பிணி தீர்க்கும் பெருமாள்



காட்டுப்பரூர்

அந்த முதியவருக்குக் கடுமையான வயிற்றுவலி. வேதனையால் துடித்தார். கொஞ்சம் கஞ்சி குடித்தாலும் வலி உயிர் போகும். சரி, கஞ்சி குடித்தால் வயிறு வலிக்கிறதே என்று குடிக்காமல் இருந்தாலும் பசியால் வயிறு வலிக்கத்தான் செய்யும்.

பார்க்காத வைத்தியரில்லை... குடிக்காத கஷாயமில்லை. சுத்துப்பட்டில் பல வைத்தியரைப் பார்த்தாயிற்று. இந்தப் பச்சிலை... அந்தப் பச்சிலை என்று நிறைய தின்றாயிற்று. ஆனால், குணமானபாடில்லை. ‘என்ன பாவம் செய்தேனோ இந்த சித்ரவதையை அனுபவிக்கிறேன்’ என்று தனக்குத்தானே புலம்பிக் கொள்வார், அந்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளி.

‘கடவுளே... இனி நீ விட்ட வழி’ என்று தனது கிராமத்தின் மண் சாலையின் ஓரத்தில் இருந்த அரச மர நிழலில், அங்கிருந்த கல்லில் தலை சாய்த்துப் படுத்தார். வயிறு இழுத்துப் பிடித்தது போல வலித்தது. ‘கடவுளே... கடவுளே’ என முனகியபடி கிடந்தார். வேதனையால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அப்போது அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு பயணி இவரது வேதனையை பார்த்து மனம் வருந்தினார். எழுப்பி விவரம் கேட்டார்.

கதறியழுதபடி தனது வேதனையை சொன்னார் முதியவர். கண்மூடி யோசித்த அவர், ‘‘இது பிறவிப் பிணி. இதை அந்த கேசவனால்தான் தீர்க்க முடியும். காட்டுப்பரூர் செல். அங்கு ஒரு வாரகாலம் தங்கி, பெருமாளை வழிபடு. நிச்சயம் உன் பிணி தீரும்’’ என்றார். கடவுளே நேரில் வந்து சொன்னதாகக் கருதி, தனது கிராமத்திலிருந்து காட்டுப்பரூர் புறப்பட்டார், முதியவர். அங்கிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் தனது துணிமணிகளை வைத்து விட்டு, நாள்தோறும் திருக்கோயில் குளத்தில் நீராடி பெருமாளை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார். ஏழு நாட்கள் கழிந்தன. வயிற்று வலி குறையவில்லை; அதிகரித்தது.

 எட்டாவது நாள். பொழுது விடிந்தது. இன்று இதற்கு ஒரு முடிவு காணாது ஓயப்போவதில்லை என்ற தீர்மானத்தோடு எழுந்தார் முதியவர். வழக்கம் போல குளத்தில் நீராடினார். ராஜகோபுரம் எதிரே நின்றார். கண்மூடி ஆதிகேசவனை மனத்தில் கண்டார். அவனிடம் உரிமையோடு பேசத் தொடங்கினார். ‘‘ஐயனே... வயிற்று வலியோடு நான் படும்பாடு சொல்லிமாளாது. என் நோய் தீர்ப்பாய் என்ற நம்பிக்கையோடு உன் திருக்கோயிலை ஒரு வாரகாலமாய் வலம் வந்தேன். பலனில்லை. என் பக்தியில் நீ ஏதோ குறை காண்கிறாய். சரி, இதோ என் காணிக்கையை ஏற்றுக்கொள்’’ என்று மனம் குமைந்து சொன்னார்.

பிறகு தனது நாக்கை அறுத்து எடுத்து ஒரு வெற்றிலையின் மீது வைத்துவிட்டு, வாயில் ரத்தம் வழிய கோயிலை வலம் வரத் தொடங்கினார். கருணைக் கடலான கேசவன் கண் திறந்து பார்த்தான். தனது அருட் பார்வையால் முதியவரின் பிணியை அகற்றினான். கோயிலை வலம் வந்து முடித்த போது வெற்றிலையில் வைத்திருந்த நாக்கு காணாமல் போயிருந்தது. முதியவரின் வெட்டுப்பட்ட நாக்கும் முழுமையாக வளர்ந்திருந்தது. உயிரே போகும்படி வலித்த வயிற்று வலியும் முற்றிலுமாக நீங்கியிருந்தது. ‘‘கோவிந்தா... கோவிந்தா’’ என்று வாய்விட்டு கதறினார். ஆனந்தத்தில் வாய் குழறியது.

இச்சம்பவத்தை வாய் பிளந்து, வியப்போடு பார்த்த ஊரும் அவரோடு சேர்ந்து கோவிந்தனின் புகழ் பாடியது.இந்த சம்பவம் நடந்து சுமார் 300
ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், இதற்கு  சாட்சியாக இந்த முதியவர் நன்றியோடு இந்தக் கோயிலுக்குச் செய்து தந்த காளிங்க  நர்த்தன கோபாலன் உற்சவர் சிலை இன்றும் இருக்கிறது. வீர பெருமா நல்லூர் பெரியவர் செய்த சிலை இது என்று, இந்த சம்பவத்தோடு மேலும் பல தகவல்களை அந்தக் கோயிலில் சொல்லக் கேட்கலாம்.

இந்தக் கோயில் உருவான வரலாறு சுவையானது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி காடாக இருந்தது. இங்கு ரெட்டியார் சமூகத்தினருக்குச் சொந்தமான நிலத்தில் கோனார்கள் வயல் வேலை செய்தபடி ஆவினங்களை பராமரித்துக் கொண்டும் வாழ்ந்து வந்தார்கள். ஒரு முறை விவசாயப் பணியாக வாய்க்கால் வெட்டியபோது,  மண்வெட்டி பட்டு வெட்டிய இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. அங்கிருந்தோர் எல்லாம் அஞ்சி நிற்க, வாய்க்கால் வெட்டியவர் மீது அருள் வந்து, இவ்விடத்தில் சென்ன கேசவப் பெருமாள் என்னும் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாகவும், அவருக்கு கோயில் கட்டி வழிபடுமாறும்
 கூறினார். அதன்படி அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்த போது வெட்டுப்பட்ட கல் ஒன்று கிடைத்தது. அதையே மூலவராகக் கொண்டு கோயில் கட்டப்பட்டது. மூலவர் முடியில் வெட்டுப்பட்ட காய வடுவை இன்றும் தரிசிக்கலாம்.

அதன் பிறகு கால ஓட்டத்தில் பல பெரியவர்கள், மகான்கள் இந்தக் கோயிலுக்கு வந்து பெருமாளை வணங்கி வழிபட்டுள்ளார்கள். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வேமண்ணா என்னும் யோகியும் கூட இந்தக் கோயிலுக்கு வந்து திருக்குளத்தில் நீராடி, குளத்தின் தென் திசையில் பெருமாளின் திருப்பாதம் அமைத்து, யந்திர ஸ்தாபனம் செய்து பூஜித்துள்ளார். தினசரி இந்த பாதத்திற்கு முதலில் பூஜை செய்து விட்டுத்தான் பெருமாளுக்கு இதர பூஜைகள் நடைபெறும். 

இக்கோயில் பற்றி பதிகம் பாடியுள்ள வேமண்ணா ‘ஆதித்த வாரம் பத்து பசுந்துளபம் நெய்யுண்டால் பறக்கும் பல நோய்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இன்றும் பலர் தங்களது நோய்கள் தீர இங்கு நெய் துளசி பெற்று பக்தியோடு உண்டு குணமடைகிறார்களாம். பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடு
கிறார்கள். வாருங்கள், கோயிலை வலம் வருவோம்.

கோயிலுக்கு வடபுறம் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில்தான் ஆண்டு தோறும் வைகாசிப் பெருவிழாவின் 10 நாள் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். குளத்திற்கு மேற்கு புறத்தில் இருந்த வசந்த மண்டபம் சிதைந்து கிடப்பதையும் காண முடிகிறது. நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடி உப்பு, வெல்லம், மிளகு, காசு ஆகியவை செலுத்துகிறார்கள். உப்பு, வெல்லம் கரைவதைப் போல நோயும் கரையும் என்பது நம்பிக்கை. சொறி, சிரங்கு, மரு போன்ற சரும நோய் தீர வேண்டிக்கொண்டு மிளகு, காசு போடுகிறார்கள்.

