தெளிவு பெறு ஓம்



வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க எது முக்கியம்?

- சந்தானம், கோவை.

பதில்: நம்பிக்கை (Faith) தான் முக்கியம். நம்பிக்கையில்தான் மனித வாழ்க்கையே இருக்கிறது. பூரண நம்பிக்கை இல்லாமல், ஒரு அடிகூட முன்னேற முடியாது. யானையின் பலம் தும்பிக்கையில் இருப்பது போல, மனிதர்களின் பலம் நம்பிக்கையில் இருக்கிறது. அதனால்தான் எந்த நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள் என்கிறார்கள்.

?வழி முக்கியமா? பயன் முக்கியமா?
 - வி.ஆர்.யோகாநந்தன், மலைக்கோட்டை - திருச்சி.

பதில்: பொதுவாக, நாம் எதைச் செய்தாவது, எந்த வழியிலாவது (at any cost) பலனை அடைய வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால், ஆன்மிகம் இதை ஏற்றுக் கொள்வதில்லை. பலன் கிடைக்காவிட்டாலும், வழி சரியாக இருந்தால் அது வெற்றிக்கு சமானம் என்கிறது. 

விவேகானந்தர் இது குறித்து மிக அற்புதமாகத் தெரிவிக்கிறார்; “செயலின் பலன் மீது செலுத்தும் அதே அளவு கவனத்தை, அந்தச் செயலை செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும் என்பது என் வாழ்வில், நான் கற்ற உயர்ந்த பாடங்களில் ஒன்று” என்கிறார். நாம் அனைவரும் விவேகானந்தரின் வழியைத்தான் பின்பற்ற வேண்டும்.

?கேள்வி: நாம் நேரடியாக பக்தி செலுத்தி இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறலாமே? இதற்கு குருவின் துணையோ, அடியார்களின் துணையோ அவசியம் இல்லையே? ஆனால் சைவம், வைணவம் என சமய நெறிகள் அடியார் மற்றும் குருவின் துணையை வலியுறுத்துகிறதே?
 - சுப பத்ரி நாராயணன்,சிதம்பரம்.

பதில்: பசுமாடு நம்முடையதாக இருந்தாலும், அது தானாகப் பால் கறப்பதில்லை. கன்று குட்டி அருகில் இருந்தால்தான் கறக்கும். அதுபோல், அடியார்களின் துணையில்லாமலோ குருமார்களின் துணை இல்லாமலோ இறை அருளைப் பெற முடியாது. ஏன், இறைவனே ஒரு குருவாக வந்துதான் அருள்கிறான். 

இதை பெரியாழ்வார், ‘‘பீதக ஆடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து’’ என்று பாடியிருக்கின்றார். அருணகிரிநாதர், ‘‘குருவாய் வருவாய் அருள்வாய் முருகா’’ என்றுதான் பிரார்த்திக்கின்றார். நாம் இதில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதைவிட, அருணகிரிநாதரும், பெரியாழ்வாரும் கூறிய வழிமுறையைப் பின்பற்றுவது எளிமையானது. நம்பகமானது.

?அறிவை அடைவதற்கு என்ன வழி?
 - திண்டுக்கல் ராமமூர்த்தி.

பதில்: தெரியாது என்று உணர்வதுதான் அறிவை அடைவதற்கான ஒரே வழி, காலி டம்ளரில்தான் நீரை நிரப்ப முடியும். ‘‘அறிதோறு அறியாமை கண்டற்றால்’’ என்று ஆன்றோர்கள் (வள்ளுவர்) கூறியிருக்கின்றார்கள். நாம் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்கின்ற பொழுது, ‘‘அடடா, இந்த விஷயம், இதுவரை நமக்கு தெரியாமல் போய்விட்டதே’’ என்று நினைக்க வேண்டும். அப்பொழுதுதான் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

?பணம்தான் சந்தோஷத்தைத் தரும் என்கின்றார்களே, உண்மையா?
 - விமலா சுப்புரத்தினம்,வேளச்சேரி - சென்னை.

பதில்: அது உண்மை போல் தெரியும்; ஆனால் உண்மை அல்ல. பணமும் சந்தோஷத்தைத் தரும் என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பணம் மட்டுமே சந்தோஷத்தைத் தந்துவிடும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி இருந்தால், நிறைய பணம் வைத்திருக்கக் கூடிய பணக்காரர்களும், சந்தோஷமாக அல்லவா இருக்க வேண்டும். நடைமுறையில் அப்படி இல்லையே. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோரும் பணக்காரர்கள்தான்.
 
