மனுஷனுக்கு பயம் இருக்கும் வரை பேய்ப் படங்கள் இருக்கும்!



‘‘கமர்ஷியல் படங்கள்ல ஹீரோ ஒருத்தனை அடிச்சா, அடி வாங்கினவன் பத்து அடி தூரம் தள்ளிப் போய் விழுந்தா போதும்.  அந்த ஃபோர்ஸை ஜனங்க நம்பிடுவாங்க. ஆனா, பேய்ப் படங்கள்ல அந்த ஃபோர்ஸ் பத்தாது.

‘ஓங்கி அடிச்சா, ஒன்றரை டன் வெயிட்’னு சொன்னா அது சிரிப்பு பேய் ஆகிடும்.  அது நூறு டன் வெயிட்டைக் காட்டினால்தான் பேயோட பலம் தெரியும்!’’ - ரிலீஸ் டென்ஷன் எதுவும் இல்லாமல் திருப்தியாகப் பேசுகிறார் வி.சி.வடிவுடையான். ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி நடிக்கும் ‘சவுகார்பேட்டை’ படத்தின் இயக்குநர். இதற்கு முன் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தை இயக்கி நல்ல பெயர் வாங்கியவர்.

‘‘எப்படி வந்திருக்கு ‘சவுகார்பேட்டை’?’’
‘‘எதிர்பார்த்ததை விடவும் நல்லா வந்திருக்கு. சென்னையின் சவுகார்பேட்டை... பணம் நிறைய புரளுற ஏரியா. அங்கிருந்துதான் படத்தோட கதை தொடங்குது. இதுவரைக்கும் எத்தனையோ பேய்ப் படங்கள் பார்த்திருப்பீங்க. கொஞ்சம் தைரியமா சொல்றேன்... பேய்ப் படங்கள்லயே இது கொஞ்சம் மிரட்டல் விதம். காமெடியும் ஹாரரும் கலந்த கலவை. ஆவிக்கும் அரக்கனுக்கும் குழந்தை பிறந்தா என்னாகும்? புராணத்தில் கூட சொல்லாத ஒரு கதையோட களம் இறங்கியிருக்கேன். ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் ராய்லட்சுமி. படத்தைத் தெலுங்கில் ‘சிவகங்கா’, இந்தியில் ‘தந்திர சக்தி’னு ரெண்டு மொழிகள்ல டப் பண்ணியிருக்கோம்.

ஸ்ரீகாந்தை இதுவரைக்கும் சாஃப்ட்டான ஒரு ஹீரோவாத்தான் பார்த்திருப்பீங்க. இந்தப் படத்துக்கு அப்புறம் அவரோட ஆக்‌ஷன் கிராஃப் ஏறும். ரெண்டு கேரக்டர் பண்ணியிருக்கார். ஒரு கேரக்டர்ல அகோரியா மிரட்டியிருக்கார். ‘காஞ்சனா’, ‘அரண்மனை’யை விட பல மடங்கு இதுல ராய்லட்சுமியோட பர்ஃபார்மென்ஸ் பேசப்படும். ஹாரருக்கு சமமா காமெடியும் படத்தில உண்டு. சுமன், தலைவாசல் விஜய், சரவணன், சிங்கம்புலி, ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், கஞ்சா கருப்புனு ஆர்ட்டிஸ்ட்கள் அதிகம். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ மீனாட்சியும் படத்தில் இருக்காங்க!’’ஸ்ரீகாந்தும், ராய்லட்சுமியும் என்ன சொல்றாங்க?’’

‘‘ரெண்டு பேருமே பெரிய அளவில் படத்தை எதிர்பார்க்குறாங்க. லுக், கெட்டப்னு எல்லாத்திலும் ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்காங்க. இந்தப் படம் வெளியான பிறகே தமிழ்ல படங்கள் கமிட் பண்ற ஐடியாவில இருக்காங்க. ‘ஒரு படத்தோட க்ளைமேக்ஸுக்காக இதுவரை ஊட்டி, கொடைக்கானல், வெளிநாடுனு போயிருக்கோம். ஆனா, சுடுகாட்டுல பத்து நாட்கள் நடிச்சுக் கொடுத்தது இதுதான் முதல் தடவை’னு ஸ்ரீகாந்த் சொல்லிச் சிரிச்சார். அவரை 150 அடி உயரத்தில் கயித்துல கட்டித் தொங்க விட்டேன். சில நாட்கள் பிரேக்கே இல்லாம ஷூட் போச்சு. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டார்.

