ப்ளஸ் 2 தேர்வு... சென்டம் வாங்க சூப்பர் டிப்ஸ்!



மார்ச் 4ம் தேதி தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு. மழை, வெள்ளம், இழப்புகள், தொடர் விடுமுறை எனப் பல சோதனைகளைக் கடந்து மீண்டெழுந்திருக்கிறார்கள் மாணவர்கள். பாடங்களை நிதானமாக நடத்தக்கூட அவகாசமில்லாத சூழல்.

எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்வென்பதால், பயம், பதற்றம், அழுத்தத்தோடு தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள் மாணவர்கள். இந்த எக்ஸாம் பிரஷரை சிறப்பாகக் கையாண்டு சென்டம் வாங்குவது எப்படி? சில ஆலோசனைகள்...

* இருக்கிற ஒவ்வொரு நொடியும் விலைமதிப்பற்றது. இதுவரை படித்தவற்றை நிதானமாக நினைவுக்குக் கொண்டு வந்து Refresh செய்துகொள்ளுங்கள். எல்லா பொழுதுபோக்குகளையும் தள்ளி வைத்துவிட்டு தேர்வில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். * நம்பிக்கை ரொம்பவே முக்கியம். இதுநாள் வரை எதைப் படித்தீர்களோ அதைத்தான் எழுதப் போகிறீர்கள். தேவையற்ற பதற்றம் குழப்பத்தை உருவாக்கும். படித்ததெல்லாம் மறந்து போகக்கூடும். இயல்பாக இருங்கள்!

* மூச்சுப் பயிற்சி நல்லது. அருகில் அது பற்றித் தெரிந்தவர்கள் இருந்தால் கற்றுக்கொள்ளுங்கள். தேர்வு குறித்தோ, பாடங்கள் குறித்தோ சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்!

* தேர்வு முடியும் வரை, வெளியிடங்களில் சாப்பிடாதீர்கள். ஸ்நாக்ஸைக் குறையுங்கள். சூடாக சமைத்த உணவு நல்லது. அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளைத் தொடாதீர்கள். ஃபிரிட்ஜில் வைத்த குளிர்பானங்கள் வேண்டவே வேண்டாம். அசைவம் கூட தவிர்க்கலாம்.  நிறைய தண்ணீர் குடியுங்கள். பழச்சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்துங்கள். நேரத்துக்குச் சாப்பிடுங்கள்!

* தேர்வு நாட்களில் உணவைத் தவிர்க்கவே  கூடாது. சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு மாத்திரை எடுப்பதைத் தவிர்க்கலாம். சில  மாத்திரைகள் தூக்கம் அல்லது மயக்கத்தை உருவாக்கும். ஆனால், வலிப்பு போன்ற  பிரச்னை உள்ளவர்கள் கட்டாயம் அதற்குரிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள  வேண்டும்.

* விடிய விடிய படிப்பதெல்லாம் வேண்டாம். குறைந்தபட்சம் 6 மணி நேரத் தூக்கமாவது அவசியம். தூக்கம் உங்களுக்குத் தரும் புத்துணர்வு, குழப்பத்தைத் தவிர்க்கும், ஞாபக சக்தியை மேம்படுத்தும். இரவு சற்று சீக்கிரம் படுத்து அதிகாலை எழுந்து படிக்கலாம்.

* எல்லாவற்றையும் ஒருசேர மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். முதலில் எந்தத் தேர்வோ அதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கித் தயாராகுங்கள். சிரமமான பாடம் என்று எதையும் ஒதுக்காமல் திருப்பிப் பாருங்கள். ‘இந்தக் கேள்வி வரும், அந்தக் கேள்வி வரும்’ என்றெல்லாம் சக மாணவர்கள் கிளப்பி விடும் வதந்திகளை நம்பாமல், உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ, அதைப் படியுங்கள்.

* யாருடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள். ‘‘இது என் எதிர்காலம்... என்னால் சிறப்பாகத் தேர்வை எழுத முடியும். கண்டிப்பாக நான் சிறப்பிடம் பெறுவேன்!’’ என்று பாசிட்டிவாக சிந்தியுங்கள். உங்கள் மீதான மதிப்பும் நம்பிக்கையுமே உங்களை உயர்த்தும்.

* தேர்வுக்கு முதல் நாள் இரவே தேவையான பொருட்களைத் தயாராக வையுங்கள். புதிய பேனா வேண்டாம். பழகிய பேனாக்கள் 2, பென்சில், ஸ்கேல், ரப்பர், தேவையான பிற உபகரணங்களை எடுத்து ஓரிடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள். கருப்பு மை பேனா ஒன்றும் இருக்கட்டும். அதிகபட்சம் இரவு 11 மணிக்கெல்லாம் தூங்கி விடுங்கள்.

* தேர்வு நாளன்று அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுங்கள். அன்றைய தேர்வுக்குரிய குறிப்புகளை ஒருமுறை முழுமையாகத் திருப்பிப் பாருங்கள். அரைமணி நேரம் முன்பாகவே கிளம்பி தேர்வு ஹாலுக்குச் சென்றுவிடுங்கள்.

* தேர்வறையைத் தேடி உங்களுக்கான இடத்தை கண்டுபிடித்துக் கொள்வது கடைசிநேர பதற்றத்தைக் குறைக்கும். மற்ற மாணவர்கள் படிப்பதையோ, பேசுவதையோ கேட்டுக் குழம்பாதீர்கள்.

