தாமற்ற தயாபரர்கள்



திருநீலநக்க நாயனார் -
திருநீலகண்ட யாழ்ப்பாணர் -
முருக நாயனார்  குரு பூசை நாள்: வைகாசி - மூலம் - 7:6:2020


திருநீலநக்கர் நாயனார்

காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது  படைத்தலே அவரது பணி. அயவந்தி என்னும் ஆலயத்தில் பூஜை செய்ய மனைவியோடும் சகல பூஜைப் பொருட்களோடும் சென்று, மன  ஒருமையோடு பூஜை செய்து வந்தார். பூஜை முடித்து மூலவர் முன் பஞ்சாட்சரம்  சொன்ன வண்ணம் இருந்தபோது, ஒரு சிலந்தியானது அதன்  நூல்வலையிலிருந்து நழுவி மூலவர்மேல் விழப்போக, அதனை திருநீலநக்கரின் மனைவி வாயினால் ஊதித் தள்ளினார். இதனைக்கண்ட திருநீலநக்கர்  ஈசன் மேல் தனது எச்சில் படும்படி செய்த காரியத்தைக் கடிந்து மனைவியை மனதால் விலக்கி வைத்தார்.  

மனைவியை விலகுமாறு சொல்லி விட்டு திருநீலநக்கர் தன் இல்லம் புகுந்தார். மனைவியோ இல்லம் வராது அஞ்சி கோயிலில் தங்கினார். அன்று  திருநீலநக்கர் கனவில் ஈசன் தோன்றி அவரது மனைவி ஊதிய இடம் தவிர்த்துப் பிற இடங்கள் சிலந்தியின் எச்சில் பட்டுக் கொப்புளங்களாக  இருப்பதைக் காட்டினார். உடனே எழுந்த திருநீலநக்கர் மறுநாள் காலையில் அயவந்திநாதரை வணங்கி, மனைவியை அழைத்து வந்தார்.  ஒருமுறை சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவரது மனைவி மதங்க சூளாமணியார் மூவரும் தங்கள் ஊருக்கு வருவதை அறிந்து திருநீலநக்கர்  எதிர்கொண்டழைத்தார். அவர்களுக்கு அமுது படைத்ததோடு இரவு தங்குவதற்கான வசதிகளையும் செய்வித்தார்.  அயவந்தி கோயிலில் சம்பந்தர்  பாடிய பதிகங்களில் திருநீலநக்கரைச் சிறப்பித்தார். சம்பந்தரோடு பல திருத்தலங்களுக்குப் பயணிக்க ஆசைப்பட்ட திருநீலநக்கரை தடுத்த சம்பந்தர்,  அங்கிருந்தே சிவப் பணியை செய்யுமாறு பணித்தார்.  அவ்விதமே சேவை செய்த திருநீலநக்கர் திருச்சாத்தமங்கையிலிருந்து திருநல்லூர் சென்று,  பெருமணத்தில் திருஞானசம்பந்தருக்கு வேதவிதிப்படி திருமணம் செய்துவைத்து, பின் பெருஞ்சோதியில் கலந்து சிவப்பேறு பெற்றார்.

இறைவன்: அயவந்தீஸ்வரர்
இறைவி: இருமலர்க்கண்ணம்மை
அவதாரத்தலம்: திருச்சாத்தமங்கை
முக்தித்தலம்: ஆச்சாள்புரம்
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்.

திருநிலகண்டயாழ்ப்பாணர்

சிதம்பரம் அருகே உள்ள எருக்கத்தம் புலியூரில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். காரைக்காலுக்கு அருகே இருக்கும் தருமபுரம் எனும் ஊரில்  பிறந்தவர் மதங்க சூளாமணியார். இவர் யாழ்ப்பாணரின் துணைவியார். யாழிசையால் சிவனை யாழ்ப்பாணர் பணிய, சூளாமணியார் பாடல் இசைத்து  பணிவார். நல்ல இசைக்குடும்பம் என பலரால் அறியப்பட்டவர்கள்.

ஆலவாய் சிவனை யாழிசைத்துப் பணிய அங்கு சென்றார். பாணர் குடி என்பதால் ஆலவாயன் கோயிலின் வாசலில் நின்றவாறே யாழிசைத்த அவரை,  சிவனார் தன் திருமுன் அழைத்துவரச் சொன்னதைக் கேட்ட யாழ்ப்பாணர் நெக்குருகினார். முப்புரம் எரித்த சிவனின் தோற்றம், யானை உரித்தேவர்  வரலாறு, காமதகனம், அரியும் அயனும் அறிய முடியாத அண்ணாமலையார் புராணம், என பலவற்றை யாழில் இசைத்தார். ஈசன் மயங்கினார்.

