கடக லக்னத்துக்கு சந்திரனும் ராகுவும் தரும் யோகங்கள்
40 கிரகங்கள் தரும் யோகங்கள்
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன் ஓவியம்: மணியம் செல்வன்
ராகு என்பது நிழல் கிரகமாகும். தனக்கே தனக்கானது என எந்த வீடும் அதற்குச் சொந்தமில்லை. ஆனால் லக்னாதிபதி சந்திரனோடு சேரும்போது அது மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதை ‘கிரகண தோஷம்’ என்று ஜோதிட நூல்கள் விவரிக்கின்றன. பல முரண்பாடுகளை ஒன்றிணைக்கும் தன்மையைப் பெற்ற சேர்க்கை இது. ராகு பொதுவாகவே எந்த கிரகத்தோடு சேருகிறதோ, அதனுடைய தன்மையைக் கிரகித்து பலன்களைக் கொடுக்கும். நட்பாக இருந்தால் நேர்மறைப் பலன்களையும், பகையாக இருந்தால் எதிர்மறைப் பலன்களையும் அளிக்கும்.
கலைக் கிரகமான சுக்கிரனோடு ராகு சேரும்போது சமூகத்தையே புரட்டிப் போடும் படைப்புகளை வெளிக் கொண்டு வரும். நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை சுமாராகப் படித்து விட்டு வரும் ஒருவரை, பத்தாம் வகுப்பில் மாநில அளவில் மதிப்பெண்களை வாங்க வைக்க ராகுவால் முடியும். மிதமிஞ்சிய தன்னம்பிக்கையை ராகு தருவார்.
இந்த சேர்க்கை அமைந்தவர்களை, இதுதான் செய்ய வேண்டுமென்று சொன்னால் அதைச் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ, அப்போதுதான் செய்வார்கள். எனவே, இவர்களைக் கொஞ்சம் அவர்கள் போக்கில் சென்றுதான் பிடிக்க வேண்டும். இவர்களை ‘ரெட்டை நாக்கு’ என்று சொல்பவர்களும் உண்டு. கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனும் ராகுவும் எந்தெந்த இடங்களில் இணைந்திருந்தால் என்னென்ன மாதிரியான யோகங்களைக் கொடுப்பார்கள் என்பதை இனி வரிசையாகப் பார்க்கலாம்...
கடகத்தில் லக்னாதிபதியான சந்திரன், ராகுவோடு இணைகிறார். பாலோடு டிகாக்ஷன் சேருவது போன்ற அமைப்பு இது. இந்த அமைப்பு கொண்டவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனாலும், எப்போது எப்படி பேசுவார்கள், எப்படி நடந்து கொள்வார்கள் என்று புரியாது. ‘‘நல்லாதானே பேசிக்கிட்டு இருந்தாரு! திடீர்னு பைத்தியக்காரன் மாதிரி கத்தறாரே... நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோவப்படறாரு’’ என்று சுற்றியுள்ளோரை பதற்றப்படுத்துவார்கள்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில், தான் இப்படி நடந்து கொண்டதையே சுத்தமாக மறந்துவிடுவார்கள். எப்போதும் சூட்சுமமாகப் பேசுவார்கள். யாரும் யோசிக்காத விஷயங்களை, சமூகத்தில் சுத்தமாக மறந்துபோன பாரம்பரியமான கிரியைகளை இவர்கள் மீண்டும் உயிர்ப்பிப்பார்கள். இவர்கள் நண்பர்களாகவும் இருக்க மாட்டார்கள்; பகைவர்களாகவும் இருக்க மாட்டார்கள். கடகத்துக்கு இரண்டாம் இடமான சிம்மம் எனும் வாக்கு ஸ்தானத்திற்கு உரியவராக சூரியன் வருகிறார். அதில் சந்திரனோடு ராகுவும் சேர்ந்து அமரும் இந்த அமைப்பு, நிர்வாகத் தன்மையை அதிகப்படுத்தும்.
