ஃபேண்டஸி கதைகள்



செல்வு@selvu

டிஜிட்டல் டிராவல்!


ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லலாம்; பைக்கில், பஸ்ஸில், விமானத்தில், கப்பலில் என்று பயணிக்கலாம். செல்லும் விதம் மற்றும் தூரத்திற்குத் தகுந்தவாறு பயண நேரம் மாறுபடும். இந்த பயண நேரத்தை மிச்சப்படுத்தவே பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்களுக்காக, நொடியில் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்குப் பயணம் செய்வதை சாத்தியமாக்கும் அற்புதக் கண்டுபிடிப்பாக அது பேசப்பட்டது.

ஒரு கேமராவும், கொஞ்சம் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் சேர்த்து அந்தக் கண்டுபிடிப்பு உருவாகியிருந்தது. ‘டிஜிட்டல் டிராவலிங்’ என்பது இந்தக் கண்டுபிடிப்பு! அவர்களிடம் இருக்கும் ஒரு விசேஷ கேமராவால், பயணம் செய்யும் நபரையோ அல்லது பொருளையோ ஒரு போட்டோ எடுப்பார்கள், அவ்வளவுதான்! அவ்வளவுதான் என்றால் அவ்வளவுதான். உங்களின் பௌதிக அல்லது பஞ்சபூதங்களால் ஆன இந்த உடல், ஒரு போட்டோவாக அவர்களின் கேமராவில் உட்கார்ந்துவிடும்.

எந்தவொரு கேமராவில் போட்டோ எடுத்தாலும் அதுதானே நடக்கிறது என்று கேட்கலாம். ஆனால், மற்ற கேமராக்களில் போட்டோ எடுக்கும்போது உங்களின் உருவம் மட்டுமே அதில் பதிவாகும். உங்களின் உடல் அப்படியே வெளியில்தான் இருக்கும். ஆனால் இந்தக் கேமராவில் போட்டோ எடுத்தால், உங்களின் உண்மையான உடலே போட்டோவாக மாறி அந்தக் கேமராவில் நுழைந்துவிடும். அப்படிக் கேமராவில் ஒரு போட்டோவாக உருமாற்றமடைந்த உங்களை, இமெயிலில் நீங்கள் சென்று சேர விரும்பும் இடத்திற்கு அனுப்பிவிடுவார்கள். அங்கே இதே போன்ற மற்றொரு வெறித்தனமான கருவி இருக்கும். அதில் டவுன்லோடு செய்தால் நீங்கள் அங்கே அந்த இடத்தில் இருப்பீர்கள். அவ்வளவுதான்!

இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு ‘விமான நிலையங்களில் எல்லோரும் ஈ ஓட்டிக் கொண்டிருக்க நேரலாம்’ என்று பேச்சு அடிபட்டது. பின்னே, விமானத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்ல கிட்டத்தட்ட 20 மணி நேரம் ஆகின்றது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பின் படி, இங்கே ஒரு க்ளிக்... அங்கே ஒரு க்ளிக்...

ஒரே நிமிடம்! ஒரு நிமிடம் கூட வேண்டாம். அலுவலக டீ டைமில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று, ஒரு டீ குடித்துவிட்டு, திரும்பவும் இந்தியா வந்துவிடலாம். அப்படியிருக்கும்போது விமான நிலையங்கள் எதற்கு? விமானங்கள் எதற்கு? காத்திருப்புகள், சோதனைகள் எல்லாம் எதற்கு? பாஸ்போர்ட், விசா குளறுபடிகள், இத்யாதி... எல்லாமே ஒரே க்ளிக்கில் முடியும்போது யார்தான் அந்த க்ளிக்கை விரும்ப மாட்டார்கள்?

இப்படியான ஒரு சேவையை அந்தக் குறிப்பிட்ட நிறுவனம் உருவாக்கி, மிகச் சிறப்பாக அதனை இயக்கியும் வந்தார்கள். மக்கள் கூட்டம் பிய்த்துக் கொண்டது. இதில் அதிவேகம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறப்பம்சம் அல்ல. விமானத்தில் சென்றால் ஆகும் கட்டணத்தில் பத்தில் ஒரு பங்குதான் வசூலிக்கப்பட்டது. மக்களின் கொண்டாட்டத்தை யாராலும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

தூர தேசப் பிரயாணங்கள் எல்லாம் வெறும் கனவாகவே போய்விடுமோ என்றெண்ணியிருந்த பெரும்பாலான மக்களுக்கு இந்தச் சேவை மாபெரும் அதிர்ஷ்டமாக உருவெடுத்தது. ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்கத்து ஊர்களுக்குப் போய் வருவதே பெரும் கொடுமையென்று நினைத்திருந்த எல்லோருமே பக்கத்துப் பக்கத்து நாடுகளுக்கு டிஜிட்டல் டேட்டாவாக மாறிப் பறந்தார்கள். அங்கே ஒரு பொழுதைக் கழித்துவிட்டு அடுத்த நொடியே உற்சாகமாக ஊருக்கும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சேவையை சின்னச் சின்ன கிராமங்களுக்கும் அந்த நிறுவனம் கொண்டுபோய்ச் சேர்த்தது. ஒவ்வொரு கிராமத்திலும் டிஜிட்டல் டிராவல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு, அவை யாவும் ஒரே நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டன.

