இந்தியாவின் முதல் தனியார் பயிற்சி மையம் shooting சென்னைலதான் இருக்கு!



அந்தப் பெண் அப்படித்தான் நின்றிருந்தார். ஒரு கையில் துப்பாக்கி. இன்னொரு கை நேராக இடுப்புவரை தாழ்ந்திருந்தது. ஒரு கண்ணை மூடியிருந்தார். மறுகண்ணால் இலக்கை உற்றுப் பார்த்தார். பார்த்த விழிகளில் சாதிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது. சரியாக இலக்கை பார்த்து டிக்கரை அழுத்தினார். டுமீல். ‘‘சூப்பர். ஆனா, இன்னும் பெட்டரா செய்யணும்....’’ என்றபடி அந்தப் பெண்ணுக்கு சில பயிற்சிகளை அளித்துவிட்டு நம்மிடம் வந்தார் சுமீத் சங்கவி.

‘‘பத்து வயசுல துப்பாக்கியை கைல எடுத்தேன். 36 வருடங்கள் ஓடிப்போச்சு. விளையாட்டா ஆரம்பிச்சது என்னை சர்வதேச சாம்பியனா மாற்றும்னு நினைக்கலை...’’ என்று சிரித்தார். ‘‘1980ல முதல் முறையா சென்னை கமிஷனர் அலுவலகத்துல ரைபிள் கிளப் ஆரம்பிக்கப்பட்டது. அதுல சாதாரண மக்களுக்கான துப்பாக்கி சுடும் நிகழ்ச்சி நடந்தது. என் அப்பா கலந்துகிட்டார். அவ்வளவுதான். இந்த விளையாட்டு மேல அவருக்கு தனி ஈடுபாடே வந்துடுச்சு. அதனால கிளப்புல உறுப்பினரா சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டார்.

அவர் பயிற்சிக்கு போகும் போது எல்லாம் என்னையும் கூடவே கூட்டிட்டு போவார். பயிற்சியும் எடுக்கச் சொன்னார். வார இறுதி நாட்கள்ல அதிகாலைலயே எழுப்பிடுவார். கண்ணெல்லாம் தூக்கத்துக்கு கெஞ்சும். ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்’னு சொன்னா ‘தங்கல்’ திரைப்படத்தில் வரும் அமிர்கான் போல் விடமாட்டார். ‘பயிற்சிக்கு போகணும் வா’ன்னு வலுக்கட்டாயமா இழுத்துட்டுப் போவார்.

அழுதுகிட்டே போவேன். ரொம்பவே போரடிக்கும். ஆனாலும் அப்பாவோட கட்டாயத்துனால விடாம பயிற்சி எடுத்தேன். ஒரு வருஷம் முடிஞ்சதும் மாநில அளவுல போட்டி நடந்தது. நானும் கலந்துகிட்டேன். பதக்கமும் வென்றேன். பள்ளில பாராட்டினாங்க. எல்லார் முன்னாடியும் மேடைல நின்னேன். கரகோஷம் எழுப்பினாங்க. அப்பத்தான் எனக்கு இந்த விளையாட்டோட அருமையே புரிஞ்சுது.

மேலும் மேலும் உயரணும்னு உற்சாகத்தை கொடுத்தது...’’ என்று கண்கள் விரிய பேசும் சுமீத் சங்கவி, கடந்த 32 வருடங்களாக துப்பாக்கி சுடும் போட்டியில் தனக்கென ஓரிடத்தை தக்கவைத்துள்ளார். அதாவது, அவருக்கு போட்டி அவரேதான். ‘‘இதுவரை பல முறை தேசிய போட்டில பங்கு பெற்று பரிசு வாங்கியிருக்கேன். எல்லா பதக்கங்களும் எங்க வீட்டு அலமாரியை நிரப்பியிருக்கு. 2012ல ஜாஸ்பால் ராணாவோட இணைந்து சர்வதேச போட்டில கலந்துகிட்டேன். ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்கள் எங்களுக்கு கிடைச்சுது.

இதுக்கெல்லாம் காரணம், 1990ல நடந்த சம்பவம்தான். அந்த வருஷம், அமெரிக்காவுல இருக்கிற மிக்சிகன் பல்கலைக்கழகத்துல ஒரு சம்மர் கேம்ப் நடந்தது. அதுல அறுநூறு குடும்பங்களுக்கு நான் துப்பாக்கி சுட பயிற்சி அளித்தேன். சர்வதேச அளவுல நடந்த மிகப் பெரிய கேம்ப் அது. துப்பாக்கி சுடுவது தவிர, வில்-அம்பு, நீச்சல், மலை ஏறுதல்னு பலவகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட நிகழ்வுல நானும் பயிற்சியாளரா இருந்தேன்னு நினைக்கிறப்ப பெருமையா இருக்கு...’’ என்று சொல்லும் சுமீத், சில வருடங்களுக்கு முன் சென்னையில் முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை ஆரம்பித்துள்ளார்.

