வீட்டு வேலை செய்யாத மனைவிக்கு சிறை தண்டனை!



விநோத ரஸ மஞ்சரி

‘‘இந்தப் பெண் வீட்டில் சோறு பொங்கவில்லை, தரையைத் துடைக்கவில்லை, பாத்திரம் துலக்கவில்லை. குடும்பப் பெண்ணுக்கான கடமைகள் எதையும் செய்யாததால் இவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்!’’ - நல்லவேளை, நம்ம ஊர் கோர்ட்டில் இப்படி எந்த வழக்கும் வரவில்லை. இது நடந்திருப்பது இத்தாலியில்!

இத்தாலியின் சொன்னினோ பகுதியைச் சேர்ந்தவர் அல்டோபெல்லி. இவர்தான் தன் மனைவி அன்னா டெல் போனோ மீது இப்படியொரு புகாரை அளித்திருக்கிறார். 20 வருட இல்லற வாழ்க்கையில் இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஆனால், தன்னையும் தன் பிள்ளைகளையும் ஒரு இல்லத்தரசியாக கவனித்துக்கொள்ள அன்னா தவறிவிட்டார் என்பது அல்டோபெல்லியின் குற்றச்சாட்டு.

இத்தாலி நாட்டு குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின்படி ஆணோ, பெண்ணோ குடும்பக் கடமைகளை ஆற்றவில்லையானால் தண்டனை உண்டு. ஆனால், இதுவரை பெண்கள் மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை.‘‘என் மனைவி ஒரு பொறுப்பற்ற ஆண் போல முரட்டுத்தனம் காட்ட ஆரம்பித்துவிட்டாள். நானோ ஒரு பலவீனமான பெண் போல அவளால் பாதிக்கப்பட்டேன். என் பிள்ளைகளும் அவளால் அவதிப்பட்டார்கள். அதனால்தான் புகார் தர வேண்டிய அவசியம் ஏற்பட்டது!’’ என்கிறார் அல்டோபெல்லி.

குடும்பப் பொறுப்புகளை கவனிக்காதது மட்டுமல்லாமல், கணவனை அடித்துக் காயப்படுத்தியது, பாத்திரங்களை வீசித் தாக்கியது, படுக்கை அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு வெளியே நிறுத்தியது, தண்ணீரை முகத்தில் ஊற்றியது என அன்னா மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் அல்டோபெல்லி.

ஆணும் பெண்ணும் சமம்... யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்ற கலாசாரம் பரவிவிட்ட மேற்குலகில் எந்த அனுதாபமும் இன்றி அன்னாவுக்கு ஆறு வருடம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்கிறார்கள்.கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே... ஓஓ!

- ரெமோ