எல்லாம் சரிதான். ஆனால், எந்தஒரு கண்டுபிடிப்பும் பிரச்னைகள் இல்லாமல் இருக்காதில்லையா? அப்படி இதிலும் ஒரு பிரச்னை முளைத்தது. ஒருநாள் டிஜிட்டல் டிராவலில் போட்டோவாக மாறி வெவ்வேறு தேசங்களுக்குப் பயணித்த பலர், தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்கு நீண்ட நேரமாகியும் போய்ச் சேரவில்லை. கிளம்பிய இடத்திற்கும் திரும்பி வரவில்லை.

எங்கே போனார்கள் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதே சமயத்தில் கிளம்பிய எண்ணற்ற பலர் போக வேண்டிய இடத்திற்குப் போயிருந்தார்கள். வரவேண்டியவர்கள் வந்திருந்தார்கள். பயணித்த ஆயிரம் பேரில் ஒருவர் திரும்ப வராவிட்டாலும் பிழை பிழைதானே. என்ன நேர்ந்தது என்று அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளும், எஞ்சினியர்களும் முதலில் பொறுமையிழந்தும், பின்னர் பொறுமையாகவும் யோசித்துப் பார்த்தார்கள். ஒன்றுமே புரியவில்லை!

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பெல்லாம் இதில் செய்வது அபத்தம். திட உடலாக, அறுபது கிலோவோ, எண்பது கிலோவோ எடையுடன் இருக்கும் ஒரு நபர் காணாமல் போனார் என்பதில் லாஜிக் இருக்கிறது. இது ஒரு டிஜிட்டல் போட்டோ.

வெறும் பூஜ்ஜியமும் ஒன்றுமான சங்கதி. அதைக் காணோமென்றால் எங்கிருந்து எடுப்பது? மெயிலில் அனுப்புவது போன்ற தொழில்நுட்பம்தான் என்றாலும், அதே மெயிலைத் திரும்பவும் நமக்கே அனுப்பி, அதிலிருக்கும் போட்டோவை டவுன்லோடு செய்கின்ற வேலையெல்லாம் இதில் ஆகாது. ஒருமுறை அனுப்புவது மட்டுமே சாத்தியம்! அதனால், காணாமல் போனவர் என்றால் அது இந்த மலேசிய விமானம் காணாமல் போன சங்கதியைப் போன்றதுதான்!

இப்படி எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்று லிஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கண்டிப்பாக இப்படி ஒரு சூழலில் அழைப்பவன் வில்லனாகத்தான் இருப்பான் என்பதால், அவன் வில்லனேதான். அவர்களின் நெட்வொர்க்கை தான் ஹேக் செய்துவிட்டதாகவும், காணாமல் போன சில நபர்கள் அல்லது போட்டோக்கள் தன்னிடம்தான் இருப்பதாகவும் கூறினான்.

அதிர்ந்துவிட்டார்கள். யாராலும் ஹேக் செய்யவே முடியாத தொழில்நுட்பம் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லித்தான் இந்தச் சேவையை அவர்கள் தொடங்கியிருந்தார்கள். இப்படி ஒரு வில்லன் முளைப்பான் என்று அவர்கள் மனதில் சின்ன யோசனைகூட செய்தது இல்லை.

அவன் உண்மையைத்தான் சொல்கிறானா என்பதை எப்படி அறிவது? அவனே அதற்கும் ஒரு வழி சொன்னான். தன்னிடம் இருக்கும் ஒரு போட்டோவை இவர்களுக்கு அனுப்பினான். போட்டோவாக வந்து, பின்னர் மனிதனாக மாறின அந்த நபருக்கு, எங்கே இருக்கிறோம் என்றே முதலில் குழப்பமாக இருந்தது.

கடிகாரத்தைப் பார்த்தார். இங்கிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்வதற்கு எதற்கு நான்கு மணி நேரம் ஆனதென்று கூட குழப்பமாக இருந்தது. உண்மையில் அது ஆஸ்திரேலியா இல்லையென்பதையும், அது அதே சென்னைதான் என்றும் புரிய வந்தபோது, அவரிடம் அவர்கள் நடந்த விவரங்களை  சுருக்கமாக ஃப்ளாஷ்பேக் ஓட்டியிருந்தார்கள்.