இந்தத் திருக்குளத்தில் நீராடிய பிறகு யோகி வேமண்ணா பிரதிஷ்டை செய்த பெருமாள் பாதத்தை தரிசிக்கலாம். அடுத்து, பிரமாண்டமாய் நிற்கும் ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் த்வஜ ஸ்தம்பம் நம்மை வரவேற்கிறது. அடுத்து கருடாழ்வார் தரிசனம். அவர் சுவாமியைப் பார்த்தபடி மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அதற்கடுத்து கருங்கற்களால் கட்டப்பட்ட 36 கால் சபா மண்டபம். மண்டபத்தின் கல் தூண்களில் தசாவதாரக் காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் அனுமன், கருடன், சக்கரம், அன்னம், குதிரை, ஆதிசேஷன், யானை, பல்லக்கு முதலிய வாகனங்களின் அணிவகுப்பைக் காணலாம்.

அடுத்து விநாயகரையும், ஜயன்-விஜயன் என்ற துவாரக பாலகர்களை வணங்கி உள்ளே சென்றால் மகா மண்டபம். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் அழகு வரிசை.  தேவி-தேவி சமேத ஆதிகேசவப் பெருமாள், ராதா-ருக்மணி சமேத வேணுகோபாலன், வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெற்ற முதியவர் தமது கிராமத்தவரின் உதவியோடு செய்து தந்த காளிங்க நர்த்தன கோபாலன், சக்கரத்தாழ்வார், அனுமன், திருமங்கையாழ்வார் ஆகிய உற்சவ விக்ரகங்களை கண்டு வணங்கலாம்.

அடுத்து அர்த்த மண்டபம். அதைத் தாண்டி கர்ப்ப கிரகம். சுயம்புவாய் தோன்றிய ஆதிகேசவப் பெருமாளை நெய்தீப ஒளியில் காண, மெய் சிலிர்க்கிறது. கிழக்கு பார்த்த வண்ணம் இக்கோயிலில் அமைந்து, பிறவி நோய் தீர்க்கும் பெருமாள் உடல் பிணியும் நீக்கி அருள்வதை எண்ணி கரம் குவித்துப் பணிய, உடலும் உள்ளமும் பலமடைகின்றன.

இந்தக் கோயிலில் பரம்பரை பரம்பரையாக யாதவர்களே பூஜை செய்து வருகிறார்கள். நாராயணின் நாமத்தை கணீர் குரலில் பாடி, தீபம் காட்டி, தீர்த்தமும், துளசியும் தந்து சடாரியை தலையில் வைக்கும் போது மனம் குளிர்கிறது. ஒரு பேரமைதி நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.அடுத்து தெற்கு பக்க வாசல் வழியே வந்து, வேதவல்லி நாச்சியாரை தரிசிக்கலாம். தாயார் கிழக்கு நோக்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். அன்னையின் அழகிய திருமுகம் காண உள்ளம் உருகும். திருமண வரம் வேண்டி அன்னையைத் தொழுதால், வேண்டியவரின் இல்லத்தில் கெட்டிமேளம் விரைவில் ஒலிக்கிறதாம்.

பிராகாரத்தில், மடப்பள்ளி இருக்கிறது. இடும்பன், அனுமன் கோயில்கள் தனித் தனியே உள்ளன. கோயிலின் நான்கு புறமும் வாசல் உண்டு. வடக்கு வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படுகிறது. கோயிலுக்கு வெளியே அழகிய, சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேர் நிற்கிறது. ஆண்டு தோறும் வைகாசி மாதம், வளர்பிறை சனிக்கிழமை கொடியேற்றி, ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாவது நாள் திருத்தேர் உற்சவம்.

அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் எழுந்தருளி மெல்ல அசைந்தபடி வீதி வலம் வரும் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
கோயிலுக்கு வெளியே வடக்கு புறத்தில் முடி காணிக்கை செய்ய தனி மண்டபம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டவர்கள் அங்கு போக முடியாவிட்டால் இங்கு வந்து நேர்த்திக் கடனை செலுத்தி வணங்குகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோயிலில் சனிக் கிழமைதான் விசேஷம். ஆனால், இத்திருக் கோயில் பெருமாள் ஞாயிற்றுக் கிழமையன்று சுயம்புவாகத் தோன்றியதால் இங்கு ஞாயிறு அன்றுதான் விசேஷம். அன்று காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

 உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில், மங்கலம் பேட்டையிலிருந்து மேற்கே 4வது கிலோ மீட்டரில் உள்ள சிறிய கிராமமான காட்டுப்பரூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. தீராத நோய்கள் தீர, பிணி தீர்க்கும் ஆதிகேசவப் பெருமாளையும், திருமண வரம் அருளும் வேதவல்லி நாச்சியாரையும் வணங்கி ஆரோக்கியமான, வளமான வாழ்வைப் பெறுவோம். 

சென்னை மருத்துவச்சி

யாவினிலும் அருவமாய் நிறைந்திருக்கும் சக்தி நிரந்தரமாகத் தன்னை ஓரிடத்தில் வெளிப்படுத்திக்  கொள்ள விருப்பம் கொள்வாள். வேம்பின் கீழ் புற்றாக, சுயம்பு நாகர் சிலையாக, ஆற்றோரத்திலோ, கிராமத்தின் மையமாக, நகரவீதியின் கடைக்கோடியாக, எங்கும் நிலைத்திருப்பாள். தன்னிடம் வந்து கைகூப்பியவர்களை அருட் கருணையால் அரவணைப்பாள். தலைமுறை தலைமுறையாக தாயாய் காப்பாள். அப்படி சக்தி, தன்னை இருத்திக் கொண்டு அமர்ந்த ஒரு தலமே குருபுரம் திருவீதி அம்மன்.

அது 1840வது வருடம். மயிலையின் மையத்தில் முண்டகக்கண்ணி அமர்ந்திருக்க, கோலவிழி அம்மன் உடனிருக்க, எல்லையில் புதர் சூழ்ந்து, கள்ளிச் செடிகள் அடர்ந்து அவ்விடத்தையே மறைத்துக் கொண்டிருந்தது. சூரிய ஒளி புகாது இருண்டு கிடந்தது. ஆனால், மகாசக்தி மரகதமாய் உள்ளே ஜொலித்தாள். அருகே குடிசையிலுள்ளோர்களின் அகத்தில் குடியேற ஆவல் கொண்டாள். குடிசைக்குள் வாழ்ந்திருந்த குடியானவப் பெரியோரின் கனவில் தோன்றினாள். கனவில் புதருக்குள் பூவாய் மலர்ந்திருந்த அம்மையைப் பார்த்த அவர் சிலிர்த்தார். அதிகாலை கையில் விளக்கேந்தி புதர் விலக்கி பார்த்தவர் நெகிழ்ந்தார். புற்றுக்கருகே நாகமாய் படமெடுத்து சிலிர்த்துக் கிடந்தவளின் பாதம் பணிந்தார்.

 நடந்த அந்த அதிசயத்தை ஊர் கூட்டித் தெரிவித்தார். அனைவரும் ஒன்றுபட்டு புதர் களைந்தார்கள். அம்மனை குடத்திலிட்ட விளக்குபோல அழகு செய்து ஆராதித்தார்கள். நாகர் சிலையாக அருள்புரிந்தவளுக்கு, கருங்கல்லில் அழகு முகம் செதுக்கினார்கள். அன்னை உயிர் ததும்பும் சிலையாக இலங்கினாள். நாகர் சிலைக்கு மேற்புறம் அவளை அமர்த்தினார்கள். ஊர் ஆனந்தக் கூத்தாடியது.