தரையின் ஈரத்தால் யாழ் நரம்புகள் தளரும் என்பதால் அவருக்கு ஒரு பலகையிடுவீர் என்ற சிவனாரின் மொழிகேட்டு, பொற்பலகை ஒன்று இடப்பட,  அதன் மீது நின்று யாழ் இசைக்கத் துவங்கினார் யாழ்ப்பாணர்.திருவாரூர் வந்த அவர் காலசம்ஹாரமூர்த்தியின் அருளை வாசித்தார். சம்பந்தரை  சீர்காழியில் சந்தித்த யாழ்ப்பாணர், நல்லூர் பெருமணத்தில் பேரொளியில் பலரோடு கலந்து சிவனடி சேர்ந்தார்.இசை என்பது ஒலிகளின் ஒழுங்கான வடிவம். ஓசை என்பது ஒழுங்கற்ற ஒலி.

சரஸ்வதி கையில் வீணை,
சிவன் கையில் உடுக்கை,
விஷ்ணு கையில் சங்கு,
கண்ணன் கையில் புல்லாங்குழல்,
நந்தி கையில் மிருதங்கம்,
நாரதர் கையில் மஹதி, பிருங்கி, தும்புரு…

என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.ஏன் எல்லா இறைவடிவங்களோடும் இசைக்கருவிகள்? ஒலி இல்லையேல் மொழி இல்லை, மொழி  இல்லையேல் தொடர்பு இல்லை. தொடர்பே இங்கு சகலத்திற்கும் அடிப்படை.இறைவனை அடையும் வழியாக இசையை பல ஞானிகள் கூறியுள்ளனர்.  கணவன் மனைவியாக இறையில் கரைய நடத்தும் இசைப்பயணம், யாழ்ப்பாணரின் வரலாறு. இந்த நுண்ணிய பார்வை இன்றைய இல்லறத்திற்கு  தேவையான ஒத்திசைவு எனும் பாடத்தைத் தரும்.

நல்லறமல்லது இல்லறமன்று. திருநீலகண்டத்துப் பாணர்க்கும் அடியேன்.

முருகநாயனார்

திருபூம்புகலூர் பூக்கள் நிறைந்து இருக்கும் சோழநாட்டின் ஒரு ஊர். பூக்கள் என்பதன் அழகே, அதை இறைக்கு அர்ப்பணித்து அணிவிப்பதில்தான்  இருக்கிறது என்பதே முருகநாயனாரின் எண்ணம். மறையவர் குலத்தில் பிறந்தவர். வேதங்களை குறைவறக் கற்றவர். சிவனின் ஐந்தெழுத்தை  உச்சரித்தாலே அன்பினால் அவரது நெஞ்சு உருகிவிடும். பொழுது புலரும் முன் எழுந்து, புனிதநீரில் மூழ்கி நீராடிவிட்டு நந்தவனம் சென்று பூக்களைப்  பறித்து அவைகளை பூக்கூடையில் சேகரித்து, பின்னர் தொடுத்து மாலையாக்க தயாராவார். பூக்களை வெறுமனே மாலையாக்காமல், சதாநேரமும்  பஞ்சாட்சரத்தை உச்சரித்து, கோவை, இண்டை, கண்ணி, பிணையல், தொடையல்  போன்ற பலவிதமான மாலைகளை உருவாக்கி, அவைகளை  நித்தமும் இறைக்கு அர்ப்பணிப்பார்.

(கோவை - கோர்த்த மாலை
இண்டைச்சுருக்கு - ஓர் மாலைவகை
கண்ணி - இருஇரு பூக்களாக இடைவிட்டு தொடுத்த மாலை
பிணையல் - பின்னிய மாலை
தொடையல் - தொடுத்த மாலை)

நேரம் தவறாமல் கோயிலுக்குச் சென்று அந்த மாலைகளை இறைக்கு சாத்தி உரிய அர்ச்சனைகளை முறையாக செய்தார். திருஞானசம்பந்தருடன்  சிறந்த நண்பராகவும் முருகநாயனார் திகழ்ந்தார். இறுதியில், திருல்லூரில் (ஆச்சாள்புரம் - சிதம்பரம் அருகே) நடந்த திருஞானசம்பந்தரின்  பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருகநாயனார், இறைவனின் பேரொளியிலே திருஞானசம்பந்தர் புகுந்தபோது தாமும் புகுந்தார்.

இறைவன்: அக்னிபுரீஸ்வரர்
இறைவி: கருந்தார்குழலி
அவதாரத்தலம்: திருப்புகலூர்
முக்தி தலம்: ஆச்சாள்புரம்
குருபூசை நாள்: அடியார் வழிபாடு
முருகனுக்கும் அடியேன்.

சரஸ்வதி சுவாமிநாதன்