வருகிறது கட்ட ரேட்டில் ஐபோன்ஸ்!



-த.சக்திவேல்

ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் அசால்ட்டாக நுழைந்து கபளீகரம் செய்கின்ற சந்தையாக மாறிவிட்டது இந்தியா! ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்று ‘நோக்கியா’ இந்தப் புத்தாண்டில் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகிறது. இப்போதே இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவை சுனாமியாக தாக்கப் போகிறது. யெஸ். பெங்களூருவில் ஐபோன்களைத் தயாரிப்பதற்கான ஃபேக்டரியை விரைவில் திறக்கப்போகிறது ஆப்பிள்.

ஐபோன் அந்தஸ்தின் அடையாளம். அதற்கு முக்கிய காரணம் அதன் தாறுமாறான விலைதான். இப்போது ஐபோன்கள் அமெரிக்காவில் டிசைன் செய்யப்பட்டு, சீனாவில் தயாரிக்கப்படுகிறது. ஐபோன்கள் இந்தியாவுக்குள் வரும் போது இம்போர்ட் டியூட்டிஸ், டேக்ஸ், லொட்டு லொடுக்கு என எல்லாம் சேர்ந்து ராக்கெட் வேகத்தில் விலை எகிறிவிடுகிறது. இதை மாற்றி இந்தியாவிலேயே ஐபோன் தயாரானால் விலை சல்லீசாக குறையும். மட்டுமல்ல ஐபாட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கேட்ஜெட்ஸின் ரேட்டும் மிடில் க்ளாஸ் மக்களின் பர்சுக்கு கட்டுப்படும்.

இப்போது ஐபோன் தயாராகி சில நாட்கள் கழித்த பிறகே இந்தியாவில் கிடைக்கிறது. இனி அப்படி இருக்காது. ஐபோன் உருவான அன்றே நமக்கு கிடைத்து விடும். வருமா... வருமா... என மொபைல் ஷாப் வாசலில் தேவுடு காக்கத் தேவையில்லை. ஐபோனின் அடுத்த வெர்ஷனான ‘ஐபோன் 8’ மாடல் இந்தியாவிலேயே தயாராகலாம்.

அதிக எண்ணிக்கையில் நாடு முழுவதும் ஆப்பிள் ஷோரூம்ஸ் திறக்கப்படும். ஸோ, கேரண்டி / வாரண்டியுடன் வாங்கலாம். ஸ்பேர் பார்ட்ஸ் இங்கேயே கிடைக்கும் என்பதால் பழுது பார்ப்பதும் ஈசி. இந்திய நடுத்தர மக்களை குறிவைத்துதான் ஆப்பிள் களம் இறங்குகிறது. ஸோ, ஐபாட், லேப்டாப் ஆகியவையும் ‘கட்ட’ ரேட்டுக்கு விரைவில் கிடைக்கலாம். இவை ‘Made in India’ ஆக இருக்காது. மாறாக, ‘Made for India’ ஆக இருக்கும்!

ஆப்பிளுக்கு போட்டியாக மற்ற நிறுவனங்களும் மலிவான விலையில், அதிக தரத்தில், புதிய போன்களை வெளியிட ஆரம்பிப்பார்கள்.
ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான இடம், மின்சாரம் போன்ற சகல வசதிகளையும் மிகக் குறைந்த விலையிலோ அல்லது கட்டணம் இல்லாமலோ இந்தியா செய்து தரலாம். ‘நீங்கள் சரியாக டேக்ஸ் கட்ட வேண்டும்’ என்று ஆள்காட்டி விரலை உயர்த்தாமல், ‘முடிந்ததை கொடுங்கள்’ என அரசு கேட்கும்.

கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்து குரல் கொடுப்பார்கள். மக்கள் ஐபோனில் ‘2.0’ பார்க்க டிக்கெட் புக் செய்வார்கள். அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க குடிமகன்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க, ‘அமெரிக்க நிறுவனங்கள், பிராண்டுகள் தங்களது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை உள்நாட்டிலேயே அமைக்க வேண்டும்’ என கர்ஜித்திருக்கிறார். எனவே அமெரிக்க அரசுக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் மோதல் ஏற்படலாம். அல்லது ஆப்பிளை கண்டுகொள்ளாமல் டிரம்ப் விடலாம்.

அடித்தட்டு தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். சூப்பர்வைசர் வரை இந்தியாவில் பி.இ., படித்தவர்கள் அமரலாம். அதற்கு மேல் அமெரிக்கர்களே அமர்வார்கள் என்பதால் நுனிநாக்கில் அமெரிக்க ஆங்கிலம் பேச இப்போதே கற்றுக்கொள்ளுங்கள். ‘‘ஆப்பிள் நிறுவனம் தனது புதிய அத்தியாயத்தை இந்தியாவில் ஆரம்பிக்கப்போவது வெறும் வதந்திதான்’’என்றும் சிலர் சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.