ஓலைக் குடிசைக்குள் குடிகொண்டவளுக்கு மேற்கூரை வேய்ந்து விழா எடுத்தார்கள். அன்று மாலையே பால் அபிஷேகம் செய்து மகிழ்ந்தார்கள். அந்த மாலையில் வானம் இருண்டது. இடியோடு தரையிறங்கிய அடை மழையாய் தன் அருளை பொழிந்து தள்ளினாள். அன்னையின் அருள் மழை தருவித்த வான் மழையில் ஊர் கூடி நனைந்தது. ‘ஆத்தா வந்துட்டா... ஆத்தா வந்துட்டா’ என பக்தியால் உடலே பதற, அன்னையை வணங்கிப் போற்றினார்கள்.

கோயில் வளர்ந்தது. தெய்வீக அதிசயமாய் கோயிலினூடே ஆல மரமும், அரச மரமும், வேம்பும் நெடிதுயர்ந்து வளர்ந்து பச்சைக் குடையாய் குளிர் நிழல் பரப்பின. வாழ்வெனும் வெம்மையில் வாடியோர்கள் அம்மையின் அருள் நிழலில் அமர்ந்து அகத்தில் தெளிவு பெற்றனர். சென்னை நகரம் விரிவாக்கம் கண்டபோது அம்மன் கோயிலைச் சுற்றி நிறைய கட்டிடங்கள் உருவா கின. பல்வேறு மாநிலத்தவர்களும் இங்கு குடியேறியிருந்தனர். சுற்றிலுமுள்ள நிலங்களெல்லாம் வீடுகளாக வடிவம் பெற்றிருக்க, வீதியின் மையத்தே அம்மன் வீற்றிருக்க, அவளை ‘திருவீதி அம்மன்’ எனும் நாமம் கொண்டு அழைத்தனர். நடுநிசியில் வீதியில் காவல் காப்பவள்போல குறுக்கும் நெடுக்கும் நடப்பாளாம் அன்னை. அடாது செய்வோரை விரட்டியடிப்பாளாம். அவள் காவலில் மக்கள் நிம்மதியாக உறங்கினார்களாம்.

 ராமகிருஷ்ண மடம் தொடங்கிய புதிதில் அங்கு வந்த துறவிகள் இங்குள்ள அம்மனை வணங்கி பரவசப்பட்டிருக்கிறார்கள். இன்ன பெயர் என்று தெரியாதிருந்த அவ்விடத்திற்கு ‘குருபுரம்’ என்று தங்களின் குருவை மனதில் எண்ணி பெயர் சூட்டினர். அப்பெயரே நிலைத்தது.வீதியம்மனின் அருட் பார்வையில் நோயாளிகள் உபாதை தீர்ந்து உவகை கொள்வது அதிகரித்தது. அக்கம் பக்கத்து மருத்துவமனை நோயாளிகள் இந்த அம்மனிடம் வந்து கைகூப்பி ‘என்னைக் காப்பாற்று தாயே’ என வணங்கிச் செல்வார்களாம்.

 ‘நான் நோயாளிக்கு மருத்துவம் பார்க்கிறேன், கடவுள் காப்பாற்றுகிறார்’  என்று ஆங்கிலத்தில் வாசகம் ஒன்று உண்டு. அதன்படி, மருத்துவத்திற்கே சவாலாக இருந்த
விஷயங்களெல்லாம் வெகு சுலபமாய் தீர்த்து, ஆயுள் பெருக்கி ஆனந்த வாழ்வு கொடுப்பாளாம் இந்த அன்னை.  வீதியம்மனின் மீது தீராத அன்பு கொண்டு, நன்றியாய் அபிஷேக ஆராதனைகள் செய்து, உள்ளம் நிறைந்து, அவளை பக்தர்களும் குளிர்விப்பார்களாம். முக்கியமாக சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு பாதிப்பு உள்ளவர்கள் திருவீதியம்மனை வழிபட சிறுநீரக நோய்கள் பறந்து போகும் என்கிறார்கள். 

அப்படி தனித்தனியே அம்மனை உணர்ந்தோர், தமது வாழ்வில் அனுபவித்தோர் நெஞ் சுருகி இக்கோயிலின் பல சந்நதிகளை கட்டித் தந்திருக்கிறார்கள். திருவிழா எடுக்கும்போது நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அம்மனுக்கு அள்ளிக் கொடுக்கிறார்கள். கொடுத்தவள் அவள்தானே என அவளை கைதொழுகிறார்கள். 

பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில். பெரிய முன் மண்டபத்தோடு, நிறைய சுதைச் சிற்பங்களோடு விளங்கும் அழகான கோயில். கோயில் வாயிலிலிருந்து நேரே உள்ளே பார்க்க திருவீதி அம்மன் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள். அம்மன் தெள்ளிய திருமுகமண்டலம் உடையவள். தம்  புன்னகையால் இன்னல்களை களைபவள்.

பெருந்துன்பம் தாளாது அன்னை பாதம் பணிந்தவர்களுக்கு இன்பம் அளித்து இதம் சொல்லும் இனிய நாயகி. மருத்து வத்தால் ஆகாது என மனம் நொடிந்தோரை தம் மகத்துவத்தால் தேற்றும் மருத்துவச்சி. அம்மனின் திருப்பாதத்திற்குக் கீழே அவள் மூல உரு கொண்ட சுயம்பு நாகர் சிலை உள்ளது. நாகருக்கும் கவசம் சாற்றி வழிபடுகிறார்கள். கோயிலைச் சுற்றிலும் முருகர், விநாயகர், ஆஞ்ச நேயர், சனீஸ்வரர் போன்றோர் தனிச் சந்நதிகளில் அருள்பாலிக்கிறார்கள். ஆலமரம், அரச மரம், வேம்பும் இணைந்த  இக்கோயில், இயற்கை எழில் சூழ்ந்து காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும்; உள்ளுக்குள் பேரமைதியை ஏற்படுத்தும்.
திருவீதி அம்மன் கோயில் கொண்டிருக்கும் குருபுரம், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது.    

சேண்பாக்கம் கருவறையில் ஒரு கொடிமரம்

பாரதத்தைத் தம் திருப்பாதங்களால் வலம் வந்த ஆதிசங்கரரின் உள்ளம் நிறைந்திருந்தது. அந்த மகான், ‘தனக்கு மேல் நாயகர் எவருமிலர்’ என்று பொருள் கொண்ட விண் நிறைந்த நாயகன் ---விநாயகன்-மண்ணுக்குள் மறைந்திருப்பதை தம் மனக்கண்ணில் கண்டார். உடன் வந்தாரோடு விநாயகனை தரிசிக்க தொடர்ந்து நடந்தார். ஆற்றின் விரைவோடு செண்பகவனத்தினுள் புகுந்தார்.

கானகத்தின் மையமாய் மலர்ந்திருந்த மூத்த நாயகனை பார்த்தவர் சிலிர்த்தார். தன்வயம் இழந்து கண்களை மூடினார். பிரணவ ரூபமாய் வளைந்திருக்கும் அம்மூர்த்தங்களிலிருந்து வெளிப்படும் ‘ஓம்’ எனும் நாதம் தம் அகச்செவியில் பரவுவதை உணர்ந்து உள்ளம் குளிர்ந்தார். செண்பகவனச் செல்வன் அந்த மகானை இன்னும் செம்மையாக்கினார். ஆதிசங்கரரும் செண்பக மலர்களை பறித்து பாதத்தில் சொரிந்தார். வன்னி இலைகளைக் கிள்ளி மாலையாகத் தொடுத்து சாத்தினார். விநாயகரின் அண்மையில் சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார்.

ஆதிசங்கரரின் குரு பரம்பரையை குன்றிலிட்ட விளக்காக பிரகாசப்படுத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேலூர் நகரத்தில் முகாமிட்டிருந்த போது சேண்பாக்கம் வழியே காஞ்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். விநாயகனின் சொரூபமாக விளங்கும் யானையின் மீது பால பெரியவர் அமர்ந்திருந்தார். சேண்பாக்கம் அருகே வந்தபோது, செல்வ நாயகன் அந்த யானையை செல்ல விடாது தடுத்தான். யானை முன்னும் பின்னும் அலைந்தது.

