ஆட்டிஸ்ததோடு ஒரு சாதனை!
புதிர் ராணி ஐஸ்வர்யா
ஐஸ்வர்யாவுக்கு நம்மைப் போல வார்த்தைகளைக் கோர்த்துப் பேச வராது... நாலு பேரோடு கலகலப்பாகப் பழகவும் தெரியாது... நமது கேள்விகளுக்கு பதில் சொல்லவும் முடியாது... அவரது உலகம் படபடப்பும் பதற்றமும் நிறைந்ததோர் தனித்த உலகம். காரணம், ஆட்டிஸம். ஆனால், நாம் மண்டையைக் குழப்பி, மூளையைக் கசக்கி விளையாடும் ‘ஜிக்ஷா பஸில்’ எனும் புதிர் அட்டை விளையாட்டில் ஐஸ்வர்யா கில்லி! ஆட்டிஸம் என்றால் பேசுவதே, படிப்பதே சிரமம் என்பார்கள்... ஆனால், ஐஸ்வர்யா ‘அவளுக்கென்று ஒரு மனம்’ என்ற பெயரில் ஒரு புத்தகமே வெளியிட்டு ஆச்சரியப்படுத்துகிறார்!
‘‘எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள். மூத்தவ பேரு அபிராமி, ரெண்டாவது பிறந்ததுதான் ஐஸ்வர்யா. வீட்ல செல்லமா ஐஸி. ரெண்டரை வயசு வரைக்கும் நல்லா பேசி ஓடி ஆடிக்கிட்டிருந்த பொண்ணு. திடீர்னு வந்த ஹை ஃபீவர், ஃபிட்ஸ்... அதுக்கு அப்புறம்தான் இப்படி ஆகிட்டா!’’ - வார்த்தைகளில் இருக்கும் கவலையைக் கொஞ்சமும் முகத்தில் காட்டாமல் பேசுகிறார் ஐஸ்வர்யாவின் அம்மா கிரிஜா. மகளின் குறைபாட்டுடன் போராடி வென்றெடுக்கவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் கிரிஜாவும் அவரது கணவர் ஸ்ரீராமும்!
‘‘எவ்வளவோ டாக்டர்கள் பார்த்தாச்சு. மருந்து, மாத்திரைகள் கொடுத்தாச்சு. ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்தான் இந்த பிரச்னைக்குப் பேரு ஆட்டிஸம்னு சொன்னார். 32 வருஷத்துக்கு முன்னாடி ஆட்டிஸம்னா என்னனு யாருக்குமே தெரியாது. எங்களுக்கும் புரியல. ‘மத்த குழந்தைங்க மாதிரி அடம் பிடிக்காம, சேட்டை பண்ணாம அமைதியா இருக்கறது நல்லதுதானே’னு விட்டுட்டோம். ஆனா ஐஸி வளர வளர பாதிப்புகள் அதிகமாச்சு.
ஆட்டிஸம் பற்றி மருத்துவ உலகம் கண்டுபிடிச்ச உண்மைகளும் அப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளி வர ஆரம்பிச்சுது. நானே ஆட்டிஸம் பத்தி தெரிஞ்சுக்க ஒரு டிப்ளமா கோர்ஸ் படிச்சேன். இவ படிச்ச ஸ்பெஷல் ஸ்கூல்ல டீச்சராவும் வேலைக்கு சேர்ந்தேன்!’’ என்கிற கிரிஜாவைத் தொடர்கிறார் அப்பா ராம்... ‘‘இப்படிப்பட்ட குழந்தைகளை நாம நினைக்கிற துறையில எல்லாம் கொண்டு வந்துட முடியாது. அவங்களுக்கு எதில் விருப்பம் இருக்குன்னு கண்டு பிடிக்கணும்.
