சிம்பிள்



-சி.ஸ்ரீரங்கம்

‘‘நளினி! மளமளன்னு வேலைகளைப் பார்... அவங்க வர்ற நேரமாச்சு!’’ - மகளைத் துரிதப்படுத்தினாள் மீனாட்சி. ‘‘போம்மா!  இது ஏழாவது தடவை. மாங்கு மாங்குனு நீ ஸ்வீட், காரம் செய்யுறதும்... நான்  பொம்மை மாதிரி விதவிதமா அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து எல்லாத்தையும் தந்துட்டு அவஸ்தையோட நிக்கறதும்... வர்றவன் பிடிக்கலைனு சொல்லிட்டுப் போறதும்... போதும்மா! அலுத்துப் போச்சு’’ - அழுதாள் நளினி.



மறு பேச்சு பேச முடியவில்லை மீனாட்சியால். அவள் சொல்வதும் சரிதானே. நிச்சயம் இல்லாத சடங்கு இது. இதற்கு ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும்? பெண் மனதில் ஏன் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும்? உடனே ஓட்டலில் டிபன் வாங்கி வரச் சொன்னாள் மீனாட்சி. ‘‘அலங்காரமும் அதிகம் வேண்டாம்மா... உனக்குப் பிடிச்ச டிரஸ்ஸை  போட்டுக்க!’’ என்றாள் மகளிடம்.

மாப்பிள்ளை வீட்டார் வந்து பலகாரம் சாப்பிட்டபடி நளினியைப் பார்த்தனர். கிளம்பும்போது, ‘‘உங்க யதார்த்தமான உபசரிப்பு, பெண்ணின் ஆடம்பரம் இல்லாத அலங்காரம் எல்லாமே எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்படித்தான் இயல்பா இருக்கணும். வீட்டுக்குப் போய் கல்யாணத் தேதியை குறித்து தரகரிடம் சொல்லி அனுப்புறோம்!’’ என்று விடை பெற்றுச் சென்றார்கள். மீனாட்சிக்கும் நளினிக்கும் மூர்ச்சை வராத குறைதான்.