தமிழ் ஆமீர்கான் இவர்தான்!



-மை.பாரதிராஜா

மெடல் ஜெயிக்கிறவங்க மரத்துல வளர்றவங்க இல்ல. அவங்கள உருவாக்கணும். பாசத்தால. மன உறுதியால. கஷ்டத்தால. ஒவ்வொரு வீரனைப் போல எனக்கும் ஒரு கனவு இருந்துச்சு. தேசத்துக்காக கோல்டு மெடல் வாங்கி ஜெயிக்கணும்னு...’’

‘தங்கல்’ படத்தில் ஆமீர்கான் பேசும் இந்த டயலாக்குக்கு கைதட்டாத ரசிகர்களே இல்லை. உண்மையில் இந்தி ‘தங்க’லுக்குதான் ஆமீர்கான் தன் சொந்தக் குரலில் பேசினார். எனில் தமிழ் ‘தங்க’லுக்கு? ‘‘யெஸ் பாஸ்...’’ என்று கை குலுக்குகிறார் ஆஸம் ஷெரிஃப். இன்றைய தேதியில் மோஸ்ட் வாண்டட் டப்பிங் ஆர்டிஸ்ட். ‘பாகுபலி’யில் வில்லன் ராணாவுக்கு குரல் தானம் செய்தவரை இப்போது ஹீரோவுக்கு வாய்ஸ் கொடுக்க வைத்திருக்கிறார் ஆமீர்கான்.

‘‘திரைக்கு முன்னாடி சாதிக்கறவங்களுக்குதான் எப்பவுமே அங்கீகாரம் கிடைக்கும். ‘தங்கல்’ வெற்றி அதை மாத்தியிருக்கு. முகமே தெரியாத என்னை இன்னிக்கி எல்லாரும் பாராட்டறாங்க. அழுகையா வருது...’’ ஏவி.எம். கார்டனின் சில்னெஸை உள்வாங்கியபடி புன்னகைக்கிறார் ஆஸம் ஷெரிஃப்.

‘‘அப்பாக்கு பூர்வீகம் மும்பை. அம்மாவுக்கு சென்னை. இப்ப நாங்க சென்னைவாசி. படிப்பு முடிச்சதும் பேங்குல வேலை கிடைச்சது. கைநிறைய சம்பளம். மகிழ்ச்சிக்கு குறைவில்லை. ஆனாலும் நிம்மதியா தூங்க முடியலை. மனசுக்குள்ள ஏதோ ஒண்ணு அரிச்சுகிட்டே இருந்தது. எதை தேடறேன்னு தெரியாமயே அலைய ஆரம்பிச்சேன்.

இந்த சூழல்லதான் தெலுங்கு ரைட்டர் ஷெஷாங் மவுலி அறிமுகம் கிடைச்சது. ‘பாவி... உன் குரல் நல்லா இருக்குயா’னு தோள்ல கைபோட்டவர் அப்படியே டப்பிங் ஆர்டிஸ்ட்டா என்னை மாத்தினார். படுத்ததும் தூக்கம் வந்தது. போதாதா? வேலையை ராஜினாமா செஞ்சேன்...’’ கண்களை சிமிட்டியபடி சிரிக்கும் ஆஸம் ஷெரிஃப், ஏராளமான ஆவணப் படங்களுக்கும், கார்ட்டூன்ஸுக்கும், குறும்படங்களுக்கும் டப்பிங் செய்திருக்கிறார்.

‘‘கையை பிடிச்சு என்னை சினிமாவுக்கு கூட்டிட்டு வந்தது கமல். ‘விருமாண்டி’ தெலுங்கு வெர்ஷன்ல ஒரு சின்ன கேரக்டருக்கு பேசினேன். ஆந்திராவுல என்ட்ரி கொடுத்தேன். தமிழ்ல அறிமுகம் ‘உன்னைப் போல் ஒருவன்’. இன்ஸ்பெக்டர் பரத்துக்கு வாய்ஸ் நான்தான். உண்மையை சொல்லணும்னா ‘சார் போஸ்ட்...’ மாதிரி ஒரு வரி டயலாக்குலேந்துதான் டப்பிங் கேரியர் ஆரம்பமாச்சு. சின்னச் சின்ன கேரக்டர்ஸ், காமெடியன்ஸ், வில்லன்கள், அடியாட்கள்... இப்படி எல்லோருக்கும் குரல் கொடுத்தேன்.

‘வேலாயுதம்’ வில்லன் அபிமன்யு சிங்குக்கும், ‘பத்து எண்ணறதுக்குள்ள’ வில்லன் ரகுல் தேவுக்கும் பேசினது ஓரளவுக்கு என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இப்ப ஆமீர்கான் வழியா ஹீரோ ஆகியிருக்கேன்!’’ சிரிப்பதற்கே பிறவி எடுத்தவர் போல் ஒவ்வொன்றுக்கும் மலர்கிறார். சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும்போது மட்டுமல்ல... தான் சந்தித்த இடர்களை ஆஃப் த ரிக்கார்ட் ஆக சொல்லும்போதும்.