பத்து வயசா இருக்கும்போது ஐஸியோட தனித்துவத்தைக் கண்டுபிடிச்சோம். ஒரு புதிர் அட்டையின் துண்டுகள் கீழே சிதறியிருந்ததைப் பார்த்துட்டு ஐஸி அதை தானா எடுத்து சேர்த்தா. சிதறிக் கிடக்குற பல அட்டைத் துண்டுகளை சரியான இடத்துல வச்சு சேர்த்தா, அதில் வரையப்பட்டிருக்கிற முழுமையான உருவம் வரும். இதுதான் புதிர் அட்டை. நமக்கே அதைச் சேர்க்க கொஞ்ச நேரம் ஆகும். ஆனா, ஐஸி சட்டுனு சேர்த்துட்டா.
50 துண்டுகள், 100 துண்டுகள்னு சின்ன அளவுல இருந்த புதிர்கள் சுமார் ஆயிரம் துண்டுகளாச்சு. இப்ப இதுவே அவளோட தனித்துவமாகிப் போச்சு. பாதிக்கப்பட்ட பொண்ணா இப்படினு எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க. புதிர் ராணினு கூட சிலர் கூப்பிடுறாங்க!’’ என்கிறார் ஸ்ரீராம் பெருமிதமாக. ஐஸ்வர்யாவின் முன்னேற்றம் இது மட்டுமல்ல... சில வீட்டு வேலைகளையும் தானே செய்துகொள்ளும் அளவுக்கு அவரைத் தயார் செய்திருக்கிறார் அம்மா கிரிஜா.
‘‘காய் நறுக்குவா, வாஷிங் மெஷின்ல துணிகளைப் போட்டு துவைச்சிடுவா, வீட்டை சுத்தமா வச்சிக்குவா. அவளைப் பொறுத்தவரை எந்த விஷயத்தையும் செய்ய சிக்கலான நடைமுறைகள் இருக்கக் கூடாது. இந்த பட்டனைத் தட்டணும், இந்த நாபைத் திருகணும்னு சிம்பிளா இருந்தா எந்த வேலையும் செஞ்சுடுவா. ஆட்டிஸம் பிரச்னை உள்ள குழந்தைகளை ஒரு விஷயத்துக்கு பழக்கிட்டா போதும். நம்மளவிட நேர்த்தியா, தொடர்ச்சியா, அதைச் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. ஐஸி எங்ககிட்ட பேசுறதையும், கேள்விகள் கேட்குறதையும், சுயமா யோசிக்கறதையும், சந்தோஷப்படுற தருணங்களையும் ஒரு டைரியில் எழுதச் சொல்லி அவங்க அப்பா சொல்லியிருக்கார்.
இப்ப வரை அதைத் தொடர்ந்து செய்யிறா. அந்த டைரிக் குறிப்புகளைத்தான் புத்தகமா கொண்டு வந்தோம். ஆட்டிஸம் பாதிப்பு உள்ளவங்களுக்கு தொடர்புகொள்வதில் சிக்கல் இருக்கும்னு சொல்றதை அந்தப் புத்தகம் மாற்றிக் காட்டிச்சு. எனக்குத் தெரிஞ்ச வரை ஒரு ஆட்டிஸம் சைல்டு சொந்தமா புத்தகம் எழுதியிருக்கறது இதுதான் முதல் முறை. பொதுவா இப்படிப்பட்ட சிறப்புக் குழந்தைகளை பெற்றோர் ஒரு கட்டத்துக்கு மேல கை விட்டுடுவாங்க.
இது பெரிய தப்பு. இதுக்கு மருந்தோ சிகிச்சையோ இல்லைங்கறது உண்மைதான். ஆனாலும் அவங்களோட அன்றாட வாழ்க்கையை அவங்களே பார்த்துக்குற அளவுக்கு பயிற்சி கொடுத்து கொண்டு வந்துட்டோம்னா நமக்குப் பிறகான காலங்கள்ல அவங்க அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இதுதான் நாங்க ஐஸி மூலமா இந்த சொஸைட்டிக்கு சொல்ல வர்ற மெசேஜ்!’’ என்றபோது அந்த அம்மாவின் விழியோரம் ஒரு துளி நீர்.
ஒரு ஆட்டிஸம் சைல்டு சொந்தமா புத்தகம் எழுதியிருக்கறது இதுதான் முதல் முறை!
- டி.ரஞ்சித் படங்கள்: ஆர்.சி.எஸ்
|