மகாப் பெரியவர் கண்களை மூடினார். ஏன் யானை நகர மறுக்கிறது என தீவிரமாக யோசித்தார். சட்டென்று, இதயத் தாமரையில் ஒளிர்ந்த சந்திரனின் மையத்தில் விநாயகர் சிரித்தார். பழைய நினைவு ஒன்று பூத்துக் கிளர்ந்தது. மகாப் பெரியவர் கண்கள் திறந்து மெல்லப் பேசினார்: ‘‘மடத்தின் ஒரு பிரார்த்தனையாக நூற்றியெட்டு தேங்காய்களை சிதறு காயாக போடுவதாக வேண்டிக் கொண்டது மறந்து போய்விட்டது. அதை சேண்பாக்க செல்வ விநாயகர் தம் சொரூபமான யானையாகவே வந்து நினைவூட்டுகிறார். பிரார்த்தனையை நிறைவேற்றினால் யானை நகரும்’’ என்றார்.

உடனேயே நூற்றியெட்டு தேங்காய்களை சிதறச் செய்தவுடன் யானை சட்டென்று ஒயிலாக நடந்தது. மக்கள் மகிழ்ந்தார்கள். மகாப் பெரியவரின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள். செல்வ விநாயகரைப்பற்றி மேலும் விவரங்கள் கேட்க, விநாயகர் அவர் வாக்கில் அமர்ந்தார். தானாக சொல்ல ஆரம்பித்தார்.
‘‘இங்கு சுயம்புவாக பதினோரு விநாயகர்கள் துளிர்த்ததால் இவ்வூருக்கு ‘ஸ்வயம்பாக்கம்’ என்று பெயர். ஸ்வயம்பாக்கமே சேண்பாக்கம் என மாறியது. சிவனுக்கு ஏகாதச ருத்ரர்கள் எனும் பதினோரு மூர்த்தங்கள் கொண்ட அமைப்பு உண்டு.

அதேபோல், இங்கு ஏகாதச விநாயகர்கள்! ஆதிசங்கரர் தரிசித்த பிறகு, அந்த விளையாட்டுப் பிள்ளை விளையாட ஆரம்பித்தார். எல்லோர் விக்னங்களையும் விலக்க தனிக் கோயிலில் குடிகொள்ள ஆவல் கொண்டார். சட்டென்று அவர் தன்னை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டார். அது, 1677ம் வருடம். துக்கோஜி என்ற மராட்டிய மந்திரி அந்த வழியாக ஒரு இரவு வேளையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்.

டக்கென்று அச்சு முறிந்து வண்டி நின்றுவிட்டது. அச்சிறுப்பாக்கத்தில் அச்சை இருபாகமாக்கிய புராண புருஷர் சேண்பாக்கத்திலும் அச்சை ஒடித்தார். பயந்துபோய் இறங்கிப் பார்க்க சக்கரத்தில் ரத்தக்கறை படிந்திருந்தது. துக்கோஜி இதென்ன விக்னம் என்று புரியாமல் கலங்கினான். விக்னேஸ்வரரை பிரார்த்தித்தான். எதுவுமே செய்ய முடியாத நிலையில் அங்கேயே தூங்கினான். துக்கோஜியின் கனவில் கணபதி தோன்றினார்.

‘‘துக்கோஜி துக்கிக்காதே. இந்த இடத்தில் என்னுடைய பதினொரு மூர்த்திகள் புதைந்து கிடக்கின்றன. மூடிக் கிடந்தது போதும், எல்லோருக்கும் வரப் பிரசாதியாக பிரகாசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. கோயில் எழுப்பி, கும்பாபிஷேகம் புரிந்து புண்ணியம் சம்பாதித்துக்கொள்’’ என்றார். துக்கோஜி துள்ளி எழுந்தார். அழகான சிறிய கோயிலை அமைத்தார்’’ என்று மாபெரும் சரித்திரத்தை அந்தச் சமயத்தில் மகாப் பெரியவர் சொல்ல, சேண்பாக்கத்தின் பெருமை பார் முழுதும் பரவியது.

இக்கோயிலின் முன்பக்கம் அழகான திருக்குளமும், நிழல் தரும் மரங்கள் சூழ்ந்த எழிலுடன் விளங்குகிறது. கோபுர வாயிலி லிருந்து நேரே கருவறைக்குள் செல்லலாம். எங்குமே பார்க்க முடியாத அரிய சுயம்பு விநாயக மூர்த்திகள் பூமியிலிருந்து முளைத்திருப்பதைப் பார்க்க உடல் சிலிர்த்துப் போகிறது. வீட்டின் நடுவே முற்றம் போல மூர்த்திகள் ஓரிடத்தில் குடிகொண்டிருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்.

பிரபஞ்ச மூலத்தின் முழுச் சக்தியும் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும் வலிமையான அதிர்வுகள் கொண்ட மகத்தான சந்நதி அது. இடது ஓரத்தில் பால விநாயகராக பூமியிலிருந்து பொங்கிய மூர்த்தி, நடன விநாயகர், ஓம்கார விநாயகர், கற்பக விநாயகர், சிந்தாமணி விநாயகர், செல்வ விநாயகர், மயூர விநாயகர், மூஷிக விநாயகர், வல்லப விநாயகர், சித்தி-புத்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர் என்று வரிசையாக வளைந்து ஓம் வடிவத்தில் இருக்கும் அற்புதம் மனதை கொள்ளை கொள்ளும். விநாயகர் அருவமும், உருவமுமானவர் எனும் தத்துவத்தை கண்முன் நிறுத்தி, தத்துவங்கள் சொல்லும் ஞான மூர்த்திகள் அவை. ஏனெனில் அங்குள்ள சில விநாயகர் சிலைகள் எந்த உருவமுமற்று கோளமாய் இருக்கின்றன.

ஆனாலும், உற்றுப் பார்த்தால் விநாயகரின் திருவுருவம் அவற்றுள் நிழலாய் தெரியும். அதுதான் சேண்பாக்கத்தின் சிறப்பம்சம். ஆறாவதாக உள்ள செல்வ விநாயகர் தினமும் அபிஷேகம் பெறுகிறார். செல்வ விநாயகர் மீதுதான் துக்கோஜியின் தேர்ச் சக்கரம் பதிந்த வடு காணப்படுகிறது. இத்தலப் பெருமைக்கு
சிகரம் வைக்கும் இன்னொரு சிறப்பு-கொடி மரம் கருவறையிலேயே இருப்பதும், கருவறை மேற்கூரையற்று திறந்த வெளியாக இருப்பதுவுமேயாகும். ஏனெனில்,
இன்றும் வான்வழியே தேவர்கள் கருவறைக்குள் இறங்கி இத்தல கணபதியை பூஜிக்கிறார்களாம். ஆகவேதான் மேல் விமானம் இல்லாது இருக்கிறது என்கிறார்கள். ஒருமுறை தரிசித்தவர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் பரவசமிக்கத் தலம்.

 விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, புத்தாண்டு தினங்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுகிறார்கள். இத்தலம் வேலூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சேண்பாக்கம் செல்லுங்கள். செல்வ விநாயகரைத் தரிசித்திடுங்கள். வளம் பல பெற்று பெருவாழ்வு வாழ்ந்திடுங்கள்.

பஞ்சம் விரட்டிய பரமேஸ்வரன்

திருச்சோற்றுத்துறை

அந்த திவ்ய பக்த தம்பதியர் திருமடத்தின் முன் நின்று பஞ்சாட்சரத்தை சொல்ல சோற்றுத்துறையே நெக்குருகி நின்றது. ஒப்பிலா சோற்றுத்துறையனை, அடிமுடி காணா சிவநேசனை தம் மனச்சிறைக்குள் முடிந்து வைத்த தம்பதியர், நோக்கிய இடமெல்லாம் நாதனின் திருவுருவே எனும் இணையிலா நிலையில் ஒருநிலையாக நின்றனர். நாளும் அடியார்களுக்கு அன்னமிடும் வேலையே தாம் வையம் புகுந்ததின் பேறு என்று இனியர்களாக விளங்கினர். விரித்த கைகளில் எதுவுமற்று, இருப்பதெல்லாம் ஈசனுக்கே என ஈந்து ஈந்து உய்வுற்றனர்.

