நியூஸ் வே



சம்மர் தொடங்கியாச்சு. ‘‘ஹெல்த் டிப்ஸ் சொல்லுங்க?’’ என ஹன்சிகாவிடம் கேட்டால், ‘‘நிறைய தண்ணீர் குடியுங்கள். மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளுங்கள். இரவு உணவை ஏழு மணிக்கு சாப்பிட்டு முடித்துவிடுங்கள்!’’ என்கிறார் கூலாக!

‘‘இன்னமும் நான் பேச்சிலராக இருக்கிறேன் என்ற உணர்வே அச்சம் தருகிறது. ஆனாலும் இந்த அச்சம் எனக்குப் பிடித்திருக்கிறது’’ என சிரித்தபடி சொல்கிறார் சல்மான் கான்.

‘அமர காவியம்’ மியா ஜார்ஜுக்கு இது ராசியான ஆண்டு. ‘ஒருநாள் கூத்து’, ‘எமன்’, ‘ரம்’, ‘வெற்றிவேல்’ என நான்கைந்து படங்கள் கைவசம்.

கடந்த 2014ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் செல்ஃபி எடுக்கும்போது 19 பேர் இறந்திருக்கிறார்கள். உலகிலேயே செல்ஃபி மரணம் இந்தியாவில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது.

விக்ரம் நடிக்கும் ‘இருமுகன்’ படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை போட்டு விட்டார்கள். மலேசியாவில் முதல் ஷெட்யூலை முடித்த பிறகு சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நித்யா மேனனும் கலந்துகொண்டார். அடுத்து காஷ்மீர், பாங்காக் செல்லவிருக்கிறது யூனிட்!

பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாத ‘நீரஜா’ படம் மூன்றே நாட்களில் போட்ட பணத்தை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்ததில் உற்சாகமாக இருக்கிறார் சோனம் கபூர். விமானக் கடத்தல் தீவிரவாதிகளிடமிருந்து பயணிகளைக் காப்பாற்ற உயிரை இழந்த விமானப் பணிப்பெண் நீரஜாவாக அவர் நடிப்புக்கு பெரும் பாராட்டு குவிகிறது. ‘‘என் வாழ்நாளுக்கு இந்தப் படம் பெயர் சொல்லும்’’ என நெகிழ்கிறார் சோனம்.

 ‘பாகுபலி 2’, ‘தோழா’, ‘தர்மதுரை’ தவிர ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ஒன்றிலும் பிஸியாக இருக்கிறார் தமன்னா. மதுரையில் விஜய்சேது பதி பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு பிரபுதேவா படத்திற்காக மகாராஷ்டிரா பறந்திருக்கிறது பொண்ணு!

குஜராத்தின் அகமதாபாத் நகரில் வேகத்தடைகள் மீது திடீரென மஞ்சளுக்கு பதிலாக காவி நிற பெயின்ட் அடித்தார்கள். ‘‘பி.ஜே.பி. ஆட்சி என்றால் எதை வேண்டுமானாலும் மாற்றலாமா? இரவில் தெரியாத இந்த இந்துத்வ நிறத்தை ஏன் அடித்தீர்கள்?’’ என பலரும் பிரச்னை எழுப்ப, உடனடியாக மஞ்சள் நிறத்துக்கு மாற்றி விட்டார்கள். இந்தத் தவறுக்கு மாநகராட்சியும் போலீஸும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கமலின் ஃபேவரிட் ஹீரோயின் பூஜா குமார், தமிழில் தொடர்ந்து நடிக்கும் ஐடியாவில் இருக்கிறார். அமெரிக்காவில் இருந்து சென்னையில் வீடு பார்த்து விரைவில் செட்டில் ஆக திட்டமிட்டிருக்கும் பூஜாவுக்கு தமிழ் இன்னும் சரளமாகப் பேச வரவில்லை.

சத்ருகன் சின்ஹாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆகியிருக்கிறது. வெளியீட்டு விழாவில் மிஸ் பண்ணாமல் கலந்துகொண்டார், இந்தி சூப்பர் ஸ்டாரின் சூப்பர் மகள் சோனாக்‌ஷி சின்ஹா.

‘‘கல்யாணமே வேண்டாம் என்ற முடிவில் மாற்றம் உண்டா?’’ என லட்சுமி மேனனிடம் கேட்டால், ‘‘நான் ஸ்கூல் படிக்கும்போது நடிச்ச பல படங்களுக்கு கதை கேட்டது இல்ல. ‘கொம்பன்’ படத்துக்குப் பிறகுதான் கதை கேட்க ஆரம்பிச்சேன். இதே மாதிரி மாற்றம் கல்யாணம் விஷயத்திலும் வருமான்னு தெரியல... பார்க்கலாம்!’’ என்கிறார் முகம் சிவந்து.

பீப் இசை சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. மறுபடியும் வாட்ஸ் அப்பில் வைரல் ரவுண்ட் வருகிறது அனிருத் - எமி ஜாக்சனின் அச்சக் பச்சக் செல்ஃபி. பெருமூச்சு விடுகிறது கோலிவுட்.

டெல்லியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சியின் தேசிய நிர்வாகிகளுக்காக என்று தனியாக ஒரு நூலகத்தை சமீபத்தில் திறந்து வைத்தார், தலைவர் அமித் ஷா. அரசியல் மற்றும் பண்பாடு தொடர்பாக ஆயிரக்கணக்கான நூல்கள் இதில் உள்ளன. ஆனாலும் இங்கு படிக்க யாரும் வருவதில்லை.

நரேந்திர மோடி எல்லோருடனும் செல்ஃபியாக எடுத்துத் தள்ளுகிறார். ஆனால் சோனியா காந்தி இந்த விஷயத்தில் அப்படியே நேர் எதிர். ‘‘மோடி ஸ்டைல் செல்ஃபியில் எனக்கு விருப்பமில்லை’’ என வெளிப்படையாகவே சொல்லும் சோனியா, சம்பிரதாயமான குரூப் போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுக்கிறார்.

சீமாந்திராவின் நெல்லூர் அருகே இருக்கும் கங்கபட்டினம் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு மனைவி ஷாலினியுடன் சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்று வந்திருக்கிறார் அஜித்!

நயன்தாரா நிரந்தரமாக சென்னையில் தங்கிவிட முடிவெடுத்து, போட் கிளப் ஏரியாவில் வீடு பார்க்கிறார். திருவில்லாவிலிருந்து பொருட்கள் இங்கே வந்து இறங்கிவிட்டன.

ஜெயம் ரவியின் நட்பு வட்டத்தில் விஜய்சேதுபதியும் இணைந்திருக்கிறார். சமீபத்தில் ‘சேதுபதி’யை பார்த்து விட்டு விஜய்சேதுபதியை கட்டி அணைத்து, பாராட்டி மகிழ்ந்திருக்கிறார் ரவி. ஹீரோக்களுக்கு இடையேயான இந்த நட்பு பலரையும் ஆச்சரியத்தில் விழி விரிய வைத்திருக்கிறது.