கற்றவர்க்கே சென்றவிடமெலாம் சிறப்பு!



குறளின் குரல்

வள்ளுவர் மாபெரும் கல்வியாளராக இருந்திருக்க வேண்டும். பற்பல மொழிகளை அறிந்தவராகவும் இருந்திருக்கக் கூடும். இல்லாவிட்டால் உலக மொழிகள் அனைத்திலும் ஈடு இணை சொல்ல முடியாத ஒப்பற்ற திருக்குறளை அவரால் எவ்விதம் படைத்திருக்க முடியும்?தம் அறிவுச் செழுமைக்குக் காரணம் தாம் கற்ற கல்வியே என்பதையும் அவர் புரிந்து கொண்டிருப்பார்.

அதனால்தான் கல்வியின் பெருமையை விளக்கியே தம் திருக்குறளில் நாற்பதாம் அதிகாரமாக ஒரு தனி அதிகாரத்தைப் படைத்துவிட்டார். அதில் உள்ள பத்துக் குறள்களும் கல்வி கற்றலின் அருமை பெருமைகளை அழகாகப் பேசுகின்றன.

கற்றால் மட்டும் போதுமா? தான் கற்ற கல்வியின் வழி பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழவேண்டாமா? அப்படி வாழாவிட்டால், பின் கற்ற கல்வியால் என்ன பயன்? எனவே, `கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக!’என்கிற குறளோடு கல்வி என்னும் அதிகாரத்தைத் தொடங்குகிறார்.

  கல்வியின் பயன் கற்றல் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியாளர்களால் எந்த உபயோகமும் இல்லை என்று ராமகிருஷ்ண பரமஹம்
சரும் எவ்வளவு அழகாகக் கூறியிருக்கிறார்!

`பஞ்சாங்கத்தில் மழை எப்போது வரும் என்று போட்டிருக்கும். ஆனால், பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒருசொட்டுத் தண்ணீர் கூட வராது!’ பின்பற்றப்படாத வெறும் தகவலறிவு, மனிதர்களிடையே எந்த வளர்ச்சியையும்  ஏற்படுத்தாது. அத்தகைய ஏட்டுக் கல்வி வீண்.

மொழியறிவு மட்டும் போதாது. கணிதம் உள்ளிட்ட அறிவியலறிவும் தேவை என்பது வள்ளுவர் கருத்து. கலை, அறிவியல் இரண்டிற்கும் சம அந்தஸ்து கொடுத்துப் பார்க்கிறது வள்ளுவரின் உள்ளம்.

`எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.’வள்ளுவர் சொல்லும் எண்ணை மனத்தில் எண்ணி, `எண்ணாலான’ கணிதத்திற்கு `என்னாலான’ சேவை செய்வேன் என்று சிறுவயதிலேயே மாபெரும் கணித மேதையாகத் திகழ்ந்தானே ராமானுஜன்? அவன் வாலிப வயதிலேயே மரித்ததற்கு அவனது வறுமையும் ஒரு காரணம் அல்லவா? நாமகிரித் தாயார் மேல் கொண்ட அவனது அளவற்ற பக்தி அவனுக்குக் கணிதச் செல்வத்தை அருளியது. ஆனால், நீண்ட ஆயுளை வழங்கவில்லை.

பாரதியார், விவேகானந்தர், ராமானுஜன் உள்ளிட்ட பல கல்வியறிவு நிறைந்த மாமேதைகள் முப்பத்தைந்து வயதிற்குள்ளாகவே காலமாக நேர்ந்ததைப் பற்றி என்ன சொல்வது? அவர்களின் விதி என்பதா அல்லது இந்த உலகிற்குக் கிட்டிய பாக்கியம் அவ்வளவுதான் எனக் கொள்வதா?`கண்ணுடையர் என்பவர் கற்றோர்முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.’

