ஒரு கேள்வி ஒரு பதில்



பிரபலங்களிடம் எக்கச்சக்க கேள்விகள் கேட்டும் கிடைக்காத சுவாரஸ்யங்கள் சில சமயம் ஒரே ஒரு கேள்வியில் தானாக வந்து விழும். அப்படி ரசிக்க வைத்த சூப்பர் ஓவர் பதில்கள் இங்கே...

ஐ லவ் புக்ஸ்! ? - பூனம் பஜ்வா

‘‘புத்தகங்களை தேடித் தேடி வாங்கிப் படிப்பீங்களாமே?’’
‘‘யாயா! நான்-ஃபிக்‌ஷன், ஃபிலாசபி புத்தகங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மும்பையில் இருக்கற என் வீட்ல ஆயிரம் புத்தகங்களுக்கு மேல வச்சிருக்கேன். ஷூட்டிங்கிற்காக மும்பையில் இருந்து சென்னை, ஐதராபாத்னு பறக்கும்போது ஏர்போர்ட்ல ரொம்ப நேரம் வெயிட் பண்ற சூழல் இருக்கும். எந்த ஏர்போர்ட்னாலும் அங்கே இருக்கற பொதுவான ஒரு விஷயம், புக் ஸ்டால். சும்மா வெயிட் பண்ற டைம்ல புக்ஸ் படிக்கலாமேன்னு படிக்க ஆரம்பிச்சேன். அங்கே இருந்துதான் புக்ஸை நேசிக்க ஆரம்பிச்சேன்.

ஒரு படத்துக்காக ஐந்தாறு ஷெட்யூல் ஷூட்டிங் வரவேண்டியிருந்தா, ஒவ்வொரு ட்ரிப்பிலும் குறைஞ்சது ஆறேழு புத்தகங்கள் வாங்கிடுவேன். வீட்ல லைப்ரரி ஃபுல் ஆகிடுச்சு. ‘இனிமே புக் வாங்கினா வைக்கிறதுக்கு வீட்ல இடமில்லை’னு அம்மா சொல்லியிருக்காங்க. அதனால இப்போ கிண்டில் வாங்கியிருக்கேன். அதிலும் நானூறு புக்ஸ் ஆகிடுச்சு. கதைகள் விரும்பிப் படிக்கிறதை விட செல்ஃப் மோட்டிவேஷன் புக்ஸ்தான் ஆல்வேஸ் மை ஃபேவரிட். புத்தகங்கள் இருக்கறதால லைஃப் இன்ட்ரஸ்ட்டிங்கா போகுது பாஸ்!’’

சாப்பாடுன்னாலே சந்தோஷம்தான்! - விக்ரம் பிரபு

‘‘தாத்தா, அப்பா படப்பிடிப்புக்கு  உங்க வீட்ல இருந்து தினமும் பத்து பேருக்காவது விதவிதமான வெரைட்டியில மதிய சாப்பாடு போகும். உங்க வீட்டு சாப்பாடுன்னாலே எல்லாருக்கும் அவ்வளவு பிடிக்கும். நீங்க எப்படி இன்னமும் ஸ்லிம்மாவே இருக்கீங்க?’’
‘‘சாப்பிடுறதுல வர்ற சந்தோஷம் வேற எதிலும் வராதுங்க. ருசியா இருந்தாலும், ஆரோக்கியமான உணவுகளா இருக்கணும்... அதான் என்னோட ஃபுட் பாலிஸி. நம்மளோட தென்னிந்திய உணவுகள் எல்லாத்திலும் கொழுப்பு அதிகம்.

ஷூட்டிங் போயிட்டாலே டெக்னீஷியன்ஸ், டைரக்டர்னு எல்லாருமே ‘எப்போ சார் வீட்ல இருந்து சாப்பாடு வரும்?’னு விரும்பி கேட்பாங்க.  கொஞ்சமும் யோசிக்காம நானும் எல்லாருக்குமே லன்ச் எடுத்துட்டுப் போயிடுவேன். என்னால முடிஞ்ச சின்ன சந்தோஷம் அது. நான் ஸ்கிரீன்ல ஸ்லிம்மா தெரியணுமே என்பதற்காக சாப்பாட்டுல நிறைய தியாகம் பண்றதை நினைக்கும்போது சின்ன வருத்தமும் இருக்கு. எங்க தாத்தா காலத்தில் இருந்தே விருந்தோம்பல் பண்பு ஆரம்பிச்சது. அதை நாங்களும் தொடர்றது சந்தோஷமா இருக்கு.’’

கிசுகிசு வரலீயே? - நிக்கி கல்ரானி

‘‘நிறைய படங்கள் பண்ணிக்கிட்டிருக்கீங்க. ஆனா, உங்களப்பத்தி கிசுகிசு வர்றதில்லையே?’’
‘‘இதுல சீக்ரெட் எதுவும் கிடையாது. வீடு விட்டா ஷூட்டிங்... ஷூட்டிங் முடிஞ்சா வீடு. இதுதான் என் ரெகுலர் பழக்கம். தவிரவும், என்னைப் பற்றி கிசுகிசு ஏதும் வந்திடக் கூடாதுனு கேர்ஃபுல்லா எதுவும் ப்ளான் பண்ணி பண்றதில்லை. ஷூட்டிங் இல்லேனா வீட்டுல இருக்க பிடிக்கும். நான், அக்கா, என்னோட செல்ல நாய்க்குட்டின்னு என் பொழுது ஹேப்பியா போகுது. கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ் காலேஜ்னு படிச்சதால பசங்களோட பழகுற வாய்ப்பும் கிடைக்கல. சினிமாலேயும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் கிடையாது. அதனால பார்ட்டி, ஃபங்ஷன்னு சுத்துறதில்ல. ஸோ, எந்த கிசுகிசுவும் வர்றதில்ல அண்ணா!’’

