‘மிருதன்’



ரத்தம் குடிக்கும் ஸோம்பிகளிடம் இருந்து  தன் தங்கையைக் காப்பாற்ற போராடுபவனே ‘மிருதன்’!சும்மா லாரியிலிருந்து விழுந்த வினோத ரசாயனக் கழிவை நாய் ஒன்று சாப்பிட்டு விட, அவ்வளவுதான்... வெறி பிடித்துவிடுகிறது.

அதுவே டிராபிக் இன்ஸ்பெக்டர் ஜெயம் ரவி, நண்பர் காளி வெங்கட், உதவும் கரங்கள் கொண்ட லட்சுமி மேனன் என இருக்கிற ஊட்டியில இந்த நிகழ்ச்சி நடந்துவிட, எங்கே பார்த்தாலும் புறப்பட்டு வருகின்றன ஸோம்பிகள். அவற்றை எல்லாம் சுட்டுத் தள்ளி எப்படி ஒரு சிறு கூட்டத்தை ஜெயம் ரவி மீட்கிறார் என்பதே படம்!   

நிச்சயமாக ஸோம்பி எனப் புது வகை சினிமாவைக் கொண்டு வந்ததற்காக சக்தி சௌந்தர்ராஜனுக்குப் பாராட்டுக்கள்! வெறிநாய்க் கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் விஸ்வரூபம், பயம், திகைப்பு, தடால் தடால் என மேலே விழுந்து கழுத்தில் பல் பதித்து ரத்தம் உறிஞ்சுகிற தாகம் என முதல் பாதியில் முழுக்க ரத்தத்தில் பயத்தை ஓட விடுகிறார்கள். மனிதர்கள் பட்டென்று பயங்கர உருவத்துடன் ஸோம்பியாவதும், பட் பட் என்று அவர்களை சுட்டுத் தள்ளுவதும் படம் முழுக்க நிகழ்கிறது. ஆயிரக்கணக்கில் மனிதர்கள் மரணமடைகிறார்கள். சரியோ, தப்போ இப்படியொன்றை தமிழில் காட்டி ஆச்சரிய திகில் ஊட்டுகிறார் இயக்குநர்.

புத்தம் புதுக்களம் மீண்டும் ஒருமுறை ஜெயம் ரவி கைவசமாகி யிருக்கிறது.  இரண்டு இரும்புத் தோள்களிலும் படத்தைச் சுமக்கிறார் ரவி. அவரன்றி வேறு யாரையும் மருந்துக்காவது இதில் நினைத்துப் பார்க்க முடியுமா எனத் தோன்றவில்லை. தங்கையின் பாசத்தில் உருகுவது, லட்சுமி மேனனைப் பார்த்த கணத்தில் காதல் கொள்வது, அவரை விட்டு விலக முடியாமல் தவிப்பது, கடைசி நிமிடங்கள் வரை ஆக்‌ஷனில் அதிரடிப்பது என ஆல் ரவுண்ட் அசத்தல்.

பாந்தமாக, சாந்தமாக, பரிவாக எனப் படம் முழுவதும் வசீகரிக்கிறார் லட்சுமி மேனன். ஆனால், அவரையும் ரசிக்க விடாமல் ஸோம்பிகள் டிஸ்டர்ப் செய்கின்றன. அவற்றிடமிருந்து தப்பித்து ஓடுவதே அவருக்குப் பெரும்பாடாக மாறிவிடுகிறது.செம பில்டப்போடு ஆரம்பமாகிறது முன்பாதி. அதனால், பெரும் திருப்பங்களை பின்பகுதியில் எதிர்பார்த்தால் தொடர்ச்சியாக சுட்டுக்கொண்டே இருக்கிறார் ரவி. ஸோம்பி படம்தான்... ஆனால், காரண காரியங்களோடு காட்சிகள் இருக்க வேண்டாமா? ஸோம்பிகளின் வேட்டையே படம் முழுக்க இருந்தால் எப்படி?

அவ்வளவு எச்சரிக்கையாக கனிவோடு ரவியின் தங்கையை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் டாக்டரே ஸோம்பியாக மாறுவது திகிலில் பதைபதைக்கிற இடம்! திகில் கதையில் அவ்வப்போது சிரிப்பு வெடி வெடிப்பது காளி வெங்கட் மட்டுமே. ஆனால் ஒரு கட்டத்தில் அவரையும் ஸோம்பிகளைச் சுடும் ஆளாக மாற்றிவிடுவது சோகம். ஸோம்பிகளின் பயம் போதாதென்று திகில் இசை கூட்டியிருக்கிறார் இமான்.

இவ்வளவு ஸோம்பிகளோடு சேர்ந்து படம் பிடித்திருக்கும் தினுசுக்கே ஒளிப்பதிவாளர் வெங்கடேஷுக்கு வெரிகுட். இமானின் திகில் இசைக்கு திகீர் ட்விஸ்ட் ஏற்றுகிறது அவரது கேமரா!

இவ்வளவு ஸோம்பி களேபரம் நடக்கும்போது உள்ளூர் போலீஸ் மட்டுமே களத்தில் இறங்குகிறது. அரசு எங்கே போனது? எத்தனை பேர் செத்து விழுந்தாலும் கவலைப்பட மாட்டார்களா? இப்படியொரு கதைக்கு இன்னும் ஃபவுண்டேஷன் போட்டிருக்கலாமே!
ஸோம்பிகளை ரசிக்க முடிகிறது... இன்னும் கொஞ்சம் கதையோடு கலந்து வந்திருந்தால் மொத்த மிருதனையும் ரசித்திருக்கலாம்!

- குங்குமம் விமர்சனக் குழு