என்கிறார் வள்ளுவர். கல்வி அறிவில்லாதவர்களின் முகத்தில் இருப்பவை கண்களல்ல, புண்கள் என ஆவேசமாகச் சீறுகிறது வள்ளுவர் உள்ளம். கல்வியை அனைவரும் பெறவேண்டும் என விழைகிறது அவர் மனம். ஒருவருக்கு அழியாத செல்வம் அவர் கற்ற கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் அழியக் கூடியவை. கல்விச் செல்வத்தை ஒருவன் அடைந்துவிட்டால் அது அவனிடம் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்.

`கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை.’மனிதர்கள் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்கக் கற்க அறிவு பெருகும். மனம் விசாலமடையும். மணலைத் தோண்டத் தோண்டத் தண்ணீர் வந்துகொண்டே இருப்பதுபோல், கற்கக் கற்க அறிவு சுரந்துகொண்டே இருக்கும். எனவே கற்பதை வாழ்நாளில் ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது.

`தொட்டனைத் தூறும் மணற் கேணிமாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு!’கற்றவர்க்கு எந்த நாடும் தம் நாடாகும். எந்த ஊரும் தம் ஊராகும். அப்படிப்பட்ட பெருமையைத் தரக்கூடிய படிப்பில் ஒருவன் ஏன் நாட்டம் செலுத்துவதில்லை? இறக்கும் வரை ஒருவன் கல்லாமல் இருப்பது எதனால் என்று தெரியவில்லையே?`யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு?’

பெரும் செல்வந்தனாக விளங்கும் மன்னனை விடவும் நிறையக் கற்ற கல்வியாளன் அதிகம் போற்றப்படுகிறான். மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் மதிப்பு. ஆனால் கற்றவர்க்கோ சென்ற இடத்திலெல்லாம் மதிப்பு என்கிறது அவ்வையின் மூதுரை.
`மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன்- மன்னர்க்குத்
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.’

பிச்சை எடுத்தாகிலும் கல்வி கற்பாயாக என்கிறது நம் பழந்தமிழ். `கற்கை நன்றே கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்பது நம் மரபு. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாடியதாக புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு. அந்தப் பாடல் கல்வியின் மேன்மைகளையும் கல்வி கற்பதால் ஒருவன் அடையும் பெருமை
களையும் வியந்து பேசுகிறது.
`உற்றுழி உதவியும் உறுபொருள்
கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்!
ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும்
செல்லும்!

வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!’

`எப்படியாவது பொருள் கொடுத்தாவது கல்வி கற்க வேண்டும். ஏனென்றால் பெற்ற தாய் கூட தன் மக்களுள் கல்வியறிவு நிறைந்த மகனைத் தான் பெரிதும் நேசிப்பாள். ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களே என்றாலும் மூத்தோனை வருக என வரவேற்காது நிரம்பக் கற்றவன் பின்னால்தான் அரசனும் செல்வான். கீழ்சாதியைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுபவன் கூட கல்வி கற்றால் மேல் சாதிக்காரனும் அவனை மதிப்பான்’ என்கிறது இப்பாடல். அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்கிவிட்டால் சாதி வேற்றுமை தானே மறைந்துவிடும் என்ற கருத்தோட்டத்திற்கு இந்தப் பாடல் ஓர் ஆதாரம்.

வள்ளுவர் பொதுவாகக் கல்வியைப் பற்றிப் பேசினார். பெண்கல்வி தேவை எனப் பிரித்துப் பேசி வலியுறுத்தவில்லை. காரணம் அவர் காலத்தில் பெண்கல்வி மிக மிக இயல்பானதாக இருந்திருக்க வேண்டும். எனவே எல்லோரும் கல்வி கற்க வேண்டும் எனச் சொன்னால் அதில் பெண்களும் அடக்கம்தான் என்று அவர் கருதியிருக்கக் கூடும்.

 ஆனால், காலப்போக்கில் என்னவெல்லாம் நேர்ந்துவிட்டன! பெண்களுக்குக் கல்வியுரிமை மறுக்கப்பட்ட சூழலும் நம் தமிழ்நாட்டில் தோன்றியதென்பது காலத்தின் கொடுமை. மகாகவி பாரதி, `கண்கள் இரண்டினில் ஒன்றை - குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை அற்றிடும் காணீர்!’

