ராசி



‘‘ஏன்டா இவ்ளோ அப்செட் ஆகி உட்கார்ந்திருக்கே?’’ - துரைசிங்கத்திடம் நண்பன் முருகேசன் கேட்டான். ‘‘ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்...’’ பதறிவிட்டான் முருகேசன். ‘‘என்னடா... யாருக்கு என்ன ஆச்சு?’’‘‘யாருக்கும் ஒண்ணும் ஆகலை. இன்னிக்கு என் சின்ன பையனோட பிறந்த நாள். அவனை அழைச்சிட்டு காருல கேக் வாங்கப் போனேன்.

மெயின் ரோட்டுக்கு வரும்போது குறுக்கே ஒரு ஆடு வந்துச்சு. அது மேல ஏத்தாம இருக்க பிரேக் போட்டேன். பையன் தடுமாறி கார் கண்ணாடியில மோத, கண்ணாடி உடனே உடைஞ்சிடுச்சு. நல்லவேளையா பையனுக்கு ஒண்ணும் ஆகலை. ராசி இல்லாத காருடா. பையனுக்கு பிறந்த நாளும் அதுவுமா ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு. அதான் காரை வித்துடலாம்னு இருக்கேன்!’’ - துரைசிங்கம் விரக்தியாய் பேசினான். அதைக் கேட்டு சட்டென சிரித்துவிட்டான் முருகேசன்.

‘‘ஏன்டா சிரிக்கறே?’’சற்று நிதானமாக அவனுக்கு பதில் சொன்னான் முருகேசன்.‘‘நீ உன் கார் ராசி இல்லைனு நினைக்கிற! ஆனா, பாரு... அதுதான் உன்னைக் காப்பாத்தியிருக்கு. ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. கண்ணாடி கூட உடைஞ்சிருக்கு. ஆனா, பையனுக்கு துளி காயம் படலை. அப்ப அந்தக் காரு ராசியான கார்தானே. எதையும் நேர்மறையா பாக்கறதுக்கு கத்துக்கோ!’’ என்று முருகேசன் கூற... துரைசிங்கம் முகத்தில் குழப்பம் நீங்கி புன்னகை மலர்ந்தது.

வி.சகிதா முருகன்