விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 10

‘‘ஸ்டாப்... ஸ்டாப்...’’ கிருஷ் அலறிய அடுத்த நொடி, லெஃப்ட் இண்டிகேட்டரை ஆன் செய்து விட்டு ஐஸ்வர்யா மாருதியை ஓரம் கட்டினாள். ‘‘எதுக்குடா நிறுத்தச் சொன்ன?’’

‘‘அங்க பாரு...’’ கிருஷ்ணனின் ஆள்காட்டி விரல் சுட்டிக் காட்டிய இடத்தில் ஏராளமான காகங்கள் பறந்து கொண்டிருந்தன. ‘‘ப்பூ. காக்கா பறக்குது. இது அதிசயமா?’’ ‘‘கண்டிப்பா...’’ அவள் பக்கம் திரும்பாமல் பதில் சொன்னான். ‘‘அப்படியென்ன புடலங்கா அதிசயம்?’’ ‘‘கும்பல்தான். நல்லா பாரு. எந்த காகமும் எந்தப் பக்கமும் பறக்கலை. மாறா அளந்து வைச்சா மாதிரி ஓர் உயரத்துல எல்லாமே வட்டமிட்டபடி இருக்கு...’’ ‘‘அட ஆமா...’’ பரவிய ஆச்சர்யத்தை தன் பங்குக்கு ஐஸ்வர்யாவும் அனுபவித்தாள்.

‘‘அது என்ன இடம்?’’ ‘‘தெரியல கிருஷ். நாம இப்ப இருக்கறது விழுப்புரம் பைபாஸ் நுனில. இடப்பக்கம் திரும்பி உள்ள போனா விழுப்புரம் வரும். மே பி அங்க ஏதாவது ஏரியாவா இருக்கலாம்...’’ ‘‘அப்ப அங்க போவோம்...’’ ‘‘ஏன்டா?’’ ‘‘உனக்கு இன்னமும் புரியலையா?’’ ‘‘ம்ஹும். ஏர்போர்ட்டுல கிளம்பினதுலேந்தே எதுவும் புரியாமதான் நீ இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்துட்டு இருக்கேன். இதுவரைக்கும் நீ பேசினதே மந்திரிச்சு விட்டா மாதிரி இருக்கு. இப்ப... சுத்தம்!’’

‘‘உண்மைல நானும் இப்ப குழம்பித்தான் போயிருக்கேன் ஐஸ்...’’ ‘‘இரு... இரு... என்னை கிள்ளிப் பார்த்துக்கறேன்...’’ ஐஸ்வர்யா தன்னைத்தானே கிள்ளிக் கொண்டாள். ‘‘ஆ... வலிக்குது. நிச்சயமா இது கனவில்ல... எல்லாத்துக்கும் முழ நீளத்துக்கு விளக்கம் தர்ற உன்னையா இந்த காகங்கள் குழப்புது?’’ ‘‘எக்ஸாக்ட்லி...’’ உதட்டைக் கடித்த க்ருஷ், அவள் பக்கம் திரும்பினான். ‘‘நம்ம மரபுப்படி காகங்கள் எதைக் குறிக்குது?’’

‘‘முன்னோர்களை...’’ ‘‘வேற?’’ ‘‘நோ ஐடியா...’’ ‘‘ஐடியாவே இல்லாம இருக்கிற அந்த மறைஞ்சு போன நம்பிக்கையதான் இப்ப யாரோ உயிர்ப்பிக்கிறாங்க...’’ ‘‘யாரு?’’ ‘‘கண்டுபிடிக்கணும்...’’ ‘‘ஓகே. எந்த நம்பிக்கைக்கு உயிர் தர்றாங்க?’’ ‘‘பஞ்ச பட்சி சாஸ்திரம்!’’ ‘‘வாட்...’’ ‘‘பஞ்ச பட்சி சாஸ்திரம்...’’ முன்பை விட நிதானமாக, அதே நேரம் அழுத்தம் குறையாமல் க்ருஷ் உச்சரித்தான்.

‘‘என்னடா... டெக்னாலஜி பத்தி வாய் கிழிய பேசிட்டு இப்ப சடார்னு யூ டர்ன் அடிச்சு பழம் பஞ்சாங்கமா பேசற..?’’ ‘‘பஞ்சாங்கம் கூட அந்தக் கால டெக்னாலஜிதான் ஐஸ்... இதுவரைக்கும் நடந்ததை பூரா அசை போடு. கிடைக்கிற ரிசல்ட், பஞ்ச பட்சி சாஸ்திரமா இருக்கும்...’’ ‘‘கொஞ்சம் மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறியா?’’ ‘‘ஷ்யூர். உனக்காக இல்ல... எனக்கு நானே தெளிவு பெறவும்...’’ சிகரெட்டை பற்ற வைத்தவன் சத்தம் போட்டு தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தான்.