ஆதவனை ஆதிசிவன் பார்க்க அவன் இன்னும் பிழம்பானான். தன் பிரகாசத்தை அப்பிரதேசம் முழுதும் பரப்பினான், சோற்றுத்துறையில் தீத்தாண்டவமாடினான். வருணன் வராது சோம்பிச் சிறுத்து மறைந்திருந்தான். ஆளுயர செந்நெற்கதிர்கள் கருகி அங்குலமாக குறுகி மக்கி மண்ணாகிப் போயின. பூமி பிளந்து நீரில்லாது வறண்டது. அடியார்கள் ‘சோழநாடே சோறுடைத்து என்பார்களே, வயல் வெளிகளெல்லாம் வாய்பிளந்து கிடக்கும் அவலமென்ன’ என கைதொழுது நின்றழுதனர். அருளாள தம்பதியர் தவித்தனர். நெற்கிடங்கு வெறுமையாவது கண்டு மனம் குமைந்தனர். தாங்கள் அன்னம் ஏற்காது போயினும் பரவாயில்லை, இறையடியார்கள் இன்னமுது செய்ய வேண்டுமே என கவலையில் தோய்ந்தனர்.

காலம் அதிவேகமாகச் சுழன்றது. சமையல் கலன்கள் காலிப் பானைகளாயின. சோற்றுத்துறையே சோறுக்காக அலைந்தது. அருளாள தம்பதியர் மெய்வருந்தி, சோறுண்ணாது, துறையுள் உறையும் ஈசனின் சந்நதியே கதி என்று கழித்தனர். ராப்பகல் அறியாது கண்கள் மூடி தவமிருந்தனர். தீந்தவம் சுட்டெரிக்கும் சூரியனையே உரச, ஆதவன் ஓடி ஒளிந்தான். கயிலைநாதன் தம் அருட் கண்களை விரித்துப் பார்த்தான். குடம் குடமாக அரனின் அருளை கொட்டித் தீர்த்தான். அவ்விரு அடியார்கள் முன்பு எடுக்க எடுக்க குறையாத அட்சய பாத்திரத்தை அவர்கள் முன் பரப்பினான், சோற்றுத்துறை சிவபெருமான்.

அன்னத்தை அட்சய பாத்திரம் பொங்கிப் பொங்கித் தந்தது. அந்த ஓதனத்தை சுரந்தது. அருளாள தம்பதியர் ‘ஓதனவனேசா... ஓதனவனேசா...’ என சொல்லி ஆனந்தக் கூத்தாடினர். (ஓதனம் என்றால் ‘அன்னம்’ என்பது பொருள்) மறைந்திருந்த வருணன் அதிவேகமாக வெளிப்பட்டான். அடை மழையால் ஆறுகளும், தடாகங்களும் நிரம்பி வழிந்தன. இயற்கை பொய்த்தாலும் தன் தாள் பணிய அரனின் அருள் துணை நிற்கும் என அந்த திவ்ய தம்பதியை முன்னிறுத்தி விளையாடினார். அன்றிலிருந்து அட்சய பாத்திரம் கடலாகப் பொங்கியது. அவ்வூரை நெருங்கியோரை வயிறு நிறையச் செய்தது.

சோற்றுத்துறைக்கு சிகரம் வைத்தாற் போல இன்னொரு விஷயமும் நடந்தேறியது. தவத்தில் ஆழ்ந்திருந்த கௌதம மகரிஷி சட்டென்று கண்கள் திறந்தார். தம் அகம் முழுவதும் சுயம்பு மூர்த்தியாக ஜொலித்த ஓதனவனேஸ்வரரைக் கண்டார். தாம் அங்கு அழைக்கப்படுவதை உணர்ந்தார். அடியார்களோடு சோற்றுத்துறையை விரைவாக நெருங்கினார். அருளாள தம்பதி, ஊராரோடு திரண்டு நின்று கௌதமரை கைதொழுது வரவேற்றனர். ஓதனவனேஸ்வரர் முன்பு திருமடம் அமைத்தார், முனிவர். அருளாள தம்பதி பற்றி ஊர் மக்கள் நெகிழ்ச்சியாகக் கூற உளம் குளிர்ந்தார்.

ஈசன் இன்னும் ஒருபடி மேலே போய் அவ்வூரையே சோற்றுக் கடலில் ஆழ்த்திவிடக் கருதினார். அதை அறிந்த கௌதமர் வயல்வெளிகளை தமது அருட் கண்களால் துழாவினார். செந்நெற்கதிர்கள் சட்டென்று வெடித்தன. நெல்மணிகள் வெண்முத்துச்சரமாக, பொங்கிய சோறு அன்றலர்ந்த மல்லிகையாக மாறி
யிருந்தது! ஈசனின் பேரணையாலும், கௌதமர் எனும் மகாகுருவின் அண்மையாலும் அவ்வூர் வளமாகத் திகழ்ந்தது.

அதேநேரம், திருமழபாடியில் திருநந்திதேவரின் திருமண ஏற்பாடுகளில் தேவாதி தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சாமான்ய மனிதர்களும் கலந்து கொண்டனர். பூந்துருத்தியிலிருந்து மலர்கள் குவிய, வேதிக்குடியிலிருந்து வேதியர்கள் கூட்டம் கூட்டமாய் வர, சோற்றுத்துறையிலிருந்து அன்னம் குன்றுகளாக குவிக்கப்பட்டது.   இத்தலம் சப்தஸ்தானத்தில் ஒன்றாகத் திகழ்கிறது. நந்தீசனின் திருமணத்திற்காக இத்தலத்திலிருந்து உணவு வகைகள் சென்றதால் அன்றிலிருந்து இன்றுவரை சப்தஸ்தான விழாவின்போது இத்தல நாயகரும் திருமழபாடிக்கு எழுந்தருள்வார். அதுபோல கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியாக விளைந்த அந்த இடம் இன்றும் ‘சோறுடையான் வாய்க்கால்’ என்று அழைக்கப்படுகிறது. தற்காலத்தில் அந்த வாய்க்காலில் ஒரு கதிர் மட்டும் அரிசியாகவே விளைந்து வருவதாகவும் கூறுகின்றனர்.

திருச்சோற்றுத்துறை, அழகிய கிராமம். நான்கு வீதிகளோடும், இரு பிராகாரங்களோடும் கிழக்குப் பார்த்த கோயில் இன்னும் எழிலாக்குகிறது. புராணப் பெருமையும், வரலாற்றுப் புகழும் கொண்ட திருச்சோற்றுத்துறைக் கோயில் இருதளக் கற்றளியாக சதுர விமானமுடன் எடுப்பித்திருக்கிறார்கள். முதலாம் ஆதித்த சோழன் திருப்பணி புரிந்திருக்கிறான். ராஜராஜ சோழனின் 15ம் ஆட்சியாண்டின் போது அளிக்கப்பட்ட நிவந்தங்களை கல்வெட்டுகள் அழகாகப் பகருகின்றன. மேலும், நுளம்பர் காலக் கலைப்பணியை கண்ணுறும்போது இத்தலத்தின் தொன்மை பிரமிப்பூட்டுகிறது.

கோயிலின் வாயிலிலிருந்து நேரே உள்ளே நகர கருவறைக்கு அருகே கருணை கொப்பளிக்கும் முகத்தோடு அருளாள தம்பதி அமர்ந்திருக்கிறார்கள். அடியார்களுக்கும், தம்மை நாடியவர்களுக்கும் அன்னமிட்ட அந்தக் கைகளை ஆதரவாகப் பிடித்து தம் பக்கத்தில் அமர்வித்துள்ளார் ஓதனவனேஸ்வரர். அன்னத்தோடு அரனின் அருளையும் பிசைந்திட்டு பெரும்பேறளித்த அவர்கள் முகம் இன்னும் மலர்ச்சியாக அருகே வருவோரைக் கண்டு ‘அமுது செய்தீரா...’ என உதடு பிரித்துக் கேட்பதுபோல் உள்ளது. அதற்கு அருகேயே கௌதம மகரிஷி நின்ற கோலத்தில் கைகூப்பி ஈசனை வணங்கும் காட்சி பார்ப்போரை நெக்குருகச் செய்கிறது.