 - என உரத்துக் குரல்கொடுத்துப் பாட வேண்டியிருந்தது.  எத்தனையோ அறிவுத் துறைகளில், சமூக சீர்திருத்த எண்ணங்களில் தாமாகவே முற்போக்குச் சிந்தனைகளோடு திகழ்ந்த மகாகவிக்கு, பெண்ணுரிமை, பெண் கல்வி போன்ற விஷயங்களில் தெளிவு ஏற்படுத்த நிவேதிதா என்ற விவேகானந்தரின் சிஷ்யையான வெளிதேசத்தைச் சேர்ந்த பெண் குரு தேவைப்பட்டது என்பதுதான் ஆச்சரியம்.

பெண்கல்வி என்பது நம் மரபின் மாற்றமல்ல. மரபின் தொடர்ச்சி தான். இடைக்காலத்தில் தான் இந்த மரபு தடைப்பட்டது. இதற்கு ஆதாரம் கல்விக்குரிய கடவுளாகவே நாம் கலைவாணி என்ற பெண் தெய்வத்தைத்தான் வழிபடுகிறோம் என்பது. சரஸ்வதியின் வடிவமே எத்தனை அழகாகக் கல்விக் கூறுகளை உள்ளடக்கித் திகழ்கிறது!`வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்றும் `வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்’ என்றும் மகாகவி பாரதி பாடுகிறாரே? அப்படிக் கலைவாணி அமர்ந்திருக்கும் வெண்தாமரை மலர் தாவர இயல் சார்ந்தது. அவள் வாகனமான அன்னம் விலங்கியலைக் குறிப்பது.

கலைவாணி கையில் உள்ள ஜபமாலை, கணிதப் பாடத்தின் குறியீடு. இன்னொரு கையில் உள்ள ஏட்டுச் சுவடி, இலக்கியம் வாழ்வை மேம்படுத்தும் என்பதை உணர்த்துவது. வீணையோ கலைகளின் அடையாளம். அறிவுத் துறைகள், கலைத் துறைகள்அனைத் தையும் ஒரே பெண்தெய்வம் தன் வடிவில் வெளிப்படுத்துவது, பெண்கள் எல்லா அறிவுத் துறைகளிலும் மேலோங்க வேண்டும் என்பதைச் சூசகமாக உணர்த்தத் தானே?

பெண் கல்வி, கைம்பெண் மறுமணம் என்ற இரண்டு சீர்திருத்தச் சிந்தனைகளை ஒரே படைப்பில் உள்ளடக்கி `கடிதமும் கண்ணீரும்’ என்ற அற்புதமான சிறுகதையைப் படைத்தார் கல்கி. மறுமணம் புரிந்துகொள்ள விரும்பும் ஒரு கைம்பெண், அவளை விரும்புகிறவன் கொடுத்த காதல் கடிதத்தை எழுத்தறிவு இல்லாததால் படிக்க முடியாமல் போவதையும் அவள் வாழ்வில் அதனால் நேர்ந்த துயரங்களையும் வாசிப்பவர் மனம் உருகும் வகையில் அந்தக் கதை சித்திரிக்
கிறது.

கல்வி வேண்டும் என்று வள்ளுவர் அறைகூவினார். ஆனால், அந்தக் கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை நம் ஊகத்திற்கு விட்டுவிட்டார். அறிவுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்குப் பொருள் ஈட்டவும் கல்வி தேவைப்படுகிறது. அப்படிப் பொருள் ஈட்ட வேண்டுமானால், யாரையும் சாராது தனித்து வாழ  ஏட்டுக் கல்வியோடு கூடவே தொழிற்கல்வியும் கற்பது நல்லது.