?வேத அறிவு இருந்துவிட்டால் நாம் ஆன்மிகத்தில் உயர் நிலையை அடைந்துவிட முடியுமா?
 - வினோத்குமார், திருநெல்வேலி.

பதில்: அது துணைபுரியும். ஆனால் வெறும் வேத படிப்பில் ஆன்மிகம் வந்து விடாது. இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் மிக அருமையான விளக்கம் தருகின்றார். பஞ்சாங்கத்தில் இவ்வளவு மரக்கால் மழை பெய்யும் என்று போட்டிருக்கும். 

பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் அதிலிருந்து நீர் வருமா? ஒரு சொட்டு நீர்கூட வராது. வேதங்களையும் நீதி நூல்களையும் படித்தாலும், அவற்றின்படி நடக்காவிட்டால் என்ன பயன்? இதை வள்ளுவரும், ‘‘கற்க கசடற; கற்றபின் நிற்க அதற்குத் தக’’ என்றார். வேதத்தைப் படிப்பதைவிட, வேதத்தில் சொன்னபடி நடப்பது உயர்வானது.

?ஆசாரமாக இருப்பது மட்டும் போதுமா? அதுவே ஆன்ம உயர்வைத் தருமா?
 - தனுஷ்குமார்,மணச்சநல்லூர் - திருச்சி.

பதில்: இதற்கு ஒரு சம்பவம் சொன்னால் சரியாக இருக்கும். பராசர பட்டர் திருக்கோஷ்டியூர் எம்பெருமானை தரிசனம் செய்து கொண்டு அந்த திருத்தலத்திலேயே எழுந்திருந்த காலம். அவருக்கு இரண்டு சீடர்கள். ஒருவர் பெயர் தெற்காழ்வான். இன்னொருவர் கோளரியாழ்வான். இவர்களில் கோளரியாழ்வான் மிகுந்த ஆசாரத்தைக் கடைபிடிப்பவர். 

ஒரு புண்ணிய தினம். திருக்கோஷ்டியூர் திருக்குளத்தில் (தேவ புஷ்கரணி என்று பெயர்) நீராடி ஆசாரமாக வந்து கொண்டிருந்தார். தெற்காழ்வான் வழக்கம் போல் படித்துறையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தார். அவரிடம் இவர் கேட்டார்.‘‘இன்று புண்ணிய தினமாயிற்றே. இன்றாவது திருக்குளத்தில் நீராடக் கூடாதா? பாவங்கள் எல்லாம் தொலையுமே?’’
என்றார். தெற்காழ்வான் சிரித்தார்.

‘‘ஏன் சிரிக்கிறீர்?’’
‘‘இத்திருக்குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் போய்விடும் என்று சொன்னீரே. அதை எண்ணி சிரித்தேன்.’’
‘‘ஏன் பாவங்கள் போகாதா?’’

‘‘எப்படிப் போகும்? நான் செய்துள்ள பாவங்கள் ஒன்று இரண்டு முழுக்கால் போய்விடுமா? அந்தப் பெருமானின் கை ஆழி என்னும் சக்கரப்படையால் போக்கினால் தான் போகும். வெறும் முழுக்கால் போய்விடுமா, என்ன?’’ இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார் பராசரப்பட்டர்.‘‘இவர் உள்ளத்தில்தான் எத்தனை வைராக்கியம், ஞானம்?’’ என்று வியப்படைந்தார். பக்திக்கு ஞானத்திற்கு சேர்ந்த ஆசாரம் இருக்க வேண்டும்.

?ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று சொல்கிறார்களே, குழந்தை பிறந்தது நல்ல விஷயம்தானே?
 - செல்வி. பிரியா, சென்னை.

பதில்: நம் சமய மரபில் தீட்டு என்கிற ஒரு விஷயம் உண்டு. இந்த விஷயத்தை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். ஒன்று சுபத் தீட்டு. இன்னொன்று அசுபத்தீட்டு. மரணம் போன்ற நிகழ்வுகளில் வரும் தீட்டு அசுபத் தீட்டு. 

