பக்தி என்பது என்ன?



வணக்கம் நலந்தானே!

ஆலயத்திற்குச் சென்று பரிகார விளக்குகள் போடுதலா? இரண்டு நிமிடத்தில் நூறாயிரம் விஷயங்களை செய்து கொடு என்று கேட்டுக் கொள்ளுதலா? என் பிள்ளைகளை சௌக்கியமாக வை. நான் உனக்கு வருடா வருடம் மொட்டை போடுகிறேன் என்று பரஸ்பரம் வேண்டிக் கொள்ளுதலா? பண்டிகையின்போது அமர்ந்து ஸ்தோத்திரங்கள் சொல்லி அர்ச்சித்தலா? எது பக்தி?

இவையெல்லாமுமே தன்னை மீறிய சக்தியிருக்கிறது என்கிற நம்பிக்கையின்பால் செய்யப்படும் விஷயங்கள். குழந்தை தாயாரிடம் கெஞ்சியும் அடம்பிடித்தும் கேட்டுப் பெறுவது போன்றது. இதில் தவறில்லை. ஆனால், அங்கேயே நின்று கொண்டிருக்கக் கூடாது. இதில் கடவுளின் மீது பயம் இருப்பதை காட்டுகிறது. ஆனால், கடவுள் எங்கே எனும் தேடலை இது கொடுக்குமா என்று தெரியவில்லை. அதனாலேயே இதை காம்ய பக்தி என்று ரிஷிகள் கூறினார்கள். எது வேண்டுமோ அதைமட்டும் கேட்டுப் பெறுவது?

பகவானே.... நான் காரியங்கள் செய்கிறேன். அதற்குப் பின்னால் நீ இரு என்பது போன்றது இது. பகவானே நான் ஓரமாக இருக்கிறேன். நீதான் காரியங்கள் அனைத்தையும் செய்கிறாய் என்பது வேறு. முதலில் சொன்னதில் அகங்காரம் இருக்கிறது. இரண்டாவது சொன்னதில் பகவான் இருக்கிறார். முதலில் நான் காரியங்கள் செய்ய நீ  உதவு என்பது காம்ய பக்தி. ஆனால், இரண்டாவது சொன்னதில் கடவுளே நீதான் செய்கிறாய் என்கிற சரணாகதி இருக்கிறது. இரண்டாவதில் காம்யம் என்கிற சுயநலம் இல்லாது வெறும் பக்தி மட்டுமே இருக்கிறது.

குருநாதரைப்பற்றி பேசும்போதெல்லாம் உள்ளுக்குள் மெல்லிய ஆனந்தம் பரவுகிறதே, அதுதான் பக்தி. எந்த குருவின் திருவுருவத்தை நினைத்தவுடனே மனம் அடங்கி ஒருமையுற்று மெல்லிய ஆனந்தம் கசிந்து நம்மை ஆட்கொள்ளுகிறதோ அந்த ஆனந்தம்தான் பக்தி. கோபியர்கள் கிருஷ்ணனையே நினைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஏனெனில் அவர்களால் மறக்க முடியவில்லை. கிருஷ்ணப் பிரக்ஞையிலேயே கிடந்ததால் வேறெந்த சிந்தனையும் அவர்களுக்குள் எழவில்லை. வேறெந்த சிந்தனையும் எழாததால் மனமே அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. மனமற்ற இடத்தில் பரமாத்மாவான கிருஷ்ணரோடு கலந்திருந்தனர்.

அப்படிக் கலந்திருக்கும்போது வெளிப்படும் பேரானந்தமே பக்தி. ஆத்ம சொரூபத்தில் தான் எனும் உணர்வு ஒன்றாகும் நிலையின்போது அல்லது ஆத்மாவின் நெருக்கத்தை மனம் உணரும்போது ஏற்படும் ஆனந்தமே பக்தியாகும். அதுவே ஞானமும் ஆகும். இந்நிலையில் எந்த வேண்டுதல்களும் இருக்காது. அப்படிப்பட்ட பக்தியில் மேனியெங்கும் சிலிர்ப்பு பரவியபடி இருக்கும். கண்களில் நீர் பொங்கும்.

இப்படிப்பட்ட பக்தி முதிர முதிர உள்ளுக்குள் அடர்த்தியான மௌனம் நிற்கும். எப்போது வேண்டுமானாலும் நமக்குள் ஓடி அந்த மௌனத்தை பிடித்துக் கொள்ளலாம். ராமகிருஷ்ண பரமஹம்சர், ‘தனிமையில் அமர்ந்து மனஏக்கத்தோடு இறைவனை அழைக்காவிட்டால் இந்த விஷயங்களை கிரகிக்க முடியாது. பக்தியை பெற்றபிறகு இல்லறம் நடத்தலாம். கையில் எண்ணெய் பூசிக்கொண்டு பலாப்பழத்தை வெட்டினால் கையில் பசை ஒட்டாது’ என்று அடிக்கடி கூறுவார்.

இப்படி காதலாகி உள்ளுக்குள் கசிந்துருகுவது கூட இறையருள்தான். இது கூடக்கூட பித்து பிடிக்கும். அதற்குப்பிறகான விஷயமெல்லாம் குருவிற்கும் சீடனுக்கும் அல்லது பக்தனுக்கும் பகவானுக்கும் மட்டும்தான் தெரியும்.

கிருஷ்ணா
(பொறுப்பாசிரியர்)