சேதுபதி - விமர்சனம்



தன் சக ஊழியனை எரித்துக் கொன்றதற்குக் காரணமான பெரிய மனிதரைப் பழி வாங்கும் ‘சேதுபதி’. சுருக்கமாக, போலீஸ் - தாதா வேட்டைப் படம்!கனமான முறுக்கு மீசை, கோபப் பார்வை, இரும்பு உடம்பு, சிறுத்தையின் சீற்றம், வெடித்துச் சிதறும் துப்பாக்கி, புல்லட் பயணம் என்றிருக்கிற விஜய்சேதுபதியின் துணிச்சலையே கேள்விக்குறியாக்கி செக் வைக்கிறது ஒரு கூட்டம்.

அவரது எல்லைக்குள் நடக்கிற ஒரு கொலையைக் கண்டுபிடிக்க சார்ஜ் எடுக்கிறார் சேது. உள்ளே புகுந்து முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டே போனால், கடைசியில் சுட்டு விரல் காட்டுவது வேல.ராமமூர்த்தியை. சேதுபதியின் கனன்று எரியும் கோபத்திற்கு வேல.ராமமூர்த்தி பலியானாரா, சேதுபதியே சிக்கிக்கொண்ட இன்னொரு சிக்கலில் இருந்து அவரே தப்பித்தாரா, எதிரிகளை சேதுபதி அழித்தாரா என்பதுதான் கதை! விறுவிறு இயக்குநராக பொறுப்பு ஏற்கிறார் அருண்குமார்.

இப்போதுதான் ‘விசாரணை’ வந்து போலீஸின் இன்னொரு பக்கத்தை எடுத்துக் காட்டி கலங்கடித்தது. அந்த ஈரம் காய்வதற்குள் ஃப்ரெண்ட்லி, நேர்மை, கறார் என அரிதினும் அரிதாகக் காக்கியில் கிடைக்கிற மாதிரியான ஒரு மனிதராக சேதுபதிக்கு ‘நல்ல போலீஸ்’ யூனிஃபார்ம் மாட்டியிருக்கிறார்கள்.

ஸ்டேஷனில் ஆளாளுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுப்பது, பொதுமக்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பது, வகைதொகை இல்லாமல் குற்றவாளிகளை என்கவுன்டரில் போட்டுத் தள்ளுவது என எதைச் செய்தாலும் சேதுபதி ஸ்டைலோடு நம்பும்படியாக, ஏற்றுக்கொள்ளும்படியாக செய்கிறார்.

என்கவுன்டரில் விழும் குற்றவாளிகளைச் சுட்டு, குட்டையில் தள்ளுகிற தோரணையைப் பார்த்து, ‘விசாரணை’க்கு கை தட்டிய அதே கைகள் க்ளாப்ஸ் அடிக்கின்றன. கொடுத்திருக்கிற ரோலில் அவ்வளவு கச்சிதமாக பர்ஃபெக்ட் ஃபிட்டில் பொருந்துகிறார் சேதுபதி. கோபத்தோடு ஸ்டேஷனிலும், காதலோடு வீட்டிலும், குழந்தைகளோடு குழந்தையாகவும் கலந்துவிடுவதில் இவ்வளவு சீக்கிரமே ஒரு சீஸன்டு பெர்ஃபார்மர் என அவர் பெயர் வாங்கிவிட்டார்.

ரம்யா நம்பீசன்-விஜய்சேதுபதி தம்பதி சரசமும், கோபமுமாக குடும்பம் நடத்துவதும் நல்ல ரசனை! விஜய்சேதுபதிக்கு தன் மாமனார் மீது என்ன கோபமோ தெரியவில்லை... அதை என்னவென்று காட்டாமலே கோபத்தை மட்டும் காட்டுகிறார்கள். கணவனை காலில் விழ வைக்கிற அளவுக்கு அது போவது மிகையென்றாலும் ரசிக்க முடிகிறது. ஒளிந்து விளையாடும் ரம்யாவை கண்டுபிடிக்கிறாரே... அப்போது விழிகளாலேயே ரம்யா வீழ்த்துவது செம!

வேல.ராமமூர்த்தி நிஜமாகவே உருட்டல், மிரட்டல் வில்லனாக பவனி வருகிறார். கொஞ்சமே வந்தாலும், அந்த குண்டு கமிஷன் அதிகாரியை மறக்க முடியவில்லை. அதே மாதிரி சேதுபதியின் எஸ்.ஐ.யும் நறுவிசு! இரண்டு குழந்தைகளும் சினிமாத்தனமே இல்லாமல் சூப்பர்!ரணகள சண்டைக் காட்சிகளில் அதகளம் பண்ணும் தினேஷ் கிருஷ்ணனின் கேமரா, வீட்டுத் தாம்பத்யத்தைப் படமாக்கும்போது கவிதை எழுதுகிறது. நிவாஸ் கே.பிரசன்னாவின் பாடல்களில் நல்ல தெளிவு. பின்னணி இசையிலும் பக்கா. கர் பிரசாத்தின் எடிட்டிங் நச்!

குற்றவாளிகளை எல்லாம் என்கவுன்டரில் போட்டுத் தள்ளும் சேதுபதி, அதற்குக் காரணமானவரை வண்டியில் வைத்து சுற்ற விடுவதா தண்டனை? கன்னத்தில் ஒரு அறை அறைந்தாலே, எல்லோரும் உடனே சேதுபதியிடம் உண்மையைச் சொல்லிவிடுகிறார்களே, எப்படி? பெரிதாக கவனம் ஈர்க்கும் திரைக்கதை இல்லையே, ஏன்? இதமாய், பதமாய், வேகமாய் சேதுபதி செய்திருக்காவிட்டால் இந்தப் படத்திற்கான டீட்டெய்ல் வேறு என்ன?
பழக்கமான பழிக்குப் பழி கதைதான். ஆனாலும், ட்ரீட்மென்டில் ரசிக்க வைக்கிறான் ‘சேதுபதி’!

- குங்குமம் விமர்சனக் குழு