‘‘தாரா வாங்கின முட்டைலேந்துதான் எல்லாமே ஸ்டார்ட் ஆகுது. முட்டை, கோழியைக் குறிக்கும். அதுபடி பார்த்தா... இப்ப காகங்கள்... இரண்டு பறவைகளுமே பஞ்ச பட்சி சாஸ்திரங்கள்ல இடம் பிடிச்சிருக்கிற இரண்டு பேர்ட்ஸ்!’’ ‘‘ப்ளீஸ் க்ருஷ்... என்னை அடி முட்டாளா எப்பவும் உணர வைக்காத. கொஞ்சம் புரியறா மாதிரி சொல்லு...’’ ‘‘ஜோதிடத்தோட ஒரு பிரிவுதான் பஞ்ச பட்சி சாஸ்திரம்.

எப்படி உலகம் பஞ்ச பூதங்களால இயங்குதோ... அப்படி ஒவ்வொரு மனித உடலும் அதே பஞ்ச பூதங்களாலதான் சர்வைவ் ஆகுது. இதுல ஒண்ணு கூடினாலும் அல்லது குறைஞ்சாலும் நோய் நம்மை தாக்கியிருக்கறதா அர்த்தம்...’’ ‘‘ஓகே. காட் இட்...’’ ‘‘இதையே நம்ம முன்னோர்கள் ஜோதிடத்துக்கும் பொருத்தியிருக்காங்க. இப்படி செஞ்சவங்க வேற யாருமில்ல... சித்தர்கள். நந்தி, அகத்தியர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், இடைக்காடர், போகர், புலிக்கையீசர், கருவூரார், கொங்கணவர், காளாங்கி, அழுகண்ணர், பாம்பாட்டி, அகப்பேய், தேரையர், குதம்பைச் சித்தர், சட்டநாதர்னு பலர்...’’

‘‘இதுல புலிப்பாணி யாரு?’’ ‘‘புலிக்கையீசர்னு நான் சொன்னேன் இல்லையா... அவரைத்தான் புலிப்பாணி சித்தர்னும் சொல்வாங்க...’’ ‘‘அப்ப உரோம ரிஷி, கும்ப முனி, மச்சமுனி, கோரக்கர்... இவங்க எல்லாம்..?’’ ‘‘நல்ல கேள்வி. மேல சொன்னவங்கள்ல சிலரை தூக்கிட்டு இவங்களை ஆட் பண்ணிப்பாங்க...’’ ‘‘யாரு க்ருஷ்..?’’ ‘‘அந்தந்த ஸ்கூல் ஆஃப் தாட்டை சேர்ந்தவங்க...’’ ‘‘ஓ...’’ ‘‘இதுல அகத்தியரும் கும்ப முனியும் ஒருத்தர்தான்...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, இந்த சித்தர்கள் எல்லாருமே பஞ்ச பட்சி சாஸ்திரத்தை எழுதலை.

அகத்தியர், உரோமரிஷி, காக புஜண்டர், போகர்னு நாலு பேர்தான் இதை எழுதியிருக்காங்க. கும்ப முனி பெயர்லயும் பஞ்ச பட்சி சாஸ்திரம் இருக்கு. ஆனா, அதுவும் அகத்தியரை குறிப்பிடறதுதான். ஆனா...’’ ‘‘ஆனா? சொல்லு க்ருஷ்... ஏன் நிறுத்திட்ட..?’’ ‘‘அகத்தியர்னு பெயர் கொண்ட பல பேர் இருந்திருக்காங்க. உதாரணமா தொல்காப்பியர் முதன் முதலா ‘தொல்காப்பியம்’ என்கிற இலக்கண நூலை தமிழ்ல எழுதினதா சொல்றோம். உண்மைல இந்த தொல்காப்பியத்துக்கு முன்னாடியே ஓர் இலக்கண நூல் இருந்திருக்கு.

‘அகத்தியம்’னு அதுக்கு பேரு. கால வெள்ளத்துல அது அழிஞ்சுடுச்சு. இந்த ‘அகத்தியம்’ எழுதின அகத்தியர் வேற... மருத்துவ குறிப்புகளை உலகுக்கு சொன்ன அகத்தியர் வேற... பஞ்ச பட்சி சாஸ்திரத்தை எழுதின அகத்தியர் வேற...’’ ‘‘என்னடா கலர் கலரா ரீல் சுத்தற?’’ ‘‘இதெல்லாம் அக்மார்க் நிஜம் ஐஸ்... தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டிருக்கிற ‘வாகையருள் பதினெண் சித்தர்கள்: பஞ்ச பட்சி சாஸ்திரம்’ நூலாசிரியர் டாக்டர். ‘புலிப்பாணி’ சுந்தரவரதாச்சாரியார் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கார்.

இன்னொண்ணையும் இவரே சொல்லியிருக்கார்...’’ ‘‘என்னனு?’’ ‘‘‘அகத்தியர் பஞ்ச பட்சி சாஸ்திர’த்துக்கு இதுவரை யாருமே முழு விளக்க உரை எழுதலைனு. அதே மாதிரி ‘உரோம ரிஷி வினாடி பஞ்ச பட்சி’க்கும் உரையே இல்லைனு...’’ ‘‘இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்ற..?’’ க்ருஷ்ஷை பார்த்த ஐஸ்வர்யா கண்களைச் சிமிட்டினாள். ‘‘அர்ஜுனனோட வில் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கப் போறோம்னு பயணத்தை ஆரம்பிச்சோம்.