மூலக்கொத்தளம் சுடுகாட்டு ஏரியாவுலதான் க்ளைமேக்ஸ் ஷூட். கதைப்படி மொத்தம் 50 பேய்கள்... ராத்திரியும் பகலுமா அங்கே பேய்கள் சூழ நடிச்சுக் கொடுத்தாங்க. ஷூட்டிங் முடிச்சு, நைட் ஹோட்டல் போனதும், ராய்லட்சுமி அமானுஷ்யமா ஏதோ நடக்கற மாதிரி பயந்துட்டாங்க. காலையில யூனிட்ல அதை அவங்க சொன்னபோதும், அவங்க முகத்தில அந்த பயம் தெரிஞ்சது. அந்தளவு படத்துல இன்வால்வ் ஆகியிருக்காங்க. ‘மைனா’, ‘சாட்டை’ படங்களைத் தயாரிச்ச ஷலோம் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காங்க. முழுப்
படத்தையும் முடிச்சதும், என்னோட வொர்க் தயாரிப்பாளருக்கு பிடிச்சுப் போச்சு. மறுபடி அவங்க தயாரிப்பில் பரத், நமீதா, இனியா நடிக்கும் ஒரு படத்தை இயக்குறேன்!’’

‘‘மறுபடியும் த்ரில்லரா?’’‘‘ஆமா. அதுவும் ஷூட்டிங் தொடங்கியாச்சு. அந்தப் படத்துக்காக பரத்  முறுக்கேறி, உடல் எடையை அதிகரிச்சிருக்கார். லேடி கெட்டப் வேற போட்டிருக்கார். அந்தப் படத்துல நமீதாவும் பெரிய அளவில் பேசப்படுவாங்க.

இதுல கமிட் ஆகுறதுக்கு முன்னாடியே அவங்க ஸ்லிம் ஆகிட்டாங்க. ஆனா, அதை விடவும் ஸ்லிம்மான நமீதாவை இதில் பார்க்கலாம். இதுவரைக்கும் அவங்களை பளபளனு செக்கச் செவேல் நமீதாவாகத்தான் பார்த்திருப்பீங்க. இதுல அட்டைக்கறுப்பு கலர்ல மாறியிருக்காங்க. இனியாவுக்கும் அவங்களுக்கு சமமான ரோல்!’’‘‘ ‘தம்பி வெட்டோத்தி சுந்தர’த்தில் அஞ்சலிதானே ஹீரோயின்? ஏன் அவங்களை விட்டுட்டீங்க?’’

‘‘ ‘சவுகார் பேட்டை’ ஸ்கிரிப்ட் எழுதினதும் ராய்லட்சுமிதான் மனசுல வந்தாங்க. படத்தைப் பார்க்கும்போது ராய்லட்சுமிக்கு பதிலா வேற யாரையும் உங்களுக்கு யோசிக்கத் தோணாது. பர்ஃபாமென்ஸ்ல பின்னியெடுத்திருக்காங்க!’’‘‘பேய்ப்பட டிரெண்ட் இன்னும் எவ்வளவு நாள்தான் இருக்கும்?’’

‘‘இந்த டிரெண்ட் ஓயும்னு எப்பவும் சொல்ல முடியாது. மனுஷனுக்கு பயம் இருக்கறவரை பேய்ப் படங்கள் இருக்கும். பேய்ப் படங்களுக்கு உலகம் முழுக்க வரவேற்பு இருக்கு. ஒரு பொருட்காட்சிக்கு சுற்றுலா போனோம்னா கூட திகில் அரங்குல கூட்டம் குவியும். மால்கள், தீம் பார்க்குகளில் நம்மளோட பயத்தைக் கிளறி விடுறதுக்கான விளையாட்டுகளை விரும்பிப் போய் விளையாடுறோம்.

மற்ற மாதிரி படங்கள் பண்றது கொஞ்சம் ஈஸியான வேலை. பேய்ப் படங்கள்னா நிறைய சிக்கல் இருக்கு. ஹீரோ என்ன லுக்ல இருந்தா எடுபடும்? கிராஃபிக்ஸ் எப்படி அமையணும்? இதுக்கு முன்ன வந்த பேய்ப் படங்கள்ல இருந்து நாம எந்த அளவு வித்தியாசப்படுத்தி காட்ட முடியும்? இப்படி எல்லா ஆங்கிள்லயும் வொர்க் பண்ணணும். பேய்ப் படங்கள்ல காமெடியும் கலந்து குடுத்தாதான் அது ஜெயிக்குது. இதை எல்லாம் யோசிச்சே திகிலை கையில எடுக்கறோம்!’’

- மை.பாரதிராஜா