புண்படுத்தாம சிரிக்க வைக்கிறது சிரமம்!



‘சூரியன் எஃப்.எம்’ பிளேடு சங்கர்

‘எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப் பண்ண மாட்டோமா’ என்று பரபரத்து கிளம்பிய ஆர்.ஜேக்களில் இந்த முறையும் இந்திய அளவில் சிறந்த ஆர்.ஜே விருது வாங்கியிருக்கிறார் பிளேடு சங்கர். ‘சூரியன் எஃப்.எம்’மின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான இவரின் ‘பிளேடு நம்பர் ஒன்’தான் சிறந்த காலை நிகழ்ச்சி!



இந்த கலாட்டா தோழனுக்கு மறுபடியும் கிரீடம் சூட்டியிருக்கிறது ‘இந்திய ரேடியோ ஃபோரம்’ அமைப்பு. திகட்டத் திகட்ட பரிசுகளை 2006 தொடங்கி அள்ளிக்கொண்டே இருக்கிறார் பிளேடு சங்கர். இது ஒன்பதாவது தடவை என்றாலும் இந்த ஆல்ரவுண்ட் அட்டகாச நாயகனுக்கு சலிக்கவில்லை.

ஊரை விட்டு கனவோடு வண்டியேறும் அனைத்து ஆர்.ஜேக்களுக்கும் அண்ணன்தான் கனவு நாயகன். குறும்புப்பேச்சு, கரும்புக்குரல், அள்ளு தெறிக்கும் குசும்பு என எப்போதும் தூள் கிளப்பும் அட்ராசிட்டி சங்கரிடம் பேசினால் வருகிறது பேச்சு பெருவெள்ளம்! ‘‘இந்தத் தடவையும் உனக்குத்தான் விருதுனு சொன்னாங்க. வானத்துல 30 ஆயிரம் கோடி நட்சத்திரங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள்னு சொன்னா கேள்வி கேட்காம நம்புவோம். கதவுல புதுசா பெயின்ட் அடிச்சிருக்குனு சொன்னா நம்ப மாட்டோம். தொட்டுப் பார்ப்போம். அப்படித்தான் இந்தத் தடவை சொன்னப்போ என்னால நம்ப முடியலை. சூரியன் எஃப்.எம்-மின் சந்தோஷ கணங்களில் அதுவும் ஒண்ணா இருந்தது.

கெமிக்கல் எஞ்சினியரிங் படிச்சிட்டு ரேடியோவில் பேசப் போறேன்னு சொன்னா வீட்டுல ஆதரிப்பாங்களா? எஸ், அதுதான் நடந்தது. ‘எப்படிப்பட்ட படிப்புடா’னு சொல்லிச் சொல்லி வீட்டுல குத்திக்காட்டினாங்க. அப்போ என் நண்பன் சாக்கா ஜேக்கப் சன் நியூஸில் இருந்தார். ‘இங்கே சூரியன் எஃப்.எம் ஆரம்பிக்கிறாங்க. தமிழ்ல நல்லா பேசுற... நக்கல், கேலி, நையாண்டி, கிண்டல், கலாய் (எல்லாமே ஒண்ணுதானே ப்ரோ!) நல்லா வருது உனக்கு. வந்து பாரேன்’னு சொன்னார்.

சட்னு வந்து பட்னு சேர்ந்துட்டேன். ஏற்கனவே காலேஜ்ல மிமிக்ரியில் அட்டகாசம் பண்ணின அனுபவம் கைவசம் இருந்தது. ெராம்ப பேர் ‘ஒரு ஏ.சி அறையில் உட்கார்ந்துக்கிட்டு, பேசி சமாளிக்கிற வேலைதானே’னு நினைப்பாங்க... அப்படியெல்லாம் இல்லை மக்கா! இதுல நிறைய வேலைகள். நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களைப் புதுப்பிச்சுக்கிட்டே இருக்கணும். எதையும் சாமர்த்தியமா, புண்படுத்தாம சொல்லணும். மொக்கையா பேசுறவங்ககிட்ட அதையும் மொக்கை பண்ணி பேசணும். ஒரு விஷயம் பாஸ்... ரசிச்சாதான் ஹிட் ஆவோம்.

அப்படிப் பார்த்தால் ‘சின்னதம்பி பெரியதம்பி’, ‘பிளேடு நம்பர் 1’ நிகழ்ச்சிகள் மக்கள் மனதை அள்ளிக்கிட்டு வந்ததெல்லாம் வரலாறு! சின்னப் புள்ளையில என்னை ‘வாய் இல்லைன்னா நாய் இழுத்துட்டுப் போயிடும்’பாங்க. எதைப் பேசினாலும் ரசிச்சுப் பேசணும். உள்வாங்கி, பாதிச்சிடாம, புன்னகையை வரவழைக்கிறது சாதாரண வேலையில்லைனு இங்கே உட்கார்ந்து பார்த்த பத்து நிமிஷத்துல பட்னு புரியும். ‘கிசுகிசு கீதா’னு ரேடியோவில் ஆர்.ஜேவா உண்டு இல்லைனு பண்ணின ஆர்.ஜே சங்கீதாதான் என்னோட நிஜ ஜோடி!

இப்ப ஸ்கூல் டீச்சரா மாறி நாளைய சமுதாயத்தை வளர்த்துக்கிட்டு இருக்காங்க. ‘சொன்னா புரியாது’, ‘சகுனி’, ‘உலா’னு படங்கள்ல நடிச்சேன். ‘நச்’னு திரையில் நல்ல கேரக்டர் பண்ணி மனசைப் பிடிக்கணும்னு ஆசை. யூத் பல்ஸ் பிடிச்சு தமிழ் சினிமாவைச் சுத்தி வரணும்னு தோணிக்கிட்டே இருக்கு. ‘உலா’ படத்திற்காக கிரிக்கெட்டர் பிராவோவோடு ஒரு டான்ஸ் போட்டேன்.

எனக்கு டான்ஸ் மட்டும் சுட்டுப் போட்டாலும் வரலை. ஆனா, ஆடி முடிப்பதற்குள் கண்ணீர் வந்துடுச்சு. ஆளாளுக்கு IPL மேட்ச்சில் நம் கலை நிகழ்ச்சிக்கு இடம் கிடைக்குமானு பல்டி அடிக்க, நானும் பிராவோவும் ஆடுகிற டான்ஸை அங்கே ஸ்டேடியத்தில் போட்டு பட்டையக் கிளப்புனாங்க. அப்ப வந்துச்சுங்க ஒரு ஆனந்தக் கண்ணீர்!’’

இனிக்க இனிக்கப் பேசி கலாய்த்து, இளமை, புதுமையில் கலகலத்தாலும் பிளேடு சங்கருக்கு சினிமாவும் ஒரு கனவு. பிளேடு சங்கர் ஆன்-ஏர் என்றால் ஆன்லைன் ரசிகர்கள் அட்டெண்டன்ஸ் ேபாடுவது மாதிரி... சினிமாவிலும் ட்ரெண்டிங்கில் வந்திடுவீங்க பிரதர்!

- நா.கதிர்வேலன்