இது இறந்தவர்களோடு கொண்ட பல்வேறு உறவுகளின் அடிப்படையில் ஒரு நாள், மூன்று நாள், பத்து நாள், பதினாறு நாள் என்று வரும். அதைப் போலவே, வீட்டில் குழந்தை பிறந்தால் அதனை சுபத் தீட்டு என்பார்கள். இதுவும் அந்தக் குழந்தையோடு கொண்ட உறவுக்குத் தகுந்தபடி நாள்கள் மாறும். இதை பெரியவர்களிடம் கேட்டு கடைபிடிக்க வேண்டும்.

?பக்தியில் நாம் எதையாவது ஒன்றை எதிர்பார்த்து கோயிலுக்குச் செல்வது அத்தனை உயர்வானது இல்லை என்று சொல்கிறார்
களே?
 - பரத்கல்யாண், வேலூர்.

பதில்: உண்மைதான் பக்தியில் காமிய பக்தி என்றும் நிஷ் காம்ய பக்தி என்றும் சொல்வார்கள். காமிய பக்தி என்பது ஒரு குறிப்பிட்ட பலனுக்காக நேர்த்திக்கடன் இருப்பது, கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொள்வது போன்றவற்றைச் சொல்லலாம். நிஷ்காமிய பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காமல் பக்தி செய்வது. 

இது உயர்ந்த நிலை. இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். நாம் விரும்பியது கிடைப்பதற்காகத்தானே கோயிலுக்குப் போகிறோம். நிஷ்காமிய பக்தியால் என்ன பலன்? என்று கேட்கலாம். ஆனால் ஒரு சூட்சுமம் உண்டு. காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டும்தான் கிடைக்கும். நிஷ்காம்ய பக்தியில் நீங்கள் கேட்டது மட்டுமல்ல, கேட்காததும் கிடைக்கும். உங்களுக்கு நன்மை தருகின்ற அத்தனை விஷயங்களும் கிடைக்கும்.

?கோயில் கர்ப்ப கிரகத்தின் முன்னால் விழுந்து வணங்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?
 - கு.வரதராஜு, பெங்களூர்.

பதில்: ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த ஆலயத்தின் வழிபாட்டு விதிகளை நாம் தெரிந்து கொண்டு வழிபாடு நடத்தினால் மிகச் சிறப்பாக இருக்கும். கருவறைக்கு முன்னால் நேரடியாக விழுந்து வணங்குகின்ற முறை ஒரு சில சிறிய கோயில்கள் தவிர வேறு எங்கும் இல்லை.

பிராகாரத்தை வலம் வந்து கொடிமரம் பலி பீடம் முன்னால்தான் விழுந்து வணங்க வேண்டும். பலி பீடத்தின் முன்னால் “என் கெட்ட எண்ணங்கள் அத்தனையையும் பலி கொடுத்து விட்டேன்; உன்னையே நம்பி உன் காலடியில் விழுந்து விட்டேன்” என்று சொல்வது போல விழுந்து வணங்க வேண்டும்.

இன்னொரு விஷயம். மிக அதிகமான கூட்டம் இருக்கக் கூடிய கோயிலில் கருவறைக்கு முன்னால் விழுந்து வணங்குவது என்பது நிர்வாக ரீதியிலும் பல சிரமங்களைத் தரும் அல்லவா. எல்லா அம்சங்களையும் யோசித்துத் தான் சில ஆகம விதிகளைக் கூட நம்முடைய பெரியவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். நம்முடைய வழிபாடு மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.

?ஜுர தேவர் என்று சொல்கின்றார்களே அவர் யார் சிவபெருமானா?
 - ஜி.வி.கோபாலகிருஷ்ணன்,
ராயபுரம், சென்னை.  

பதில்: சிவபெருமான் பார்வதியுடன் ``ஜோதிஷ்கம்’’ எனப்படும் மேரு மலையில் அமர்ந்திருந்தார். அப்போது தட்சன், தான் நடத்தும் யாகத்திற்கு தேவர்களை அழைக்க வந்தான். ஈசனைவிட தானே உயர்ந்தவன் என்ற மமதையில் எல்லோரையும் அழைத்த அவன் சிவனை மட்டும் அழைக்கவில்லை. பார்வதிக்கு வருத்தம். 

