேர் நிலைகுலைந்து போனோம். அதற்கான காரண, காரியங்கள் தெரியாது. எரிச்சலே மிஞ்சியது. இந்த சூழலில் இப்புத்தகத்தில் கறுப்புப் பணம், பண மதிப்பிழப்பு இவற்றின் ஆதி அந்தங்களை விரிவாக எடுத்து வைக்கிறார் நரேன். ஆனால், ஆவணக் கட்டுரைகளின் சாயல் துளியும் எட்டிவிடாமல் ‘துறுதுறு’வென இவைகளின் சாரம்
மட்டுமே புரிகிறது.

கறுப்புப் பணம், பெரு வங்கிகள், மென்பொருள் துணை கொண்ட டிஜிட்டல் பரிமாற்றங்கள், பங்குச் சந்தை பரிமாற்றங்கள், ரொக்கமில்லாப் பொருளாதாரம் என பிரகாசமாக சுலபமான மொழியில் தருவதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பு. இவ்வகை நூல்கள் பொருளாதார நிபுணர்களுக்கு புரிபடும் என்ற நிலை மாற்றி, பாடம் சொல்லித் தருவது மாதிரி சொல்லித் தருகிறார்.

அனுபவம் செறிந்து இருந்தாலே இது சாத்தியம். நாம் விபரம் அறியாமல் இந்த பிரபஞ்சத்தில் வாழ்தல் எளிதல்ல. நிறைய விஷயங்கள் புரிபட இந்த நூலை பரிந்துரைப்பதும், நீங்களே படிப்பதும் உத்தமம். தவிர, உங்களின் மனதில் இருக்கிற பொருளாதாரம், பணப்பரிவர்த்தனை குறித்த அத்தனை கேள்விகளுக்கும் விடை இருக்கிறது. போதாதா!

கிளாமர் இல்லாமலும் ஜெயிக்கும் சன்னி லியோன்!

டப்ஸ்மாஷிலும் பின்னிபெடலெடுக்கிறார் சன்னிலியோன். ‘ராய்ஸ்’ படத்தில் ஷாரூக்கான் பேசிய ‘Ammi jaan kehti thi koi dhanda chota nahi hota... aur dhande se bada koi dharm nahi hota’ என்ற டயலாக்கை டைமிங் மிஸ் பண்ணாமல் செமையாய் டப்ஸ் செய்து ஃபேஸ்புக்கில் தட்டிவிட்டார் சன்னி. அப்புறமென்ன? ஒரே நாளில் 3 லட்சம் பேரை கவர்ந்திழுத்துவிட்டார். எக்ஸ்ட்ரா போனஸாக 42 ஆயிரம் லைக்ஸ், ஆயிரம் ஷேர்ஸ் என கிளாமர் காட்டாமல் வெறும் வாயசைத்தே ரசிகர்களை வசப்படுத்திவிட்டார் சன்னி லியோன்.

டான்ஸ் பொங்கல்

கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹேப்பி டாக், டான்ஸ் பொங்கல்தான். சினிமா மற்றும் சின்னத்திரை நடன இயக்குநர்களின் சங்கம் சார்பில் நடந்த பொங்கல் விழா அது. தயாரிப்பாளர் தாணு குத்துவிளக்கேற்றி கொண்டாட்டத்தை தொடங்கி வைக்க... ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் சங்க உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மற்ற திரைப்பட சங்கங்களுக்கு ஓர் முன்மாதிரியாக நடந்த இந்த விழாவில் டான்ஸ் மாஸ்டர்கள் தினேஷ், ஷோபி, நடிகைகள் அனுராதா, அபிநய என ஏராளமானோர் வந்திருந்து விழாவை சிறப்பித்திருக்கிறார்கள்.

சைலன்ட் கார்னர்

உங்கள் எண் என்ன?
-  ராம்பிரசாத்
(காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600024. விலை ரூ. 230. தொடர்புக்கு - 98404 80232) நாவலின் போக்கை மாற்றிப் போட்டிருக்கிறார் ராம்பிரசாத். புதுமையை முதன் முதலாக முன்னெடுக்கும்போது ஏற்படும் சிரமங்களை அனாயாசமாக தாண்டியிருக்கிறார். தமிழின் முதல் மேதமேடிக்கல் ஃபிக்‌ஷன் வடிவில் புத்தகம் உருக்கொண்டு இருக்கிறது. நாவல் இப்போது இளைஞர்களின் வசம் வந்திருக்கிறது என்பதை ‘உங்கள் எண் என்ன’ தெரிவிக்கிறது.

படிக்க சுவாரஸ்யம் தரும் நாவல். பாலியலின் புது வடிவம் பேசுவதில் நாவலின் கரு வித்தியாசப்படுகிறது. சுஜாதாவின் பாணியில் தடதடவென பறக்கிற வேகத்தில் படிக்கலாம். காதல், உறவுகளை கேள்விக்கு உட்படுத்தி அலசுகிறார். இல்வாழ்க்கை உத்தமம், மோட்சம், நல்லிணைப்பு என்ற பேச்செல்லாம் இல்லை. நாவலின் ஊடே வருகிற அட்டவணைகள் கண்டு ஆச்சர்யப்படலாம்.

உறவுகள் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் நளினமான பதில்கள் கிடைக்கின்றன. கதைச் செறிவு என போய்விடாமல் flow of thoughts என்ற வகையில் பின்னியெடுக்கிறது. இது உலக இலக்கிய அளவு சொல்லும் என்று ராம்பிரசாத்தே சொல்லியிருக்காவிட்டால் நாம் சொல்லியிருப்போம்!.

மச்சி... ஓபன் த பாட்டில்!

மதுவிலக்கில் முன்னணி மாநிலமாக பீகார் இருப்பதாக சொல்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் அங்கு சென்ற பிரதமர் கூட, இதற்காக மாநில முதல்வரான நிதிஷ் குமாரை பாராட்டியிருக்கிறார். ஆனால், ‘இண்டியா ஸ்பெண்ட்’ என்ற இந்தியாவின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்யும் ஆன்லைன் பத்திரிகை, மதுவிலக்கால் பீகாரில் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன என்ற குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம், மதுவிலக்கை அமல்படுத்தினார் நிதிஷ். இதனைத் தொடர்ந்து வந்த மூன்று மாதங்களில் குற்றங்கள் பெருமளவு குறைந்திருப்பதாக விளம்பரமும் செய்தார். இந்நிலையில் நிதிஷ் சொன்ன இந்த புள்ளிவிபரம் உண்மையில் மதுவிலக்குக்கு முந்தைய ஆண்டின் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், 2010 - 2015 ஆண்டுகளில் குற்றங்களின் அளவு சுமார் 42% அதிகரித்திருப்பதாகவும் இப்பத்திரிகை குறிப்பிடுகிறது. அத்துடன் மதுவிலக்கு அமல்படுத்திய பிறகான 7 மாதங்களில் சுமார் 13% அளவில் குற்றங்கள் உயர்ந்திருப்பதாகவும், மதுவிலக்குக்கும் குற்றங்களுக்கும் தொடர்பில்லை என்றும் ‘இண்டியா ஸ்பெண்ட்’  தெரிவிக்கிறது.