அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தரும் அட்சய திருதியை 10:5:2024



சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி ‘அட்சய திருதியை’ என போற்றப்படுகிறது ‘அட்சயம்’ என்றால் வளர்வது, குறையாதது என்றுபொருள். அன்றைய தினத்தில் செய்கிற, ஆரம்பிக்கிற எல்லாகாரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும் என்பது வேதவாக்கு. 
இந்த நாளை பற்றி புராணங்களிலும், நாடிகளிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விஷயங்கள் சொல்லப் பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணரின் பால்ய நண்பர் குசேலன் வறுமையில் வாடுகிறார். கிருஷ்ணரை சந்திக்க முடிவெடுத்து ஒருபிடி அவலை தன் மேலாடையில் முடிந்து கொண்டு புறப்படுகிறார்.

அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பகவான் அவர் அன்போடு கொண்டு வந்த அவலை மகிழ்ச்சியுடன் எடுத்து உண்டு, அந்த அவலின் ருசியில் மகிழ்ந்து ‘அட்சயம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்தினாராம். அதேகணத்தில் குசேலனின் குடிசைவீடு மாடமாளிகையாக மாறுகிறது. அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவரது வீட்டில் குடி கொள்கின்றன. பகவான் கிருஷ்ணர் இன்னொருவாய் சாப்பிட அவலை எடுக்க. மகாலட்சுமியின் அம்சமான ருக்மணி, கிருஷ்ணரின் கையை பிடித்து தடுக்கிறாள். 

‘‘எனக்கு பிடித்த அவலை தின்ன விடாமல் ஏன் தடுக்கிறாய்?‘‘ என்று கிருஷ்ணன் கேட்க. ‘‘ஒருபிடி சாப்பிட்டதற்கே குசேலனின் வறுமை நீங்கி, அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவன் வீட்டில் குவிந்து விட்டது. இன்னும் ஒருபிடி சாப்பிட்டால், மகாலட்சுமியான நானே அவன் வீட்டுக்கு போக வேண்டியதுதான்’’ என்கிறாள் ருக்மணி. இந்த அற்புதம் நிகழ்ந்ததுஅட்சய திருதியை நாள்.

வேறு என்ன சிறப்பு?  

கவுரவர் சபையில் திரவுபதி துகிலுரியப்பட்ட போது ஆடைகளை அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்தநாளே என்கிறது வியாசபுராணம். தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தநாள், சிவனுக்குகாசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்தநாள், ஐஸ்வர்யலட்சுமி அவதரித்தநாள், சங்க நிதி பத்ம நிதியை குபேரன் பெற்றநாள், மகாவிஷ்ணுவின் வலமார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாள் என பல சிறப்புக்களை உடையது அட்சய திருதியைநாள்.

அட்சய திருதியைக்கு என்ன செய்யலாம்?

‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்பது ரமணர் வாக்கு. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள், தர்மங்கள், பலமடங்கு அதிகமாக உதவி செய்தவனுக்கே ஏதாவது ஒருவகையில் திரும்ப கிடைக்கும். மேலும் மேலும் தானதர்மங்கள் செய்கிற அளவுக்கு வளமான வாழ்வையும் நமக்கு ஏற்படுத்தி தரும். அட்சய திருதியை நாளில் நாம் செய்யும் தான தர்மங்கள் நமக்கு புண்ணியத்தை சேர்க்கும்.

இந்நாளில் சுயநலத்துடன் செய்கிறகாரியங்களைவிட, பொதுநலத்துடன் கூடியகாரியங்கள் செய்வது மிகவும் சிறப்பாகும். ஏழை நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். சாலையோரம் வசிப்பவர்களுக்கு வேட்டி, சேலை, போர்வை தானம் தரலாம். ஏழை மாணவர் கல்விக்கு உதவலாம். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு, இனிப்புகள் வழங்கலாம். கோயில்களில் அன்னதானம் செய்யலாம்.

குறிப்பாக, தயிர்சாதம், தேங்காய்சாதம், நீர்மோர், பழங்கள் கலந்த பால்சாதம், பால்பாயசம் போன்றவை வழங்கலாம். இந்தநாளில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். பிரசித்தி பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். குழந்தைகளின் கல்விக்கு தேவையான புத்தகங்கள், நோட்டு, பேனா, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் வாங்கலாம். சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடலாம். வங்கியில் புதுக்கணக்கு ஆரம்பிக்கலாம். டெபாசிட் செய்யலாம்.

புதியபூஜைகள், விரதங்கள், விட்டுப் போன வழிபாடுகள் தொடங்கலாம். தங்கம் மட்டுமின்றி, அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களும் வாங்கலாம். வசதியிருந்தால் பிளாட்டினம், வெள்ளிகூட வாங்கலாம். ஏழை, எளியவர்கள், இல்லாதோருக்கு ஆடை, போர்வை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும். தயிர், பால்சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும்.

ஜெயசெல்வி