பொண்டாட்டிதாசன்



‘ஏய், ரமா! பேங்க்ல நம்ம ஜாயின்ட் அக்கவுன்ட்ல இருந்து என்னைக் கேக்காம பத்தாயிரம் பணம் எடுத்திருக்கே... என்ன நீயும் சம்பாதிக்கிறேங்கற திமிரா?’’ - கோபம் கொப்பளிக்கக் கேட்டான் மாதவன்.‘‘ஆமா, எடுத்தேன். அதுக்கு எதுக்கு கேக்கணும்? தாலியைக் கட்டிட்டா நான் உங்க அடிமையா? ஈக்வல்-ஈக்வல் பார்ட்னர்!’’ - வெடுக்கென்று பதிலளித்தாள் ரமா.

அவன் பேச, இவள் பேச, வாக்குவாதம் வளர்ந்துகொண்டே போனது.எல்லாவறையும் பார்த்துக்கொண்டிருந்த ரமாவின் மாமியார் செல்லம்மாள், ‘‘என்ன நீ! புருஷன்னு கொஞ்சம்கூட மரியாதையில்லாம சரிக்கு சரியா வாயாடிட்டு இருக்கே?’’ என்றாள் அதட்டலாக!
இருவரையும் முறைத்துவிட்டு வேகமாய் உள்ளே போனாள் ரமா.

அன்றிரவு படுக்கையறையில்.‘‘ரமா, நீ கோபமா இருப்பேனு புரியுது. ஆனா, காலைல நான் அப்படி சத்தம் போட்டதெல்லாம் வெறும் நாடகம்!’’ என்றான் மாதவன்.‘‘நாடகமா?’’‘‘ஆமா ரமா. என் தங்கச்சி வாசுகிய அவ புருஷன் கண்டபடி டார்ச்சர் பண்றான். அவ நரக வாழ்க்கை வாழறா. நாம அன்னியோன்யமா வாழறதைப் பார்த்தா, ‘நம்ம பொண்ணு அங்கே கஷ்டப்படுது.

இங்கே மருமக சந்தோஷமாயிருக்கா. மகன் பொண்டாட்டி தாசனாயிருக்கான்’னு எங்கம்மா ஆதங்கப்படுவாங்கல்ல! அதான் நாடகமாடினேன். சாரி டார்லிங்!’’‘‘உங்க மனசைப் புரிஞ்சிக்காம நானும் உங்களைக் கன்னாபின்னானு பேசிட்டேன். நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!’’
படுக்கையறை விளக்கு அணைந்தது.

எஸ்.சுந்தரேசன்