‘‘இப்படியொரு பயிற்சி மையத்தை சுலபத்துல தொடங்கிடமுடியாது. அதுக்கு பயிற்சி அளிப்பதற்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கணும். இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் என்னை பயிற்சியாளரா அறிவிச்சாங்க. அதன் பிறகுதான் இந்த மையத்தை தொடங்க முடிந்தது. நம்ம நாட்டுல அரசு நடத்தற பயற்சி மையம் தில்லிலயும், புனேவுலயும் இருக்கு. முதல் முறையா சகலவசதிகளுடன் இந்தியாவுல தொடங்கப்பட்டிருக்கிற தனியார் பயிற்சி மையம் இதுதான்.

முழுக்க முழுக்க மின்னணு இலக்குகளை கொண்டுதான் பயிற்சி அளிக்கிறோம். பொதுவா துப்பாக்கி சுடும் பயிற்சின்னா நமக்கு எல்லாம் சினிமால காட்டப்படுகிற காட்சிதான் நினைவுக்கு வரும். பெரிய வளாகம். அதுல மணல்மூட்டைகளை அடுக்கி வைச்சு பயிற்சி அளிக்கிற விஷூவல்தான் மனசுல ஓடும். அதே மாதிரி துப்பாக்கி வெடிக்கிறப்ப ‘டுமீல்’ ‘டுமீல்’னு சத்தம் கேட்கும்னு நினைக்கிறோம்.

இந்த மாதிரி பயிற்சி மின்னணு இலக்கு துப்பாக்கிக்கு தேவையில்லை. பாயின்ட் 22; பாயின்ட் 32 அளவு கொண்ட துப்பாக்கிகளை சுட பயிற்சி எடுக்கும்போதுதான் பெரிய வளாகம் தேவை. அது வெடிக்கிறப்ப சத்தம் காதை பிளக்கும். ஸோ, காதுல பஞ்சை வைச்சுக்கணும். இங்க அப்படியில்லை. ஏர்கன் துப்பாக்கியாலதான் பயிற்சி அளிக்கிறோம். இந்த வகை துப்பாக்கியை போட்டிக்காக மட்டுமே பயன்படுத்தறோம். 10 மீட்டர் தூரம் வரைக்கும் குறிபார்க்க முடியும்.

அதுக்கு மேல முடியாது. பாயின்ட் 177 இன்ச் டயா மீட்டர் அளவுதான் துப்பாக்கி இருக்கும். இதுல பயன்படுத்தற குண்டால உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஒரு வேளை நம்ம உடம்புல இந்த குண்டு பாய்ந்தாலும் சருமத்துல சின்ன காயம்தான் ஏற்படுமே தவிர உடலுக்குள்ள ஊடுருவி செல்லாது. ஸோ, இந்த துப்பாக்கியை வச்சிருக்க லைசென்ஸ் தேவையில்லை. அதே சமயம் பாயின்ட் 22, பாயின்ட் 32 இன்ச் டயாமீட்டர் கொண்ட துப்பாக்கியை தனிப்பட்ட முறைல வச்சிருக்கணும்னா கண்டிப்பா லைசென்ஸ் வாங்கணும்.

ஏன்னா, இதுலேந்து பாயற குண்டு உயிரை பறிக்கும். பெரும்பாலும் வேட்டையாட இதை பயன்படுத்துவாங்க. அதே சமயம் எல்லாருக்கும் இந்த துப்பாக்கிக்கான லைசென்ஸ் கிடைச்சிடாது...’’ என்று சொன்னவர் ஏர்கன் துப்பாக்கியின் செயல்பாட்டை விவரித்தார். ‘‘இது காற்றழுத்தம் மூலம் செயல்படும். இதுக்குள்ள குண்டை போட்டுட்டு விசையை அழுத்தணும். ஒரு நேரத்துல ஒரு குண்டுதான் இந்த துப்பாக்கில போடமுடியும். ஒன்னரை கிலோ எடைதான் இந்த துப்பாக்கி இருக்கும்.

எப்பவும் கைல வைச்சுட்டு இருக்கமுடியாது. 15 வினாடிகள் சுமந்தாலே கைவலிக்கும். அதனால நமக்கு பொருந்தறா மாதிரி கைப்பிடியை பிடிக்கணும். ஒவ்வொருத்தரோட கை அளவும் மாறும். ஸோ, அதுக்கு தகுந்தபடி பிடியை மாற்றி அமைக்கலாம். இதெல்லாம் சரிப்பட்டு வந்த பிறகுதான் இலக்கை குறிபார்க்கணும். துப்பாக்கியோட முனை இலக்குடன் நேர்க்கோட்டில் இருக்கணும். அப்படி இருந்தாதான் குறிபார்த்து சுடமுடியும். அதாவது, துப்பாக்கியில் நாம் இலக்கை பார்க்கும்வழி, துப்பாக்கியின் நுனி, இலக்கு எல்லாமே ஒரே நேர்கோட்டில் இருக்கணும்.