 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துவிட்டு, ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாதிருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலை ஏன் நேர்கிறது? அவர்கள் கல்வி எந்த நிறுவனத்தையாவது சார்ந்து இயங்குகிற குமாஸ்தாக் கல்வியாக மட்டுமே அமைந்துவிடுவதுதான் காரணம். பள்ளியில் உள்ள ஏட்டுக் கல்வியைச் சற்றுக் குறைத்து, தொழிற் கல்வியைக் கூடவே சேர்த்துக் கொண்டால் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்னைக்கே இடமில்லையே?

குலக்கல்வி வேண்டாம். அது மீண்டும் சாதிக் கட்டுமானத்தை ஏற்படுத்தும். ஆனால், அவரவர் விரும்பும் தொழிற்கல்வியில் என்ன தவறு? தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுதுபார்ப்பதையோ கைபேசியைப் பழுதுபார்ப்பதையோ இவைபோன்ற வேறு ஏதாவது பொருளீட்டக் கூடிய தொழிலையோ கற்றுக் கொண்டுவிட்டால் இளைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குப் பிறரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய தேவை நேராதே?

கூடவே பள்ளிப் பருவத்திலேயே பள்ளிகளிலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமையல் கல்வியையும் கற்றுக் கொடுத்துவிட வேண்டும். சமையல் தெரியாத ஆண் அந்த வகையில் ஊனமானவன் என்பதைப் பல ஆண்கள் உணர்வதில்லை. பெண் கல்வி தழைத்து, பெண் எல்லாத் துறைகளிலும் ஆணுக்கு இணையாக வளரும்போது, ஆண், சமையல் கல்வி கற்றுப் பெண்ணுக்கு இணையாக மாற வேண்டாமா?

சமையல் தெரிந்த ஆண்மகன் நகைச்சுவைத் துணுக்கிற்கான பொருள் அல்ல. சமையல் சார்ந்த கல்வியும் அதனால் பெறும் சமையலறிவும் ஓர் ஆண்மகனின் கம்பீரத்தை அதிகப்படுத்தும். ஆண் சமையல் கல்வியைக் கற்பதும் நம் ஆன்மிக மரபில் உள்ளதுதான். அந்த மரபும் இடையே மீறப்பட்டது. மீண்டும் அம்மரபை உருவாக்க வேண்டும். சமையல் கலை வல்லுநர்களாக நாம் பாராட்டும் நளனும் பீமனும் ஆண்கள்தானே? 

வள்ளுவம் போற்றும் கல்வி என்பது சாதாரணமானதல்ல. அது ஒரு கடல். கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்று உற்ற கலைமடந்தை ஓதுகிறாள். கலைமகளே இன்னும் கல்வி கற்கிறாள் என்றால் நாம் என்று கற்று முடிப்பது?எனவே நமக்குப் பயனில்லாதவற்றை ஒதுக்கி நமக்குத் தேவையானதை மட்டுமே கற்பது என்பதை நாம் வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். நீரைப் பிரித்துப் பாலை அருந்தும் அன்னப் பறவை போல, நாமும் தீயவற்றை விலக்கி நல்லவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும்.

நமக்கு நோய்நொடி வந்து கல்வியில் மனம் தோயாத காலம் வரும் முன்னரே, நாம் ஆரோக்கியமாக இருக்கும்போதே நல்லன எவையோ அவற்றையெல்லாம் கற்றுக் கொண்டுவிடவேண்டும். இவ்விதம் சொல்கிறது சமண முனிவர்களால் எழுதப்பட்ட நாலடியார் என்னும் பதினென்கீழ்க் கணக்கு நூல்.`கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே
நீரொழியப் பாலுண் குருகின் தெரிந்து.’

நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்துக் கற்கும்போது, நல்லனவற்றில் எல்லாம் மிக நல்லது எதுவோ அதற்கு முன்னுரிமை கொடுத்து அதை முதன்முதலில் கற்று விடவேண்டும் அல்லவா? அந்த மிக நல்லது எது? வேறு எது? திருக்குறள் தான்! அதை முதலில் கற்போம். கசடறக் கற்போம். பின் அதன்வழி வாழ்வில் நிற்போம். வாழ்வை வெல்வோம்.

(குறள் ஒலிக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்