சண்டை
‘‘பெரிய பயில்வான்னு சொன்னே! நாலு அடிக்குத் தாங்கலை... சுருண்டு விழுந்துட்டானே!’’ என்று நரேன் சொன்னதும் நண்பர்கள் எல்லாரும் கை கொட்டிச் சிரித்தார்கள். கீழே விழுந்த பயில்வான் நைனியப்பன், மண்ணைத் தட்டிக்கொண்டு அங்கிருந்து சென்றார். ஊருக்கு வந்திருந்த தன் கல்லூரி நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்த சுரேந்தருக்கு அவமானமாய்ப் போய்விட்டது. அவர் ஓங்கி ஒரு அடி அடித்தால் தாங்குவானா இந்த நரேன்? ஏன் இப்படி அடி வாங்கிக்கொண்டு சென்றார்? சுரேந்தருக்குப் புரியவில்லை.
மறுநாள் ஊரில் நடந்த குஸ்திப் போட்டியில் பயில்வான் நைனியப்பன் தன்னோடு மோதிய மாமிச மலைகள் ஒவ்வொருவரையும் அநாயாசமாகத் தூக்கிப் போட்டு பந்தாடினார். அதைப் பார்த்த சுரேந்தரும் நரேனும் நண்பர்கள் கூட்டமும் திகைப்பிலும் பயத்திலும் ஆழ்ந்தார்கள். போட்டி முடிந்து, கழுத்து நிறைய பதக்கங்களோடு வெளியே வந்த பயில்வானிடம் சுரேந்தர் கேட்டான்...
‘‘என்னங்கய்யா! நேத்து எங்க ஃப்ரெண்டுகிட்ட அடி வாங்கிக்கிட்டு, இன்னிக்கு இவங்ககிட்ட மட்டும் இந்தப் போடு போடுறீரே..?’’ ‘‘அதுக்கில்லங்க தம்பி! சண்டை போடுறதுன்னா அடியைத் தாங்குற உடம்பு இருக்கணும். அப்பதான் நாங்க அடிக்கணும்ங்கிறது எங்க குருநாதர் சொல்லிக் கொடுத்த பாடம்! அதை எப்படி மீற முடியும்?’’ என்று பயில்வான் நைனியப்பன் கேட்க, வெட்கத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான் நரேன்.
-பா.விஜயராமன்
|