கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கூட்டு கிரகங்கள் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 61

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வண்ணக் கலவைகள் போலவே கிரகங்களும் ஒன்றுக்கொன்று  கலந்து வாழ்வை வித்தியாசமாக்குகின்றன. ஒரு கிரகமே வாழ்க்கையைப் புரட்டிப் போடும் வல்லமை கொண்டது எனில், கூட்டுக் கிரகங்களை சொல்ல வேண்டாம். நூலிழையில் அபாரமான வெற்றியைக் கொண்டு வருவதும், மோசமான தோல்வியைப் பரிசாகத் தருவதுமெல்லாம் கூட்டுக் கிரகங்களின் செயல்தான்.

கூட்டு வியாபாரம் போன்றதுதான் ஒரு இடத்தில் பல கிரகங்கள் கூட்டு சேர்வதும். இவை தங்களுக்குள் அனுசரணையாக இருந்தால் வெற்றியைத் தேடித் தருகின்றன. அதேசமயம் ஒன்றுக்கொன்று கிரகங்கள் சண்டையிட்டுக் கொண்டால் வாழ்க்கையை நிர்மூலமாக்கவும் செய்கின்றன. கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள், தம்மைச் சுற்றி ஒரு உலகத்தையே உருவாக்குவார்கள். இவர்களின் லக்னத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். புதனின் முழு பலமும் கன்னி லக்னக்காரர்களிடமிருந்துதான் வெளிப்படுகிறது.

இவர்கள் எவ்வளவு சாதித்தாலும் திருப்திகொள்ள மாட்டார்கள். முடிந்த வரையில் யாரையும் சார்ந்திருக்காமல் வாழப் பார்ப்பார்கள். நேர்வழியில் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள். இசை, எழுத்து, ஆடல், பாடல் என்று ஏதேனும் ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்வார்கள். எது செய்தாலும் அதில் ஒரு தரமும் உயர்வும் இருக்கும். தன்னுடைய கருத்தை பூரணமாக எடுத்துரைப்பார்கள். சில சமயங்களில் அது கோபமாக வெளிப்படும். சின்னச் சின்ன அவமானங்களை பாசிட்டிவ்வாக மாற்றிக் கொள்வார்கள்.

ஏதோ சாதித்து விட்டோம் என்கிற உணர்வு அடிக்கடி வரும். அதை மாற்றிக் கொண்டால் நல்லது. இவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் முக்கிய கிரகங்களாக புதன், சுக்கிரன், சனி போன்றோர் வருகின்றனர். இந்த மூன்று கிரகங்களும் இவர்களின் சொந்த ஜாதகத்தில் எங்கிருந்தாலும் சரிதான்... நன்மையையே செய்வார்கள். இவர்கள் மூவரையும் ‘வாழ வைக்கும் தெய்வங்கள்’ என்றுகூட கூறலாம். இவர்களில் இரண்டு மற்றும் ஒன்பதாம் இடத்திற்குரியவராக சுக்கிரன் வருகிறார்.

இரண்டாம் இடம் என்பது தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தைக் குறிக்கும். இவர்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கெடாமலோ அல்லது பலவீனமாக இல்லாமலோ இருந்தாலே போதும். எல்லா வளங்களையும் கைமேல் கனியாகக் கொண்டு வந்து தருவார். ஏனெனில், இவர்தான் சகல யோக பலன்களையும் அளிக்கப் போகிறார். அதிலும் சுக்கிரனோடு, புதனும் சேர்ந்தால் மாபெரும் ராஜயோகம் உண்டு. இதைத்தான், ‘மாலுடன் வள்ளி சேரின் மதிமிகப் பெருகுந்தானே’ என பழமொழியாகச் சொல்கிறார்கள்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கன்னி லக்னத்தில் பிறந்தவர்தான். இரண்டாம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் விசேஷமான பேச்சுத் திறனை அளித்து பெரும் புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றார். அதேசமயம் லக்னத்திலேயே சனி அமர்ந்து, பெண் விஷயத்தில் அவமானப்படவும் வைத்தார். இந்த லக்னத்திற்கு மூன்றில் கேது இருப்பதால் தைரியம் வரமாக அமைந்தது. எட்டில் சந்திரன் குருவுக்கு ஏழில் அமர்ந்திருப்பதால் கஜகேசரி யோகமாக வாழ்க்கை அமைந்து விட்டது. நாடாளும் யோகமும் உண்டானது.

ஒன்பதில் ராகு அமர்ந்து பல்வேறு யோகப் பலன்களை அளித்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதி சனி பதினொன்றாம் இடத்தில் புதனோடு சேர்ந்திருக்கிறார். கூடவே பாக்யாதிபதி புதன் 11ல் அமர்ந்து இருக்கிறார். இதனால் உலகமே அறிந்த தலைவனாக வரும் யோகம் அமைந்தது. 12ல் சூரியன் சிம்மமான சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதாலும், சூரியனுக்கு முன்னும் பின்னுமாக கிரகங்கள் அமைந்ததாலும் பெருந் தலைவனாக முடிந்தது. இந்த அமைப்பே விபரீத ராஜயோகத்தை அளித்தது.

