இவர்தான் அந்த பொன் வசந்தம்!



‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஹீரோயினாக நடித்த சந்திரகலாவை நினைவிருக்கிறதா? அவருடைய மகள் ரேஷ்மா கட்டாலா இப்போது தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகங்களைக் காட்டுகிறார்.

‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் கதை, திரைக்கதை எழுதியவர் இவர்தான். இன்டர்நெட்டில் வைரல் ஹிட்டாகி இருக்கும் ‘லட்சுமி’, ‘மா’ போன்ற குறும்படங்களின் கிரியேட்டிவ் புரொடியூஸரும் ரேஷ்மாதான்.‘‘எங்க பூர்வீகம் ஆந்திரா. முஸ்லீம் குடும்பம். வீட்ல உருதும்  பேசுவோம்.

கட்டாலாங்கறது எங்க ஃபேமிலி நேம். வைசாக்கில் எங்க தாத்தாவுக்கு கிடைச்ச ஒரு பட்டம் அது. அப்புறம் அதுவே எங்க ஃபேமிலியோட பெயர்கள்ல சேர்ந்திடுச்சு.  அம்மாவோட அப்பா எம்.எஸ்.நாயக், படத் தயாரிப்பாளர். அவர் ஒரு புரொட்யூசரா இருந்தாலும் கர்னாடிக், கிளாசிகல்ல ரொம்ப ஆர்வம் உள்ளவர். அம்மாவுக்கு ரெண்டு வயசு இருக்கும்போதே, அவங்க ஃபேமிலி சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டாங்க.

எங்க தாத்தா தயாரிச்ச படத்துல இருந்துதான் அம்மா குழந்தை நட்சத்திரமா சினிமாவுக்கு அறிமுகமானாங்க.  ஹீரோயினா தெலுங்கில் அறிமுகமானாங்க. இந்தியிலும் நடிச்சாங்க. ஸ்ரீதர் சார் மாதிரி பெரிய இயக்குநர்கள் படங்களும் நிறைய பண்ணியிருக்காங்க. இங்கே அம்மா நடிச்ச பல படங்களை கன்னடத்திலும், இந்தியிலும் எங்க தாத்தாவே தயாரிச்சிருக்காங்க. அம்மா கிட்டத்தட்ட 125 படங்கள் நடிச்சிருக்காங்க.

அம்மாகிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டாலும்  சினிமா ஆசை துளியும் வந்துடக்கூடாதுனு என்னை ரொம்பவே கவனமா வளர்த்தாங்க. அவங்களோட ஷூட்டிங்குகளுக்கு என்னை அழைச்சிட்டு போனதே இல்லை. நடிப்பை விட படிப்பு முக்கியம்னு சொல்வாங்க. எனக்கு விபரம் தெரிய ஆரம்பிக்கும் வயசில், அம்மா சினிமாவில் நடிக்கறதை நிறுத்திட்டாங்க. எனக்கு பதினஞ்சு வயசிருக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. அவங்க இழப்பு ரொம்பவே பேரிழப்பா உணர்ந்தேன். ஒரு நல்ல தோழியாகவும் அவங்க இருந்தாங்க.

ஸ்டெல்லா மேரீஸ்ல பி.ஏ. சோஷியாலஜில கோல்டு மெடல் வாங்கினேன். அப்புறம் மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம், ஃபிலிம் ஸ்டடீஸ்ல மாஸ்டர் டிகிரி பண்ணினேன். காலேஜ் படிக்கும்போது படங்கள் நிறைய பார்ப்பேன். ஆனா, சினிமாவில் நடிக்கணும்கற ஆர்வம் வந்ததில்ல. நான் ரொம்ப கூச்ச சுபாவம். போட்டோவுக்கு போஸ் கொடுக்கக் கூட தயங்குவேன்.  ஒரு விதத்துல இது நன்மைதான். இதனால நான் நல்லா படிக்கறதுக்கான வாய்ப்பு அமைஞ்சது.

காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போது ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன். என் வாழ்க்கையை மாத்தின படம்னு கூட சொல்லலாம். இப்போ நான் பண்ற விஷயங்கள் அத்தனையும் அதுல ஹீரோயின் பண்ணுவாங்க. டிரெயிலர் கட் பண்ணுவாங்க. ஷார்ட் ஃபிலிம் எடுப்பாங்க. புரொடக்‌ஷன் டிசைன் பண்ணுவாங்க. மார்க்கெட்டிங் பண்ணுவாங்க. இப்படி நான் பண்ண நினைச்ச விஷயங்கள் அத்தனையும் அவங்க பண்ணிட்டிருப்பாங்க.

அப்பவே அவங்கள மாதிரி ஆகணும்னு விரும்பினேன். அந்த வேகத்துல ஆரம்பிச்சதுதான் ‘இ.எம்&சி’ கம்பெனி. அதன் மூலம் கிட்டத்தட்ட நூறு படங்கள் ஒர்க் பண்ணியிருப்பேன். முழுக்க முழுக்க அதில் உள்ள ஒவ்வொரு வேலையையும் நான் ஒருத்தியே இழுத்துப் போட்டு பண்ணியிருப்பேன். அப்படி ஒரு கடின உழைப்பு.  இப்போ புரொட்யூசர் ஆனபிறகு அதை என் ஃப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சிட்டேன்.

ஒரு ரைட்டரா 2011ல கெளதம் சார் கிட்டே ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. நான், வெங்கி, கௌதம் மூணு பேரும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினோம். நிறைய படங்கள் தயாரிச்சோம். நான் ஸ்கூல் படிக்கும்போதே ‘மின்னலே’ வந்திச்சு. ரொம்ப ரசிச்சி பார்த்த படம். அந்தப் படத்தோட இயக்குநரோடவே சேர்ந்து வேலை செஞ்சது த்ரில்லிங்கான எக்ஸ்பீரியன்ஸ்.