இத்தலத்திலேயே தன் ஆசிரமம் அமைத்து ஓதனவனின் மேன்மையை ஓயாது சொன்னவர் இவர். முப்பெருஞ்சுடருக்கு மத்தியில் பெருஞ்ஜோதியாகத் திகழ்கிறார் ஓதனவனேஸ்வரர் எனும் தொலையாச் செல்வர். சமயக்குரவர் மூவர் பாடி பரவசமடைந்த தலம் இது. தில்லைக்கூத்தன் ஜடாபாரம் அலையப் பெருநாட்டியமாட சிரசில் பொங்கிய கங்கையின் துளிகள் பாரெங்கும் சிதறின. அவை பூமியில் பூவாக பூத்து லிங்கமாக மாறியது. இவற்றையே சுயம்புலிங்கங்கள் என்பார் ஆன்றோர்கள். அப்படித் தெறித்து வீழ்ந்து பொங்கிய சுயம்புலிங்கத்தில் திருச்சோற்றுத்துறையும் ஒன்று.

 ‘சோறு’ என்பதற்கு உண்ணும் சோறு என்று பொதுப் பொருள் உண்டு. அதேநேரம் சோறு என்பது வெண்மையின் அடையாளம். பேரின்பப் பெருக்கெடுக்கும் ஊற்று எனவும் பொருளுண்டு. அடியாற் மனதிற்கிணங்க பேரின்பத்தையும், உயிர் காக்கும் சோறும் இட்டு இன்பம் பெருக்குவான் இப்பெருமான். அப்பரடிகள் ‘‘சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கித் தூநெறிக்கட் சேரலாமே’’ என ஆனந்தம் பொங்கப் பாடுகிறார். முக்திக்கு செல்ல ஓதனவனேஸ்வரனின் பெயர் போதுமே என எளிய  பாதையை அழகு வார்த்தைகளில் கோடிட்டுக் காட்டுகிறார். தொலையாச் செல்வரின் அருகே செல்லச் செல்ல நம் துன்பங்கள் வெகு தொலைவில் சென்று மறையும். வறுமை அழித்து, பசிப்பிணி தகர்ப்பதில் இத்தல நாயகன் முதன்மையானவன்.

  நேர்த்தியான வடிவமைப்போடு திகழும் அழகுப் பிராகாரம். கருவறைக் கோஷ்டங்களில் தென்முகக் கடவுள் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து அமைதி தவழும் முகத்தோடு அருள்பாலிக்கிறார். திருமால் நின்று வழிபட்டதால் பிராகாரத்தில் நாராயணப் பெருமாள் விளங்குகிறார். அதேபோல உட்பிராகாரத் தில் அழகிய ஐயனார் சிலையும், தனிக்கோயில் மகாலட்சுமியும், பஞ்சபூத லிங்கம் என அழகே அணிவகுத்து நிற்கின்றனர்.

கோயிலின் வெளிப்பிராகாரத்தில் அம்பாள் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். எழில் கொஞ்சும் தென்னந் தோப்பிற்கு நடுவே நின்றிருக்கிறாள் அன்னை. சோறூட்டும் அன்னையாதலால் இவள் ‘அன்ன பூரணி’யெனும் நாமத்தோடு திகழ்கிறாள். நெடிய திருமேனி கொண்டவள், குளிர் பார்வையால் மனதை நிறைக்கிறாள். கண்கள் மூடி கரம் குவிக்க வாஞ்சையோடு பார்க்கும் நாயகி. அன்னபூரணி அன்னம் மட்டுமல்லாது வாழ்வின் அனைத்தையும் அளிக்கும் பூரண சொரூபி. பசிப்பிணி தாண்டி பிறவிப் பிணியை அறுப்பவள் இவளே.

கோயில் முழுதும் கல்வெட்டுகளாலும், கவின்மிகு சிற்பங்களாலும் நிறைந்து கிடக்கிறது. இத்தலத்தின் விருட்சம் வில்வம். திருச்சோற்றுத்துறை செல்வன் வற்றாத வளங்கள் சேர்த்திடுவான். இத்தலம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரிலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சோழிங்கநல்லூர்

ஜெய் ப்ரத்யங்கரா

‘‘ஐயமென்ன, உமக்குள், எமக்குள், யாவற்றுள்ளும் நீக்கமற நிறைந்துள்ளான்’’ என அகம் நெகிழ்ந்து உரைத்தான், பிரகலாதன். ‘‘பாரெங்கும் பரவியவன் என்று
சொன்னாயே, அவன் எங்கே என்று காட்டு. என் பாதத்தின் கீழ் வைத்து நசுக்குகிறேன்” என்று கொக்கரித்தான்.  அந்த அரண்மனைக்குள் பேரதிர்வொன்று இடியாக இறங்கியது. பெருமழை போன்று பிரவாகமாக புரண்டு பெருஞ் சக்தியாக கிளர்ந்தது. தனித்திருந்த கம்பத்தில் குவிந்தது. கம்பம் மெல்ல அதிர ஆரம்பித் தது. பிரகலாதன் கண்கள் மூடி நெடுமரமாய் நின்ற கம்பத்திலுள்ள நெடுமாலை அகக் கண்களால் கண்டு களிப்பெய்தினான்.

இரண்யகசிபு கனலானான். பிரகலாதனைப் பார்த்தான். ‘இங்கிருக்கிறானா?’ என்றான். பிரகலாதன், ‘ஆம்’ என்றான். அங்குமுள்ளானா என்று கம்பத்தைச் சுட்டிக் காட்டினான். ‘நிச்சயம் உள்ளான்.’ ‘அவன் அங்கு இருப்பது சத்தியமெனில், அந்தக் கம்பத்தைப் பிளக்கிறேன், பின்பு அவனை இரு கூறாக்குகிறேன்’ என்று ஆவேசமாய் நெருங்கி அசையாத அந்தக் கம்பத்தினுள், சகல அசைவுகளின் ஆதாரமாக விளங்கும் மகா சக்தியை தனது அகங்காரம் எனும் கதையால் தாக்க, கம்பம் இரண்டாய் பிளந்தது. சட்டென்று பெருஞ் ஜோதியிலிருந்து பெருமாள் முற்றிலும் வேறொரு உருக்கொண்டு எழுந்தார். இரண்யகசிபு அதிர்ந்தான்.
 
சிங்க முகமும், மனித உடலும் கொண்டு பிடரி சிலிர்க்க நடந்தார், பெருமாள். குகை போன்ற வாய் திறந்து பெருஞ் சிரிப்பு சிரிக்க, மூவுலகும் அதிர்ந்தது. இரண்யன் இன்னும் ஆவேசமானான். அருகே நகர்ந்து மீண்டும் கதையால் தாக்க, ராஜசிம்மம் இரண்யனை அறைந்தது. நிலை தடுமாறிய அசுரனை நரசிம்மர் தூக்கிக் கொண்டு அரண்மனையின் வாயிலில் அமர்ந்தார். அவனை மடியில் கிடத்தி வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக்கி தன் கழுத்தில் தொங்க விட்டார். இப்போது நரசிம்மருக்குள் ஒரு உக்கிரம் பிரவாகமாக பொங்கிக் கிளர்ந்தது. நரசிம்மர் தம் வசம் மறந்து உக்கிரத்தின் சிகரம் தொட்டார். இன்னார், இனியார் என்று தெரியாது நாலாபுறமும் கர்ஜித்தபடி அலைந்தார். 

மூவுலக தேவர்களும் அவரின் உக்கிரம் தாங்காது பயந்து நடுங்கினார்கள். மகாலஷ்மியே இதென்ன இவ்வளவு உக்கிர சொரூபம் என அருகே செல்ல அஞ்சினார். அவரது கோபம் தணிக்க தன்னால் ஆகாது என தொலை தூரம் நகர்ந்தார். பிரளயகாலமோ என தேவர்கள் அஞ்சினர். சிம்மம் இடதும், வலதும் தலையசைத்தது. ஹூங்காரமாய் ஒரு பெருமூச்சு சொரிந்தது. தேவர்கள் ஜ்வாலையின் வெப்பம் தாங்காது அலறி ஓடினர்.