நடுவுல வேற ஏதாவது பொக்கிஷத்தை நாம கண்டடையலாம்னு சொன்ன... இப்ப ‘பஞ்ச பட்சி சாஸ்திர’த்துக்கு உரையே இல்லனு சொல்ற. ஒருவேளை விளக்க உரையதான் கடைசியா நாம எழுதப் போறோமா..?’’ பக்கென்று சிரித்துவிட்ட கிருஷ்ணன், வலிக்காதபடி அவள் தலையில் கொட்டினான். ‘‘முழுசா சொல்ல விடு... நமக்கு இப்ப தேவை விளக்க உரை இல்ல. பஞ்ச பட்சி சாஸ்திரம்...’’ ‘‘முதல்ல அப்படின்னா என்னனு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணு...’’ ‘‘முன்னாடியே சொன்னா மாதிரி, மனித உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது.

வெவ்வேறு நிலைகள்ல... வேற வேற கால நிலைகள்ல ஒவ்வொரு பூதத்துக்கும் ஓர் அதிர்வு ஏற்படும்...’’ ‘‘ஓகே...’’ ‘‘இதைத்தான் அஞ்சு பறவைகளா சித்தர்கள் இமாஜின் செய்திருக்காங்க. அதாவது வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்னு...’’ ‘‘டேய்... டேய்... அப்படீன்னா தாரா... இந்த காகங்கள்..?’’ ‘‘இரு ஐஸ்... சட்டுனு ஸ்கிப் பண்ணாத. எண்ட் பாயிண்ட் இப்ப நீ சொன்னதுதான்.

ஆனா, நடுவுல இருக்கறதையும் தெரிஞ்சுட்டா மத்ததெல்லாம் புரிஞ்சுடும்...’’ திறந்த வாயை மூடாமல் ஐஸ்வர்யா அவனைப் பார்க்க, க்ருஷ் தொடர்ந்தான். ‘‘முற்றிலும் செயலிழந்த உயிர்ச் சத்தில்லாத நிலை... அதாவது இறப்பு... இது ஒரு பறவை. அடுத்து உயிர் அசைவு மட்டும் இருந்து இயக்கமற்ற நிலை... தட் மீன்ஸ் தூக்கம்... இது இன்னொரு பறவை.

இதை விட உயிர்த்தன்மையோட அசையும் நிலை... அதாவது நடை... மூன்றாவது பறவை. இதை விட இயக்கம் ஓங்கிய நிலை... அழிஞ்சு போன லைஃப் செல்ஸை ஈடு செய்ய சாப்பிடுவது... நான்காவது பறவை. முழு செயலதிறனும் பெற்று இயங்கற நிலை... ஐந்தாவது பறவை...’’ ‘‘ம்...’’ ‘‘இப்படி அஞ்சு பறவைகள்தான் ஒவ்வொரு மனுஷனையும் ஆளுது. ஒரு பறவை ஆட்சி செய்யறப்ப மத்த நாலு பறவைகளும் அதுக்கு அடிபணிஞ்சு இருக்கும்.

இதை விட சுவாரஸ்யம் என்ன தெரியுமா? ஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு மனித உடலை ஆறு நாழிகை ஆட்சி செய்யும்னு சித்தர்கள் சொல்லியிருக்கறது. அதாவது இரண்டு மணி நேரங்களும் 24 நிமிடங்களும்!’’ ‘‘...’’ ‘‘இதெல்லாம் இப்ப ஏன் சொல்றேன்னு முன்னாடியே நீ கண்டுபிடிச்சுட்ட. அதேதான். தாரா வாங்கின முட்டைல எழுதப்பட்ட ‘KVQJUFS’ வார்த்தைக்கும் இப்ப ஏதோ ஒரு இடத்துல மேல பறக்கிற காகங்களுக்கும் ஏன் தொடர்பிருக்கக் கூடாது?’’ ஐஸ்வர்யா காரை ஸ்டார்ட் செய்தாள்.

பைபாஸில் ஏறாமல் விழுப்புரத்துக்குள் நுழைந்தார்கள். வட்டமிட்டபடி பறந்த காகங்களை குறிபார்த்து சென்றவர்கள் - விழுப்புரம் அரசு மருத்துவமனை வாசலை அடைந்தார்கள். யோசனையுடன் க்ருஷ்ஷை பார்த்தவளின் புருவங்கள் முடிச்சிட்டன. காரணம், அவன் தன் செல்போனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். ‘‘என்னடா?’’‘‘தாரா இங்கதான் இருக்கா... ஜிபிஎஸ் ஆன் ஆகிடுச்சு...’’ சொன்னவனை அவள் கண்கள் விரிய ஏறிடவும் - அவர்களது காரைக் கடந்து ஒரு பைக், மருத்துவமனைக்குள் நுழையவும் சரியாக இருந்தது. வந்தவன் ஆதிதான்!

(தொடரும்)  

ஓவியம்: ஸ்யாம்