அரசியலில் தலைமைப் பொறுப்புகளில் உள்ளோருக்கு நிழலாக இவர்கள் வலம் வருவார்கள். எதிரிகளின் காய்நகர்த்துதலை துல்லியமாகக் கணிப்பார்கள். பள்ளியிலும் கல்லூரியிலும் தியரியை விட பிராக்டிகலில் நிறைய மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஒரு செயற்கரிய வேலையைச் செய்து காலம் முழுவதும் வரலாற்றில் இடம் பெற வேண்டுமென நினைப்பார்கள். ‘மரபுக் கவிதையா, புதுக்கவிதையா’ என்றெல்லாம் கணிக்க முடியாதபடி நவீனமாக எழுதுவார்கள். மேலோட்டமாக எதையுமே பேச விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் பெரிய பலவீனமே, ‘எல்லாவற்றையும் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அப்படியே மறந்துபோவதுதான். அல்லது ஒரு வேலையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதுதான். கன்னி ராசியான மூன்றாம் இடம் முயற்சி ஸ்தானத்திற்கு உரியது. சந்திரனோடு இங்கு ராகுவும் அமரும்போது அபாரமான ரசனையோடு விளங்குவார்கள். இசையோ, ஓவியமோ, புத்தகமோ, எங்கு எது உயர்வானதாகக் கருதப்படுகிறதோ அது இவர்களுக்குக் கிடைத்துவிடும். கலைக்கு மயங்குவார்கள்.
கழைக் கூத்தாடியாக இருந்தாலும் நின்று கவனித்துவிட்டுத்தான் செல்வார்கள். மேற்கத்திய கலாசாரமும் பிடிக்கும். கிழக்கத்திய மரபையும் விடாது பிடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் இரண்டும் கலந்த கலவையாக விளங்குவார்கள். முயற்சி ஸ்தானத்தில் ராகு இருப்பதால் தீவிரமாக முயற்சி செய்தாலும் அவ்வப்போது ஏற்படும் அவநம்பிக்கையால் தளர்ந்து போவார்கள். இவர்களின் தாய் ஸ்தானத்திற்குரிய இடம் துலாம். இந்த நான்காம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்குப் பாதகாதிபதியே சுக்கிரன்தான். அங்கு சந்திரனும் ராகுவும் சென்று அமரும்போது தாயார் உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு இருந்தபடி இருக்கும்.
மிக முக்கியமாக நரம்புத் தளர்ச்சி, மனப் பிறழ்ச்சி என்றெல்லாம் வந்து நீங்கும். இவர்கள் பெயரில் வாகனங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அல்லது புதிய வண்டியாக எடுத்தால் வேறொருவரின் பெயரில் இருந்துவிட்டு கொஞ்ச நாள் கழித்து இவர்களின் பெயரில் மாற்றிக் கொள்ளலாம். இவர்கள் சொந்த பந்தங்களை நம்பி ஏமாறுவார்கள். வீட்டை அழகாகக் கட்டினாலும் கூட தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். அவ்வப்போது தலைகாட்டும் சோம்பலைத் தவிர்த்து விடுதல் நல்லது. இவர்கள் மிக உயரமான இடங்களுக்கு தனியாகச் செல்லக் கூடாது. விருப்பத்தின் பேரில் சில வித்தைகளைக் கற்று வைத்துக் கொள்வார்கள்.
ஐந்தாம் இடமான விருச்சிகம், பூர்வ புண்ய ஸ்தானம். இங்கு சந்திரனோடு ராகு சேரும்போது தாமதமாகக் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்துகளை அடைவதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கும். மூதாதையர்களின் பெருமைகளை அதிகமாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் மற்றவர்களை அழ வைத்து வேடிக்கை பார்க்கும் குணம் இருக்கும். பிள்ளைகளை தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பார்கள்.