ஈரேழு லோகங்களும் நடுநடுங்க நரசிம்மர் திரிந்தார். தீக்கக்கும் கண்களோடும், துடிதுடிக்கும் புஜங்களோடும் அசுரர்களை அநாயசமாய் கிழித்தெறிந்தார். தேவர்கள் கயிலைநாதனை நாடினர். திருப்பாதத்தில் வீழ்ந்தனர். முக்கண்களையும் நாதன் அகலத் திறந்தார். சிம்மத்தின் சினம் பார்த்து சிவந்தெழுந்தார். பிரபஞ்சத்தின் மூல சக்தி தம் விளையாடலை வேறு ரூபத்தில் தொடர்ந்தது.

பேரற்புதமான திவ்ய ரூபத்தில் திரண்டு வந்தது.  சிவன் சீரடியார்கள் வானம் பார்த்து வியக்க, மெல்ல தன் உருபெருக்க ஆரம்பித்தது. சரபம் என்கிற பறவையாக ஒரு பாதியும், சிங்கத்தின் ஆவேசமான முகமும், கண்களில் சூரியன் உஷ்ணத்தைக் கக்க, சந்திரன் அமிர்தத்தை பொழிய நின்றார், ஈசன்.  ஒரு சிறகில் சூலினி, மறு சிறகில் ப்ரத்யங்கரா. நான்கு கைகள், எட்டு கால்களால் பாய்ந்து நரசிம்மரின் முன்பு நின்றார். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க சரபர் அவர் அருகே நகர... சிம்மம் சிலிர்த்தது. சரபம் சற்றுப் பின்வாங்கியது. நரசிம்மம் முன்னே நகர, ருத்ர மூர்த்தியின் சிறகிலிருந்து பேருருவம் ஒன்று வெளிப்பட்டது.

அது, பிரத்யங்கரா!  பிரத்யங்கரா நெடுநெடுவென்று விஸ்வரூபம் கொண்டாள். எண்ணாயிரம் நாகங்கள் குடையாய் கவிழ்ந்து படமெடுத்து ஆட, கழுகுக் கண்கள் கூர்மையாக அகிலத்தையே பார்த்தபடி இருந்தன. கரிய நிறத்தோடும், கார்மேகச் சடையை விரித்து கூந்தலாகக் கொண்டிருந்தாள். நீல வானத்தை புரட்டி மடித்து உடையாக்கி சேலையாய் சுற்றிப் போர்த்திக் கொண்டாள். சிரசில் பிறைச் சந்திரன் வெண்மையாய் ஒளிர்ந்து பிரகாசித்தது. ஆயிரம் சிங்க முகங்களும், கோடி தெற்றுப் பற்கள் கொண்ட குகை போன்ற தம் பெருவாயை பிளந்து கர்ஜிக்க, திரிபுவனமும் அதிர்ந்து அடங்கியது.

அக்னி ஆறாய் வழியும் நீண்ட நாக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்தது. நாக்கின் நுனியில் ரத்தம் சொட்ட, கோடி கபாலங்களை மாலையாகத் தரித்து கழுத்தில் அணிந்திருந்தாள். இரண்டாயிரம் கைகளிலும் சூலம், முண்டம், பாசம், டமருகம் என்ற விதவிதமான ஆயுதங்களைத் தாங்கினாள். சிலிர்த்துச் சிவந்திருக்கும் சிம்மத்தின் மீதமர்ந்து, பிரேதத்தை தம் காலால் அழுத்தி மிதித்துக் கொண்டிருந்தாள். ஆயிரமாயிரம் அசுரர்களின் தலைகளை தொன்னையாக்கிக் கைகளில் கவிழ்த்து ஏந்தினாள். கிங்கிணி மாலையையும், கழுகின் இறக்கைகளையும் சொருகிக் கொண்டாள். அவளைச் சுற்றிலும் மாதங்கி, யக்ஷணி, சந்திரிகாயக்ஷணி, சுரபியக்ஷணி, தீபிகாயக்ஷணி, வடயக்ஷணி, தனதாயக்ஷணி, சொர்ணயக்ஷணி என்று சப்த யக்ஷணிகளும்  சூழ்ந்து நின்று கொண்டனர். ‘ஜெய் பிரத்யங்கரா’ என இடைவிடாது அவள் பெயர் சொல்ல, பிரத்யங்கரா குதூகலித்தாள்.   

மஹரிஷிகளும், மகாமுனிவர்களும் கண்களில் நீர் பொங்க, சரபேஸ்வரரின் இரு சிறகுகளில் ஒன்றான பிரத்யங்கராவை கைதொழுதனர். ‘அதர்வண வேதம் உரைக்கும் ஆதிமகாசக்தி இவளே’ என்று அவளைப் பார்த்துச் சொன்னார்கள். ‘இவ்வளவு கோரமானதா’ என மிரட்சியோடு வினவ, ‘அவள் யாவற்றிற்கும் மூத்த முதல் சக்தி... அவளை இப்படியே தியானியுங்கள். பார்ப்பதற்கு அரிதானவள், காணக் கண்கோடி வேண்டும். எனவே, அவளைத் தோத்திரம் செய்யுங்கள். இவ்வுருவத் தியானமே பிறப்பறுத்து பேரின்பத்தை நல்கும்’ என ஆனந்தமாகப் பேசினர்.

சரப பட்சி பறந்து சென்று நரசிம்மரின் முன்பு நின்றது. தம் சிறகால் சாமரம் போன்று வீச அது பெரும் புயலாய் மாறி அவ்விடத்தையே சுழற்றியது. ஆனால், பிடரி பறக்கும் நரசிம்மரை அது தென்றலாக வருடியது. நரசிம்மரும், சரபமும் மாறி மாறி போரிட்டனர். அசுரனை உள்வாங்கிய நரசிம்மர் உக்கிரமாகவும், மூர்க்கமுமாகவும் மாறியிருந்தார். அது கண்டபேருண்டம் என்ற பறவை உருவத்தில் வெளிவந்தது. பிரத்யங்கரா ஆவேசமும், மூர்க்கத்தின் முழு வடிவமுமாகி பறந்து வந்த அப்பறவையை சட்டென்று உள்வாங்கினாள்.

பேரிரைச்சலாக வந்த அப்பறவையை தனக்குள் ஏற்றுக் கொண்டாள் தயாபூரணி. நரசிம்மர் தம் உக்கிரம் குறைந்து சாந்த சொரூபியாக சுய ரூபத்தோடு அன்றலர்ந்த மலராக மென்மையானார். நரசிம்மர் சரபேஸ்வரரையும், சூலினியையும், பிரத்யங்கராவையும் கண்கள் மூடி ஸ்தோத்திரங்கள் சொல்லி அர்ச்சித்தார். சகல தேவர்களும், ரிஷிகளும் இவ்வற்புதமான நிகழ்வினைக் கண்டு களிப்பெய்தினர். சரபேஸ்வரர் தம் இரு சிறகுகளாலும் நரசிம்மரை அரவணைக்க, நரசிம்மர் நெகிழ்ந்தார். ஈசனின் உத்தம அவதாரமான சரபேஸ்வரரையும், சூலினி துர்க்காவையும், பிரத்யங்கராவையும் அகத்தில் இருத்தி, உளம் குளிர்ந்து யோகநிலையில் அமர்ந்தார். பிரத்யங்கரா அருட்கோலம் பூண்டாள்.