இலக்குல பத்து வட்டங்கள் வரையப்பட்டிருக்கும். நம்ம குறி சரியா பத்தாவது வட்டத்துக்குள்ள இருக்கணும். தவிர நாம எந்த வட்டத்துல சுடறோமோ அதுக்கு தகுந்தபடிதான் மதிப்பெண் வழங்குவாங்க. 95% பத்தாவது வட்டத்துக்குள்ள நம் இலக்கு பாய்ந்தா, கண்டிப்பாக நாம முன்னணில வரலாம். ஆண்களை பொறுத்தவரை 60 ஷார்ட்ஸ் சுடணும். இதுல 580க்கு மேல மதிப்பெண் எடுக்கலாம். பெண்களுக்கு 40 ஷார்ட்ஸ், 400 மதிப்பெண்கள்.

இந்த மதிப்பெண்களை எடுக்கிறவங்க கண்டிப்பா இரண்டே வருஷங்கள்ல சர்வதேச போட்டில பதக்கங்களை பெறமுடியும்...’’ என்றவர் மாணவ மாணவிகள் பள்ளிக்காலம் முதலே முறையாக பயிற்சி பெற்றால், கண்டிப்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும் என்றார். ‘‘ஒவ்வொரு போட்டி நடக்கறதுக்கு முன்னாடியும் சிறப்பு பயிற்சி முகாம் நடக்கும். அப்படித்தான் ஒலிம்பிக் போட்டிக்கும், தில்லில ஒரு மாசம் சிறப்பு பயிற்சி அளிப்பாங்க.

கல்லூரி மாணவ மாணவிகளால இதுல சுலபமா கலந்துக்க முடியும். ஏன்னா அவங்ககிட்ட ஸ்டாமினா அதிகமிருக்கும். இந்த மையத்துல நான் 12 வயசுலேந்து பயிற்சி அளிக்கறேன். எடுத்ததுமே துப்பாக்கியை கைல கொடுத்துட மாட்டோம். துப்பாக்கியோட வேலைப்பாடுகளை முதல்ல சொல்லித் தருவோம். அப்புறம் துப்பாக்கியை தூக்கி பழகச் சொல்லுவோம். இதுக்கு கை, மணிக்கட்டு, தோள்பட்டைக்கு தேவையான உடற்பயிற்சி அவசியம்.

சில சமயம் துப்பாக்கியை பிடிக்கும் போதோ இல்லைன்னா இலக்கை சுடும்போதோ, மணிக்கட்டு அல்லது விரல்கள்ல லேசா விபத்து ஏற்படும். அதனாலதான் தசையையும், எலும்புகளையும் உறுதியாக்க முதல்ல பயிற்சி அளிக்கிறோம். முக்கியமா கான்சென்ட்ரேஷன் அவசியம். அதுக்கு மனதை ஒரு நிலைப்படுத்தணும். இதுக்கு யோகா உதவும். டென்னிஸ் மாதிரியான விளையாட்டுக் கூட நல்ல பலனளிக்கும்.

இந்த துப்பாக்கி பயிற்சினால வேறு சில நன்மைகளும் உண்டு. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்கள் கூர்ந்து கவனிப்பாங்க. கோபம், படபடப்பு குறையும். மன தடுமாற்றம் இருக்காது. எல்லாத்தையுமே பாசிடிவா யோசிப்பாங்க. அவ்வளவு ஏன்... இக்கட்டான சூழல்ல சரியான முடிவை எடுக்கிற தகுதியும் அவங்களுக்கு வந்து சேரும். அதனாலதான் மாணவ பருவத்துலயே துப்பாக்கி சுடும் பயிற்சி அவசியம்னு சொல்றோம்...’’ என்று சொல்லும் சுமீத் சங்கவியிடம் பயிற்சி பெற்றவர்கள் ஈரானில் நடைபெற்ற ஆசியா போட்டியில் பத்து தங்கப் பதக்கம் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடிக்க உதவியுள்ளனர்.

‘‘ஒவ்வொரு வருஷமும் மாநில மற்றும் தேசிய அளவுல போட்டி நடக்கும். இதுல வெற்றி பெற்றால் சர்வதேச அளவுல நடக்கிற போட்டில கலந்துக்கலாம். அதுலயும் பதக்கம் வென்றால்... அடுத்து ஒலிம்பிக்தான். ஆரம்பத்துல பத்தடி தூரத்துல ஒரு பேப்பர் வைப்பாங்க. அதுல பத்து வட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு ஷாட் முடிஞ்ச பிறகும் பேப்பரை மாத்துவாங்க.

இதெல்லாம் மின்னணு இலக்குல கிடையாது. ஏன்னா, கணினியோட எல்லாமே இணைக்கப்பட்டிருக்கும். போட்டியாளர் ஒவ்வொருமுறை சுட்ட பிறகும் அவரோட குறி எங்க பாய்ந்திருக்குன்னு கணினி கணித்து சொல்லிடும். இதனால நேரம் மிச்சமாகும். பயிற்சியாளர்களை கணிப்பதும் ஈஸி...’’ என்ற சுமீத் சங்கவி, வாரநாட்களில் மூன்று நாட்களும், சனி, ஞாயிறு தினங்களிலும் பயிற்சி அளிக்கிறார்.