அதனால் அவர்களுக்குள் இருக்கும் மற்ற திறமைகளெல்லாம் வெளிப்படாது போய் விடும். இதனால் குழந்தைகள் வளர வளர இவர்களோடு கருத்து மோதலும் அதிகரித்த வண்ணம் இருக்கும். இவர்கள் பால வயதில் பாடம் கற்பித்த ஆசிரியரைக் கூட மறக்காது சந்தித்து விட்டு வருவார்கள். தனுசு ராசியான ஆறாம் இடம், நோய், கடன், சத்ரு ஸ்தானமாகும். இங்கு சந்திரனும் ராகுவும் அமர்ந்தால் அழகு, ஆடை, அலங்காரப் பொருட்களுக்காக நிறைய செலவு செய்வார்கள். இவர்கள் எது பேசினாலும், எதை எழுதினாலும் அதற்கொரு எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.
இவர்கள் நண்பர்களை விட எதிரிகளைத்தான் அதிகம் நேசிப்பார்கள். பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியோருக்கும் இவர்களின் பணம் சென்றால் மிகவும் நல்லது. ஏழாம் இடமான மகரத்தில் சந்திரனும் ராகுவும் சேரும்போது வாழ்க்கைத்துணை மிகுந்த ஆளுமையுள்ள நபராக இருப்பார். இந்த அமைப்பில் ஆண்கள் பிறந்தால் மனைவிக்குத் தெரியாமல் எந்தவித பணப்பட்டுவாடாவும் செய்யக் கூடாது. விபரீதமாக வேறெந்த நட்பையுமே ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. திருமணம் நிச்சயமாகி நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்குமிடையே அதிக இடைவெளி கொடுக்கக் கூடாது.
இவர்கள் வாழ்க்கைத் துணைவரை அனுசரித்துச் சென்றால் மட்டுமே நிம்மதியாக இருக்க முடியும். மற்றபடிக்கு பண வரவு, வசதி, வாய்ப்புகளெல்லாம் நிறைந்திருக்கும். வாழ்க்கைத் துணைவரின் உறவுகளிடத்தில் எந்த வியாபாரத்திலும் கூட்டு கூடாது. இவர்களின் எட்டாம் இடமான கும்பமே ஆயுள் ஸ்தானமாக வருகிறது. ஆயுள் காரகனான சனியின் இடத்தில் ராகுவும் சந்திரனும் அமர்கிறார்கள். வாகனங்களை இரவு நேரங்களில் சுயமாக இயக்காமல் இருப்பது நல்லது.
இவர்கள் நெடுந்தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், இவர்களின் வேலையே பயணம் செய்வதாகவே அமையும். இவர்களுக்கு நெஞ்சு சளி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல நேரங்களில் தாயார் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். வாகனத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நீர் நிலைப்பகுதிகளில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஆறு, குளங்கள், கடல் போன்றவற்றில் தனியாக இறங்கி குளிக்கக் கூடாது.
மீன ராசியான பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனோடு ராகு இருப்பதால் தந்தையோடு மோதிக் கொண்டேயிருப்பார்கள். வாழ்வின் முக்கிய நிகழ்வில் தந்தையார் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். அல்லது அவருக்கு எதிராக இவர்கள் செயல்படுவார்கள். ஆனால், தந்தையின் அருமையை வயதாக வயதாகத்தான் உணருவார்கள். இவர்களில் பலர் யோகா கற்றுக்கொண்டு யோகா மாஸ்டராக வருவார்கள். மீனம் குரு வீடாகவும் அதில் ராகுவும் சந்திரனும் அமர்ந்திருப்பதால் நல்ல நிலையில் முன்னேற வைக்கும்.