நம் பாரத தேசத்தில் சாளுக்கியர்களின் காலத்தில் சரபேஸ்வரர் மற்றும் பிரத்யங்கராவின் வழிபாடு சிறந்திருந்தது. அதற்குப்பிறகு சோழ தேசத்தில் இன்னும் வளமாய் வளர்ந்தது. கலி காலம் எல்லோரையும் கவ்வியிருக்க, உலகம் உய்யும் பொருட்டு, கருணையாக தன்னை ஓரிடத்தில் இருத்திக்கொள்ள சங்கல்பம் கொண்டாள். அது, 1998ம் வருடம். சோழிங்கநல்லூர் எனும் கிராமப் பகுதியை சவுக்குத் தோப்புகள் சூழ்ந்து அடர்ந்த கானகமாக ஆக்கியிருந்த காலக் கட்டம் அது. சவுக்குத் தோப்புகளுக்குள் ராஜ சர்ப்பங்களும், சாரைப் பாம்புகளும் குடும்ப சகிதமாக குடிகொண்டிருக்கும்.

பிரத்யங்கரா நாக தேவதைகளின் குடிலுக்குள் குடிகொள்ளும் காலமும் நெருங்கி வந்தது. காலமெல்லாம் தம்மையே நினைந்துருகும் பரம பக்தரிடம் சூட்சுமமாய் தமக்கொரு கோயில் எடுப்பித்திட அருளாணையிட்டாள். பக்தரும் ‘அம்பாளின் உத்தரவெனில் உடனே செய்கிறேன்’ என வேலையை துவக்கினார். தாங்கொணா இடர்கள் வரினும் அம்பாளை அகத்தில் நிறுத்தி, பொலிவோடு திருக் கோயிலை துரிதமாக கட்டி முடித்தார். 1999ம் வருடம், ஆகஸ்ட் மாதம் தேவிக்கு குளிரக் குளிர கும்பாபிஷேகம் செய்து முடித்தார். இப்பேர்பட்ட அரும் பெரும் பணியை முடித்த பரம பக்தரை மக்கள் ‘சாக்த பிரத்யங்கரா சுவாமிகள்’ என்று அன்போடு அழைத்தனர். அம்பாள் அவர் நாவில் அமர்ந்து திருவாக்கு பகர்வதால் தங்கள் குறைகளை சொல்லி, தீர்வுகாண வழிகேட்டு உள்ளம் குளிர்ந்து திரும்பினர். 

திருக்கோயிலுக்குள் நுழையும்போதே குங்குமத்தின் சுகந்தத்தோடு வரும் பிரத்யங்கராவின் பேராற்றல் நம்மைச் சூழ, மனம் நிர்மல வானமாய் மாறுகிறது. அதர்வண வேதத்தின் சாரமாக அக்கோயில் விளங்குகிறது. கேரளத் தாந்திரிகம் சொல்லும் விஷயங்கள் இங்கு விக்ரகங்களாக எழுந்தருளியுள்ளன. ஏனெனில், அதர்வண வேதத்தில் சௌபாக்கிய காண்டத்தில் பிரத்யங்கராவின் மகாத்மியம் மிக விரிவாக காணப்படுகிறது. எனவே, வேதமே புகழும் வேதகாளி அவள். அவளுடன் அதர்வண தெய்வங்களையும் இங்கு பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அவர்கள் உடனிருப்பதாலேயே பிரத்யங்கரா முழுபலத்தோடு சித்தியளிக்கிறாள். அதாவது, வெற்றி கொடுக்
கிறாள் என்கிறார்கள்.

 பிரத்யங்கரா தேவியின் கோயிலை இப்போது வலம் வருவோம். கோயிலின் முகப்பிலிருந்து நேரே பார்த்தால், எதிரே ஏழடி உயரமுள்ள அரிதான மந்திர வாராஹி. பிரமிப்பான தோற்றத்தில் அருளாட்சி பொழிகிறாள். கோயிலை வலமாக வர, அங்கே நெடிதுயர்ந்த தோற்றத்தில் சாமுண்டா பத்ரகாளி நின்ற கோலத்தில் அருட்கொடை அருள்கிறாள். அச்சந்நதியிலிருந்து அருகே நகர, ஆகாச சரப லிங்கேஸ்வரரின் திருவுருவச் சந்நதி திகைப்பூட்டுகிறது. ஆதி சிவனின் அதிசய உரு பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். ஈசன் பக்தனுக்காக எவ்வடிவிலும் வருவான் என்பதை உணர்த்தும் அற்புத அவதாரம் அது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட நுண்ணிய விக்ரகம். இடையறாத மந்திர கோஷங்களால் அதிர்வுகள் நிறைந்த மகா சந்நதி.

சரபேஸ்வரர் சந்நதியின் எதிரேயே நாகராஜா தர்பார். ஜரத்காரூர், மானஸாதேவி ஆகியோர் ராஜா, ராணி சமேதராக அமர்ந்திருக்க சஞ்சனா, சசஞ்சனா சேனாதிபதிகள் புடை சூழ, அநேக நாகக் குழந்தைகளுடன் வீற்றிருக்கும் கோலம் பார்க்க உடல் சிலிர்த்துப் போகும். இந்திராஷியும், காயத்ரி தேவியும் முன்மண்டபத்தில் முகப்பை அலங்கரிக்க, மூலக் கருவறையில் பிரத்யங்கரா சிம்ம வாகனத்தில் மிகக் கம்பீரமாக வீற்றிருக்கிறாள். இடது காலை மடக்கி வலது காலை கீழே தொங்க விட்டு வீராசனத்தில் அமர்ந்திருக்கிறாள். இதை ஆன்றோர்கள் பிரயோக நிலை என்கிறார்கள். அன்னைக்கு முன் பிரத்யங்கரா யந்திரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

அதர்மத்தை அழித்து தர்மத்தின் பக்கம் திருப்பும் தர்ம தேவதை இவள். ஈசனுக்கே காவலாக நின்ற உத்தம பைரவரின் தர்மபத்தினி. ஈசனுக்கு இணையான மகாசக்தி உடைய தேவி. ‘எதிரிகளின் அட்டகாசத்தால் அல்லல்படுகிறேன்’ என்று பாதம் பணிந்தால் பகைவர்களை பஞ்சுபோல் துவம்சம் செய்யும் தீரபயங்கரி. உன்னையன்றி திக்குவேறில்லையே என்று இவள் முன் கைகூப்ப, அன்னைக்கு அன்னையாய் மடியில் சுமக்கும் பெருந்தாய். நம் மனதை சாந்தமாக்கும் சாந்த சொரூபி. அவள் எதிரே நின்று கைகூப்ப, வேண்டுவதைக் கேட்காமலேயே அளிக்கும் அட்சய பாத்திரம்.

கோயிலுக்கு சுற்றுப் பிராகாரத்தில் உச்சிஷ்ட கணபதியும், அருகேயே பேரறிவும், ஞானமும் கொண்ட நீல சரஸ்வதியின் சந்நதியும் உள்ளன. கல்வியைப் பெருக்கி, வாக்கு வன்மையை பிரவாகமாய் அருளும் வேதமாதா அவள். பிரதி ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ‘முட்டு இறக்கல்’ என்ற பூஜை நடைபெறுகிறது. முட்டு என்றால் தடை. அதாவது, தடையை தகர்த்தெறிவதற்கான பூஜை நடைபெறுகிறது. அன்றே துயரென்று வந்தோரை அடையாளம் கண்டு அவளருளால் அருள்வாக்கு சொல்கிறார் பிரத்யங்கரா சுவாமிகள்.

அதைக் காணவும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். அமாவாசை நாளில் மாலை ஆறரை மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரெண்டு மணிவரை மிளகாய் வற்றல் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் பக்தர்கள் திரளாய் வந்து கலந்துகொண்டு அருள் மழையில் நனைந்தெழுகிறார்கள்.மிகப்பெரிய கோயில்.

 சூட்சுமமாகவும், நுணுக்கமாகவும் வேதம் சொல்லும் தெய்வங்களையும், சாஸ்திரங்கள் காட்டும் வழிகளையும் குழைத்து நுணுக்கமாக கோயில் எழுப்பியிருக்கிறார்கள்.  சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா கோயில், சென்னை-மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. சைதாப்பேட்டை, அடையாறிலிருந்தும் அடிக்கடி பஸ் வசதிகள் உள்ளன.   
- நவநீதன்

 - கிருஷ்ணவேணி

- குமாரராஜா

- ராஜேஸ்வரி்்

- எஸ்.ஆர்.எஸ்