முன்னுரிமை



‘‘சே... உன் குடும்பத்துல யாருக்கும்  உதவி மனப்பான்மையே கிடையாது. நம்ம பொண்ணு கோமதி கல்யாணத்துக்கு பணம் டிரா பண்ண இன்னைக்கு பேங்க் போனேன். ரொம்பக் கூட்டம். கால் கடுக்க ஒரு மணி நேரம் நின்னுருந்தேன்.

கவுன்ட்டர்ல உன் அக்கா மகன் கோவிந்த்தான் உட்கார்ந்திருந்தான். அவன் என்னை கவனிச்சானே தவிர, முன்னுரிமை கொடுத்து எனக்குப் பணம் கொடுக்கல. ‘எப்படி இருக்கீங்க’ன்னெல்லாம் அக்கறை இருக்கற மாதிரி விசாரிச்சவன், முன்னுரிமை கொடுத்து கவனிக்காததுக்கு ஒரு சாரி கூட சொல்லலை...’’ - தன் கோபத்தை மனைவியிடம் கொட்டினார் கோபாலன்.

இரவில் மனைவியின் அக்காவுடன், அவள் மகனும் வீட்டிற்கு வந்திருந்தபோது, அவர்களிடம் பேசாமலேயே உட்கார்ந்திருந்தார் கோபாலன். கோவிந்த் தானாக வந்து விளக்கம் சொன்னான்.‘‘கோமதி கல்யாணத்துக்குத்தான் பணம் எடுக்கறீங்கனு எனக்குத் தெரியும் சித்தப்பா.

உங்களுக்கு முன்னால வந்து, வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கறவங்களை முந்தி உங்களுக்கு பணம் கொடுத்தா, அவங்கள்ல சிலர் கோபத்துல வாய்க்கு வந்தபடி திட்டவும் சபிக்கவும் வாய்ப்பு இருக்கு. சுபநிகழ்ச்சிக்கு பணம் எடுக்கும்போது, அந்த மாதிரி பேச்சுகள் எதுக்குனுதான் முன்னுரிமை தரலை. தப்பா நினைச்சுக்காதீங்க...’’சலுகைகள் பக்க விளைவுகளுக்கு உட்பட்டவை என்பதை உணர்ந்த கோபாலன், இறுக்கம் தளர்ந்தார்.

எஸ்.ராமன்