இப்போ எல்லார் கையிலும் மொபைல் வந்திடுச்சு. நெட்ல நிறைய விஷயங்கள் தேடிப் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. இனி அதிலும் நம்ம பங்களிப்பு இருக்கணும்னு கௌதம் ஒருநாள் யோசிச்சார். ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூடியூப் சேனல் கொண்டு வந்தோம். ஷார்ட் ஃபிலிம்ஸ், இண்டிபென்டன்ட் மியூசிக் ஆல்பம் தயாரிக்க ஆரம்பிச்சதே, திடீர்னு தோணின ஐடியாதான். மதன் கார்க்கி, கார்த்திக்னு இங்கே வர்ற எல்லாருமே ஃப்ரெண்ட்ஸா பழகுறோம், பேசுறோம்.

பாடல்கள் ரெடி பண்ணி நம்மளோட லேப்டாப்ல மட்டும் இருந்தா போதாது, எல்லாருமே இதைப் பார்த்து ரசிக்கணும்னு சிங்கிள் ஸாங்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். இன்னொரு பார்ட்னர் வெங்கி மூலமா சர்ஜூன் அறிமுகமானார். ‘லட்சுமி’ குறும்படம் பண்ணினோம். அடுத்து ‘மா’வும் செம வைரல். ‘ஒன்றாக..’வில் அடுத்தடுத்து அதிரடிகள் காத்திருக்கு. எல்லாமே என்டர்டெயின்மென்ட்கள் தான்.

ஃபிலிம் மேக்கிங் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒர்க். ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்காக ராஜா சார் சிம்பொனி இசையமைச்சதை நேர்ல பார்த்து ரசிக்க முடிஞ்சது. அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம். நான் ரஹ்மான் சாரின் ரசிகை. ஆனா, அவரை நான் சந்திக்கும்போது, அவருக்கு என்னை தெரிஞ்சிருக்கு. ‘துருவநட்சத்திரம்’ படப்பிடிப்புக்காக துருக்கி போயிருந்தோம். அங்கே ஒரு பெரிய பில்லியனருக்கு சொந்தமான ஒரு பிரைவேட் ஏர்கிராஃப்ட்ல ஷூட் பண்ணினோம். நானும் அந்த ஏர்கிராஃப்ட்ல ட்ராவல் பண்ணினேன். சாதாரண பெண்ணா நானும் இருந்திருந்தால் அப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைச்சிருக்குமா?

ஒரு தயாரிப்பாளரா இருந்ததால் சினிமா இப்படியான நல்வாய்ப்புகளைக் கொடுத்தது.இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களினால் தான் இந்தத் துறையில் எவ்வளவு போராட்டங்கள் வந்தாலும் தாக்குப் பிடிக்கும் தெம்பு கிடைக்குது.  ஒரு புரொட்யூசரா ஒரு படம் தயாரிக்கறது சிரமமான வேலைதான். அந்தப் படம் தியேட்டர்ல  ரிலீஸ் ஆகுற வரை நிறைய தடைகளைத் தாண்டி வரவேண்டியிருக்கு. இந்தப் பிரச்னைகளை எல்லாம் சந்திக்கறது சவாலானதுதான். ஃபைனான்ஸியலா சிந்திக்கறதை கொஞ்சம் குறைச்சு, கிரியேட்டர் ரேஷ்மாவை இன்னும் என்கரேஜ் பண்ணிட்டிருக்கேன்.

 சினிமாவை நேசிக்கறதால சவால்களும், போராட்டங்களும் ஒரு பெரிய விஷயமா தெரியல. ஏன்னா.... ஃபிலிம் மேக்கிங் ரொம்ப பிடிச்ச வேலை.  நான் கதை, திரைக்கதை எழுதின ‘நீதானே பொன் வசந்தம்’ என்னோட ரெண்டாவது ஸ்கிரிப்ட். கௌதம் சார் அந்தக் கதையில் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி, என்னையே படத்துக்கும் எழுத வச்சார். ராஜா சார் மியூசிக் அவ்ளோ சந்தோஷமா இருந்தது. ஐந்தாறு படங்கள் தயாரிச்சிருந்தாலும் அந்தப் படம் ரொம்ப ஸ்பெஷல்.

என்னோட முதல் ஸ்கிரிப்ட் இன்னும் படமாக்கப்படலை. அது ஒரு பெரிய ஹீரோவுக்கானது. ஆனா, மூணாவதாக எழுதின ஸ்கிரிப்ட் அடுத்து படமாகப்போகுது. அதையும் எங்க ஃபேவரெட் கௌதம் தான் இயக்குறார். ‘ஒன்றாக....’னு டைட்டில் வச்சிருக்கோம். அனுஷ்கா, தமன்னா, கல்கிகோஷ்னு ஹீரோயின்கள் முடிவாகிட்டாங்க.

ஒவ்வொரு லாங்குவேஜ்ல இருந்து ஒவ்வொரு ஹீரோக்கள் அதில் நடிக்கறாங்க. ரஹ்மான் சார் மியூசிக். முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடக்கிற கதை. ரொம்ப யங் அண்ட் ஃபன் ஆக இருக்கும். லைஃப் ஹேப்பியா போயிட்டிருக்கு. இந்த வேலை நிறைவா.. திருப்தியா இருக்கு. ஐ லவ் மை ஜாப்! ’’ என சிலிர்க்கிறார் ரேஷ்மா கட்டாலா.

- மை.பாரதிராஜா