அதற்குள்ளாக அந்த வில்லன் மறுபடியும் அழைத்திருந்தான். அவன் மறுபடியும் போன் செய்கிறேன் என்றோ, ‘எனக்குக் கார் வேண்டும், காசு பணம் வேண்டும்’ என்றோ மொக்கை போடவில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தான். அதாவது, இவர்களிடம் இருக்கும் அந்த விசேஷ கேமரா ஒன்று தனக்கு வேண்டும், அவ்வளவே! அவனை உடனே சுட்டுக் கொன்றுவிடலாம் என்றாலும், பல முக்கியமான வி.ஐ.பி.க்களை அவன் டவுன்லோடு செய்து வைத்திருந்தான். அவர்களை மீட்டுத்தான் ஆக வேண்டுமென்பதால், அவன் கேட்டதைக் கொடுப்பதில் இருக்கும் சிக்கல்களை ஆராய்ந்தார்கள்.

அந்தக் கேமராவை அவனுக்குக் கொடுப்பதில் இருக்கும் சிக்கல்களைத் தனியாக விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதில் படமெடுத்தால் அதில் பதிவாகிற நபர் போட்டோவாக மாறிவிடுவார். மறுபடியும் அவர்களிடம் இருக்கும் இயந்திரத்தில் டவுன்லோடு செய்தால்தான் மீண்டும் அவருக்கோ, அந்தப் பொருளுக்கோ நிஜ உடல் கிடைக்கும்.

அப்படியிருக்கும்போது ஒரு வில்லனிடம் இது போன்ற சக்திகள் கிடைத்தால் என்னவாகும்? இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் கையில் அணுகுண்டு கிடைத்திருந்தால் என்னவாகியிருக்குமோ, அதே போன்ற அழிவுதான் இதனாலும் உருவாகும். பார்க்கிற நபரை எல்லாம் போட்டோவாக எடுத்து, கிழித்துப் போடுவான். எத்தனை பேரை வேண்டுமானாலும் அப்படிச் செய்யலாம், இல்லையா? அதை வைத்தே எல்லோரையும் மிரட்டலாம். என்ன செய்வது?

ஆனாலும் வேறு வழிகளே இல்லை. அவன் சொன்னதைப் போலவே அத்தனை பாதுகாப்புடன் அவனுக்கு அந்த விசேஷ  கேமராவை அனுப்பி வைத்தார்கள். அவனும் தான் டவுன்லோடு செய்துவைத்திருந்த போட்டோக்களை திரும்ப அனுப்ப ஒப்புக் கொண்டான். இவர்கள் அனுப்பியிருந்த கேமரா ஒரு மரப்பெட்டிக்குள் மிகப் பாதுகாப்பாக அவனிடம் வந்தடைந்தது.

அந்தப் பெட்டியை ஆவலுடன் திறந்தபோது அதிலிருந்து க்ளிக் என்ற சத்தத்துடன் ஒரு ஒளி வந்தது. அந்த போன்கால் வில்லன் இப்பொழுது ஒரு போட்டோவாக மாறி அந்தக் கேமராவில் பதிவானான். அவர்கள் இவனுக்குக் கேமராவை அனுப்பும்போதே, அந்தப் பெட்டியைத் திறந்ததும் அது போட்டோக்களை எடுக்குமாறு செட் செய்திருந்தார்கள்.

‘வில்லனானவன் தோற்க வேண்டும்’ என்கிற நியதியின்படி, உடலும் சதையுமாக இருந்தவன் இப்பொழுது வெறும் எலக்ட்ரானிக் சிக்னலாக - இரண்டு இஞ்ச் போட்டோவாக மாறிவிட்டிருந்தான். அதன்பிறகு இன்னும் பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, யாராலும் ஹேக் செய்யமுடியாதபடிக்கு அதன் தகவல்கள் ரகசியக் குறியீடுகளில் அனுப்பப்பட்டன. ரகசியம் என்பதே உடைப்பதற்காகத்தான் என்பதால் அதையும் யாரேனும் எதிர்காலத்தில் முறிக்கலாம்!

அலுவலக டீ டைமில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்று, ஒரு டீ  குடித்துவிட்டு, திரும்பவும் இந்தியா வந்துவிடலாம். அவனை உடனே சுட்டுக் கொன்றுவிடலாம் என்றாலும், பல முக்கியமான வி.ஐ.பி.க்களை அவன் டவுன்லோடு செய்து வைத்திருந்தான்.