முருகனருள் பெற்ற அடியார்கள்



*சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் மூவரும் முறையே தேவதேவர், முநி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று முருகனருள் பெற்று  போற்றப்படுகின்றனர்.
*பன்னிரண்டு ஆண்டுகள் முருகப்பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
*முருகப்பெருமானின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன்
இவருக்கு உபதேசம் செய்தருளினான். அக்கோயிலை எழுப்பிய மாமன்னன் இவர்.

*    பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை  உணர்ந்து அவருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
*    பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ என குமரக் கடவுள் கேட்டு  ஔவையாரை திகைக்க வைத்தான் முருகன்.
*    ஆதிசங்கரருக்கு அபிசார பிரயோகத்தால் காசநோய் தாக்கியது. அலைகடல் தாலாட்டும் கரையோரம் கோயில் கொண்டுள்ள
செந்திலாண்டவனை அவர் சுப்ரமண்யபுஜங்கம் எனும் துதியால் துதித்து, பன்னீர் இலை விபூதியைத் தரித்த உடனேயே முருகப்பெருமானின்  திருவருளால் அவர் நோய் நீங்கியது.

*    திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக  முருகப்பெருமான் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று இன்றும் போற்றப்படுகிறார்.
*    ராமலிங்கவள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகப்பெருமான் தரிசனமளித்து ஆட்கொண்டார். இதை ‘சீர்  கொண்ட தெய்வ வதனங்கள்’ எனும் திருவருட்பா பாடல் மூலம் அறியலாம்.
*    திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு திருத்தணியில் கற்கண்டை வாயில் போட்டு  ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த்தனையைப் பாட வைத்தவர்.
*    பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை பேச்சு வராமல் இருந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகனை தரிசித்து ஒரு மண்டலம் விரதம் இருந்து,  உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.

*    மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின்  முருகப்பெருமான் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
*    மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து  முருகனருள் பெற்றார். பிராகார வலம் வரும்போது சிதம்பர சுவாமிகளால் நிறுவப்பட்ட சக்கரத்தைக் காணலாம். இது முருகப்பெருமானுக்கு இணையாக  வழிபடப்படுகிறது.
*    திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகப்பெருமானின் திருவருளால் பொங்கி எனும் பெயரில்  வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர். அந்த பொங்கியே திருமுல்லைவாயிலில் வைஷ்ணவியாக திருவருள்  புரிகிறாள்.
*    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமான் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகப்பெருமான் மேல்  இயற்றியவர். கௌமார மடத்தை நிறுவியவர்.

ந. பரணிகுமார்