வானத்தில் பறந்தேன்! - சுந்தர்.சி

‘‘உங்களோட முதல் பட சான்ஸ் எப்படி கிடைச்சது?’’
‘‘மணிவண்ணன் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்த பின்னாடி, நான் இயக்குநராகலாம்னு தனியா முயற்சி பண்ணிக்கிட்டிருந்தேன். குடியாத்தத்துல தியேட்டர் வச்சிருந்த விஷ்ணு என்பவர் எங்க குடும்பத்து மேல அக்கறை உள்ளவர். கோயமுத்தூர்ல அவரை யதேச்சையா சந்திச்சேன். டைரக்‌ஷனுக்கு முயற்சி பண்ணிட்டிருக்கேன்னு சொன்னேன். ‘சரி, நீ மெட்ராஸ் வா... நாம பேசலாம்’ன்னார். எனக்குப் புரியல. ஆனாலும் அவரைப் போய்ப் பார்த்தேன். ‘நான் படம் பண்ணலாம்னு இருக்கேன். நீயே டைரக்ட் பண்ணு’ன்னார்.

‘கடலோரக் கவிதைகள்’ல வர்ற ‘பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களை படிக்காமலே பாஸ்.. பாஸ்..’னு பாட்டு மைண்ட் வாய்ஸ்ல ஓடிக்கிட்டிருக்க... வானத்துல பறக்குற ஃபீலிங். அவர்கிட்ட ஒரு கதை சொன்னேன். ‘இது பிடிக்கலப்பா... முதல்ல ஒரு கதை சொன்னீயே, அதைச் சொல்லு’ன்னார். கோயமுத்தூர் போகும்போது  எப்போதோ அவர்கிட்ட  ஒரு கதையைச்  சொன்னேன்.

அதை இன்னமும் நினைவில் வச்சு, அதையே படம் பண்ண விரும்பினார். ‘அந்தக் கதை பழசாகிடுச்சு. அதே ஸ்டைலில் நிறைய படங்கள் வேற வந்திடுச்சே’னு  சொன்னேன். ‘எனக்கு அதுதான் பிடிச்சிருக்கு’ன்னு சொல்லிட்டார். அந்தப் படம்தான் ஜெயராம் நடிச்ச ‘முறைமாமன்’. இதுல இன்னொரு சுவாரஸ்யம், அவர் வேண்டாம்னு சொன்ன கதையைத்தான் மறுபடியும் அவருக்கே பண்ணினேன். அந்தப் படம்தான் ‘மேட்டுக்குடி’. ’’

வில்லன் டு காமெடியன் சீக்ரெட்! - இயக்குநர் ராஜேஷ் எம்.

‘‘சீரியஸ் வில்லனா பண்ணிட்டிருந்த ராஜேந்திரனை காமெடியனா ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல எப்படி கொண்டு வந்தீங்க..?’’
‘‘ஆரம்பத்துல ஒத்துக்கிட்டாலும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ல அவர் அந்தக் கேரக்டரை பண்ணும்போது, கொஞ்சமும் நம்பிக்கை இல்லாமதான் நடிச்சார். அவர் சீரியஸா பேசினாலே பயங்கர காமெடியா வரும்னு எனக்குத் தெரிஞ்சதால தைரியமா நடிக்க வச்சேன். அது நல்லாவே வொர்க் அவுட் ஆகி, இன்னிக்கு பிஸி காமெடியனா கலக்கிட்டிருக்கார்.

அன்னிக்கு பழகினது மாதிரியே இன்னிக்கும் பழகுறார். அவர் ஃபைட்டரா இருந்து நடிகர் ஆனவர். இன்னமும் ஷாட் பிரேக்ல ஃபைட்டர்கள் கூட தரையில உட்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டிருப்பார். ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திலும் இன்ட்ரஸ்டிங்கான ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். ‘பாஸ்’ பண்ணும்போது கொஞ்சம் பயந்து பயந்து பேசுவார். இப்போ ரொம்ப சரளமா டயலாக் பேசுறார். டெடிகேஷனா உழைக்கிறார் மனிதர்!’’

பிடிச்ச கேரக்டர்! - அனுஷ்கா

‘‘ ‘அருந்ததி’, ‘ருத்ரமாதேவி’, ‘தேவசேனா’ இந்த மூணு பேரில் எந்த அனுஷ்காவை உங்களுக்குப் பிடிக்கும்?’’
‘‘ ‘அருந்ததி’யை ரொம்பப் பிடிக்கும். ஒரு புதுமுகமான என்னை நம்பி அவ்வளவு பெரிய கேரக்டரை படத்தோட தயாரிப்பாளர் சாம்பிரஷாத் ரெட்டி கொடுத்தார். கிளாமரஸ் ரோல்கள் பண்ணிட்டிருந்த என்னால அருந்ததி மாதிரி கேரக்டர்களும் பண்ண முடியும்னு அவர்தான் நிரூபிச்சார். அவர் அந்தப் படத்தை மட்டும் கொடுக்கலைனா எனக்கு ‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ கிடைச்சிருக்காது. அதே மாதிரி ‘வானம்’ல நடிக்கறதுக்கு முன்னாடி விலைமாது கேரக்டர் பண்றது ரிஸ்க்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா, அந்தப் படம் வந்த பிறகு அவங்களே என்னைப் பாராட்டினாங்க. நல்ல கேரியர், நல்ல படங்கள் எனக்கு அமையறதுக்கு கடவுளோட ஆசீர்வாதம்தான் காரணம்.’’

- மை.பாரதிராஜா