பிரியா ஆனந்தை பிழியும் சோகம்!



தமிழ் நடிகைகளில் வெல்வது, தமிழ் சினிமாவில் குறிஞ்சி பூப்பது மாதிரி அபூர்வம். அவ்வாறு வென்றிருப்பவர்களில் ஒருவர் பிரியா ஆனந்த். சமீபத்தில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படவிழாவில் கலந்துகொண்டவர், “நான் சினிமாவை விட்டு விலகிட நினைத்தேன்” என்றார். “ஏன்?” என்று அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினோம். மறுநாள் காலையில் அவரே அழைத்துப் பேசினார்.

“நான் சென்னைக்கு நடிக்க வந்த புதிது. இங்கு எனக்கு ஒரு நண்பன் இருந்தான். என்னை விட வயதில் சின்னவன். என் தம்பி மாதிரி. மாதிரி என்ன.. தம்பின்னே வச்சுக்கலாம். அவன் வீட்டுலதான் நான் தங்கியிருந்தேன்.

அவுங்க வீட்டுலதான் சாப்பிட்டேன். பல நாள் ஷூட்டிங்கிற்கு என்னோடு துணைக்கு வருவான். அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா அவன் எங்கம்மா வயித்துல பிறந்து எனக்கு தம்பியாகணும்னு கடவுள்கிட்ட அடிக்கடி வேண்டுவேன். அவ்ளோ பாசம், அவ்ளோ நேசம்.

ஒரு நாள் ஒரு போன். ரிசீவரை எடுத்து காதில் வைத்தேன். ‘உன் தம்பி ஆக்சிடண்டுல இறந்துட்டாம்மா...’ என்று கதறியது அந்தக் குரல். போனை போட்டுவிட்டு அப்படியே சரிந்தேன். கடவுளே இது கனவா இருந்திடக்கூடாதான்னு கதறினேன். சாகிற வயசா அவனுக்கு. எத்தனை கனவு வச்சிருந்தான்? அவன் இப்போது இந்த உலகத்தில் இல்லை என்கிற நினைப்பே என்னை தினமும் கொன்னுச்சு.

அவன் திரும்பி வரமாட்டான்றதையே என்னால நம்ப முடியல. என் படத்தின் முதல் விமர்சகன் அவன்தான். நல்லா இருக்கு, நல்லா இல்லேன்னு முகத்துக்கு முன்னாடி சொல்வான். இனி யாருக்காக நடிக்கணும் என்று நினைத்தேன். சினிமாவில் எத்தனை வெற்றி பெற்றாலும் அதைப் பார்க்க அவன் இல்ைலயே..... அப்படீன்னா எதுக்கு நடிக்கணும்னு முடிவு பண்ணினேன். வந்த படங்களை எல்லாம் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி மறுத்தேன். உறவினர்கள், நண்பர்கள் சொன்ன சமாதானத்தை ஏற்கவில்லை.

அந்த நேரத்தில்தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ கதையோடு இயக்குனர் ஞானவேல் வந்தார். நான் நடிக்கிறதா இல்லை; எங்கிட்ட கதை ெசால்லி உங்க டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்கன்னு சொன்னேன். கதையை மட்டும் கேளுங்க, நடிக்கிறதும் நடிக்காததும் உங்க இஷ்டமுன்னு சொன்னார். வேண்டா வெறுப்பாக கேட்டேன்.

‘நேற்றைவிட இன்னிக்கு ஒரு படி உயர்ந்திருந்தா அதுதான் வாழ்க்கை’ என்றது அந்தக் கதை. ‘நீ ஜெயிச்சுக் காட்டுறதுதான் உன்கூட இருக்கிறவங்களுக்கு செய்யும் மரியாதை’ என்றது கதை. என் மனசுக்கு இது ஆறுதலாக அமைந்தது. எனவேதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன்” பேசும்போதே அவரது குரல் தழுதழுத்தது. அவர் உடைந்துவிட இடம் தரக்கூடாது என்று போன் இணைப்பை நாமே துண்டித்தோம்.

- மீரான்