எல்லோரையும்போல ஏதேனும் ஒரு வேலை செய்தாலும் தனிப்பட்ட முறையில் தனக்கென்று பிடித்த வேலையை இணைத் தொழிலாகவும் செய்து வருவார்கள். பத்தாம் இடத்திற்குரிய ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. அங்கு சந்திரனோடு ராகுவும் அமர்கிறார். கடக லக்னத்திற்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. எல்லாமே பெரியளவில்தான் ஆசைப்படுவார்கள். கமிஷன், ஏஜென்சி என்று முன்னேறுவார்கள். ஷேர் துறையில் தனி முத்திரை பதிப்பார்கள். மெரைன் இன்ஜினியரிங், கேட்டரிங், மாடலிங், பியூட்டி பார்லர் என்றெல்லாம் ஈடுபடுவார்கள். பதினோராம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் ரிஷபச் சுக்கிரன் வருகிறார். அங்கு சென்று சந்திரனும் ராகுவும் அமர்ந்தால், சகோதர உறவுகள் தனித்தனியாக தொலைதூரமாக இருப்பதே நல்லது. இல்லையெனில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். இவர்களைப் புரிந்து கொள்வதே கொஞ்சம் கஷ்டமான விஷயமாகும். தீவிர இயக்கங்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மீதும் இவர்களுக்கு மென்மையான போக்கு இருக்கும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள்.
பன்னிரெண்டாம் இடமான சயன ஸ்தானத்திற்கும், மோட்ச ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் வருகிறார். ஆழ்ந்த தூக்கம் இருக்காது. வீணாக ஏதேனும் செலவு செய்தபடி இருப்பார்கள். மறைமுகமாக ஏதேனும் சின்ன கெட்ட பழக்கம் இருக்கும். அன்னதானம், கோயில் கும்பாபிஷேகம் என்றெல்லாமும் ஈடுபடுவார்கள். ராகு-சந்திரன் சேர்ந்த அமைப்பானது நன்மையையே தரும் என்று சொல்ல முடியாது. ராகு திடீரென்று கொடுத்துக் கெடுப்பார். அதிலும் சந்திரனோடு சேர்ந்தால், பாம்பு எப்போது சீறும், பதுங்கும் என்றெல்லாம் கூற முடியாது. ராகுவானவர் சட்டென்று தூக்கிவிட்டு அப்படியே அதலபாதாளத்தில் விடவும் செய்வார்.
திடமான ஒரு வாழ்க்கையை வாழவும், நம்பிக்கை குலையாமல் ஒரே குறியாக தீர்க்கமாகச் செல்வதற்கும் இவர்கள் செல்ல வேண்டிய தலம் அம்பகரத்தூர் ஆகும். இத்தலத்திலுள்ள காளியின் சந்நதியை நெருங்கிய உடனேயே உடலெங்கும் ஒரு வெம்மை பரவுகிறது. கர்ப்பக்கிரகத்தின் முன்பாக இரண்டு பக்கமும் அழகிய துவாரவதியர் நின்றிருக்க கருவறையில் தென்திசையில் வீற்றிருந்து பத்ரகாளியம்மன் வடதிசை நோக்கி பாரினை பரிபாலித்துக் கொண்டிருக்கிறாள். நெடிய தோற்றம் பூண்டிருக்கிறாள். எண்கரங்களிலும் அம்பரனை வதைத்த கோலத்தினூடே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
வலப்பாதம் மடித்து, இடப்பாதத்தை அம்பரன்மீது ஊன்றியபடி திரிசூலத்தால் அவன் மார்பைப் பிளப்பதுபோல விளங்குகிறாள். வதம் செய்தவளின் முகம்போல் அல்லாது கருணை ஊற்றாக விளங்குகிறாள். அனுபவமும் அழகும் கலந்த பெரியம்மாவின் சாயல் காளியின் முகத்தில் தெரிகிறது. ‘என்ன துயர் வந்தாலும் என்னிடம் சொல்’ என்று கேட்கும் ஒரு பாவத்தில் அமர்ந்துள்ளாள். தீய சக்திகள் பாதித்தோரை அம்பகரத்தூர் எல்லையே சரி செய்துவிடும் வல்லமை பெற்றது. அம்பகரத்தூர் எனும் இத்தலம் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு சனீஸ்வரர் தலத்திற்கு 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
(கிரகங்கள் சுழலும்...)
|