தந்தையிடம் நியாயம் கேட்க அங்கு சென்றாள். அங்கு அவளை தட்சன் திட்டியதால் யாககுண்டத்தில் விழுந்தாள். சிவபெருமான் கோபம் கொண்டு, பிநாகம் என்ற வில்லுடன் யாகம் நடத்தும் இடத்திற்கு சென்றார்.

யாக குண்டங்களை அழித்தார். அதுவரை தட்சன் செய்த யாகபலன் ஒரு மானின் வடிவில் வானை நோக்கிச் சென்றது. சிவபெருமான் அதைத் தொடர்ந்து சென்றார். அப்போது சிவனின் நெற்றியிலிருந்து ஒருவியர்வைத்துளி நிலத்தில் அக்னியாக விழுந்தது. இந்த அக்னியிலிருந்து சிவந்த கண்கள், மஞ்சள் நிற மீசை, என பயங்கரமான ``ஜ்வரம்’’ என்ற பூதம் தோன்றியது. யாகம் நடந்த இடத்துக்குச் சென்று யாகத்தை அழித்தது. இதன் உக்கிரத்தைக்கண்ட உயிரினங்கள் சிவனிடம் சரணடைய.

பிரம்மா, ‘‘சிவபெருமானே! முனிவர்களும், தேவர்களும் தங்களை மதிக்காமல் யாகத்தை நடத்தியது தவறு தான். அவர்களை மன்னித்தருள வேண்டும்,” என்றார். பிரம்மனின் வேண்டுகோளை சிவன் ஏற்றார். இந்த ஜ்வர பூதமே ``ஜுரதேவர்’’ என்ற பெயரில் கோயில்களில் இருக்கிறது. இவர் அக்னி வடிவாய் பிறந்தவர் என்பதால், இவருக்கு குளிர்ச்சியைத் தரும் மிளகை அரைத்துப் வழிபாடு செய்கிறார்கள்.

மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்தால் ஜுரதேவருக்கு மிளகு அரைத்து பூசி அவரை குளிர்வித்தால் நமது உடலும் குளிரும் என்பார்கள். சில இடங்களில் இவருக்கு சந்நதி உண்டு. சுசீந்திரம் கோபுரத்தின் மேற்குப்புறம் ஊஞ்சல் மண்டபம் எதிரில் ‘மண்டையடி சாமி’ என்று மக்களால் அழைக்கப்படும் ‘‘ஜுரதேவர்’’ உருவம் உள்ளது.

?சூரிய வழிபாட்டினால் என்ன நன்மை?
 - பூர்ணிமா ராஜ்குமார், பெரம்பூர்.

பதில்: ஆயிரக்கணக்கான நன்மை சூரிய வழிபாட்டினால் உண்டு. அதனால்தான் தினசரி பூஜையின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரத்தைச் சொன்னார்கள். யோக சாஸ்திரத்திலும் சூரிய நமஸ்காரம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆன்றோர்கள் வழிபாட்டு முறைகளை யோக சாஸ்திரத்தோடும் உடல்நலம் சம்பந்தப்பட்ட மருத்துவ விஷயங்களோடும் இணைத்துத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்பதை யோசிக்கும் பொழுது வியப்பாக இருக்கும்.   

உங்களுக்கு வைட்டமின் டி (VITAMIN D12) குறைபாடு இருக்கிறது. அதற்கான மாத்திரைகள் வந்தாலும் மருத்துவர், ‘‘காலையில் ஒரு அரை மணி நேரம் வெயிலில் உங்கள் உடலின் பாகங்கள் படும்படியாக நில்லுங்கள்’’ என்று அறிவுறுத்துகிறார் அல்லவா. மேல் நாட்டினர் இதை சூரியக் குளியல் என்று கடற்கரை ஓரத்தில் சாய்வு நாற்காலி போட்டு படுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் நம்முடைய ஆன்மிகம் தினசரி 15 நிமிடம் கிழக்கே சூரியனைப் பார்த்து, சூரியக் கதிர்கள் உன் மீது படும்படியாக நின்று கொள். குனிந்து வணங்கு என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். சன் பாத் (SUN BATH) விரும்பும் நாம், சூரிய நமஸ்காரத்தை ஆன்மிகம் என்று தள்ளுபடி செய்கிறோம். அதுதான் விஷயம்.

தேஜஸ்வி