பழக்கம்



‘‘என்னங்க ஆச்சு உங்களுக்கு? ஒரு மாசமா கவனிக்கிறேன்... உங்க பெரியப்பா இறப்புக்கு போயிட்டு வந்ததில் இருந்து ஆளே மாறிட்டீங்க? வழக்கமா வர்ற கோபம், சிடுசிடுப்பு, எரிச்சல் எதுவுமே இல்ல. யாரையும் கிட்டக்க சேர்க்காதவர், எல்லார்கிட்டயும் அன்பா பழகுறீங்க..?’’ - கணவன் பாண்டியனிடம் சரசு கேட்டாள்.

‘‘எங்க பெரியப்பாவோட இறப்புதான்டி என்னை மாத்திடுச்சு. அவர் யார்கிட்டயும் ஒட்ட மாட்டார். உறவுகளை வெறுத்தார். நண்பர்களை சேர்க்க மாட்டார். அவர் இறந்தப்போ மனுஷங்களே வரலை. கிட்டத்தட்ட ஒரு அனாதைப் பிணமாத்தான் போனார். அதைப் பார்த்ததும்தான் இப்படி மாறிட்டேன்!’’‘‘அப்படியா, ரொம்ப சந்தோஷங்க!’’ சரசு மகிழ்ந்து போனாள்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை. டூ வீலரில் போகும்போது ஆட்டோ இடித்து லேசான காயங்களுடன் வீடு வந்து சேர்ந்தான் பாண்டியன். அன்று சாயங்காலம் வரிசையாக ஏழெட்டுப்பேர் அவனை வந்து பார்த்து அன்போடு விசாரித்துவிட்டுப் போனார்கள்.

‘‘அடடா, ஒரே மாசத்துல உங்களுக்குனு இவ்வளவு மனுஷங்க சேர்ந்திருக்காங்களே... உண்மையிலயே இது நல்ல மாற்றம்ங்க!’’ என்றாள்.
‘‘அடிப் போடி... இப்ப என்னை வந்து பார்த்த எல்லோரும் யாருனு நினைச்சுக்கிட்டு இருக்கே? வந்தவங்க எல்லார்கிட்டயும் கைமாத்தா பணம் வாங்கியிருக்கேன்டி!’’ - பாண்டியன் பரிதாபமாகச் சொன்னான். குழம்பிப் போனாள் சரசு!

ராஜன்புத்திரன்