‘‘எங்க வீட்ல உருதுதான் பேசுவோம். இந்த அளவுக்கு நான் வளர்ந்திருக்கேனா அதுக்கு மூணு பேர்தான் காரணம். ஒருத்தர் சுதாகர். அடுத்தவர் சத்யநாராயணா. இவங்க ரெண்டு பேருமே தெலுங்கு ரைட்டர்ஸ். மூன்றாமவர், ‘தங்கல்’ ரைட்டர் சங்கர். இவங்க கொடுக்கிற சப்போர்ட்டை மறந்துட்டனா நான் மனுஷனே இல்ல...’’ பொங்கிய உணர்ச்சிகள் அடங்கும் வரை மவுனமாக இருந்த ஆஸம் ஷெரிஃப், சில நிமிடங்களுக்கு பின் தொடர்ந்தார்.

‘‘ராணாவுக்கு என் குரல் பர்ஃபெக்ட்டா செட்டாச்சுன்னு டைரக்டர் ராஜமவுலி சொன்னதா அவரோட அசோசியேட் சொன்னப்ப காத்துல பறக்கறா மாதிரி இருந்தது. ‘பாகுபலி’ய திரும்பவும் போய் பார்த்தேன்! டப்பிங் நுணுக்கங்களை எனக்கு கத்துக் கொடுத்தது ஆமிர்கான். அவரோட ‘தூம் 3’ தெலுங்கு பதிப்புக்கு நான் பேசினேன். கடைசி டயலாக் வரைக்கும் கூடவே இருந்து கரெக்‌ஷன் சொல்லிகிட்டே இருந்தார். மிகப் பெரிய ஐ ஓபனரா இருந்தது. என் மேல தனிப்பட்ட முறைல அவருக்கு அன்பு வந்ததும் அப்பதான்.

ஆனா, தமிழ் ‘தங்கல்’ வாய்ப்பு எனக்கு உடனே கிடைக்கல. ஆடிஷன்ல மூணு பேரை செலக்ட் பண்ணி வைச்சிருந்தாங்க. முதல் ரெண்டு பேர் வாய்ஸை கேட்டுட்டு ஆமிர் உதட்டை பிதுக்கியிருக்கார். ‘இது மூணாவது. ஆஸம்னு ஒருத்தர் பேசியிருக்கார்’னு என் சிடிய போட்டிருக்காங்க. உடனே ஆமிர் துள்ளி எழுந்தாராம். ‘என்னது... ஆஸமுக்கு தமிழ் தெரியுமா? அவரை தெலுங்குக்காரர்னு இல்ல நினைச்சிருந்தேன்? குட். என்னுடைய ஒர்ர்கிங் ஸ்டைல் ஆஸமுக்கு தெரியும். அவரே பேசட்டும்’னு சொல்லிட்டார்.

எனக்குதான் ரொம்ப தயக்கமா இருந்தது. படத்துல அவருக்கு மூணு ஸ்டேஜ். இளைஞர், நடுத்தர வயது, வயதானவர். யூத் கேரக்டருக்கு காஷுவலா பேசிட்டேன். நடுத்தர வயதையும் சமாளிச்சுட்டேன். ஆனா, வயதான போர்ஷனுக்கு? அதுவும் தில்லிலேந்து அவரோட மகள் ‘சாரி’ கேட்டு போன் செய்யறப்ப, ரிஸீவரை எடுத்து ‘ஹலோ’ சொல்லுவார்னு காத்திருந்தேன். ஆனா, அவர் எதுவும் பேசலை. ரியாக்‌ஷனை மட்டுமே கொடுத்தார்.

ஒரு ஹீரோ சிரிச்சா நாம சிரிக்கலாம். கோபமானா நாமும் ஆவேசமாகலாம். அதுவே சைலன்ட் பர்ஃபார்மென்ஸ்னா? நாக்கு தள்ளிடுச்சு. சிரமப்பட்டு பேசி முடிச்சேன். முழுசா தமிழ் பதிப்பை பார்த்து முடிச்சுட்டு ஆமிர்கான் ‘வெல்டன்’னு சொல்ற வரைக்கும் படபடப்பாவே இருந்தது...’’ என்ற ஆஸம் ஷெரிஃப் இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்த்து நூறு படங்களுக்கு மேல் டப்பிங் செய்திருக்கிறார். ‘‘ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் மாடுலேஷன் இருக்கு. அதை அப்படியேதான் மத்த மொழிகள்ல பேசறப்பவும் கடைப்பிடிக்கணும்...’’ அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ஆஸம்.                                 

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்