என்.டி.ராமாராவ் அவர்களும் கன்னி லக்னமே. திரிகோண, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய சனி லக்னத்திலேயே, அதாவது லக்ன கேந்திரத்திலேயே அமர்ந்திருக்கிறார். இதுவே நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், கௌரவத்தையும் கொடுத்தது. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்குரியவர் பலமாக இருந்ததால் தெய்வத்திற்கு இணையாக கொண்டாடப்பட்டார்.

குரு, சந்திரன் சேர்க்கையால் இவருடைய பேச்சு பலருக்கு வாழ்க்கையைக் கொடுத்தது. சுக்கிரன் எட்டில் இருந்ததால், திரைத்துறையில் பிரமாண்ட அளவில் சாதிக்க முடிந்தது. சூரியனும் புதனும் சேர்ந்திருப்பதால் சாணக்கியத்தனம் இருந்தது. செவ்வாய் பத்தாம் இடத்தில் தசம கேந்திரம் பெற்றதால் நாடாளும் யோகத்தை அடைந்தார். பன்னிரெண்டாம் இடத்தில் ராகு அமர்ந்து யோகத்தை அதிகமாக்கினார். கன்னி லக்னத்தில் திரைத்துறை தாண்டி உலக அரசியலையே கலக்கியவர்களும் அடங்குவர்.

இராக் அதிபராக இருந்த சதாம் உசேன் இந்த லக்னத்தில் பிறந்தவரே. சனியும், சுக்கிரனும் ஏழாம் இடத்தில் அமர்ந்து சுக்கிரன் உச்சம் பெற்றதால் இவர் பெரும் போக வாழ்க்கையை வாழ்ந்தார். தன, பாக்கியாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி ஏழில் அமர்ந்திருப்பதால் பெரும் செல்வச் செழிப்பும் அப்படியே தலைகீழாகவும் மாறியது. எட்டில் சூரியன் இருப்பதென்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுத்தது. சூரியனுக்கு முன்னும் பின்னும் கிரகங்கள் அமைந்ததால் ஒரு இனத்தையே இவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.

குரு நீசமானதாலும், குருவும் சனியும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் உலகளவில் தனக்கென்று ஒரு சரித்திரத்தை உருவாக்க முடிந்தது. கேதுவும் புதனும் ஒன்பதில் அமர்ந்திருப்பதால் தன்னுடைய மதம் சார்ந்த விஷயங்களை விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்தார். பால் தாக்கரேவும் சற்றே தீவிரமான விஷயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், எட்டில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கிறது. மூன்றில் சனி அமர்ந்ததால் தனக்கென்று நட்பு வட்டமும், கூட்டத்தையும் வைத்திருந்தார்.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனும், புதனும், சுக்கிரனும் இருப்பதால் மதம், இனம், கலாசாரம் என்று குரல் கொடுத்து தீவிரமாகக் காப்பாற்ற முனைந்தார். ஆறில் குரு இருப்பதால் மதம் சார்ந்த எதிர்ப்புக் குரல் எப்போதும் இருந்தபடி இருந்தது. இந்த ஜாதகத்திலும் சூரியனுக்கு முன்னும் பின்னுமாக கிரகங்கள் இருப்பதால் நாடாளுபவர்கள், பெருந் தலைவர்களோடு நட்போடு இருந்தார். அதேசமயம் கலகக்காரராகவும், கொள்கைகளில் தீவிரப் பிடிப்புள்ளவராகவும் இருந்தார். கேது நான்காம் இடத்தில் இருந்ததால் எப்போதும் தெய்வ பக்தியும், தத்துவங்களில் ஈடுபாட்டோடும் இருக்க முடிந்தது.

இவ்வாறு கூட்டு கிரகங்கள் ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிப் போடும் வல்லமை கொண்டவை. சிலசமயம் இந்த மாற்றங்கள் நேர்மறையாகவும், சில நேரங்களில் எதிர்மறையாகவும் இருக்கக் கூடியவை. பாதிப்புகள் நேரும்போது, கூட்டு கிரகங்களின் எதிர்மறைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, முக்கியமாக கன்னி லக்னக்காரர்கள் தப்பித்துக் கொள்ள செல்ல வேண்டிய ஆலயமே ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி எனும் திருத்தலமாகும். இது நூற்றியெட்டு திவ்ய தேசத்தில் ஒன்றான தலம்.

இங்கு ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் பொருட்டு தர்ப்பையில் படுத்துக் கொண்டிருந்துவிட்டு பின்னர் சென்றாராம். எனவே, தர்ப்ப சயன ராமர் என்றழைக்கப்படுகிறார். மேலும், இங்குள்ள பெருமாளுக்கு ஆதி ஜெகனாத பெருமாள் என்று பெயர். எந்த காரியம் செய்தாலும் இங்குள்ள ராமரை நினைத்தோ அல்லது தரிசித்தோ தொடங்குங்கள். மாபெரும் போரையே இங்கு சற்று நேரம் இருந்துவிட்டு பின்னர் ராமர் நிகழ்த்தியுள்ளார். பெரும் காரியங்களை நீங்கள் நிகழ்த்த வேண்டுமெனில் இங்குள்ள தர்ப்ப சயன ராமரை தரிசியுங்கள்.

(கிரகங்கள் சுழலும்..)

ஓவியம்: மணியம் செல்வன்