* தேர்வுத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வறைக்குள் பெல்ட், ஷூ, டை அணிந்து செல்லக் கூடாது. செல்போன், கால்குலேட்டருக்கும் அனுமதியில்லை. தேர்வறையில் துண்டுச்சீட்டு வைத்து பார்த்து எழுதுதல், விடைத்தாள் மாற்றிக்கொள்வது போன்றவை கடுமையான குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், 2 முதல் 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுதவும் தடை விதிக்கப்படும் என்பதை மறக்காதீர்கள்.

* கடந்த ஆண்டு ஒரு குறுக்கு வழியை மாணவர்களுக்கு சில ஆசிரியர்கள் போதித்தார்கள். ‘தேர்வில் சென்டம் எடுப்பதற்கான வாய்ப்பு இல்லாதபட்சத்தில், எழுதிய விடைத்தாளின் அனைத்து பக்கங்களிலும் குறுக்காக கோடு போட்டு விடுவது. திருத்தும் மாணவனே எல்லா பதில்களையும் அடித்துவிட்டதாகக் கருதி ஆசிரியர் 0 மதிப்பெண் போட்டு விடுவார்.

ஃபெயிலாகும் மாணவர்களுக்காக ஜூன் மாதத்தில் நடத்தப்படும் தேர்வு எளிதாக இருக்கும். அதை எழுதி முழுமதிப்பெண் பெற்று விடுவது...’ - இதுதான் அந்தக் குறுக்குவழி. இதனால் கடந்தாண்டு ஏகப்பட்ட விடைத்தாள்களில் குறுக்குக்கோடு. எனவே தேர்வுத்துறை, இந்த ஆண்டு  இதற்கு செக் வைத்து விட்டது. குறுக்குக்கோடு போடும் மாணவர்கள், அடுத்த 2 தேர்வுகளை எழுதத் தடை விதிக்கப்படும்!

* தேர்வு காலை 10 மணிக்குத் துவங்கும். 9.45க்கு உங்களுக்கான இடத்தில் அமர்ந்து விடவேண்டும். விடைத்தாள் வழங்கியதும், ‘பார் கோடிங்’ இடப்பட்ட முகப்புத்தாளில், அழகாக, அடித்தல் திருத்தல் இல்லாமல் உங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்யுங்கள். தேர்வு எண்ணை கவனமாக எழுதுங்கள். 8, பூஜ்யம் போலவும், 7 ஒன்று போலவும் மாறிவிடலாம். கவனம். உரிய இடத்தில் கையெழுத்தைப் போடுங்கள். இதற்கு 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* கேள்வித்தாளை வாங்கியவுடன் படபடவென்று விடையை எழுதாதீர்கள். கேள்வித்தாளை படிக்க 10 நிமிடங்கள் உண்டு. முழுமையாகப் படித்து, தெரிந்த கேள்விகளை மனதுக்குள் டிக் செய்து கொண்டு, பிறகு எழுதத் தொடங்குங்கள். வினாத்தாளில் எதையும் எழுதக்கூடாது.

* விடைத்தாளில் ஒரு பக்கத்துக்கு 20 வரிகள் மட்டுமே எழுத வேண்டும். அழகாக, தெளிவாக, நிறுத்தற்குறிகள் இட்டு எழுதுவது நல்லது. முக்கியமான குறிப்புகளை கறுப்பு மை பேனாவால் அடிக்கோடி டலாம்.  விடைத்தாளின் இருபுறமும் எழுத வேண்டும். செய்முறை, மதிப்பீடுகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே எழுத வேண்டும்.

* நன்கு தெரிந்த கேள்விகளுக்கான பதில்களை முதலில் எழுத வேண்டும். வினா எண், பிரிவு எண்ணை சரியாகப் போடவேண்டும். முதலில் ‘அ’ பிரிவில் ஒரு கேள்விக்கான பதிலை எழுதிவிட்டு, உடனே ‘ஆ’ பிரிவுக்குத் தாவி, பிறகு மீண்டும் ‘அ’ பிரிவுக்கு வந்து திருத்துபவரை எரிச்சல் படுத்தக் கூடாது. ‘அ’ பிரிவில் தெரிந்த பதில்கள் அனைத்தையும் எழுதிவிட்டு, பிறகே ‘ஆ’ பிரிவுக்குப் போக வேண்டும்.

* பதில்களை நேரடியாக எழுதுவது நல்லது. தேவையான அளவுக்கு மட்டுமே விடை அமைய வேண்டும்.

 * தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ள மிகவும் அவசியம், நேர நிர்வாகம். ஒவ்வொரு பிரிவுக்கும் இவ்வளவு நேரம் என்று திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். ஒரு நொடியைக் கூட வீணாக்கக் கூடாது.  மதியம் 1.15க்கு தேர்வு முடியும். 1 மணிக்குள் எழுதி முடித்துவிட்டு, அடுத்த 15 நிமிடத்திற்கு விடைத்தாளை சரி பார்க்க வேண்டும்.

* ஒரு தேர்வை எழுதி முடித்துவிட்டால், அதன் பிறகு அது பற்றி சிறிதளவும் யோசிக்காதீர்கள். உற்சாகமாக அடுத்ததேர்வுக்கு தயாராகுங்கள். குழப்பமில்லாமல், தைரியமாக, தன்னம்பிக்கையோடு தேர்வறைக்குச் செல்லுங்கள். அதிக மதிப்பெண் பெற்று உங்களை உலகத்துக்கு நிரூபியுங்கள்..!

- வெ.நீலகண்டன்
படங்கள்: புதூர் சரவணன்